Published:Updated:

சிவனும் நாராயணனும் பின்னே அன்னபூரணியும்!

சிவனும் நாராயணனும் பின்னே அன்னபூரணியும்!
சிவனும் நாராயணனும் பின்னே அன்னபூரணியும்!

சிவனும் நாராயணனும் பின்னே அன்னபூரணியும்!

ஆன்மிக பயணம் 6

வர்ஷித், சென்னை

இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் உள்ள சில திருத்தலங்களைத் தரிசிக்கும் பாக்கியம் சில ஆண்டுகளுக்கு முன் எனக்கும் என் கணவருக்கும் கிடைத்தது.

முதலில் நாங்கள் சென்றது, கோழிக்கோடு 'தளி மகாதேவர்’ கோயில். பெரிய கோயிலான இது மிகப் பிரசித்தி பெற்றதும்கூட! 'தளி’ என்றால் சிவன் கோயில் என்று அர்த்தம் சொன்னார்கள். த்வாபர யுகத்தில் பரசுராமர் வழிபட்ட தலமாம் இது.

இங்கே குளக்கரையில், தமிழ்நாடு கட்டக்கலை பாணியில் கட்டப்பட்ட கோயிலில் சிவன், அம்பாள், விஷ்ணு, கணபதி, முருகப்பெருமான் அனைவரையும் தரிசித்த பிறகு, ரயிலில் தல்லிச்சேரிக்குப் பயணமானோம்.

சிவனும் நாராயணனும் பின்னே அன்னபூரணியும்!

இப்பகுதியில், 6-ஆம் 7-ஆம் நூற்றாண்டில் மிளகு, காபி, ரப்பர், ஏலம் இவற்றை வாங்கி வாணிபம் செய்ய வந்த அரேபியர்கள் இங்குள்ள பெண்களை மணந்து, 'மாப்பிள்ளை’ ஆனார்கள். அவர்களின் வழித்தோன்றல்களான 'மாப்ளாஸ்’ (Maplahs) என்னும் இஸ்லாமியர் இங்கே நிறைய வசிக்கின்றனர். கள்ளிக்கோட்டை எனப்பட்ட இந்த இடம், இந்தியாவின் திறவுகோலாக விளங்கியது. போர்ச்சுக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா முதன்முதலாக வந்து இறங்கியதும் இங்கேதான்.

தல்லிச்சேரி வந்து சேர்ந்ததும், திருவெண்காடு கோயில் நோக்கிச் சென்றோம். திருவங்கோடு என்றும் அழைக்கப்படுகிறது இந்த ஊர். கேரளாவின் மிக முக்கிய மூன்று ராமர் கோயில்களில் ஒன்று இது (மற்றவை: திருப்ரையார், திருவில்வமலா). நாங்கள் குருவாயூர் செல்லும்போதெல்லாம் திருப்ரையார், திருவில்வமலா சென்று தரிசித்துள்ளோம். இப்பயணத்தில் மூன்றாவதான இந்தத் தலத்து ராமரையும் தரிசிக்கும் பேறு பெற்றோம்.

சிவனும் நாராயணனும் பின்னே அன்னபூரணியும்!

பிராகாரத்தில் சிவன் சந்நிதி. முனிவர்கள் பூஜித்த சிவன் உக்கிரமாக இருக்க, எதிரில் இன்னொரு சிவனைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். ஒரே கோயிலில் அழகிய ராமர் மற்றும் எதிரெதிரே இரண்டு சிவன் என திவ்ய தரிசனம் செய்யும் பாக்கியம் இங்கே நமக்குக் கிடைக்கிறது.

அடுத்ததாக, கண்ணனூர் சென்று தங்கி, காலை தரிசனத்துக்குக் கிளம்பினோம். முதலில் நாங்கள் சென்றது அங்கேயுள்ள செறுகுன்னு அன்னபூரணி கோயில். வெயில் தரையில் விழாத பாதையில் பயணிக்க, மனத்துக்கு இனிமையாக மட்டுமின்றி குளுமையாகவும் இருக்கிறது. இதோ... செறுகுன்னு கோயில் வந்துவிட்டது. வாசலில் பெரிய அடுக்கு விளக்கு. வாசலின் நேரே ஒரு சந்நிதி. தாமரையையும் செம்பருத்திப்பூவையும் இதழ் இதழாகக் கட்டிய மாலை சார்த்தி, இதுதான் தேவி என நினைத்து நாங்கள் தொழுதோம். பக்கத்தில் இருந்த வயதான ஒரு பெண்மணி தோப்புக்கரணம் போட்டார். பிறகுதான், குழம்பிப் போய், 'இங்கே எந்தத் தெய்வம் பிரதானமானது?’ என்று நாங்கள் விசாரிக்க... ''கணபதி உள்ளே இருக்கார். இது கிருஷ்ணர், புறத்தே தேவி'' என கைகாட்டினர் கோயிலில் உள்ளவர்கள்.

அப்புறம்தான் நாங்கள் வணங்கிய தெய்வத்தை உன்னிப்பாகக் கவனித்தோம். அந்தப் பொல்லாத கிருஷ்ணன் எங்கள் குழப்பத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நிற்பது எங்களுக்குத் தெரிந்தது. அதன்பின், பிராகாரம் வலம் வந்து, பக்கவாசல் வழியே, அடுத்து உள்ள அன்னபூரணியைச் தரிசித்தோம். இங்கும் மற்ற சில கேரளக் கோயில்களைப் போல வால் கண்ணாடி ரூபம்தான் (கைப்பிடியுடன் கூடிய ஒப்பனைக் கண்ணாடியை கேரளத்தில் "வால் கண்ணாடி" என்பார்கள்). . ஆனால் காசுமாலை, பூ இதழ் மாலை என மிக மிக அழகான அலங்காரம். கண்ணைத் திருப்பமுடியாத சௌந்தர்யம் இவள் என்றால், அந்தப் பழங்காலக் கோயிலின் முன்மண்டபத்தின் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளும் நம்மை வசீகரிக்கின்றன.

நாங்கள் இங்கே எதைப் பார்ப்பது, எதை விடுப்பது என தவித்து நிற்க, ஒரு பெண்மணி எங்களை நெருங்கி, ''இக்கோயிலில் அன்னபூரணியை தரிசித்த பிறகு, ஸ்வாமி ராஜராஜேஸ்வரைத் தரிசிக்க வேண்டும். தினமும் ராத்திரியில் ஸ்வாமி ராஜேஸ்வர் இங்கு கலை ரூபமாக வந்து தங்குவார். அவரது தேவிதான் இங்கே அருளும் அன்னபூரணி. அதனால் இரவு 8 மணிக்கு மேல்தான் ராஜேஸ்வர் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவர்'' என்று சொன்னார்.

சிவனும் நாராயணனும் பின்னே அன்னபூரணியும்!

எங்களது அன்றைய பயணத் திட்டத்தில் ராஜராஜேஸ்வர் கோயிலும் உண்டு. அங்கு பெண்கள் இரவு 8 மணிக்கு மேல்தான் அனுமதிக்கப்படுவர் என்பது தெரியும். ஆனால், அவரின் தேவிதான் இந்த அன்னபூரணி என்பதும், இவளைத்தான் முதலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பதும் அந்தப் பெண்மணி சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும்.

தொடர்ந்து, திருச்சம்பரம் கிருஷ்ணரை தரிசிக்கச் சென்றோம். இந்த கிருஷ்ணர், கேரளாவின் முக்கியமான மூன்று கிருஷ்ணர்களில் ஒருவர் (மற்றவர்கள் அம்பலபுழா, குருவாயூர் கிருஷ்ணர்கள்). தனக்குப் பசிக்கிறது என்று ஸ்ரீகிருஷ்ணர் தேவகியைக் கேட்டதால், இன்றும் இக்கோயில் திறந்ததுமே நைவேத்யம் நடக்கிறதாம். கம்ச வதத்தின்போது, அவன் ஏவிய குவலய பீடம் என்ற யானையை ஸ்ரீகிருஷ்ணர் வதம் செய்த காரணத்தால், கேரளக் கோயில்களில் முக்கியமான 'யானை’ இங்கு

சிவனும் நாராயணனும் பின்னே அன்னபூரணியும்!

கிடையவே கிடையாது! கோயில் பக்கத்தில்கூட யானையை வரவிடுவதே இல்லையாம்.

கோயிலின் மூலஸ்தானத்தில் பெரிய அழகிய கிருஷ்ணர் தரிசனம் தருகிறார். ஒரு சேவார்த்தி, நாங்கள் தமிழர் என்பது புரிந்து, எந்த ஊர் என்றெல்லாம் விசாரித்து, அந்தக் கோயில் பற்றி நிறைய விவரங்கள் சொன்னார். அதோடு, கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்த அவலைப் பிரசாதமாக தந்தார். ஆஹா... கிருஷ்ண... கிருஷ்ணா!!

அதன் பிறகு, நாங்கள் சென்ற திருத்தலம் காஞ்சிராங்கோடு. பெரிய கோயில். குந்தி தொழுத தலம் என்றார்கள். சந்திரனின் குஷ்டம் நீக்கிய வைத்தியநாதர் இங்கே அருள்கிறார். பாற்கடல் கடைந்தபோது உண்டானவர் இவர். மகா வரப்பிரசாதி. நோயற்ற வாழ்வு தரும் வள்ளல். அவரிடம் வேண்டி, வணங்கி அடுத்ததாக நாங்கள் சென்றது 'தாளி பரம்பில்’ உள்ள ராஜராஜேஸ்வர் கோயில். இது, கேரளாவின் 108 சிவ க்ஷேத்ரங்களில் ஒன்று. நாங்கள் சென்ற நேரம், ஆண்கள் மட்டுமே இப்போது கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றார்கள். அதனால், என் கணவர் மட்டும் கோயிலுக்குள் செல்ல, நான் கோயிலுக்கு வெளியே படியில் தலையை நமஸ்காரம் செய்வதுபோல் தாழ்த்திப் பார்க்க, உள்ளே மூலஸ்தானத்தில், மேலே 'ஃ’ போல பெரிய தங்க உருண்டைகளும், அதன் அடியில் தங்க கவசம் சார்த்திய லிங்கமும், இரு பக்கமும் தங்க இறக்கைகளும் புலப்பட்டன.

எந்த ஸ்வாமியையும் கிட்ட இருந்து நன்றாக தரிசித்தாலும்கூட எனக்கு அத்தனை லேசில் திருப்தி வராது. ஆனால், ஸ்வாமி ராஜராஜேஸ்வரை வெளியிலிருந்தே தேஜோமயமான ரூபமாய் தரிசிக்க, பரவசமாகிப் போனேன் நான். தரிசனம் முடித்து திரும்பிய கணவரை, எனக்காக இன்னொரு முறை உள்ளே போய் தரிசித்து வாருங்கள் என்று அனுப்பினேன். அவரும் அப்படியே செய்தார்.

இந்தக் கோயிலில் குட்டி குட்டி அலுமினிய சொம்புகளில் நெய் ஊற்றி, அதன் வாயை சிறு இலையால் கட்டிவைத்துத் தருகிறார்கள். இதை வாங்கி ஸ்வாமி சந்நிதி அருகில் உள்ள கூடைகளில் வைத்துச் செல்கின்றனர் பக்தர்கள். இது, இங்கு முக்கிய சமர்ப்பணம் என்றார்கள். இதுபோல தங்கக் குடத்தில் நெய் ஊற்றி வைத்து ஸ்வாமியை வழிபட, நினைத்தது நடக்கும் என்றார்கள். 'நெய்யாமிர்தம்’ என்னும் இந்த வழிபாட்டை தமிழ்நாட்டினர் பலரும் வந்து நடத்துவதாகச் சொன்னார்கள்.

கோயிலின் பெரிய பிராகாரத்தை வலம் வந்தபோது, இடப்பக்க பிராகார மூலையில் சென்று மதிலைப் பார்த்துக் கும்பிட்டுக்கொண்டு இருந்தனர் சிலர். நாங்கள் அதுகுறித்து விசாரிக்க, செறுகுன்ன அன்னபூரணியை (செறுகுன்னு கோயில் அந்தத் திசையில்தான் உள்ளது) தொழுவதாகக் கூறினர்.

மனநிறைவான தெய்வ தரிசனத்தை முடித்துக்கொண்டு, நாங்கள் அடுத்ததாகச் சென்றது பரசினி கடவு. வாலப்பட்டினம் என்ற ஆற்றின் கரையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் விளக்கு மட்டுமே எரிகிறது. முத்தப்பன் என்ற தெய்வம் இங்கே வழிபடப்படுகிறது.

சிவனும் நாராயணனும் பின்னே அன்னபூரணியும்!

தினசரி ஆயிரக்கணக்கிலும், திருவிழாவின்போது லட்சக்கணக்கிலும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து செல்வதாகச் சொன்னார்கள். நாங்கள் சென்றபோது, மதியம் சாப்பாட்டு நேரம் என்பதால், வரிசையாக பக்தர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். தவிர, எல்லா நேரமும் பக்தர்களுக்கு வேக வைத்த பயறு, தேங்காய், டீ தருவார்களாம்.

நாங்கள் திட்டமிட்டபடி திருத்தல தரிசனம் நிறைவுற்றதும், திரும்பவும் கண்ணனூர் வந்து, ரயில் ஏறி, இன்ப நினைவுகளுடன் ஊர் வந்து சேர்ந்தோம்.

ஓம் நமசிவாயா! ஓம் நமோ நாராயணாய!!

அடுத்த கட்டுரைக்கு