Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''திருப்பட்டூர் கோயில் எங்கே இருக்கு, எப்படிப் போக ணும்னு தினமும் மூணு பேராவது எங்கிட்டே கேக்கறாங்க. அவங்களுக்கு வழியைச் சொல்லும்போதெல்லாம், எனக்கு நல்வழி காட்டிய அந்தத் தலம் அப்படியே என் கண் முன்னாடி வந்து நிக்கும்! '' என உற்சாகத்துடன் பேசுகிறார் வாசகி பரிமளா.

''கோயில்- குளத்துக்குப் போறதுக் கும் ஸ்வாமி தரிசனம் பண்றதுக்கும் யாருக்குத்தான் கசக்கும்? அரசாங்க பள்ளிக்கூடத்துல ஆசிரியை உத்தியோகம் பாத்துக்கிட்டிருந்தேன் அப்போ! அடிப்படைச் சம்பளத்துல ஒரு தொகையை உசத்தினதுல ஒரு குளறுபடி ஏற்பட்டு, எனக்குச் சம்பளமே ஏறாமப் போயிடுச்சு. மனசு வேதனையோடு வழக்குப் போட்டேன். கிட்டத்தட்ட ஒன்பது வருஷமா அந்த வழக்கு கிணத்துல போட்ட கல்லாட்டமா, அப்படியே இருந்துச்சு. எந்த முன்னேற்றமும் ஏற்படாம, எனக்குச் சேர வேண்டிய தொகை பத்தின முடிவும் தெரியாம... ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகிக் கிடந்தேன்.

அந்த சமயத்துலதான், திருப்பட்டூர் கோயிலுக்குப் போனா திருப்பம் ஏற்படும்னு சொன்னாங்க. பெரிய திருப்பம் ஏற்படுதோ இல்லையோ... முதல்முறையா ஒரு கோயிலுக்குப் போயிட்டு வருவோமேன்னு முடிவு பண்ணி, திருச்சிக்குப் போனேன். அங்கிருந்து திருப்பட்டூர் போய், காசி விஸ்வநாதரையும்  பிரம்மபுரீஸ்வரரையும் தரிசனம் பண்ணினேன்.  'அடேங்கப்பா... மத்த எல்லாக் கோயில்கள் மாதிரி இல்லை இந்தக் கோயில்னு’ தோணிச்சு. ஏன்னா... கோயில்கள்ல, முனிவர்களோட திருச்சமாதிகளைப் பெரும்பாலும் நான் பார்த்ததே இல்லை. சரி... இது ஏதோவொரு சக்தி நிறைஞ்சிருக்கிற திருத்தலம்தான்னு முடிவுக்கு வந்தேன்.

##~##
'என்னோட உரிமை பறிக்கப்பட்டிருக்கு. எனக்கு வரவேண்டிய சம்பளம் மறுக்கப்பட்டிருக்கு. கடவுளே... நீதான் எனக்கு அருள்புரியணும்!’னு மனசார வேண்டிக்கிட்டேன். நல்லா ஞாபகம் இருக்கு... அன்னிக்கி ஆகஸ்ட் 15. அதுக்கு அடுத்தாப்ல கோர்ட்ல வழக்கு வாதத்துக்கு வந்தப்ப, நல்ல தீர்ப்பு வந்துச்சு. வேறென்ன... எனக்குச் சாதகமாத்தான்! அப்பலேருந்து, மனசுல சின்ன சஞ்சலம்னாலும் சட்டுனு கிளம்பி திருப்பட்டூர் போய் தரிசனம் பண்ணிட்டு வந்துடுவேன்'' என்று கண்ணீர் பொங்க நெகிழ்ச்சியுடன் சொல்லும் பரிமளா, சென்னையில் வசிக்கிறார்.

உண்மைதான். திருப்பட்டூர் சென்று வந்தவர்கள் அனைவரும் தங்களின் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லிச் சொல்லி வியக்கிறார்கள், இந்தத் தலத்தைப் பற்றி! இந்தத் தலத்துக்குச் சென்று வந்த பிறகு அடுத்தடுத்த நாட்களில் நல்லதொரு திருப்பங்கள் ஏற்படுகின்றன என்று சொல் லிப் பூரிக்கின்ற வாசகர்கள் நிறையவே உண்டு. ஒரு முறை தரிசனம், ஒரு முறை செய்த பிரார்த்தனை நிறைவேறல் என்றாகிவிட்ட பிறகு, அவர்கள் மீண்டும் மீண்டும் இந்தத் தலத்துக்கு வருகின்றனர்; தங்களின் மனதில் உள்ள குறைகளைச் சொல்லிப் பிரார்த்திக்கின்றனர்.

''இதுவரைக்கும் நான் 15 தடவைக்கு மேல திருப்பட்டூ ருக்கு வந்திருக்கேன். வந்து, நின்னு நிதானமா, எந்தப் பரபரப்பும் இல்லாம, ஆழ்ந்த ஈடுபாட்டோடு தென்னாடுடைய சிவபெருமானைத் தரிசனம் பண்ணி, என்னுடைய வேண்டுதலைச் சொல்லியிருக்கேன். இதுவரை நான் கேட்ட எந்தவொரு பிரார்த்தனையையும் நிறைவேத்திக் கொடுக்காம இருந்ததில்லை, இந்தப் புண்ணிய க்ஷேத்திரம்!

என் பொண்ணு பேரு சாருபாஷினி. ஜாதகத்துல எந்தக் குறையும் சிக்கலும் இல்லை. ஆனாலும், வரன் மட்டும் ஏனோ தகையாம இழுத்துக்கிட்டே இருந்துச்சு.

ஒருநாள்... அவ ஜாதகத்தை எடுத்துட்டு, திருப்பட்டூருக்குப் போனேன். அங்கே, பிரம்மபுரீஸ்வரர் கோயில்ல இருக்கற பிரம்மாகிட்ட பொண்ணோட ஜாதகத்தை வைச்சு, ரெண்டு நிமிஷம் கண்ணை மூடி அப்படியே நின்னேன். 'நல்லாப் படிச்சு, கை நிறைய சம்பளம் வாங்கற என் பொண்ணுக்கு நல்லவிதமான ஒரு வாழ்க்கையைக் கொடு. இப்படிச் சோதிக்கலாமா?’னு வேண்டிட்டு வந்தேன். அடுத்த ஒரே மாசத்துல வரன் அமைஞ்சது; அப்பறம்... கல்யாணமும் சிறப்பா முடிஞ்சுது. இப்ப அவ, பெங்களூருவுல சந்தோஷமும் நிறைவுமா வாழ்ந்துண்டிருக்கா!'' என்று உணர்ச்சிவசப் பட்டுச் சொல்கிற பரிமளா, தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டாராம்.

''எங்களுக்குக் காரைக்குடிதான் சொந்த ஊர். அரியக் குடி பெருமாள்தான் குலதெய்வம். ஆனா, எங்க இஷ்ட தெய்வம் திருப்பட்டூர் ஸ்வாமிதான். மனசுல சின்ன குழப்பமோ பயமோ வந்தால்... திருப்பட்டூர் மண்ணை மிதிச்சாப் போதும்... சகலமும் சரியாயிடும். மனசு பளிச்சுனு பிரச்னையில் இருந்து வெளியே வந்துடும்.

இப்படித்தான், என் பையன் ஜகத்ரட்சகன் ஒரு பொண்ணை விரும்பினான். அந்தப் பொண்ணு நல்ல, சாத்விகமான குணம். ஒருநாள் எங்ககிட்ட வந்து, தான் அந்தப் பொண்ணை விரும்புற விஷயத்தைச் சொன்னான். எங்களுக்கும் பொண்ணை ரொம்பவே பிடிச்சிருந்துது. ஆனா, அவங்க வீட்ல சம்மதிக்கலை. 'பையனோட எல்லா விருப்பங்களையும் நிறைவேத்தியாச்சு.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

குணவதியான ஒரு பொண்ணை விரும்பறான். நமக்கும் அருமையான ஒரு மருமகள் கிடைக்கிற வாய்ப்பு இருக்கு. ஆனா, இது நடக்குமா?!’ன்னு எங்க மனசுக்குள்ள ஒரு குழப்பம்... ஒரு தவிப்பு!

நானும் என் கணவர் ஸ்ரீநிவாசனும் திருப்பட்டூர் போனோம். 'எனக்கு நல்லது நடந்துச்சு. என் பொண்ணுக்கும் நல்ல வரன் அமைஞ்சு, சந்தோஷமா இருக்கா. எங்க ஒரே பையனோட எண்ணத்தையும் பூர்த்தி செஞ்சு கொடுத்தா, நிம்மதியா இருக்கும் எங்க ளுக்கு!’ன்னு வியாக்ரபாதர் சமாதிக்குப் பக்கத்துலேயும், பதஞ்சலி முனிவர் சமாதிக்குப் பக்கத்துலேயும் கண் மூடி பத்து நிமிஷம் உட்கார்ந்து, மனமுருகிப் பிரார்த்தனை பண்ணினோம்.

ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரையும் ஸ்ரீகாசி விஸ்வநாதரையும் மனசார வேண்டிக் கிட்டோம். ஸ்ரீபிரம்மாவோட சந்நிதியில பையன் பேருக்கு அர்ச்சனை பண்ணி, எங்க பிரார்த்தனையையும் வைச்சோம், பிரம்மாகிட்ட!

அதுக்கு அப்புறம் வந்த சேதிகள் எல்லாமே நல்லவிதமா முன்னேற்றமா  இருந்துது. சம்பந்தி வீட்டாரும் தங்கமானவங்க. எல்லாரோட பரிபூரண சம்மதமும் கிடைச்சு, ஜாம்ஜாம்னு பையனுக்குக் கல்யாணம் நடந்துச்சு. இப்ப, அவன் யு.எஸ்.ல இருக்கான். நினைச்சபடி வேலை, நினைச்சபடி வாழ்க்கைன்னு அமையறதுதானே கொடுப்பினை! அந்த வகையில நான் பாக்கியசாலி; அதிர்ஷ்டசாலி!

என் உடம்புல சக்தி இருக்கிற வரைக் கும், திருப்பட்டூருக்குப் போயிக்கிட்டே இருப்பேன். வாழ்க்கைல நல்ல நல்ல திருப்பங்களைத் தந்த திருத்தலத்துல, நம்ம காலடி படுறதே பூர்வ ஜென்மத்துப் புண்ணியம்! எந்தப் பிறவியோட பயனோ இது. தென்னாடுடைய திருப்பட்டூரானே போற்றி போற்றி!'' என்று கண்கள் மூடி, கைகள் குவித்துச் சொல்கிறார் பரிமளா.

வாழ்வில், ஒருமுறை... ஒரேயரு முறை... திருப்பட்டூரைத் தரிசித்து வாருங்கள்; நீங்களும் அத்தகைய சிலிர்ப்பை, பரவசத்தை உணர்வீர்கள்!

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்,
என்.ஜி.மணிகண்டன், ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism