ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
டியவர்களுக்கும் தம்மை நாடி வருபவர்களுக்கும் வலிமையுள்ள ஆதாரமாக, எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் உறுதுணையாக தாங்கி நிற்பவர் திருமால்

எனப் போற்றுகிறது விஷ்ணு சகஸ்ர நாமம். அதற்குச் சான்றாகத் திகழ்கிறது அத்ரி மலை! ஆமாம்... இங்கு வரும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும்... அந்தப் பரம்பொருளே இங்கே இப்படி மலையாகித் திகழ்கிறதோ என்றே எண்ணத்தோன்றும்!

பின்னே... யுகம்யுகமாக உலகம் போற்றப் போகும் ஒரு புண்ணிய க்ஷேத்திரத்தை உருவாக்குமுன், ஸ்ரீபரசுராமர் நிலை கொண்டிருந்த இந்த அத்ரி மலை சாந்நித்தியத்தில் சளைத்ததா என்ன?!

ஆமாம்... எச்சில் உமிழும்போதும் கைதட்டி ஓசை எழுப்புகிறார்கள், பக்தர்கள்! கேட்டால்... ''சூட்சுமமாய் இந்த மலை முழுக்க தேவர்களும் முனிவர்களும் வசிக்கிறார்கள். அவர்கள் சற்றே விலகிக்கொள்ள அனுமதி வேண்டியே இந்த கைத் தட்டலாம். உமிழ்நீர் அவர்கள் மீது தெறித்தால், அபசாரம் அல்லவா? எனவே, இப்படியரு முன்னெச்சரிக்கை'' என்று விவரிக்கிறார்கள். அதுமட்டுமா... ஆகாய கங்கை, சிவ-விஷ்ணு அம்சமாய் துவிமுக ருத்ராட்சம், எண்பட்டை லிங்க உருவில் அம்பாளின் அருட்கடாட்சம், வெள்ளை ஆமையாய் வரும் தேவேந்திரன், ஆதிசேஷ அம்சமாய் ஒரு தெய்வ விருட்சம்... என இந்த மலையின் அதிசயங்களை கதைகதையாய் சொல்கிறார்கள் அன்பர்கள்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

விருட்சம் என்றதும்தான் ஞாபகம் வருகிறது.  அத்ரி முனிவர் தலைகீழாகத் தொங்கியபடி தவம் செய்தார் என்று சென்ற இதழில் பார்த்தோம் அல்லவா... அந்த விருட்சத்தையே ஆதிசேஷ அம்சம் என்கிறார்கள். இதன் கிளையில் தொங்கியபடி உலக நன்மைக்காக தவம் செய்தாராம் அத்ரி மகரிஷி. இதன் அடிப்பகுதியில் அத்ரி வழிபட்ட சிவலிங்கம்! கருவறை போன்று உட்குழிந்திருக்கும் மரத்தின் இந்தப் பகுதி, ஆதிசேஷன் படமெடுத்திருப்பது போன்று அமைந்திருப்பது, விநோதம்தான்!

மரத்தடி மேடையில் அமர்ந்து, அத்ரி மகரிஷியை மனதில் நினைத்து, கணப்பொழுது கண் மூடினால், நம்மையும் அறியாமல் சிலபல நிமிடங்கள் நீண்டுவிடுகிறது நம் தியானம். மனதில் அப்படியரு நிம்மதி; அத்ரியின் கரங்கள் நம் தலைகோதி ஆசீர்வதிப்பது போன்று ஓர் பரவச உணர்வு... அதை அனுபவித்துதான் உணர வேண்டும். இந்த விருட்சத்தில் பெரியதொரு நாகம் வசிப்பதாக நம்பிகை!

அருகிலேயே ஆகாய கங்கை. சிறு தொட்டி போன்ற தீர்த்தக் கட்டத்தில்... விக்கிரகத் திருமேனியாக காட்சி தருகிறாள் கங்கா தேவி. ஒருமுறை, அத்ரியின் சீடர்கள் தீர்த்த யாத்திரை புறப்பட்டனர். ஆனால், குருநாதருக்கு பணிவிடை செய்ய ஆள் வேண்டுமே என்பதற்காக கோரக்கர் மட்டும் இங்கேயே தங்கிவிட்டார்.

இதனால் நெகிழ்ந்த அத்ரி முனிவர், 'மற்றவர்கள் கங்கையைத் தேடி வடக்கே செல்லட்டும். உன்னைத் தேடி கங்கையே இங்கு வருவாள்’ என்று தமது தவ வலிமையால் உண்டாக்கிய தீர்த்தமாம் இது.

தீர்த்தத் தொட்டிக்குள் சிறிதளவே தண்ணீர்; சலனமில்லாத நீர்ப்பரப்பு! சிறு மடையின் வழியே பூமிக்கடியில் செல்லும் இதன் தீர்த்தம், சுமார் 20 அடி தூரத்தில் உள்ள முகத்துவாரம் வழியே வெளியேறுகிறது. சொன்னால் நம்பமாட்டீர்கள்... தீர்த்தத் தொட்டிக்குள் பாதமும் நனையாத அளவுக்கே இருக்கும் நீர், முகத்துவாரத்தில் திபுதிபுவென கொட்டுகிறது!

தசாவதாரம் திருத்தலங்கள்!

ஆகாய கங்கையின் நீர் எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தால்... அது, விடை சொல்ல முடியாத இயற்கையின் விநோதம்தான்! இதில் ஒருமுறை நீராடினால், பிறகு எந்தப் பிணியும் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை. மற்றுமொரு அதிசயத்தையும் விவரிக்கிறார்கள். இந்த தீர்த்தத் தொட்டிக்குள் எப்போதாவது (பல வருடங்களுக்கு ஒருமுறை) அபூர்வமாக வெள்ளை ஆமை வந்து சேருமாம். தேவேந்திரனே இப்படி வெள்ளை ஆமையாய் வந்து, இங்கு வழிபடுவதாக ஐதீகம்.

பக்தர்களோடு உடலும் உள்ளமும் குளிர நாமும் நீராடிவிட்டு தரிசனத்தைத் தொடர்ந்தோம். இரட்டை விநாயகர், சாஸ்தா, ஸ்ரீவனதுர்கா, அத்ரி-அகத்திய முனிவர்கள், நாகப் பிரதிஷ்டை என ஒவ்வொருவரையும் முறைப்படி தரிசித்து, மூலவர் சந்நிதியை அடைகிறோம். அதற்கு முன்னதாக ஒரு தகவல்:

அவ்வப்போது  இங்கு வரும் யானைகள், வெட்டவெளியில் இருக்கும் விக்கிரகங்களைப் பெயர்த்துப் போட்டுவிடுமாம். ஆனால், இந்த இரட்டைப் பிள்ளையார்களை மட்டும் தொடுவதில்லையாம்!

வியந்து வணங்கியபடி, சந்நிதி மண்டபத்துக்குள் சென்றால், கோரக்க நாதர் (லிங்க) தரிசனம். கருவறையில் இரண்டு லிங்கங்கள். ஒன்று ஈஸ்வரன்; எண்பட்டை பாணத்துடன் திகழும் மற்றொன்று அம்பாளின் அம்சமாம். பௌர்ணமி தினங்களில் இங்கு வந்து ஆகாய கங்கையில் நீராடி, பால் சமர்ப்பித்து அம்பாளையும் ஸ்வாமியையும் வழிபட பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். அதுபோன்று, அமாவாசை தினங்களில் வந்து வழிபட, சகல சௌபாக்கியங்களும் கிடைக்குமாம். சுற்றி வலம் வந்தால், கோஷ்ட தெய்வங்களாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் தரிசனம்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

மாதம்தோறும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, ஸ்ரீவன துர்கையின் திருமுன் நிகழும் மகா பிரத்யங்கரா யாகமும் இங்கே விசேஷம்! இந்திரன் பூஜித்த மரகத லிங்கம் ஒன்று பிரளயத்தின்போது மண்ணுக்குள் புதைந்து போனதாம். 'தெய்வ வாக்கின்படி நிச்சயம் ஒரு நாள், யாக வேள்வியில் அந்த லிங்கம் தோன்றும்’ என்பது அத்ரிமலை பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாய் உள்ளது. அவர்களே, ''இந்த யாக பூஜையில் கலந்து கொண்டு, ஸ்ரீவனதுர்கையை மனதாரப் பிரார்த்திக்க, தீவினைகள் நீங்கும். நினைத்தது நிறைவேறும்'' என்கிறார்கள்.

மூலவர் சந்நிதி மண்டபத்தின் வலப்புறமாக நம்மை அழைத்துச் சென்ற அடியவர் ஒருவர் தென்மேற்கு திசையை சுட்டிக்காட்ட... சிலிர்த்துப் போனோம். நாம் நிற்பது இமயத்திலா அல்லது அத்ரி பர்வதத்திலா என்றுகூட சந்தேகம் எழுந்தது! ஆமாம், அந்த அன்பர் காட்டிய திசையில்... மேற்கு மலைத்தொடரின் சிகரம் ஒன்று, திருக்கயிலாய சிகரமாய் (இமயத்திலுள்ள கயிலாய சிகரம் போன்று) காட்சி தந்தது! கங்கை மட்டுமல்ல, திருக்கயிலையும் இங்கே வந்துவிட்டதாகவே தோன்றியது!

அத்ரி ஆஸ்ரமத்திலிருந்து தென்மேற்கில் சுமார் ஏழு மைல் தூரம், மலை ஏறிச் சென்றால், இந்த க்ஷேத்திரத்தின் துவார காவலராக கோயில் கொண்டிருக்கிறார், ஒரு கருப்பசாமி. அங்கிருந்து சிறிது தூரம் சென்றால், ஸ்ரீபொன்பெருமாள் சாஸ்தா கோயில். அதையும் தாண்டி சிறிது தொலைவிலேயே நாகமலை எஸ்டேட்... அதாவது கேரள எல்லையின் துவக்கம். அதுவும் தவிர, சற்று தொலைவில் ஓடும் ராம நதியும் ஸ்ரீபரசுராமர் இங்கு வந்து சென்றதற்கான சான்று என்கிறார்கள். பரசுராம நதி என்பதே காலப்போக்கில் ராம நதி என்றாகிவிட்டது என்பது பக்தர்களின் கருத்து.

எது எப்படியோ... தவசீலர்களின் தவ ஆற்றலையும், தேவதேவர்களின் அனுக்கிரஹத் தையும், மும்மூர்த்தியரின் பேரருளையும், பல இயற்கை அற்புதங்களையும்- அமானுஷ்யங் களையும் தன்னகத்தே கொண்டு திகழும் புண்ணிய பூமி, இந்த க்ஷேத்திரம்! நீங்களும், அற்புத மலையாம் அத்ரி மலைக்கு ஒருமுறை சென்று வாருங்கள்; உங்கள் வாழ்விலும் நல்லதொரு மாற்றத்தைக் காண்பீர்கள்.

- அவதாரம் தொடரும்...
படங்கள்: எல்.ராஜேந்திரன்