Published:Updated:

ஆற்றுக்கு நடுவே ஆனந்த சயனம்!

ஆற்றுக்கு நடுவே ஆனந்த சயனம்!

ஆற்றுக்கு நடுவே ஆனந்த சயனம்!

ஆற்றுக்கு நடுவே ஆனந்த சயனம்!

Published:Updated:
ஆற்றுக்கு நடுவே ஆனந்த சயனம்!
ஆற்றுக்கு நடுவே ஆனந்த சயனம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திவேகமாக சுழன்றது சுதர்சனம். தனது பாவக் கறையை நீக்கும் புண்ணிய தீர்த்தத்தை- ஒப்பிலா அந்த க்ஷேத்திரத்தைத் தேடி பயணித்தது.

'ஆதிமூலமே...’ என்று அபயக் குரலெழுப்பிய கஜேந்திர யானை யைக் காப்பாற்ற சுதர்சனத்தை ஏவினார் ஸ்ரீமந்நாராயணன். அவரின் திருக்கரத்தில் இருந்து புறப்பட்டு காலாக்னியாய் கனன்று சுழன்ற சுதர்சனம், நொடிப் பொழுதில்... தடாகத்தில் கஜேந்திரனின் காலைப் பற்றிக் கொண்டிருந்த முதலையை வதம் செய்தது. வதம் என்பதை விட, சுதர்சனத்தாழ்வாரின் தீண்டலால் அந்த முதலைக்கு மோட்சம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். ஆனாலும், முதலையின் ஊனுடம்பை அழித்தது பாவமே எனக் கருதியது சுதர்சனம். இந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ளவே, பல காடு-மலைகள் கடந்து, தேவர்களும் முனிவர்களும் போற்றும் அந்த க்ஷேத்திரத்தைத் தேடிப் பயணித்தது!

அதன் தேடல் வீண்போகவில்லை. தென்னகத்தில்... தாமிரபரணி நதிதீரத்தில், அந்த க்ஷேத்திரத்தைக் கண்டுகொண்டது. பேரானந்தத்துடன் தரையிறங்கி, தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடி, நதியின் நடுவே கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதரை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றது சுதர்சனம்.

ஆமாம்... காவிரி- கொள்ளிடம் நடுவே ஸ்ரீரங்கத் தில் கோயில் கொண்டிருப்பதுபோல், இங்கு தாமிரபரணியின் நடுவே சயனக் கோலத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார் ஸ்ரீஅரங்கநாதர்.

ஆற்றுக்கு நடுவே ஆனந்த சயனம்!

என்ன... தாமிரபரணியின் நடுவில் ரங்கநாதரா என்று ஆச்சரியம் மேலிடுகிறதா? அந்தத் தலம் எதுவென்று தெரிந்துகொள்ளும் ஆவல் எழுகிறதா? சற்றே பொறுங்கள். அந்தத் தலத்தின் பெயரை தெரிந்து கொள்ளுமுன், இன்னுமொரு கதை... உங்களுக்காக!

கர்மவினை எவ்வளவு கொடியது தெரியுமா? இந்தப் பிறவியில் நீங்கள் எவ்வளவு புண்ணியம் செய்துகொண்டிருந்தாலும், முற்பிறவியின் கர்ம வினைகள் உங்களைப் பாடாய்படுத்தும். மாண்டவ்ய முனிவரின் விஷயத்திலும் அப்படித்தான் ஆனது!

அரண்மனையில் திருடிய திருடன் ஒருவனை துரத்தி வந்தார்கள் வீரர்கள். காட்டுக்குள் புகுந்த அந்தத் திருடன், மாண்டவ்யரின் ஆசிரமத்தில் களவாடிய பொருட்களை போட்டுவிட்டு ஓடிவிட்டான். துரத்தி வந்த வீரர்கள், தவத்தில் இருக்கும் முனிவரையும் அருகே ஆபரண மூட்டைகளையும் கண்டார்கள். 'இவர்தான் திருடியிருப்பார். நம்மிடம் தப்பிக்க முனிவராக வேஷம் போடுகிறார்’ எனக் கருதி,   அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். முனிவரைக் கழுவில் ஏற்ற உத்தரவிட்டான் மன்னன். தண்டனை நிறைவேற்றப்பட்டது.முனிவரின் தவமும் பக்தியும் அவரின் மரணத்தைத் தடுத்தாலும், கழுவில் அவர் பட்ட வேதனை... சொல்லிமாளாது!

ஆற்றுக்கு நடுவே ஆனந்த சயனம்!

''தருமமே, இது உனக்கே அடுக்குமா? தவசீலனான எனக்கேன் இந்தக் கொடுமை?'' என்று தர்மதேவனிடமே நியாயம் கேட்டார் முனிவர். அவன் ஒரு காரணம் சொன்னான். ''முனிவரே, முற்பிறவியில் சிறுவயதில் நீங்கள் விளையாட்டாகக் கருதி ஒரு தும்பியைத் துன்புறுத்தினீர்கள். அந்த வினையே இப்போது வேலை செய்கிறது...'' என்றான்.

முனிவர் கொதித்தார். 'முற்பிறவியில் அறியா வயதில் செய்த சிறு தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? தர்மதேவனே, உனது நீதிபரிபாலனை தவறு. நீயும் மனிதனாகப் பிறந்து வினைப்  பயனை அனுபவித்துப் பார்’ என்று தர்மதேவனையே சபித்தாராம் மாண்டவ்யர். அந்த சாபத்தின் விளைவாகவே... தருமதேவதை, விதுரராகப் பிறப்பெடுத்ததாகக் கதை விரியும்.

ஆக... அதன்பிறகு தனது ஒட்டுமொத்த கர்மவினைகளும் பொசுங்க இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தமாடி, அனந்த சயனப் பெருமா ளையும், மாண்டவ்ய லிங்கத்தையும் வழிபட்டு அருள் பெற்றாராம் மாண்டவ்யர். இன்றும் இந்தத் தலத்தில் முனிவரின் திருப்பாதங்களைத் தரிசிக்கலாம்.

இன்னுமொரு அற்புதமும் இங்குண்டு. ''ஸ்ரீவாமன மூர்த்தி மகாபலியை அடக்கப் புறப்பட்டது, இங்கிருந்துதான்!'' என்று, சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். ஸ்ரீவாமனரையும் இங்கே தரிசிக்கலாம்.

அற்புதமான அந்தத் தலம் ஊர்க்காடு.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரை தாத்ரிவனம், சித்தேஸ்வரம் என்றெல்லாம் போற்றுகின்றன புராணங்கள்.தென்னகத்தில் கற்றளிகள் (கற்கோயிலாக) எழும்பிய காலத்தில் முதல் கற்கோயிலாக அமைந்த ஆலயம் இது; சுமார் 1200 ஆண்டு கள் பழைமையானது என்கிறார்கள்.

ஆற்றுக்கு நடுவே ஆனந்த சயனம்!

ஆற்றின் நடுவில், சயனக் கோலத்தில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஅரங்க நாதர். பொதுவாக தாமிரபரணி நதிக்கரையில் உள்ள தலங்களில், பெருமாள் சயனக் கோலத்தில் காட்சி தருவது அரிது. ராவண வதம் முடிந்து திரும்பிய வேளையில், அனுமனுக்காக இப்படி ஆனந்த சயனக் கோலத்தில் காட்சி தந்தாராம் பெருமாள்; திருவடியில் ஸ்ரீதேவி- பூதேவியரும் அனுமனும்!

மேலும் இந்தக் கோயிலில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீலட்சுமி நரசிம்மர்,ஸ்ரீவேணுகோபாலர் ஆகியோரையும் தரிசிக்கலாம். ஆற்றங் கரையில் கங்கையம்மனும் பைரவரும் அருள்கின்றனர்.  திருவோண திருநாள், ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீராம நவமி, ஆடிப்பூரம் ஆகிய நாட்களிலும் சனிக்கிழமைகளிலும் இங்கு வந்து நெய்விளக்கேற்றி வைத்து வழிபட, நமது கர்மவினைகளும் பொடிப்பொடியாகும்.

அதுமட்டுமா? இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி முறைப்படி ஸ்வாமியை வழிபட்டுச்செல்ல கல்வி- ஞானம் கைகூடும்; நமது பிதுர் தோஷங்களும் அகன்று மன நிம்மதி பெறலாம் என்கிறார்கள். இரண்டு வருடங்களுக்குமுன் சிறிய அளவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. சிறு கோயில்தான் என்றாலும் சாந்நித்தியம் மிகுந்த திருவிடம் இது.

ஆனாலும் என்ன... மழைக்காலங்களில் இந்தக் கோயிலுக்குச் செல்வது மிக மிகக் கடினமான காரியம்! ஆமாம்... ஆற்று வெள்ளத்தில் நீந்திதான் செல்லவேண்டும். பெண்கள், குழந்தைகள் வருவது இன்னும் சிரமம். இதுபோன்ற தருணங்களில் வெள்ளங்குழி, கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களுக்குச் சென்று, அங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் நடந்து வரவேண்டும் என ஆதங்கத்துடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கரைக்கும் கோயிலுக்கும் சிறு பாலம் அமைத்துத் தந்தால், பக்தர்களுக்கு பெரிதும் வசதியாக இருக்கும்; ஸ்வாமிக்கும் வழிபாடுகள் தங்குதடையின்றி நிகழும் என்கிறார்கள் பக்தர்கள். தன் அடியவர்களின் விருப்பம் விரைவில் நிறைவேற, அந்த அரங்கநாதன் நிச்சயம் அருள்புரிவார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism