மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

ழை என்றால் குசேலன் என்றும், பணக்காரன் என்றால் குபேரன் என்றும் சொல்வது வழக்கம். பரம ஏழையான குசேலன் எனும் அந்தணனும், சகல ஐஸ்வரியங்களுடன் வாழ்ந்த ஸ்ரீகிருஷ்ணனும் பால்ய நண்பர்கள். குசேலனின் உண்மைப் பெயர் சுதாமன்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

வறுமையில் வாடிய சுதாமன், ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணனைச் சந்தித்ததும், அவன் அருளால் குபேரனானதும் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், சுதாமன்- கண்ணன் சந்திப்புக்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்களும், அப்போது பிறந்த கேள்விகளும், அவற்றுக்குக் கண்ணன் கூறிய பதில்களும்தான் இதில் தெரிந்துகொள்ள வேண்டிய சூட்சுமமான விஷயங்கள்.

சுதாமன், கண்ணனுடன் பள்ளியில் ஒன்றாய்ப் படித்தவன். பிறகு, பல காலம் அவர்கள் சந்திக்கவில்லை. சுதாமனுக்கு சுசீலை என்ற மனைவி இருந்தாள். பரம தரித்திரனான சுதாமனுக்குக் குழந்தைச் செல்வங்கள் மட்டும் ஏராளமாக இருந்தன. இது அவனை மேலும் வறியவனாக்கியது. பசியும் பட்டினியும் அவர்கள் குடும்பத்தை வாட்டி வதைத்தன.

வீதியில் உஞ்சவிருத்தி எடுத்து, அதன் மூலம் கிடைத்த சிறிதளவு தான்யத்தை வைத்துக்கொண்டுதான், சுதாமனின் பெரிய குடும்பம் கால் வயிற்றுப் பசியாறிக்கொண்டிருந்தது.

சுதாமனுடன் படித்த ஸ்ரீகிருஷ்ணன் துவாரகை மன்னனாக இருப்பதை அறிந்த சுசீலை, ஒருநாள் தன் கணவனிடம், ''தங்கள் அருமை நண்பர் ஸ்ரீகிருஷ்ணன் இப்போது துவாரகாதிபதியாக இருக்கிறார். அவர் கருணா மூர்த்தி. அவரைப் பார்த்து, நம் வறுமை தீர, வழி தேடி வாருங்கள்'' என்று கண்ணீர் மல்கக் கூறினாள். பல நாட்கள் சிந்தித்த பிறகு, சுதாமனும் அதற்கு இசைந்தான். பகவான் ஸ்ரீகிருஷ்ணனைக் காணப் புறப்பட்டான். நண்பனைப் பார்க்க வெறுங்கையுடனா போவது? சிறுவயது முதலே கண்ணனுக்கு அவல் பிடிக்கும் என்ற விஷயத்தை சுதாமன் தன் மனைவியிடம் ஏற்கெனவே கூறியிருந்தான். எனவே, வீட்டில் இருந்த சிறிதளவு நெல்மணியை அரிசியாக்கி, அதைக் குத்தி, அவலாக்கி, ஒரு கந்தல் துணியில் அந்த அவலைக் கட்டிக் கொடுத்து, கண்ணனுக்காக எடுத்துச் செல்லும்படி சுசீலை வேண்டினாள். சுதாமனும் அவல் முடிச்சுடன், துவாரகை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான். கல்லும் முள்ளும் நிறைந்த காடுகள் வழியே பசியும் பட்டினியுமாக அவன் பயணம் தொடர்ந்தது.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

அதேநேரம், துவாரகையில் ஸ்ரீகிருஷ்ண னுக்குப் பாத பூஜை செய்து கொண்டிருந்த ருக்மிணி, கண்ணனின் பாதங்களில் வழியும் ரத்தத்தால், தட்டிலுள்ள பால் செந்நிறமான தைக் கண்டு திடுக்கிட்டாள். கண்ணனின் பாதங்களைத் தொட்டாள். அங்கே முட்கள் தைத்திருந்ததை பார்த்துப் பதைபதைத்தாள் ''இதென்ன ஸ்வாமி? அரண்மனையில் ரத்தினக் கம்பளத்தில் நடக்கும் தங்களின் கமலப் பாதங்களில், முட்கள் தைத்து ரத்தம் வடிகிறதே?'' என்று கேட்டாள்.

''ருக்மிணி, சுதாமன் எனும் குசேலன் என் பள்ளித் தோழன். என் அருமை நண்பன். என்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறவன். பாவம், வறுமை அவனை ஆட்கொண்டு விட்டது. அவன் மனைவி சுசீலை என் மீது பக்தி கொண்டவள். அவர்களுக்குப் பெரிய குடும்பம். அவன் இப்போது என்னைக் காண வந்து கொண்டிருக்கிறான். பலநாள் பசியால் வாடி, உடல் வலுவின்றி என்னைக் காணும் ஆர்வத்தில், கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் நடந்து வந்து கொண்டிருக்கிறான். அவன் கால்களில் குத்தும் முட்களைத்தான் இங்கே என் கால்களில் காண்கிறாய். அதனால், அவன் தன் கால்களில் முட்கள் தைத்ததை அறியாமல் நடந்து வந்து கொண்டிருக்கிறான்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணன்.

##~##
துவாரகை எல்லையை அடைந்த சுதாமன், அரண்மனைக் காவலர்களிடம் சென்று, ''நான் ஸ்ரீகிருஷ்ணனின் பள்ளித் தோழன். அவனைக் காண வேண்டும்'' என்று கூறினான். காவலர் கள் நகைத்தனர். 'பஞ்சப் பரதேசி பிராமணன் துவாரகை மன்னனுக்குத் தோழனா?’ என ஏளனம் செய்தனர். 'போ’ என்று பிடித்துத் தள்ளினர். 'கிருஷ்ணா!’ என்று கதறியபடி கீழே விழுந்தான் சுதாமன். அங்கே ஸ்ரீகிருஷ்ணனே நின்று சுதாமனைத் தூக்கிக் கட்டியணைத்து, அன்புடனும் பரிவுடனும் அரண்மனையின் உள்ளே அழைத்துச் சென்றான். காவலர்கள் வெட்கித் தலைகுனிந்து மன்னிப்புக் கேட்டனர்.

அரண்மனையில், சுதாமனை வற்புறுத்தி தன் சிம்மாசனத்தில் அமர வைத்தான் ஸ்ரீகிருஷ்ணன். அவனுக்குப் பாத பூஜை செய்ய கண்ணனும் ருக்மிணியும் ஆயத்தமா யினர். சுதாமன் அதிர்ச்சியிலும் ஆனந்தத் திலும் திகைத்தான். ''கிருஷ்ணா! பரம ஏழையான என்னை பார்புகழும் மன்னவனான நீ உன் சிம்மாசனத்தில் அமர்த்தி, பாத பூஜை செய்வது தர்மமா?'' என்று கேட்டான். ஸ்ரீகிருஷ்ணன் சிரித்தான்.

''சுதாமா, நான் உன்னைவிட ஏழை.

உனக்கென்று நீயாவது சொந்தம். நானோ என் அடியவர்க்குச் சொந்தம். எதுவுமே தனக்குச் சொந்தமில்லாதவன் ஏழை இல்லையா?'' என்று சாதுர்யமாகக் கேட்டான்.

கண்ணனின் அன்பையும் எளிமையையும் கண்டு வியந்தான் சுதாமன். வந்த காரியமே மறந்துவிட்டது அவனுக்கு. ஆனால், அவன் வந்த காரியத்தைக் கண்ணன் மறக்கவில்லை. சுதாமனின் குடும்பத்தின் க்ஷேமத்தை விசாரித்தான். ''சுசீலை சௌக்கியமா? குழந்தைகள் நலமா?'' என்று விசாரித்தான்.

''எனக்காக உன் மனைவி என்ன கொடுத் தனுப்பினாள்?'' என்று கேட்டான். சுதாமன் பதில் கூறும் முன்பே, அவன் மடியைப் பிடித்து, அதில் முடிந்திருந்த அவல் மூட்டையை எடுத்துப் பிரித்து, ஒரு பிடி அவலை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் ஸ்ரீகிருஷ்ணன். அதே விநாடியில், சுதாமனின் ஏழ்மை அனைத்தும் நீங்கியது. அவன் வீட்டில் பொன்னும் பொருளும், மாடும் மனையும் தோன்றி, அவன் குடும்பத்தினர் குபேர சம்பத்தைப் பெற்றனர்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

கண்ணன் இரண்டாவது பிடி அவலை உண்டான். அப்போது கல்விச் செல்வமும், பெயரும் புகழும் அந்தக் குடும்பத்துக்குக் கிடைத்தது. கண்ணன், மூன்றாவது பிடி அவலை சாப்பிடக் கையில் எடுத்தான். அப்போது ருக்மிணி அவன் கையைப் பிடித்து, வேண்டாமென சமிக்ஞை காட்டித் தடுத்தாள்.

மூன்றடியால் மூவுலகையும் அளந்த பரந்தாமன், மூன்றாவது பிடி அவலையும் உண்டால், தன்னையும் தன் பரிவாரங்களை யும்கூட சுதாமனுக்குத் தானமாக அளித்துவிடு வான் என்று பயந்தே, ருக்மிணி மூன்றாவது பிடி அவலைத் தடுத்ததாகக் காலம் காலமாக பௌராணிகர்கள் கூறி வருகிறார்கள்.

இங்கேதான் ஒரு கேள்வி பிறக்கிறது.

'தர்மத்தைத் தடுப்பது தர்மமா? அதிலும் கணவன் செய்யும் தர்மத்தை, தர்மபத்தி னியே தடுக்கலாமா? அதுவும் மகாலட்சுமியின் ஐஸ்வர்யங்கள் அள்ளிக் கொடுத்தால் அழியக் கூடியதா? - இத்தகைய கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்குப் பதில் தேடுவதற்கு முன், அங்கே தொடர்ந்து நடந்த சம்பவங்களைக் கவனிப்போம்.

சுதாமனுக்கு உபசாரங்கள் நடந்து முடிந்தன. ஆனால், தனது வறுமை நிலை நீங்கியது, அவனுக்குத் தெரியாது. கண்ணனின் கருணையால் பேரானந்தம் அடைந்திருந்த சுதாமனின் மனம் நிர்மலமாக இருந்தது. அதில் எந்த ஆசாபாசமும் இல்லை பரமார்த்த நிலையில் அவன், ''போய் வருகிறேன், கண்ணா!'' என்று கூறி விடைபெற்றான்.

ஸ்ரீகிருஷ்ணன், சுதாமனுக்குச் சகல சௌபாக்கியங்களையும் நிச்சயமாகத் தந்திருப்பான் என்று ருக்மிணி யூகித்தாள். இருந்தாலும், அவள் மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது.

''ஸ்வாமி, வறுமையால் வாடி வந்த உங்கள் அருமை நண்பனுக்கு எத்தனையோ ஐஸ்வர்யங்களை நீங்கள் அளித்திருப்பீர்கள். அதைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரிவிக் காமல், அவர் திரும்பிக் போக எந்தவித சௌகர்யங்களும் செய்து தராமல், வந்தது போலவே மீண்டும் நடந்தே ஊர் திரும்பச் சொல்லிவிட்டீர்களே, ஏன்?'' என்று கேட்டாள்.

கண்ணன் பதில் கூறினான். ''ருக்மிணி! சுதாமன் வாழ்க்கையில் அமைதியும், ஆனந்தமும், திருப்தியும் நிறைந்திருக்கும் நேரம் இன்னும் சில நாழிகைகளே உள்ளன. என்னைத் தரிசித்த பேரானந்தத்துடன் அவன் சென்று கொண்டிருக்கிறான். வீட்டுக்குச் சென்று, குபேர செல்வத்தை தான் பெற்றதை அறிந்ததும், பிரச்னைகள் ஆரம்பித்துவிடும். செல்வத்தால் ஆசை, பாசம், பேராசை, கர்வம் மற்றும் செல்வத்தை மேலும் சேர்க்க வேண்டும் என்கிற பேரவா, அவற்றால் ஏற்படும் புதிய பிரச்னைகள் ஆகியவற்றில் சுதாமனது வாழ்க்கை முற்றிலும் சுழல ஆரம்பித்துவிடும். அப்போது அவன் பரமானந்த நிலை மறைய ஆரம்பித்துவிடும். வாழ்க்கையில் அவன் அனுபவிக்கப் போகும் கடைசி நேர ஆனந்தத்தையும் சச்சிதானந்த நிலையையும் நான் அழிக்க விரும்பவில்லை. அதனால்தான் அவனை வந்தது போலவே திரும்பி வழி அனுப்பியிருக்கிறேன்.'' என்றான் ஸ்ரீகண்ணன். ருக்மிணி திகைத்தாள். கண்ணன் செய்யும் காரியங்களுக்கெல்லாம் ஒரு காரணம் உண்டு என்பது அவளுக்குத் தெரிந்ததுதானே!

இப்போது கண்ணன் தன் பங்குக்கு, ஒரு கேள்வியை ருக்மிணியிடம் கேட்டான். ''சுதாமன் கொண்டு வந்த அவலை நான் ஒவ்வொரு பிடியாகச் சாப்பிட்டேன். முதல் இரண்டு பிடி அவலைச் சாப்பிட்டு, மூன்றாவது பிடி அவலை எடுத்தபோது, நீ ஏன் என் கையைப் பிடித்துத் தடுத்தாய்?'' என்று கேட்டான். அதற்கு ருக்மிணி, ''ஸ்வாமி, தங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் எந்தப் பொருளும் பிரசாதமாகிறது. சுதாமன் அன்புடன் தந்த அவல், அனைத்தையும் தாங்களே சாப்பிட்டுவிட்டால், அந்தப் பிரசாதத்துக்காகக் காத்திருக்கும் எனக்கும், தங்களின் பரிவாரத்துக்கும் பிரசாதமில்லாமல் போய்விடுமே என்பதற்காகத்தான், 'எங்களுக்கும் கொஞ்சம் மீதி இருக்கட்டும்’ என்ற பாவனையில் தங்கள் கைகளைப் பிடித்தேன்'' என்றாள்.

ஆகவே, ருக்மிணி தடுத்தது தர்மத்தை அல்ல; தர்ம பலனை அனைவரும் பெறவே அவள் அப்படிச் செய்தாள்.

- இன்னும் சொல்வேன்...