Published:Updated:

நவ ஜோதிர்லிங்க தரிசனம்!

ஜோதிர்லிங்க தரிசனம்
ஜோதிர்லிங்க தரிசனம்

இறைவன் சிவபெருமானை தரிசிக்க நாங்கள் குழுவாக மேற்கொண்ட நவ ஜோதிர்லிங்க தரிசன யாத்திரை, எனது வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம்

ஆன்மிகப் பயணம் 4

சிவ.கே.மல்லிகா, வில்லியனூர், புதுச்சேரி மாநிலம்

இறைவன் சிவபெருமானை தரிசிக்க நாங்கள் குழுவாக மேற்கொண்ட நவ ஜோதிர்லிங்க தரிசன யாத்திரை, எனது வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம்!

26.3.2013 அன்று எங்கள் பயணம் துவங்கியது. நாங்கள் முதன்முதலில் தரிசித்தது மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜயினி மகாகாளேசுவரர். அங்கே காலை, மாலை இரண்டு வேளையும் பாலபிஷேகமும் ஆரத்தியும் கண்டு மெய்ம்மறந்தோம். தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்தபோது, தேவார, திருவாசகப் பாடல்களை இசையுடன் பாடினோம். இப்பாடல்களை செவிமடுத்த ஒருவர் 'அச்சா, கானா’ என்று மனமுவந்து பாராட்டினார். ஆரத்தி முடிந்ததும், நாமே மகாகாளேசுவரருக்கு அபிஷேகம் செய்யவும் தொட்டு வணங்கவும் அனுமதிக்கிறார்கள்.

இரண்டாவதாக நாங்கள் தரிசித்தது, நர்மதையின் கரையில் அமைந்திருக்கும் ஓங்காரேசுவரர். நர்மதையில் நீராடி ஓங்காரேசுவரரைக் காண வரிசையில் செல்லும்போது, 'சிவாய நம ஓம், ஹராய நம ஓம், ஹராய நம ஓம், சிவாய நம ஓம்’ என்று சொல்லிக்கொண்டே சென்றோம். வரிசையில் நின்றிருந்த பிற மாநிலத்தவர்களும் எங்களோடு சேர்ந்து சொல்லிக்கொண்டே வந்தனர். ஓங்காரேசுவரரைத் தொட்டு வணங்க அனுமதியில்லை.

நவ ஜோதிர்லிங்க தரிசனம்!

அடுத்ததாக, குஜராத் நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. முதலில், அரபிக்கடலோரம் அமைந்துள்ள சோமநாதர் ஆலயத்துக்குச் சென்றோம். எங்கள் அனைவரையும் ஒருசேர ஆட்கொண்டார் சோமநாதர். இரண்டு இரவுகள் அங்கு தங்கியிருந்து சோமநாதரின் மூன்று விதமான அலங்காரங்களைக் கண்டு மெய்ம்மறந்தோம். ஆரத்தியின்போது இசைக்கப்படும் ஒருவகையான மேள இசையும் மணியோசையும் நம் ஆன்மாவைத் தட்டி எழுப்புகின்றன. இரும்பைக் காந்தம் இழுப்பதுபோல் அந்த இசை நம்மை அங்கேயே இருக்கச் செய்கிறது. மாணிக்கவாசகரின் கீழ்க்காணும் பாடல் வரிகள்தான் அப்போது என் நினைவுக்கு வந்தன.

''சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் திரள்தோள்

கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று

ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்

தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்

வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி

ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்!''

தினமும் இரவு ஏழரை மணி முதல் எட்டரை மணி வரை 'ஒலிஒளி காட்சி’ காட்டப்படுகிறது. சிவபெருமானை சந்திரன் (சோமன்) வழிபட்டது முதல்... கஜினி முகமதுவின் படையெடுப்பு, அகல்யாபாயின் கண்ணீர், சர்தார் வல்லபபாய் பட்டேலின் முயற்சி வரை இக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. வல்லபபாய் பட்டேல் கோயிலைப் பார்த்துக்கொண்டே நிற்பதுபோன்று அவரது சிலை வெளியே அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் 18 திருவிளையாடல்கள், சுதை வடிவில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

ஜோதிர்லிங்க தரிசனம்
ஜோதிர்லிங்க தரிசனம்

அங்கிருந்து பிரியாவிடை பெற்று, நாங்கள் அடுத்ததாகச் சென்றது துவாரகை. சிற்பக்கலை ரசிகர்களுக்கு விருந்தளிக்குமிடம் இந்த துவாரகை. கோமதி நதி கடலோடு கலக்கும் இடத்தில், அரபிக் கடலோரம் கம்பீரமாக அமைந்துள்ளது கோயில். மரத்திலே கடைசல் வேலை என்று சொல்வார்களே, அதைப்போல கல்லிலே கடைசல் வேலை செய்யப்பட்டுக் கட்டப்பட்ட கோயில் இது. அடுத்து, நாகேஷ்வர் ஆலயம் சென்று, திருநீறு அபிஷேகம் செய்து, வழிபாடு செய்தோம்.

குஜராத்தில் அடுத்ததாக நாங்கள் கண்டு வியந்தது கோலியாக் என்ற இடம். அரபிக்கடலோரப் பகுதி இது. ஒவ்வொரு நாளும் சுமார் 5 மணி நேரத்துக்கு, சுமார் 6 சதுர கி.மீ பரப்பளவுக்குக் கடல்நீர், இங்கு உள்வாங்கி விடுகிறது. கடற்கரையிலிருந்து சுமார் 1 கி.மீ சேறும் சகதியுமான ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றால், ஒரு சிறிய பாறையை அடையலாம். அங்கே சிறிதும் பெரிதுமான ஐந்து சிவலிங்கங்கள் இருக்கின்றன. நாங்கள் அனைத்துச் சிவலிங்கத் திருமேனிகளுக்கும் திருநீறு அபிஷேகம் செய்து வழிபட்டுத் திரும்பினோம். கடல் உள்வாங்கிய பகுதி சேறாக இருந்தது. சேற்றில் சின்னச்சின்ன மீன்கள் துள்ளிக்கொண்டிருந்தன. அவற்றைத் தின்பதற்காகக் கடல் பறவைகள் பறந்துகொண்டிருந்தன. உலகத்தில் நடக்கும் எத்தனையோ அதிசயங்களுள் ஒன்றுதான் கோலியாக் கடல் பகுதி.

நவ ஜோதிர்லிங்க தரிசனம்!

அடுத்து, மகாராஷ்டிராவில் ஐந்து ஜோதிர்லிங்கங்களைத் தரிசித்தோம். முதலாவது, திரியம்பகேசுவரர் ஆலயம். பிரம்மா- விஷ்ணு- ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே லிங்கத்தில் அமைந்த தலம்தான் இது. இங்கு சிவனைத் தொட்டு வழிபட அனுமதியில்லை. லிங்கத்தில் தண்ணீர் சுரந்துகொண்டேயிருக்கிறது. கைகளாலேயே அந்தத் தண்ணீரை வெளியேற்றுகிறார்கள்.

அங்கு நடந்த ஒரு சிறிய நிகழ்ச்சி, எங்களைப் பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. அங்கே பணியிலிருந்த ஒரு காவலாளி, எங்களுடன் வந்த வயதான அம்மாள் ஒருவரைக் கீழே தள்ளிவிட்டார். நாங்கள் அவரை நன்றாகத் திட்டிவிட்டு வந்தோம். தங்குமிடம் வந்தவுடன் அந்தப் பெண்மணியை நலம் விசாரித்தபோது, அவர் சொன்ன பதில் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. ''ரொம்ப நாளாவே இந்தக் கை வலித்துக்கொண்டே இருந்தது. கோயிலில் விழுந்து எழுந்ததிலிருந்து கைவலி சுத்தமாகப் போயே போய்விட்டது'' என்றார்.

நவ ஜோதிர்லிங்க தரிசனம்!

திரியம்பகேசுவரர் ஆலயத்திற்கு வருபவர்களில் பெரும்பாலோர் முடி காணிக்கை செலுத்தி, கோதாவரி குண்டத்தில் (தெப்பக்குளம்) நீராடி, தரிசனத்திற்குச் செல்கிறார்கள்.

நாங்கள் வழிபட்ட அடுத்த ஜோதிர்லிங்கம், க்ருஷ்மேசுவரர். மறக்கமுடியாத அனுபவம் இங்கு வாய்க்கப் பெற்றோம். கருவறையைத் தூய்மை செய்யவும், அங்கேயே அமர்ந்து 'சிவபுராணம்’ பாடவும் க்ருஷ்மேசுவரர் எங்களுக்கு அருள்பாலித்தார். எங்கள் கைகளாலேயே பாலபிஷேகமும் திருநீறு அபிஷேகமும் செய்து, நிதானமாக இறைவழிபாடு செய்தோம்.

ஜோதிர்லிங்க தரிசனத்தில் அடுத்து நாங்கள் தரிசனம் செய்தது ஹவுண்டா நாகேஷ்வர். இக்கோயில் கருவறை, சமதளத்தைவிடக் கீழே அமைந்துள்ளது. நின்று இறைவனை வழிபட முடியாது. அமர்ந்தும் குனிந்தும்தான் வழிபட முடியும். இந்த ஆலயத்திலும் அற்புதமான சிற்பங்கள் இருக்கின்றன.

அன்று பிற்பகல் பரலி வைத்தியநாதர் கோயிலுக்குச் சென்று, திருநீறு சார்த்தி வழிபட்டோம்.

அடுத்த நாள் காலை பீமா சங்கர் தரிசனம். இங்கு அர்த்தநாரீசுவரராய் இறைவன் அருள்பாலிப்பதாகக் கூறினார்கள். இங்கும் திருநீறு சார்த்தி வழிபாடு செய்தோம்.

இறுதியாக, ஆந்திர மாநிலத்திலுள்ள மகாநந்தியில் அமாவாசையன்று அதிகாலை புனித நீராடி ஸ்ரீசைலம் வந்து சேர்ந்தோம். நாங்கள் சென்றது தெலுங்கு வருடப்பிறப்புக்கு முன் தினம் என்பதால், கூட்டம் மிகமிக அதிகம். 100 ரூபாய் டிக்கெட் எடுத்தும், சுமார் ஒன்பது மணி நேரம் வரிசையில் நின்று நின்று, சென்று மல்லிகார்ச்சுனரைத் தொட்டும் முட்டியும் வழிபட்டு, நலமுடன் வீடு வந்து சேர்ந்தோம்.

எங்கள் பயண அனுபவத்தில், பிற யாத்ரீகர்கள் கவனிக்கவேண்டிய சில விஷயங்களையும் சொல்லிவிடுகிறேன்.

* ஒவ்வொரு நாளும் தொடர்வண்டியிலோ பேருந்திலோ பயணம் தொடங்கும்போது, 'வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் கோளாறு பதிகத்தையும், 'மறையுடையாய்’ எனத் தொடங்கும் இடர் களையும் பதிகத்தையும் பாடுவது நல்லது.

நவ ஜோதிர்லிங்க தரிசனம்!

* ஓன்றிரண்டு கோயில்கள் தவிர, பெரும்பாலும் எல்லாக் கோயில்களிலும் தேவார, திருவாசகப் பாடல்களை இசையுடன் பாடினோம். அங்கிருந்தவர்கள் தலையசைத்துத் தாளமிட்டு ரசித்தார்கள். பக்திக்கு மொழி தடையில்லை என்பதை இதன் மூலம் உணர்ந்தோம்.

* ஜோதிர்லிங்கங்களைத் தவிர, அந்தந்த ஊர்களிலுள்ள மற்ற சிறிய, புகழ்பெற்ற கோயில்களையும் தரிசிக்கலாம்.

* பெரும்பாலான கோயில்களின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு பக்கம் விநாயகரும், மறுபக்கம் ஆஞ்சநேயரும் தரிசனம் தருகிறார்கள்.

* ஐம்பொறிகளை அடக்க வேண்டும் என்பதை உணர்த்த நந்தியின் சிலைக்கு அருகே ஆமையின் சிலை வைக்கப்பட்டுள்ளதை கண்டு வியந்தோம்.

* வரிசையில் செல்லும்போதோ, கோயில் வளாகத்தில் இருக்கும்போதோ யாரும் ஊர்க் கதை பேசவில்லை. இறைவன் மந்திரத்தை ஜெபித்துக்கொண்டோ, பாடல்களை மென்மையாகப் பாடிக்கொண்டோ அமைதியாக இறைவனை வழிபடுகின்றனர். இது, நாம் எல்லோருமே கவனித்துப் பின்பற்றவேண்டிய ஒன்று!

அடுத்த கட்டுரைக்கு