Published:Updated:

வெற்றியைத் தருவார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்!

வெற்றியைத் தருவார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்!

வெற்றியைத் தருவார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்!

வெற்றியைத் தருவார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்!

Published:Updated:
வெற்றியைத் தருவார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்!
வெற்றியைத் தருவார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காபாரத யுத்தத்தில், ஸ்ரீகிருஷ்ணன் தேரோட்ட, துரியோதனாதிகளை அர்ஜுனன் துவம்சம் செய்துகொண்டிருந்த அந்தத் தருணத்தில், தேரின் மேல் ஒரு கொடி கம்பீரமாகப் பறந்தது. அந்தக் கம்பீரத்துக்குக் காரணம், அதில் காவலனாக வீற்றிருந்த ஸ்ரீவீர ஆஞ்சநேயர்.

தேரின் கொடியில் அமர்ந்து, யுத்தத்தில் தனக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்த ஆஞ்சநேயருக்கு, யுத்தம் முடிந்ததும்  நன்றி தெரிவிக்க விரும்பினான் அர்ஜுனன். ஸ்ரீகிருஷ்ணரிடம் இதுகுறித்து ஆலோசித்தான். ''ஆகா, நல்ல யோசனை அர்ஜுனா! நன்றி காட்டுவது உத்தமமான குணம். நான் சுட்டிக்காட்டும் இடத்தில் ஸ்ரீவீர ஆஞ்சநேயரின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவாயாக!'' என்று பகவான் அருளினார்.

அதன்படியே அனுமனின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் அர்ஜுனன். அந்த இடம், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகலில் உள்ளது. அர்ஜுனன் வழிபட்ட விக்கிரகத்தை இன்றைக்கும் தரிசிக்கலாம்.

பெங்களூருவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவிலும், கோலார் நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது முல்பாகல் எனும் நகரம். இந்த ஊரின் பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.

வெற்றியைத் தருவார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்!

'முதல பாகிலு’ என்று ஆதியில் அழைக்கப்பட்டு, பிறகு 'முல்பாகல்’ என மருவியதாகச் சொல்வர். முதல பாகிலு என்றால், 'கிழக்கு வாசல்’ என்று பொருள். விஜயநகர மன்னர்கள் ஆண்ட மைசூர் ராஜ்ஜியத்துக்கு, கிழக்குத் திசை நுழைவாயிலாக இந்த நகரம் இருந்ததால், இப்படிப் பெயர் அமைந்ததாகச் சொல்வர்.

முல்பாகல் திருத்தலம், 'பாஸ்கர க்ஷேத்திரம்’, 'கதிலேஷண்ட வனம்’ (கதலி \ வாழை), 'ஷதக் கவாடபுரி’ எனப் பல திருநாமங்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஊரை ஒட்டியுள்ள மலைக்கு 'அஞ்சனாத்ரி மலை’ என்று அனுமனின் தாயார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முல்பாகலிலும் சுற்று வட்டாரப் பகுதியிலும் புராதனமான ஆலயங்கள் பல இருக்கின்றன. புனித க்ஷேத்திரமான காசி- வாரணாசி தலத்துக்கு நிகரான தலமாக, ஸ்ரீசோமேஸ்வரர் ஆலயம் இங்கு அமைந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், பண்டரி புரத்தில் உள்ள 'பாண்டுரங்க விட்டல’ திருக்கோயிலுக்கு இணையானதாக ஸ்ரீவிட்டலேஸ்வரர் எனும் திருநாமத்துடன் திருமாலுக்கும் ஓர் ஆலயம் அமைந்துள்ளது. அவணி என்ற ஒரு தலம், 'கயா’வுக்கு நிகரான தலம் என்று புகழப்படுகிறது. இங்கு ஸ்ரீராமலிங்கேஸ்வரர், ஸ்ரீலட்சுமணேஸ்வரர், ஸ்ரீபரதேஸ்வரர் மற்றும் ஸ்ரீசத்ருக்னேஸ்வரர் ஆலயங்கள் உள்ளன.

வெற்றியைத் தருவார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்!

இருப்பினும், அனைத்து ஆலயங் களிலும் மிகவும் பழைமையானதும் புகழ் பெற்றதும்... அர்ஜுனன் பிர திஷ்டை செய்த ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயில்தான் என்கின்றனர் ஊர் மக்கள்.

ஆஞ்சநேயர் கோயில் என அழைக்கப்பட்டாலும், மூலவர் திருமால்தான். அவரின் திருநாமம் - ஸ்ரீசென்னகேசவ பெருமாள். தாயார் - ஸ்ரீபத்மாவதி தாயார்.  ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீவரதராஜர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி, ஸ்ரீகோதண்டராமர் ஆகியோரும் தனித் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

ஸ்ரீவீர ஆஞ்சநேயர் விக்கிரகத்தைத் தவிர, மற்ற விக்கிரகங்களை வசிஷ்ட மகரிஷி பிரதிஷ்டை செய்தார் என்கிறது ஸ்தல புராணம். சிறிய அளவில் இருந்த ஸ்ரீவீர ஆஞ்சநேயர் ஆலயத்தை, மொகலாய சக்ரவர்த்தி அக்பரின் நிதி அமைச்சராக இருந்த ராஜா தோடர்மால் விரிவுபடுத்திக் கட்டியதுடன் புனருத்தாரண வேலைகளையும் செய்திருக்கிறார். கிருஷ்ணதேவராயர் கட்டிய மண்டபத்தில் மற்ற ஸ்வாமிகளின் சந்நிதிகள் அமைந்துள்ளன. ராஜா தோடர்மாலின் சிலையை ஆலயத்தில் காணலாம்.

திருப்பதி சென்று திருவேங்கடவனைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், முதலில் முல்பாகல் வந்து ஸ்ரீவீர ஆஞ்சநேயரையும், இதர தெய்வங்களையும் தரிசித்து, அதன் பிறகே திருப்பதி செல்ல வேண்டும் என்பது கர்நாடக மக்களின் வழக்கமாக உள்ளதாம்.

வெற்றியைத் தருவார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்!

அதேபோல், இங்கு வந்து ஸ்ரீவீர ஆஞ்சநேயரையும் பெருமாளையும் ஸேவித்த பிறகுதான், திருமணம் முதலான வீட்டு விசேஷங்களைத் துவக்குகின்றனர், இந்தப் பகுதி மக்கள்.

''வைகானச ஆகமப்படி பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், ஸ்ரீவீர ஆஞ்சநேயருக்கு விசேஷமாக தாழம்பூவினால் பூஜை நிகழ்த்தப்படுகிறது. வருடத்தின் 365 நாட்களிலும் தாழம்பூ வழிபாடுதான்! ஆஞ்சநேயரை வழிபட வருபவர்களுக்கு தாழம்பூ மடலையே பிரசாதமாக வழங்குகிறோம். காலை 7 முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்'' என்கிறார் அர்ச்சகர் வெங்கடேச ஆச்சார்யர்.

''ஏப்ரல், மே மாதங்களில் ரத உத்ஸவம், செப்டம்பரில் லட்சார்ச்சனை, ஆடி மாதம் பவித்ரோத்ஸவம், தனுர் மாதத்தில் 9 நாட்கள் திருவிழா, நவராத்திரியில் தசாவதாரம், அனுமன் ஜயந்தி என திருவிழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன. வைகானாச ஆச்சார்யரின் ஜயந்தியும் இங்கே கொண்டாடப்படுகிறது.

பக்தர்கள், எந்தக் கோரிக்கையை முன் வைத்து ஸ்ரீவீர ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்தாலும், அவர் அந்தக் கோரிக்கையை விரைவில் ஈடேற்றித் தருவார். இவரை வேண்டினால், வெற்றி நிச்சயம்'' எனப் பெருமிதத்துடன் சொல்கிறார் அர்ச்சகர் வெங்கடேச ஆச்சார்யர்.

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism