நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

அரங்கனின் பேரருளால்... பிரிந்த தம்பதி சேருவர்!

அரங்கனின் பேரருளால்... பிரிந்த தம்பதி சேருவர்!

அரங்கனின் பேரருளால்... பிரிந்த தம்பதி சேருவர்!
அரங்கனின் பேரருளால்... பிரிந்த தம்பதி சேருவர்!
##~##
'இ
ன்றைக்கு நாம் எழுந்தருளின இடத்திலே திருக்காப்பு சேர்த்துக்கொண்டு, திருமுக மண்டலத்தைத் திருப்பிக்கொண்டு, திருச்சேவடிமார்கள் கைகளால் பந்துக்களாலும் பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களையெல்லாம் இப்படிப் பண்ணவந்த காரியம் எதற்காக?'

யார் யாரை அவமானப்படுத்துகிறார்கள்? எதற்காக இந்த அவமானம்?

அடடா..! சக்கரவர்த்திகளுக்கெல்லாம் சக்கரவர்த்தியானவரும், சக்ரவர்த்தித் திருமகனால் ஆராதிக்கப்பட்டவரும், எல்லா திவ்விய தேச எம்பெருமான்களுக்கும் ராஜாவானவரும், ஆழ்வார்கள் அனைவராலும் அபிமானிக்கப் பெற்றவருமான ரங்கராஜாவன்றோ இப்படிச் சோகித்துப் புலம்புகிறார்!

அதுவும், கருணாநாயகியான ரங்கநாயகித் தாயார் சந்நிதி வாசலின் முன்னே நின்றுகொண்டு, இப்படி அவமானப்படுகிறாரே? தாயாரின் இந்தக் கோபத்துக்கு என்ன காரணம்?

பங்குனி 6-ஆம் திருநாள், ஆயில்ய நட்சத்திரம். நம்பெருமாள் ஸ்ரீரங்கம் வந்தடைவதற்காகக் கடும் தவம் செய்த, தர்மவர்மா எனும் சோழ மன்னனின் குலக் கொழுந்தான கமலவல்லித் தாயாரின் திருநட்சத்திரம் அது. அரங்கனிடம் மிகுந்த அன்பு கொண்டு கலந்தவள் இவள். அத்தகு உன்னதமிக்க தாயாரை பிறந்த நாளன்று அனுக்கிரஹம் செய்வதற்காக உறையூருக்கே சென்று, தாயாருடன் பெருமாள் சேர்த்தி

கண்டருளினார். இந்த விஷயம் அந்தரங்க தாதியர் மூலமாக ரங்கநாச்சியாருக்குத் தெரிய வந்தது. கொதித்துப் போனாள் ரங்கநாயகி; 'பிரணய கலகம்’ எனப்படும் இந்த தெய்விக ஊடல் ஆரம்பமானது!

உறையூர் நகரில் அரங்கன் எழுந்தருள, இன்னொரு காரணமும் இருந்தது. அனுதினமும் தன்னைக் காவிரிக்கரையில் துதித்து உருகுகிற திருப்பாணாழ்வார் அவதரித்த கழனிதன்னில், தன் திருப்பாதங்களிட்டு ஆனந்தப்படுவதற்காகவும் அரங்கன் அங்கே உறையூரில் எழுந்தருளினான். ஸ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள ஊரில் அவதரித்த ஒரே ஆழ்வார், திருப்பாணாழ்வார்தான்!

அரங்கன் தன் பக்தர்கள் அனைவரையும் ஆட்கொள்ளவும், அவர் களிடம் பேரன்பு கொள்ளவும் அங்குமிங்கும் அலைந்து, ஆட்பார்த்து ஊழி தரும் அற்புதமான உத்ஸவம் அது! நம்பெருமாளுக்கு ஜீயர்புரம், எல்லை மண்டபம், உறையூர் என எப்போதும் அலைச்சல்தான். ஆனால், விஷயம் தெரிந்து, பெரியபிராட்டி ஆவேசமாக... பெருமாளுக்குத் திண்டாட்டமாகி விட்டது, பாவம்!

இவர்களின் இந்த ஊடலைத் தீர்த்து வைக்க எவரேனும் வரவேண்டும். அப்படி வருபவர், இரண்டு பேராலும் மதிக்கப்படுபவராக இருக்க வேண்டும் அல்லவா! அப்பேர்ப்பட்ட மாமனிதர் யார் தெரியுமா... நம்மாழ்வார்! அவர் வந்து, அரங்கனையும் தாயாரையும் சமாதானம் செய்து வைத்தார். ஊடல் முடிந்து கூடல் எனப்படும் தெய்விகக் கூடல் நிகழ்ந்தது. அதுவே, திவ்விய தம்பதியின் சேர்த்தியானது.

இந்த மண்ணுலகம் உய்யவும், மனிதர்கள் அனைவரும் நலம் பெறவும் ஆரம்பமானதுதான் சேர்த்தித் திருவிழா!

அரங்கனின் பேரருளால்... பிரிந்த தம்பதி சேருவர்!

பங்குனியின் சேர்த்தி உத்ஸவம், பிரம்ம லோகத்தில் ஸ்ரீபிரம்மாவால் கொண்டாடப்பட்ட திருநாள்! ஆகவே இந்த நன்னாளை, ஆதிபிரம்மா திருநாள் என்றும் சொல்வார்கள். பிறகு இந்தத் திருநாள், அயோத்தி நகரில் ஸ்ரீராமனால் கொண்டாடப்பட்டு இன்னும் மகோன்னதத்தைப் பெற்றது. ரங்க விமானத்துடன் ஸ்ரீரங்கத்துக்கு விபீஷணன் வந்தடைந்த சில நாட்களிலேயே, பங்குனித் திருநாளுக்கான திருநட்சத்திரம் வந்தது. அப்போது கடும் தவம் செய்த தர்மவர்மா எனும் மன்னன், 'இந்த உத்ஸவத்தை இங்கேயே கொண்டாட அருளுங்கள்’ என விபீஷணனிடம் வேண்டினான். புண்ணியம் நிறைந்த காவிரிக் கரை அருகில் இந்த விழாவை நடத்துவதற்கு, விபீஷணனும் சம்மதம் தெரிவித்தான்.

ஆக, விபீஷணனும் தர்மவர்ம மகாராஜாவும் இணைந்து பெரியபெருமாளுக்காக, ஸ்ரீரங்கம் தலத்தில் உத்ஸவத்தை நடத்தினார். இதுவே ஸ்ரீரங்கத்தில் நடந்த முதல் பிரம்மோத்ஸவம்!

அதையடுத்து வந்த காலங்களில், உறையூர் மற்றும் ஜீயர்புரம் எனப் படும் ஜீயபுரத்தில் அரங்கன் எழுந்தருளல், பிரணய கலகம் எனப்படும் பங்குனி சேர்த்தி உத்ஸவம் ஆகிய வைபவங்கள் இணைந்து பிரமாண்டமான விழாவாகக் கொண்டாடப் பட்டன. ஸ்ரீரங்கத்தின் விழாக்களில், இந்த விழாவும் முக்கியமானதொரு  விழாவாக முதன்மை பெற்ற விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  

பிரணய கலகம் எனப்படும் உத்ஸவ விழாவைச் சிறப்புறக் கொண்டாட வேண்டும் என்பது விதி.

ஆறாம் நாள் விழாவின் போது, நம்பெருமாள் உறையூருக்கு எழுந்தருள்வார். அப்படி அவர் எழுந்தருளிய சேர்த்தித் திருவிழா, இன்றும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.  

பிரணயகலகமானது, ஜீவாத்மா- பரமாத்மா இடையே நடைபெறும் போராட்டத்தின் சூட்சும வெளிப்பாடு என்றுகூடச் சொல்லலாம்.

ஜீவாத்மாவுக்காக அதீத கருணைக் காட்டுபவள் ரங்கநாயகித் தாயார். அன்பானவள். பெருங்குற்றமே செய்தவர்களாயினும், அவர் களின் பாபங்களையெல்லாம் ஒதுக்கி, அவர்களுக்காக, அவர்களின் நலனுக்காக எம்பெருமானிடம் சிபாரிசு செய்பவள்.

அரங்கனின் பேரருளால்... பிரிந்த தம்பதி சேருவர்!

பிராட்டியாருடன் சேர்ந்த பரந்தாமன்தான் பரம்பொருள்.  எப்போதும் தன் திருமார்பை விட்டு அகலாத தாயாருடனேயே இருந்தால்கூட, இந்த நாளின்போது நிதர்சனமாக அருகருகே நெருக்கமாய் அமர்ந்து ஆண்டுக்கொரு முறை அருள்பாலிப்பது அற்புதமானதொரு  நிகழ்வு. காணக் கிடைக்காதது!

பங்குனித் திருநாள், பரிவு பொங்கும் பெருநாள். கற்பகத்தரு போல் நல்லன எல்லாம் தரும் நன்னாள். இதை நன்கு அறிந்து உணர்ந்த உடையவர் எனப்படும் ஸ்ரீராமானுஜர், தாம் இயற்றிய 'ஸ்ரீரங்க கத்யம்,’ 'வைகுண்ட கத்யம்,’ 'சரணாகதி கத்யம்’ ஆகிய மூன்று ஒப்பற்ற ரத்தினப் பாமாலைகளை திவ்விய தம்பதியின் திருவடிகளில் சமர்ப்பித்து, அவர்களின் திருப்பாதங்களில் சரணடைந்து, பரமபதம் பிரார்த்தித்தார்.

அத்தகு அருமையான உத்ஸவப் பெரு விழா, பெரியபெருமாளின் அவதார நட்சத்திரமான ரோஹிணியில் தொடங்குகிறது.

கமலவல்லித் தாயாரின் அவதாரத் திருநாளான பங்குனி ஆயில்யம் (6-ஆம் நாள்) அவருடன் சேர்த்தி கண்டருளி, பெரியபிராட்டியார் அவதரித்த உத்திரம் நட்சத்திரத்தன்று (9-ஆம் நாள்) அவருடன்  சேர்த்தி கண்டருளி, தம்மை தரிசிக்கும் அன்பர்களுக்கெல்லாம், அதீத வாஞ்சையும் அன்பும் மிகுந்து அருள் பாலிக்கும் அற்புத விழா இது!

இந்த திருநாளின்போது, அரங்கனும் தாயாரும் சில விஷயங்களை நமக்குத் தெளிவுபடுத்துகின்றனர்.

அதாவது, கணவன் மனைவிக்குள் என்னதான் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், எவரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து, பொறுமையுடன் மீண்டும் இணைந்து வாழ்ந்தால், அவர் களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்!

நம்மாழ்வாரின் அறிவுரையை ஆனானப்பட்ட தாயாரே ஏற்று, பெருமாளுடன் சேர்ந்தார் அல்லவா?!

நாமும் நம் கர்வத்தை விட்டொழித்து, பரஸ்பரம் அன்பு பாராட்டி இணைந்து வாழ வேண்டும் என்பதை நம்பெருமாள் நமக்கு உணர்த்துகிறார்.

திருமகளும் மண்மகளும்
சிறக்கவந்தோன் வாழியே..!
பங்குனியில் உத்திரநாள்
பாருதித்தாள் வாழியே..!