Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!

நிகழும் சுவேத வராஹ கல்பம்- வைவஸ்வத மன்வந்திரத்தின் 28-வது சதுர் யுகம். அதில், இரண்டாவதான திரேதா யுகமும் மூன்றாவதான துவாபர யுகமும் சந்தித்துக்கொண்ட மிக அற்புதமான கால கட்டத்தில்... அழகான ஓர் அதிகாலைப் பொழுதைச் சந்தித்தது, 'தமஸா’ நதிக்கரை!

அங்கே, ஓர் அஸ்வத்த மரத்தடியில்... அந்தச் சூரியனே பூமிக்கு வந்துவிட்டதைப் போன்று பேரொளி பொருந்தியவராய் அமர்ந்திருந்தார் ஒருவர். ஒளி, புறத்தே மட்டுமில்லாமல் அவரின் அகத்தின் உள்ளேயும் கேள்விச் சிதறலாய் ஒளிர்ந்து சுடர்விட்டன!

##~##
'வேதங்கள் எவ்வளவோ கல்யாண குணங்களைச் சுட்டிக்காட்டுகின்றன! இந்தப் பூவுலகில், அவை அனைத்தும் பொருந்திய மனிதன் உண்டா? உண்டு எனில், அவன் சுருதி- ஸ்மிருதிகளில் உபதேசிக்கப்பட்ட தர்ம ரகசியங்களை அறிந்தவனாக இருப்பானா? பிறர் செய்யும் தீமைகளை முற்றிலும் மறந்து, அவர்கள் செய்யும் சிறிய உபகாரத்தையே பெரிதென மகிழும் உன்னதமானவனாக அவன் இருக்க வேண்டுமே? அப்படியே இருந்தாலும் ஆபத்து காலத்திலும் தர்மநெறிகளைக் கைவிடாதவனாக, எப்போதும் சத்தியத்தையே கடைப்பிடிப்பவனாக அவன் இருப்பானா?’

- எப்பேர்ப்பட்ட எதிர்பார்ப்பு!

தர்மசாஸ்திரங்கள் வரையறுத்து வைத்திருக் கும் நற்குணங்களையெல்லாம் ஒருங்கே கொண்ட ஒரு நல்லவனைத் தேடும் மனம்... அது, தவசீலர்களுக்கும் ஞானவான்களுக்கும் மட்டுமே அல்லவா வாய்க்கும்?!

ஆமாம்... இவரும் மாபெரும் தபஸ்விதான்; சிறந்த ஞானவான்தான். ஆனால் இதெல்லாம் சப்தரிஷிகளைச் சந்தித்த பிறகு! அதற்கு முன்?!

மனிதர்கள் சுயநலமிகள். ஆனால், தங்களின் சுயத்தை அறியாதவர்கள். இந்த ஆன்மாவும், தேகமும், கை-கால் போன்ற அவயவங்களும் பரம்பொருள் கைங்கரியத்துக்காகவே என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள். நதியைக் கடப்பதற்குக் கொடுக்கப்பட்ட ஓடத்தைக் கொண்டு, சமுத்திரத்தைக் கடக்க ஆசைப்பட்ட கதையாக... ஜீவன்கள் அனைவரும் சம்ஸார சாகரத்தில் விழுந்துவிடுகிறார்கள். இவரும் அப்படித்தான்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

கிருணு என்ற மகரிஷி தவம் செய்யும் வேளையில், அவரின் கண்களில் இருந்து பெருகிய வீரியத்தை, பாம்பு ஒன்று புசித்துவிட்டது. அதன் வயிற்றில் பிறந்தவர்தான் இவர். குழந்தைப் பருவத்தில் இருந்து வேடர்களால் வளர்க்கப்பட்டவருக்கு, அவர்களுடைய பழக்கவழக்கங்களே தொற்றிக்கொண்டன! பருவ வயதில் திருடர்கள் சேர்க்கையும் ஏற்பட, கொள்ளையடிப்பதும் வழிப்பறியும் வாடிக்கையானது. ஒருகட்டத்தில் வாழ்க்கைக்கும் அவசியமாகிப் போனதுதான் வேதனை!

ஒரு நாள்... அந்தக் காட்டின் வழியே வந்த சப்த ரிஷிகளை மறித்தார். ''எங்கள் உடைமைகளை எல்லாம் தருகிறோம். பதிலுக்கு நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். உன் மனைவி - மக்களிடம் சென்று, அவர்களுக்காக நீ செய்யும் காரியங்களின் பலனில் அவர்களுக்கும் பங்கு உண்டா என்பதைக் கேட்டுத் தெரிந்து வா'' என்று அனுப்பி வைத்தார்கள் அந்த ரிஷிகள்.

வீட்டார் என்ன சொன்னார்கள் தெரியுமா? ''எங்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதற்காக நீ செய்யும் பாவக் கணக்குகளில் எல்லாம் எங்களுக்கு பங்கில்லை!'' என்று கூறிவிட்டார்கள்.

அத்துடன் இவரின் பந்த-பாசம் அறுபட்டது. ஓடோடி வந்து சப்த ரிஷிகளின் பாதங்களில் வீழ்ந்தார். அவர்களின் அறிவுரைப்படி, ஒரு மரா மரத்தின் அடியில் அமர்ந்து, அந்த மரத்தின் பெயரையே திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்தார். எங்கே,  நீங்களும் மரா... மரா... என்று திரும்பத் திரும்ப உச்சரித்துப் பாருங்கள்!

மரா மரா மராம ராம ராம...

என்ன உங்களையும் அறியாமல் ஸ்ரீராம நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?!

அப்படித்தான் ஆனது இவருக்கும்! தன்னைச் சுற்றி புற்று வளர்வதும் தெரியாமல், நெடுநாட்கள் ராம நாம உச்சாடனத்திலேயே மூழ்கிப் போனார். ஒரு நாள் பெருமழை பெய்து புற்று கரைந்தது. சப்த ரிஷிகள் மீண்டும் அங்கே வந்து, இவரின் தவம் கலைத்தனர். 'அப்பனே... உனது பாவங்கள் தீர்ந்தன. இப்போது எங்களுக்குச் சமமான புண்ணியனாகி விட்டாய். ராம நாம மகிமையே அதற்குக் காரணம்’ என்று விளக்கிய துடன், 'புற்றிலிருந்து வெளிப்பட்டதால் உனக்கு வால்மீகி என்று பெயர் வழங்கட்டும்’ என்றும் அருளிச் சென்றார்கள்.

அந்த வால்மீகி முனிவர்தான் கேள்விகள் நிறைந்த உள்ளத்துடன் இங்கே அமர்ந்திருக்கிறார்!

ராம நாம மகிமையை சப்த ரிஷிகள் உணர்த்திவிட்டார்கள். இனி அவர், ஸ்ரீராம சரிதத்தின் சிறப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதானே, ஜெகம் புகழும் புண்ணிய கதையாம் ஸ்ரீராம சரிதம் இந்த உலகுக்கும் கிடைக்கும்?!

எனவேதான் இப்படியான கேள்வி களை வால்மீகியின் மனதில் எழுப்பிய பரம்பொருள், அதற்கான விடை யைச் சொல்ல நாரதரையும் தமஸா நதிக்கரைக்கு அனுப்பி வைத்தது போலும்!

நாராயண மந்திரத்துடன் வந்த நாரதர், வால்மீகியின் சிந்தனையைக் களைத்தார். அவரிடம் தனது மனக் கேள்விகளை முன்வைத்தார் வால்மீகி.

நாரதர், ''முனிவரே... நீங்கள் குறிப்பிடும் குணங்களெல்லாம் ஒருவரிடத்தில் பொருந்தி இருப்பது அரிது. ஆனாலும், அவ்விதமான ஒரு மனிதனை ஏதோ எனக்குத் தெரிந்த வரையில் வர்ணிக்கிறேன். சூரியனை ஆதிபுருஷனாகக் கொண்ட இஷ்வாகு வம்சத்தில் பிறந்தவர் அவர். வெகு கீர்த்தியுடன் அயோத்தியை ஆண்டு வரும் அவரை ஸ்ரீராமன் என்பார்கள். பராக்ரமத்தில் விஷ்ணுவையும், பிரியமான பார்வையில் சந்திரனையும், கோபத்தில் பிரளய காலாக்னியையும் பொறுமையில் பூமாதாவை யும், கொடுப்பதில் குபேரனையும், சத்தியத்தில் தர்மதேவதையையும் போன்றவர்...'' - என ஆரம்பித்து ஸ்ரீராம மகிமையை விரிவாக எடுத்துரைத்தார் நாரதர்.

ஆமாம்! வால்மீகியின் கேள்விகளால் பரம புருஷன் யாரென்று விசாரிக்கப்பட்டது. தேவ ரிஷி நாரதரின் பதிலால் ஸ்ரீராமச்சந்திரனே அந்த பரவஸ்து என்று உபதேசிக்கப்பட்டது. அதையே ராமாயணமாக உலகுக்குத் தந்தார் வால்மீகி மகரிஷி.  அயோத்தியில் துவங்குகிறது அவர் சொல்லும் கதை!

சரயு நதி ஊடாகப் பாய்ந்து வளப்படுத்தும் செழிப்பான அந்த தேசத்துக்கு கோசலம் என்று பெயர். அதன் தலைநகர் அயோத்தி, வைவஸ்வத மனுவால் நிர்மாணிக்கப்பட்டது; சகல லோகங்களிலும் பிரசித்திப் பெற்றது. 3 யோஜனை அகலமும் 12 யோஜனை நீளமும் கொண்ட அதன் நிலப்பரப்பு சமதளமானது, நெல் போட்டால் பொன் விளையும் பூமி!

கோசலத்தை ஆட்சி செய்தவர் திரிபுவனச் சக்கரவர்த்தி தசரதர். வளமிகுந்த நாட்டின் தலைவன் என்றாலும், அவரின் இல்லத்தை வளப்படுத்த குழந்தைச் செல்வம் இல்லை. மன்னரின் இந்தக் குறைதீர அஸ்வமேத யாகம் நடத்தலாம் என்றனர் மந்திரிப் பிரதானிகள். குலகுரு வசிஷ்டரும் ஆமோதித்தார். புண்ணிய சீலரான ரிஷ்யசிருங்கரை அழைத்து வந்து யாகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசரதரே நேரில் சென்று, வேண்டிக்கொள்ள, ரிஷ்யசிருங்கரும் வருகை தந்தார். சரயு நதியின் வடக்கு கரையில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. ஒரு சுபயோக சுப நட்சத்திர திருநாளில், பெரும் சேனை பின்தொடர  பூமிப் பிரதட்சணம் கிளம்பிய யாகக் குதிரை, ஒரே வருடத்தில் ஜெயத்துடன் திரும்பியது. யாகமும் இனிதே நிறைவேறியது. தசரதர் மகிழ்ந்தார். ரிஷியசிருங்கரை வணங்கி, தனக்கு பிள்ளைப் பாக்கியம் கிடைக்கவும் அருளும்படி வேண்டினார். பிள்ளை வரம் அருளும் ஓர் உபாயம் அதர்வண வேதத்தில் உண்டு. தசரதருக்காக அதையும் செய்யத் தயாரானார் ரிஷ்யசிருங்கர். புத்திர காமேஷ்டி யாகத்தைத் துவங்கினார். அதன் அக்னியில் வேத விதிப்படி ஓர் ஆஹுதி செய்தார். மறுகணம்... பிரகாசமான பேரொளியுடன், யாகத்தீயிலிருந்து சுவர்ணக் கலசத்துடன் தோன்றினான் ஒருவன். கலசத்தை தசரதரிடம் தந்து, ''இதிலிருக்கும் திவ்வியமான பாயசத்தை உமது தேவியருக்கு புசிக்கக் கொடும். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்!'' என்று கூறி மறைந்தான்.

வணங்கி ஏற்றுக்கொண்ட தசரதர், பாயசத் தைப் பகிர்ந்தளித்தார். எப்படித் தெரியுமா? பாயசத்தில் பாதியை கௌசல்யைக்கும், நாலில் ஒரு பகுதியை சுமித்ரைக்கும், எட்டில் ஒரு பகுதியை கைகேயியிக்கும் தந்தார். இன்னும் எட்டில் ஒரு பாகம் பாயஸம் மீதமிருந்தது. சிறிது யோசனைக்குப் பிறகு, மீதம் இருந்ததை யும் சுமித்ரைக்கே வழங்கினார்.

நாட்கள் நகர்ந்தன. ஆறு ருதுக்கள் கழிந்து... சித்திரை மாதம், நவமி திதி, அதிதியை தேவதை யாகக் கொண்ட புனர்வஸு நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில், கடக லக்னத்தில்... அயோத்தியில் ஸ்ரீராமவதாரம் நிகழ்ந்தது!

சூரியனும், அங்காரகனும், குருவும், சுக்கிரனும், சனியும் முறையே தங்களின் உச்ச ஸ்தானமாகிய மேஷம், மகரம், கடகம், மீனம், துலாம் ஆகிய ராசிகளில் அமர்ந்திருக்க... குருவும் சந்திரனும் சேர்ந்து பிரகாசிக்கும், மிக உத்தம ஜாதகத்துக் குச் சொந்தமான அந்த ஸ்ரீராம குழந்தை, எப்படி இருந்தது தெரியுமா?!

- அவதாரம் தொடரும்...