மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்
கேள்வி-பதில்

கோயில்களில் இறைத் திருமேனிகளை வண்ணக் காகிதங்கள், கலர் துணிகள் மற்றும் கவரிங் நகைகளால் அலங்கரிக்கிறார்களே... இது சரியா?

பா.சுப்ரமணியராவ், பெங்களூரு

##~##
'சரியில்லை’ என்கிற எண்ணம் மனதின் அடித்தளத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதால், எதிரிடையான எண்ணம் கேள்வியாக வெளி வந்துள்ளது!

இறைவனுக்குத் திருமேனியை உருவாக்கியது நாம். புராணத் தகவல்கள் நமக்கு உதவின. 'பீதாம்பரதாரி’ என்ற விளக்கத்தை வைத்து கண்ணனுக்குப் பீதாம்பரத்தை அளிக்கிறோம். பலராமனுக்கு நீலாம்பரத்தை அளிக்கிறோம். ஆனால், 'திகம்பரன்’ என்ற விளக்கத்தை வைத்து, ஈசனுக்கு வஸ்திரம் அளிக்காமல் இருப்பது இல்லை. 'சுப்ரவஸ்திராவிருதா’ என்பதை எண்ணி, கலைமகளுக்கு வெண்ணிற ஆடையை அளிப்போம். வண்ண ஆடைகளைத் தவிர்ப்பவர்களும் உண்டு.

அழகுக்கு இலக்கணம் இறைத் திருமேனி. 'சுந்தரேஸ்வரன்’ என்று ஈசனுக்குப் பெயர் உண்டு. குழந்தை கண்ணனும், பார்த்தசாரதி யாக மாறிய கண்ணனும் பெண்ணினத்தை மட்டுமில்லாமல், ஆணினத்தையும் அழகால் ஈர்த்தவர் என்று மதுசூதன ஸரஸ்வதி சொல்வார் (பூர்ணேந்து சுந்தரமுகாத்...). அம்பாளை சௌந்தர்யலஹரியாகப் பார்த்தார் ஆதிசங்கரர்.

இருக்கிற அழகை வெளிப்படுத்தவே அலங்காரம். அந்த அலங்காரமே அழகை உண்டு பண்ணாது. நாம் அணியும் போலிகளை அணிவிக்கவேண்டிய தேவை இல்லை. ஒட்டு மீசை, விக்கு, காகித (ஸ்டிக்கர்) பொட்டு, உதட்டுச் சாயம், கவரிங் உருப்படிகள், வாசனைத் திரவியங்கள் ஆகிய அனைத்தையும் நாம் பயன்படுத்துகிறோம். அவற்றில் அழகு மிளிர்வதாக நினைக்கிறோம். இந்த நினைப்பே போலி அலங்காரத்தில் பிடிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெண்ணிற ஆடை அணிவிக்க வேண்டும். செயற்கை கலக்காத ஆடை உகந்தது. ஆபரணத்துக்கு உகந்த தங்கம், வெள்ளி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வஸ்திரம் இல்லை என்றால், அதற்குப் பதிலாக புஷ்பத்தை அளிக்கலாம். அதற்காக போலியைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். அணிகலன் இல்லை எனில், புஷ்பத்தை அள்ளி அளித்தால் போதும் என்கிறது சாஸ்திரம் (ஆபரணார்த்தம் புஷ்பாணி ஸமர்ப்பயாமி). 'பொன் வைக்கும் இடத்தில் புஷ்பத்தை வை’ என்று சொல்லுவதுண்டு; போலியை வை என்று சொல்வதில்லை. ஸுவர்ண புஷ்பத்தை அளிக்கும் விதமாக புஷ்பத்தை அளிப்பது உண்டு.

இறைவனின் படைப்பை அப்படியே அவனுக்கு அளித்தால் போதும். நாம் படைத்த போலி நகைகளை அவனுக்கு அளிப்பது சிறந்த நடைமுறை அல்ல. பாதுகாப்பு இல்லாததால் கவரிங் நகை களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மாற்றுக் குறையாதவனை மாற்றுக் குறைந்தவனாகச் சித்திரிப்பது நமது மனம். இறையுருவத்தின் உள்ளே கடவுள் மறைந்திருக்கிறார். வெளித் தோற்றமான திருவடிவை அவனாகவே பார்ப்பதால் ஏற்பட்ட எண்ணம், போலியைப் பயன்படுத்தத் தூண்டியது.

கேள்வி-பதில்

வீட்டில் திருவிளக்கை ஆண்கள் சுத்தப்படுத்துவதோ, நெடுநேரம் சுடர் விடும் விளக்கினை அவர்கள் அணைப்பதோ கூடாது என்கிறார்களே, அப்படியா? புதிதாக விளக்கு வாங்கி வழிபட விருப்பம். பழசாகிப்போன திருவிளக்கை என்ன செய்வது?

- எஸ்.சுந்தர், திருநெல்வேலி-7

பெண்கள் இல்லாத நிலையில், ஆண்கள் திருவிளக்கை சுத்தப்படுத்தலாம்; ஏற்றலாம்; அணைக்கலாம். புது விளக்கு கடையில் வாங்கலாம்; பழசைப் போடலாம். கர்ப்பக்கிரகத்தில் ஆண்கள் விளக்கேற்று வது உண்டு; அணைப்பதும் உண்டு. தீபாராதனையின்போதும் ஆண்கள் விளக்கேற்றி அணைப்பார்கள். கோயிலில் 'லட்ச தீப’ விழாவில் விளக்கேற்றுவது ஆண்கள். வீதி உலாவில் ஆண்கள் விளக்கேற்றிக்கொண்டு முன்னே செல்வர். தந்திரமுறைப்படி செய்யும் பூஜை களிலும் ஆண்கள் விளக்கேற்றுவர்.

திருமணம் செய்யாமல் நைஷ்டிக பிரம்மசாரியாக இருப்பவர், தினம் தினம் வீட்டில் விளக்கேற்றுவார். தம்பதி இருவரும் சேர்ந்து செய்யும் சடங்குகளில்... அவளுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக விளக்கை ஏற்றுவதும், அணைப்பதும் பெண்கள் செய்யட்டும் என்றார்கள். குடும்ப க்ஷேமத்துக்காகச் செயல்படும்போது, பெண்களுக்கு விளக்கேற்றும் பங்கை அளித்தார்கள். திருமணத்தில் பச்சைப்பிடி சுற்றி விளக்கு ஏற்றிச் சுற்றுவது பெண்கள்தான்; அணைப்பதும் அவர்களே! மங்கல்யப் பொண்டுகளில் விளக்கேற்றி இறக்குவதும் பெண்மணிகள்தான்.  

ஒளிப் பிழம்பை இறைவனின் வடிவாகப் பார்க்கிறோம். நாம் செய்யும் சடங்குகளுக்கு, ஒளிப்பிழம்பு மூலம் சாட்சியாக இருக்கிறார் இறைவன். அறியாமை இருளை அகற்றி, அறிவைப் புகட்டும் பொருளாக ஒளிப் பிழம்பை பார்க்க வேண்டும். ஒளிப் பிழம்புதான் நமக்கு விளக்கம் அளிக்கும் விளக்கு. அதற்கு ஆதாரமாகப் பயன்படும் விளக்கின் உருவத்தை ஆண்- பெண் பேதம் இல்லாமல் கையாளலாம். இறைப்பணியில் இருவருக்கும் இடமுண்டு.

கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் தேங்காயை வீட்டுச் சமை யலுக்குப் பயன்படுத்தலாமா? அல்லது வீட்டில் வழிபாட்டில் சமர்ப்பிக்கும் நைவேத்தியத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டுமா?

- வி.ரவிச்சந்திரன், சென்னை-18

வீட்டுச் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். வழிபாட்டில் படைக்கும் நிவேதனத்துடன் சேர்க்க இயலாது.

திருமணம் போன்ற சடங்குகளில் சமைத்த பொருளை வரவழைத்து உண்ணும் நமக்கு நெருடல் வருவதில்லை. முன்னோர் ஆராதனையில் சமைத்த பொருளை ஏற்பதில் சங்கோஜம் இல்லை. சமைத்த பொருளை வரவழைத்து விசேஷ பூஜையில் நிவேதனம் செய்வது உண்டு. அப்படியிருக்க, பிரசாதப் பொருளை ஏற்பதில் ஏன் தயக்கம்? பிரசாதப் பொருளைக் கலந்து சமைப்பது, சமையலில் தூய்மை அளிக்கும். வீட்டில் பூஜையில் நிவேதனம் செய்ய அதைப் பயன்படுத்தக்கூடாது. ஏற்கெனவே ஒருதடவை நிவேதனமாக ஒரு பொருளைக் கலந்தால், அந்தப் பொருளுக்கு மீண்டும் நிவேதனம் செய்வதற்கான தகுதி அற்றுவிடும்.

கேள்வி-பதில்

விக்கிரகப் பிரதிஷ்டையின்போது, அந்தந்தத் தேவதைகளின் யந்திரத்தையும் சேர்த்து பிரதிஷ்டை செய்ய வேண்டுமா? யந்திரம், தந்திரம், மந்திரம் ஆகியன ஒன்றுக்கொன்று எங்ஙனம் தொடர்புடையன? ஆதார பீடத்துடன் தேவதா விக்கிரகங்களை மட்டும் அஷ்டபந்தனம் செய்யலாமா? யந்திர பிரதிஷ்டையும் அவசியமா?

- சுப்ரமணியன், வித்யாரண்யபுரம்

விக்கிரக பிரதிஷ்டையில் யந்திரத்தைச் சேர்க்க வேண்டிய தேவை இல்லை. விக்கிரக பிரதிஷ்டையை ஸனாதனம் விளக்கி இருக்கிறது.

பிரதிஷ்டா மயூகம், தர்ம ஸிந்து, நிர்ணய ஸிந்து போன்ற நூல்கள் பிரதிஷ்டையை விளக்கிக் கூறுகின்றன.

சைவம், சாக்தம், வைஷ்ணவம் போன்ற நூல்கள் ஆகம முறையில் விக்கிரக பிரதிஷ்டையை விளக்கும். தந்திர சாஸ்திரம் யந்திர வடிவில் இறை உருவத்தை உருவாக்கி, மந்திரத்துடன் கலந்து யந்திர பிரதிஷ்டையை விளக்கும். ஸனாதனமானது, தேவதையை பிரதிஷ்டை செய்யும் வேளை யில், அதன் அடியில் தங்கம், வெள்ளி மற்றும் நவரத்தினங்களை வைத்து, மூர்த்தத்துக்கு மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்யச் சொல்லும். யந்திர பிரதிஷ்டையை இணைக்காது. அது, தந்திர சாஸ்திரத்தின் நடைமுறை. ஆகம முறையிலும் யந்திரத்துக்கு முன்னுரிமை இல்லை. அஷ்ட பந்தனம் மூர்த்தத்துக்கு உண்டு; யந்திரத்துக்கு இல்லை. யந்திரம் - சரம்; இது அசரம். அசையாமல் இருக்க அஷ்ட பந்தனம் தேவைப்படும். யந்திரம் சரமானதால், அதை அசையாமல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. யந்திரம் - மந்திரம் - தந்திரம் வேறு; ஆகமம் வேறு; ஸனாதனம் (ஸ்மிருதி) வேறு. மூன்றையும் கூட்டிக் குழைத்து மூன்று உருவங்களையும் சிதைக்கக் கூடாது.

பிந்து, ஷட்கோணம், அஷ்டதளம், க்ஷே£டசதளம், பூபுரம் - போன்றவற்றை கோடுகளில்... தங்கம், வெள்ளி, செப்பு ஆகியவற்றில் ஏற்றி, அதற்கு ஜலாதிவாசம் போன்றவற்றைச் செய்து உயிரூட்டி, தேவதையின் சாந்நித்தியத்தை வரவழைத்து, அதை மூர்த்தத்தின் அடியில் அடக்கம் செய்வது தவறு. உயிரூட்டப்பட்ட தகடுக்கு உபசாரம் இல்லாமல், நிரந்தரமாக மூர்த்தத்தின் அடியில் சேர்ப்பது பொருந்தாது. மூர்த்தத் துக்கு கும்பாபிஷேகத்தினால் சாந்நித்தியம் வரும்போது, அடியில் போட்ட யந்திரத்துக்கு பயன் இல்லை. மூர்த்தத்துக்குப் பெருமை சேர்க்க யந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது.

யந்திரத்தில் சாந்நித்தியத்தை ஏற்றி, பணி விடைக்கு வாய்ப்பு இல்லாமல், மூர்த்தத்தால் அதை மறைக்கக் கூடாது. மீறினால் இரண்டு விதிகளும் - அதாவது தந்திர சாஸ்திரமும் ஆகமமும் - முறை தவறிவிடும். ஸனாதனம் சொல்லும் வழியில்... தேவதா பிரதிஷ்டையில் யந்திரத்தை எதிர்பார்க்காது. அது தேவையற்றது மட்டுமல்ல, தந்திர சாஸ்திரத்தின் தனித்தன்மையை குலைப்பதும் ஆகும்; ஸனாதனத்தின் நிறைவை அகற்றிவிடும். அந்தந்த விதிகளை அதது சொல்லும் முறையில் பயன்படுத்துவது சிறப்பு. தந்திர சாஸ்திரத்தில் அசர பிரதிஷ்டை வராது. மற்ற இரண்டும் அசர பிரதிஷ்டையை ஏற்கும். காலப்போக்கில் ஒரு நடைமுறை மற்றதிலும் கலந்து, அதனதன் தனி உருவம் மாசுபட்டுவிட்டது. மூர்த்தத்தின் தரத்தை உயர்த்த யந்திரம் பயன்படாது. மூர்த்தத்தைப் போல் சைதன்யம் பெற்ற தெய்வ வடிவம், யத்திரம். இரண்டும் தனித்தனியாக இயங்கினால் மட்டுமே பெருமை உண்டு.

தங்களது சிந்தனைக்கு ஒரு வார்த்தை. திருமணத்தில் திருமாங்கல்யதாரணம் உண்டு. தங்கம் மங்கலப் பொருள். அதற்கு மாங்கல்யம் என்று பெயர். தங்கத்தைத் தரித்துக்கொள்ள வேண்டும் என்று வேதம் சொல்லும். பரிசுத்தமான தங்கத்துக்கு சைதன்யம் ஊட்டவேண்டிய தேவை இல்லை. அந்தத் தங்கத்தில் லட்சுமியின் சாந்நித்தியத்தை வரவழைக்க, அதற்கு பூஜை செய்து... ஸ்ரீசூக்தம், துர்கா சூக்தம் ஜபித்து, பிறகு தாலி கட்டுவார்கள். அதில் தேவதையை குடியிருத்தி, கழுத்தில் கட்டுவார்கள். குடியிருந்த தேவதைக்குத் தினம் பணிவிடை இருக்காது. குடியிருத்திய தேவதையை யதாஸ்தானம் பண்ண மாட்டார்கள். யதாஸ்தானம் பண்ணினால், மனம் நெருடலைச் சந்திக்கும். பல தீட்டுகளை அந்தத் தாலி சந்திக்கும். அதற்குப் பரிஹாரமும் இருக்காது. இப்படி தேவையில்லாத பூஜையை திருமாங்கல்யத்துக்கு நிகழ்த்தி, பெருமை ஏற்றியதாக நினைத்துத் தவற்றை ஏற்கிறார்கள்! விஷயம் தெரிந்தவர்களும் அதைக் கையாளுவதுதான் ஆச்சரியம்.

புது ஆடைகளை மஞ்சள் குங்குமம் வைத்துக் கட்டிக்கொள்வது உண்டு. தங்கத்தை மஞ்சள் குங்குமம் வைத்துக் கட்டினால் போதும். பூஜை செய்து பெருமையைப் பெருக்கும் நோக்கம் தவறானது. அதுபோல், மூன்று வழிகளிலும் யந்திரத்தைத் தேவை யில்லாமல் நுழைத்து, சாந்நித்தியத்தைப் பெருக்கியதாக மனம் எண்ணும்; உண்மையில் இல்லை.

பஞ்சாங்கங்களில் சில நாட்களைக் கரிநாள் என்றும் மாத தியாஜ்யம் என்றும் குறிப்பிடுகிறார்களே... இது குறித்து விவரியுங்களேன்.

- ஸ்ரீராமன், பெங்களூரு

கரிநாளுக்கு மறுபெயர்தான் மாத தியாஜ்யம். இரண்டும் ஒன்றுதான். மாதத்தின் தியதியை வைத்து த்யாஜ்யம் கணக்கிடப்படுகிறது. ஒரு மாதத்தில் ஒன்றாம் தியதி திங்கள் என ஒரு பஞ்சாங்கத்தில் இருக்கும். மற்றொன்றில், அடுத்த கிழமையான செவ்வாய் ஒன்றாம் தியதியாக இருக்கும். இரண்டு பஞ்சாங்கங்களிலும் தேதி மாறி கரிநாள் இருக்கும். கரிநாள் பயணத்தை மட்டுமே விலக்கும்; மற்றவை ஆகலாம். பஞ்சாங்க கணனத்தில் ஒற்றுமை இல்லை. அது, நமது துரதிருஷ்டம்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்