நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

லக முணர்ந்திடு கருணை யதனொடு நெஞ்
சக மதில் நீடுவகை எய்தி
அலகில் புகழுறு கவிகை நிழலதின் மெய்
யன்பர்குல மதனைக் காக்க
குலவும் உபநிடத அரியணை மீது பரசெழிற்
செங்கோல் கைக் கொண் டாங்(கு)
இலகு மிடை மருதாண்ட விநாயகனை
எப்பொழுதும் இறைஞ்சிவாழ்வாம்.

- மருதவன புராணம்
கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்

பொருள்: உலக மக்கள் எல்லாம் உணர்ந்து மனதில் மிகுந்த  மகிழ்ச்சி கொள்ள... அளவில்லாத கருணை எனும் குடை நிழலில், உண்மையான அடியார் கூட்டத்தைக் காப்பதற்கு உபநிஷதம் எனும் சிம்மாசனத்தில் அமர்ந்து, பரசு எனும் செங்கோலை கையில் ஏந்தி அருள்பாலிக்கும் திருவிடைமருதூர் ஆண்ட விநாயகரைத் துதித்து வாழ்வோம்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
##~##
ரு காலத்தில் உரோமசர் எனும் முனிவர், தன் சீடர்களுடன், பல திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தார். வழியில் திருவிடைமருதூருக்கும் வந்தார். அங்கே, கல்யாண தீர்த்தத்தில் (தற்போது பூசத்துறை) நீராடினார். பின்னர் அங்கிருந்து கிளம்பி, கனக தீர்த்தக் கரையை அடைந்தபோது, அங்கே ஓர் அதிசயத்தைக் கண்டார்.

காக்கை ஒன்று அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, அருகில் உள்ள மருதமரக் கிளையில் உட்கார்ந்தது. அக்கணமே அந்தக் காகம் பொன்னிறம் பெற்றுப் பிரகாசித்தது (காகத்துக்குப் பொன்னிறம் அளித்து, ருத்ர வடிவம் அருளியதால், இந்தத் தீர்த்தத்துக்கு காக தீர்த்தம் என்றும் பெயர் உண்டு. தற்போது காக்கைக் குளம் எனப்படுகிறது). அதைக் கண்டு உரோமசர் வியந்தார். அப்போது அந்தக் காகம் பேசத் துவங்கியது:

''பூவுலகில் காவிரி நாட்டைப் போன்ற ஒரு நாடு இல்லை; திருவிடைமருதூருக்கு இணையான ஒரு தலமும் இல்லை; இங்குள்ள மகாலிங்க பெருமானுக்கு ஒப்புமை கூறத்தக்க ஒரு தெய்வமும் இல்லை. கொடிய வினைகளைத் தீர்க்கும் மாமருந்தாக விரிசடைக் கடவுள் இருக்கும் திவ்ய தலம் இதுவாகும். புண்ணியம் செய்தவர்களே இந்தத் தலத்தை அடைவார்கள். பாவம் செய்தவர்கள்கூட இந்தத் தலத்தை அடைந்தால், மேன்மை பெறுவர்'' என்றது.

உடனே உரோமசர், ''நீ முனிவனா, தேவனா, மாயையா அல்லது பறவையா? சற்று விளக்கமாகச் சொல்!'' என்றார்.

''நான் அந்தணர் குலத்தில் தோன்றியவன்; செல்வந்தனும்கூட! வேதாகமங்கள், புராணங்கள் மற்றும் அருங்கலைகளைக் கற்றவன்.  ஒரு நாள், சூரிய கிரகணத்தன்று பலரும் புண்ணிய நதிகளில் நீராடி, தங்களால் இயன்ற தான- தருமங்களைச் செய்தனர். ஆனால், நான் எதுவும் செய்யவில்லை; அது என் வினைப் பயன்! புண்ணியப் பயன் எவரையும் உயர்த்தும்; பாவப் பயனோ, யாராக இருந்தாலும் கீழே வீழ்த்தும். நல்ல தவமும் தருமமும் செய்வோர் மேலான பதவியைப் பெறுவார்கள். தீவினை புரிந்தோர் வருந்துவார்கள்.

அன்று நானும் புண்ணிய தீர்த்தக் கரையை அடைந்தேன். அரசன் ஒருவன் தானம் அளித்துக்கொண்டிருந்தான். நானும் தானம் பெற்றேன். அப்போது அரசன் என் மார்பில் சந்தனம் இருந்ததைக் கண்டான். 'நீ இதற்கு முன்பும் தானம் பெற்றுக் கொண்டாய் அல்லவா?’ என்று கேட்டான். நானும் 'ஆமாம்’ என ஒப்புக்கொண்டேன். உடனே, 'வீடுகள் தோறும் இரை தேடும் காகத்தைப் போன்றவனே! முன்பு ஓரிடத்தில் தானம் ஏற்று, உடனே என்னிடமும் தானம் ஏற்க வந்துள்ளாய்! நீ காகம் ஆகுக!’ எனச் சபித்தான். அப்போதே நானும் அவனைச் சபிக்க நினைத்தேன். ஆனால், அரசனின் புரோகிதன் என்னைத் தடுத்தான். 'ஊழ்வினைப் பயனே உனது இந்தக் கதிக்கு காரணம். ஒரே நாள் இரண்டு தானங்கள் பெறுவதால் ஏற்படும் பாவம் பொல்லாதது. அரசனைச் சபித்தால் உனது காக வடிவம் நீங்காது போகும். எனவே, புண்ணிய தீர்த்தங்களில் நீராடு; சிவனருளால் உனக்கு

விமோசனம் கிடைக்கும். மேலும், அரசன் உன்னை சபித்ததால், அவனுக்குத் தானம் செய்த பலன் இல்லாமல் போய்விட்டது!’ என்று அறிவுறுத்தினான்.

காக வடிவம் கொண்ட நானும் பல்வேறு தீர்த்தங்களில் சென்று நீராடி வந்தேன். காய்- கனிகள் மற்றும் கோயில் முன்பு இடும் பலி உணவு ஆகியவற்றை உண்டு வாழ்வைக் கழித்தேன். முன்பு எப்போதோ செய்த சிறு தவத்தின் பலனாய் இவ்விடத்துக்கு வந்தேன். இந்தத் தீர்த்தத்தில் நீராடி, மகா முனிவராகிய உங்களையும் சந்தித்தேன்'' என்று காகம் விவரித்து முடிக்கவும், அங்கே பொன் விமானம் ஒன்று தரையிறங்கியது. காகம் ருத்ர வடிவம் பெற்று, விமானத்தில் ஏறி, கயிலை மலையை அடைந்தது.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

இந்த அதிசயத்தை எண்ணிச் சிலிர்த்தபடி, ஸ்ரீமகாலிங்கேஸ் வரரைத் தரிசிக்க ஆலயத்துக்குச் சென்றார் உரோமசர். கோயிலுக்குள் பல வகை வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. பல வகையான தீப வரிசைகளையும், மலர் மாலைகளை யும், தோரணங்களையும் முனிவர் கண்டார். ஆனால், மனித நடமாட்டம் அறவே இல்லை. இதே சிந்தனையுடன் சந்நிதியை அடைந்த முனிவர், அங்கே ஸ்வாமிக்கு அர்ச்சனையும் நிகழ்ந்திருப்பதைக் கண்டு அதிசயித்தார். இறைவனைப் பலவாறு தோத்திரம் சொல்லி வணங்கியவர், ஓர் ஓரமாக நின்று, இந்தத் தலத்தின் மகிமையை எடுத்துச் சொல்ல எவரும் இல்லையே என ஏங்கினார்.

அப்போது, திருமேனியில் வெண்ணீறும், கையில் உடைவாளும், மானும்- மழுவும் ஏந்தியபடி நெற்றிக்கண் விளங்க, முனிவருக்குக் காட்சி தந்தார் நந்திதேவர். அவரை வணங்கிய முனிவர், ''திருக்கோயிலில் எவரையும் காணோமே, ஏன்?'' எனக் கேட்டார்.

''அகத்திய மாமுனிவர் இங்கு பல நாட்கள் தங்கியிருந்து, சிவாகம விதி தவறாமல் பூஜைகள் செய்து வந்தார். அப்போது முனிவர்கள் சிலர் இங்கு வந்து, திருவெண் காட்டில் துவங்கும் வேள்வியைக் காண வருமாறு அகத்தியரை அழைத்தனர்.

அவரோ மறுத்தார். அவர்கள் மகாலிங்கேசரை வணங்கி, அகத்தியரைத் தங்களோடு அனுப்ப அருள் செய்யுமாறு வேண்டினார்கள். எம்பெரு மானும் அகத்தியரை திருவெண்காடு செல்லுமாறு பணித்து, யாகம் முடிந்ததும் இங்கு வருக என அறிவுறுத்தி னார். அதன்படி, முனிவர் கூட்டத்துடன் அகத்தியர் திருவெண்காடு சென்றுள்ளார். எனவே, இங்கு பூஜை செய்ய எவரும் இல்லை'' என்ற நந்திதேவர், தொடர்ந்து விவரித்தார்:

''இந்த நிலையை எவ்வாறு சரி செய்வது என விநாயகப் பெருமான் தன் தந்தையை வணங்கிக் கேட்க, 'சில நாட்களில் ஒருவன் இங்கு வருவான். உருவத்தில் சிறியவன் ஆயினும், அன்பாலும் தவத்தாலும் உயர்ந்தவன். அவன் வரும் வரையிலும் நீயே எம்மை பூஜித்திருப்பாயாக’ என்று அருளினார் சிவனார். இந்த ஆலயம் புகழ்பெற்றது. இதன் நாயகருக்கு மகாலிங்கம், மருதவனேசர், ஏக நாயகர், மருதவாணர் போன்று பல திருப்பெயர்கள் உண்டு. அம்பாள்- பெரும்நலமாமுலையம்மை; பிருஹத் சுந்தரகுஜாம்பிகை!''

இவ்வாறு நந்தியெம்பெருமான் விவரிக்க, அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார் உரோமசர்.

''ஸ்ரீவிநாயகக் கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார். தேவ கணங்கள் குறையாமல் கொண்டு வந்து அளிக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக இறைவனை வழிபடுகிறார். மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில், தமது அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருகிறார். எனவே, இவருக்கு ஆண்ட விநாயகர் என்ற காரணப் பெயர் உண்டு'' என்றும் உரோமசரிடம் விவரித்தார் நந்தியெம்பெருமான்.

திருவிடைமருதூர் கோயிலின் உட்பிராகாரத்தில் ஸ்வாமி சந்நிதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் கோயில் அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் - மல்லிகார்ச்சுனம்; திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் - புடார்ச்சுனம்; இடையில் இருப்பது இடைமருது - மத்யார்ச்சுனம். அர்ச்சுனம் - மருத மரம். இந்த மூன்று தலங்களிலும் தலவிருட்சம் மருதமரமே!

- பிள்ளையார் வருவார்...
  படங்கள்: இ.ராஜவிபீஷிகா