Published:Updated:

ஜகம் நீ... அகம் நீ..!

ஜகம் நீ... அகம் நீ..!

ஜகம் நீ... அகம் நீ..!

ஜகம் நீ... அகம் நீ..!

Published:Updated:
ஜகம் நீ... அகம் நீ..!
ஜகம் நீ... அகம் நீ..!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இ
ங்கே தேனம்பாக்கத்துக்கு சுப்ரமணியன் சுவாமி எப்பவும் வருவார். அவரை பெரியவாளுக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் குழந்தை மாதிரி பேசுவார். பெரியவாளின் குழந்தை என்றே அவரைச் சொல்லலாம். 'பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் எல்லா நாடுகளிலே இருந்தும் இந்தியாவுக்குத் தொந்தரவு இருந்துண்டே இருக்கு. இஸ்ரேலுக்கும் நம்ம நாட்டுக்கும் எந்த விரோதமும் கிடையாது. சீனாவைக் கொஞ்சம் நமக்கு அனுசரணையா நடந்துக்கச் சொல்லு. கயிலாஷ்- மானசரோவர் யாத்திரைக்குப் போறவாளுக்கு எல்லா வகையிலயும் உதவி பண்ணச் சொல்லு!’ என்று அவரிடம் சொல்லி, அவரும் அதற்கு ரொம்பவே ஒத்தாசை செய்திருக்கிறார்.

'கண்ணதாசன் அடிக்கடி தேனம்பாக்கத்துக்கு வந்து மகா பெரியவாளோட பேசிண்டே இருப்பார். அவர் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ கட்டுரைகள் தொடர்ந்து எழுதறதுக்குப் பெரியவா நிறைய விஷயங்கள் கொடுத்திருக்கார்.

ராஜீவ்காந்தி, சோனியாவுடன் இங்கே வந்திருக்கார். 'நீ மட்டும்தான் மோதிலால் நேரு குடும்பத்திலே இப்போ உயிரோட இருக்கே. தயவுசெஞ்சு பாலிடிக்ஸுக்கு வராதே! உன் உயிருக்கு ஆபத்து இருக்கு!’ என்று பெரியவா சொன்னார். சோனியா காந்தி கூட பக்கத்திலே இருந்து, அதைக் கேட்டுண்டு இருந்தார். 'நான் பாலிடிக்ஸுக்கு வந்தாச்சு! இனிமே இதிலே இருந்து கழண்டுக்கறதுக்கு வழியே இல்லே. அதுனால, என்னோட உயிருக்கு ஆபத்துன்னா, நான் போயிட்டுப் போறேன். தேசம்தான் முக்கியம்!’ அப்படீன்னார் ராஜீவ்காந்தி' என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்த வைத்திய நாதன், தேனம்பாக்கத்தின் மகத்துவத்தையும், அங்கே பெரியவா எப்படி வாழ்ந்து வந்தார் என்பதையும் விவரித்தார்.

ஜகம் நீ... அகம் நீ..!

அலஹாபாத்தில் இருக்கும் சகஸ்ரலிங்கம், பெரியவா ஏற்பாட்டில் இங்கேதான் வேதம் சொல்லச் சொல்லிப் பண்ணினது. அப்புறம்தான் அதை லாரியிலே ஏத்தி எடுத்துண்டு போக ஏற்பாடு ஆச்சு. இங்கே ஒரு மாமரம்கூட இருந்தது. அங்கேதான் அத்வைத சபா வெள்ளி விழா கொண்டாட்டம் எல்லாம் நடத்தி வச்சார். அந்த மாமரத்துக்குக் கீழே பெரியவா உட்கார்ந்திருந்த போட்டோ கூட இருக்கு.

ஒரு நாள் பெரியவா, திண்ணையிலே படுத்திண்டிருந்தார். நாங்கள் பக்கத்துத் திண்ணையிலே படுத்திண்டிருந்தோம்.   பெரியவா திடீர்னு திண்ணையிலே இருந்து கீழே விழுந்த மாதிரி இருந்தது. கையிலே தண்டம் மட்டும் அப்படியே பிடிச்சபடியே நேரா இருந்தது! பெரியவா அப்படியே பிராகாரத்துக்கு வந்து அங்கப்பிரதட்சிணம் செய்ய ஆரம்பிச்சுட்டார். நாலு பிராகாரத்தை யும் முழுசா சுத்தி அங்கப்பிரதட்சிணம் பண்ணினார். எதுக்காக அவர் அப்படி அங்கப்பிரதட்சிணம் பண்ணினார்னு எங்களால புரிஞ்சுக்கவே முடியலே.

தொண்ணூறு வயதில், காமாட்சி அம்பாளுக்குக் கும்பாபிஷேகம் பண்ற போது, அங்கே நாலு வீதியிலயும் பெரியவா அங்கப் பிரதட்சிணம் செய்தபோதுதான் தெரிந்தது, தன்னால முடியுமான்னு அன்னிக்கு தேனம்பாக்கத்தில் அதுக்கு முன்னோட்டம் பார்த்திருக்கார் பெரியவா!

அதேமாதிரிதான், தேவி காமாட்சி கிளம்பி கொட்டகைக்குப் போனப்புறம், ஜபம் பண்ணிண்டே வரதராஜப் பெருமாள் கோயிலின் நாலு மாட வீதியிலேயும் பிரதட்சிணம் பண்ணினார். அதுவும் ஒரு பரீட்சை மாதிரிதான். சதாராவுக்கு நடந்து போகத் தன்னால் முடியுமான்னு சோதனை பண்ணிப் பார்த்திருக்கார்.

சதாராவுக்குப் போறதுக்கு முன்னால, ரிஜிஸ்திரார் ஆபீசுக்குப் போய், தேனம்பாக்கம் நிலத்தை எங்க சங்கர பக்த ஜன சபா பெயரில் ரிஜிஸ்தர் பண்ணிக் கொடுத்துட்டுத் தான் போனார். நீலகண்ட குருக்கள் இங்கே இருந்தார். கடனை எல்லாம் முழுக்க அடைச்சு, அனுபவ பாத்யதையை எங்களோட சங்கர பக்த ஜன சபாவுக்கு எழுதி வைச்சுட்டார். 'இந்த சிவா ஸ்தானத்தை நீங்கதான் நிர்வாகம் பண்ணணும்’னு சொல்லிட்டார். மடத்துக்குக்கூட எழுதி வைக்கலே! பெரியவா சொன்னதன்பேரில் திருக்குளத்திலே நீலோத்பல மலர் போட்டோம். இந்தத் திருக்குளத்தை ஹிந்துஜா குரூப் செப்பனிட்டுத் தர்றதா சொல்லியிருக்காங்க.  

பெரியவா ஆசியோட வேத பாடசாலை இப்பவும் நடக்கிறது.   இருபது மாணவர்கள் கிருஷ்ண யஜுர் வேதம் படிக்கிறார்கள். அதிகாலை 4 மணிக்குப் பாடங்கள் ஆரம்பித்தால், ராத்திரி 9:30 மணி வரை படிப்பார்கள். ஸ்போர்ட்ஸும் உண்டு. இங்கிலீஷ், கணிதம் சரித்திரம் எல்லாம் சொல்லித்தர ஏற்பாடு பண்ணிட்டு வரோம்.

ஜகம் நீ... அகம் நீ..!

மகா பெரியவா ஆராதனை நடத்த, சி.சி.எல் கம்பெனி இங்கே ஒரு பெரிய மண்டபம் கட்டித் தந்திருக்கு. உபநயனம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் மாதிரி வைதீகக் காரியங்கள் எல்லாம் இங்கே நடத்தலாம். இங்கே இருக்கிற பிரம்மபுரீஸ்வரர் லிங்கத்துக்குப் பின்னாலே, ஸ்ரீசோம கணபதியுடன் ஆதிசங்கரரும் இருப்பதைப் பார்க்கலாம். அப்படியே சுவரில் பிரதிஷ்டை ஆகியிருக்கிறது. ஆதிசங்கரர் இங்கேதான் கடைசியில் வந்து தங்கியிருந்தார் என்பார்கள். 'பிரம்ம காஞ்சி’ என்று தேனம்பாக்கத்தைச் சொல்லுவார்கள். இங்கே ஏகாந்தமாக இருக்க விரும்பினா பெரியவா. சிவாஸ்தானம் புனிதமானது என்பது தவிர, சங்கரர் சம்பந்தப்பட்ட ஸ்தலம் என்பதாலேயே அதை உணர்ந்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் பெரியவா. தாம் தங்கியிருக்க ஒரு சிறு குடிசை போதும் என்று இருந்துவிட்டார். தன் கை நிறைய தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு, தம் இடத்தைத் தாமே சுத்தம் செய்து விடுவார். தினமும் அதிகாலைல விஷ்ணுவைத் தரிசிக்க, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டே விஷ்ணுகாஞ்சிக்கு நடந்து போவார்.

இந்தத் தேனம்பாக்கத்தை சிவாஸ்தானம் என்பார்கள். பல்லவர் காலத்துக் கோயில். இங்கே இருக்கிற துர்கையின் மேல் துர்கா பஞ்ச ரத்னம் எழுதியிருக்கார் பெரியவா. சதாரா போற வழியில் இருக்கிற அக்ரி கிராமத்தில் தங்கியிருந்தபோது. 'தே தியான யோகானுதா’ என்று தொடங்கும் பஞ்ச ரத்னம் அது. 'தன்னுடைய குணங்களாலேயே மறைத்திருக்கக்கூடிய பராசக்தியான உன்னை, யார் தியான யோகத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்களே காண்கின்றனர். ஏ தேவி, நீதான் பரமேஸ்வரனுடைய சக்தியாகின்றாய். ஏ தேவி, மோட்சத்தைக் கொடுப்பவளே, சர்வேஸ்வரி, என்னைக் காப்பாயாக!’ என்ற அர்த்தம் உள்ளது அந்த ஸ்லோகம்.

அன்னிக்கு அதி ருத்ரம் ஜபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பெரு மழை வந்து, கொட்டகையே சாமி மேல் சாய்ந்துவிடும் போல் இருந்தது. பெரியவா அப்படியே படுத்துண்டிருந்தா. அவருக்கு ஒண்ணுமே ஆகலே! தண்ணி எல்லாம் உள்ளே வந்துட்டுது. அப்புறம் மண் கொண்டு வந்து போட்டு சமன் பண்ணினோம்.  

பக்கத்திலே இருக்கிற இறவாஸ்தானேஸ் வரரைத் தரிசனம் பண்ணி பூஜை பண்ணினால் இறப்பு கிடையாது என்றும், பிறவாஸ்தானேஸ்வரைப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டால் பிறப்பு கிடையாது என்றும் சொல்வார்கள். 'தேவ தேவ மமாஸ்தானம் சிவாஸ்தானம் மிதம் க்ருதம்; சிவாஸ்தானேஸ்வரம் நாம ஸ்தானமேதத் பிரசித்தமத்’ என்று இந்த தேனம்பாக்கத்தை மிக உயர்வாகச் சொல்லுவார்கள்.

பிரம்மா யாகம் பண்ணின இடம் தேனம்பாக்கம். ஆனால் யாகத்துக்கு அவர் சரஸ்வதியைக் கூப்பிடவில்லை. அதனால் சரஸ்வதிக்குக் கோபம். நதியாக வேகமாக வந்தாள். ஊரையே அழிச்சுடற வேகம். அதனால், நதிக்கு வேகவதின்னு பேர்.

மகாவிஷ்ணு வஸ்திரத்தை அவிழ்த்துக் கீழே போட்டுப் படுத்துண்டுட்டார். யாகம் பூரணமாச்சு. அதனால்தான் யதோத்காரி அல்லது சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று அவருக்குப் பெயர். ஆனால், தானம் பண்ண ஒரு எஜமானர் வேணுமே! பரமேஸ்வரன் நின்றார். அவர்தான் பிரம்மபுரீஸ்வரர். இங்கே இருக்கிற சோம கணபதி, யாகத்தை ரட்சித்தார். நதியாக வந்து இருட்டாகப் போனதால், உலகமே இருண்டு போச்சு. யாகம் நடக்க பெருமாளே வந்தார். அவர்தான் விளக்கொளி பெருமாள் அல்லது தீபப் பிரகாசர். பக்கத்திலேயே அவர் கோயில் இருக்கிறது. பிரம்மா யாகம் பண்ணினதிலிருந்து வந்த பெருமாள் விக்கிரகம்தான் வரதராஜர் உற்ஸவ மூர்த்தி. அவர் முகத்தில் யாகத்தோட அக்னி பட்ட வடு கூடத் தெரியும்!  

இதை மோட்சபுரின்னும் சொல்லுவா. இங்கே ஆதிசங்கரர் கடைசியாக வந்திருந்தார். அதனால, இந்த இடத்தோட விசேஷம் பெரியவாளுக்குத் தெரிஞ்சிருக்கு. இங்கே சுவாமிக்கு இரண்டு வேளை பூஜையும் ராஜப்பா குருக்கள்தான் செய்து வருகிறார்.

பெரியவா ஏப்ரல் 15, 1978 அன்னிக்கு சிவாஸ்தானத்தை விட்டுப் புறப்பட்டு கால்நடைப் பயணமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் யாத்திரை எல்லாம் முடித்துக்கொண்டு, ஏப்ரல் 13, 1984-ல் திரும்பி வந்து சேர்ந்தார். கிட்டத்தட்ட 4000 கி. மீ. தூரம் நடந்திருக்கார். இந்த மாதிரி எந்த மகானாவது மக்களைப் பார்க்கணும்னு அவர்கள் இருக்கிற இடத்துக்குப் போய் தரிசனம் கொடுத்து வந்திருக்கிறாரான்னு தெரியலை. இது ஓர் ஆச்சரியமான, பிரமிப்பான விஷயம்!

அதனால்தான் தேனம்பாக்கத்துக்கு அத்தனை விசேஷம். பெரியவாளின் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் அதிஷ்டானத்தை தரிசனம் பண்ணின கையோடு இங்கேயும் வந்து தரிசனம் பண்ணுகிறார்கள். இது அத்தனை புனிதமான ஸ்தலம்!

- தரிசனம் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism