Election bannerElection banner
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ஸ்தம், கன்னி ராசியில் முழுமையாகப் பரவியிருக்கும் நட்சத்திரம். ராசிக்கு அதிபதி புதன். ஆனாலும் அம்சகத்தில் நான்கு பாதங்களில் செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய நால்வரின் தொடர்பும் இருக்கும். செவ்வாயின் சுறுசுறுப்பும், சுக்கிரனின் உலகவியலும், புதனின் பகுத்தறிவும், சந்திரனின் மனோதிடமும் அதில் ஒட்டிக் கொண்டிருக்கும். ராசிக்கு அதிபதியும் அதேசமயம் 3-வது பாதத்துக்கு அதிபதியும் புதனுக்கு இருப்பதால் சுறுசுறுப்பும் உலகவியலும் மனோதிடத்துடன் இணைந்து பகுத்தறிவை நிறைவாக்கி அறிஞனாக மிளிரவைக்கும்.

பிறந்த குழந்தை குருவின் பங்கில் விளைந்ததா அல்லது சந்திரனின் பங்கு காரணமா என்ற கேள்விக்கு, விடை காணாமல் தவித்த வேளையில், 'நான் சந்திரனின் பங்கில் உருப்பெற்றவன்’ என்று குழந்தை தீர்ப்புக் கூறியது. ஆச்சரியத்தில் ஆழ்ந்த சந்திரன், குழந்தையை 'புத:’ (அறிவாளி) என்று முதுகில் தட்டிக் கொடுத் துப் பாராட்டினான் என்கிற தகவல் உண்டு. இங்கே... கதை விஷயமில்லை. தனது பிறப்பின் ரகசியத்தை அறியும் அளவுக்கு குழந்தைப் பருவத்திலேயே சிந்தனை யின் நிறைவை எட்டியவன் என்கிற விளக்கத்துக்காக கதை பயன்பட்டது.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் நான்குக்கு அந்த: கரணம் என்ற பெயர் உண்டு. இவை, மனதின் நான்கு உருப்படிகள். மனம் எடுத்துரைக்கும் எண்ணத்தை ஆராய்வது புத்தி. அந்த ஆராய்ச்சியின் முடிவுதான் செயல் வடிவம் பெறும். அதைத் துல்லியமாக எடுத்துரைக்கும் திறன் அதற்கு வேண்டும். அதை அந்தக் குழந்தையில் பார்த்ததும் மகிழ்ச்சியுற்றான் சந்திரன். சரியான முடிவில் நம் மனமும் மகிழும். மனதின் ஓர் அங்கம்தான் புத்தி. சந்திரன் மனதின் காரகன். அவனின் அவயவமாகத் திகழ்வது புத்தி. புத்தியுடையவன் புதன். சந்திரனுக்கும் புதனுக்கும் நெருக்கமான உறவை சுட்டிக்காட்ட இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது. ஸோமன் என்றால் சந்திரன். ஆகவே அவன் புதல்வன் புதனுக்கு, 'ஸெளம்யன்’ என்று பெயர் உண்டு. புதன்கிழமையை புதவாஸரம் என்று சொல்லாமல் ஸெளம்யவாஸரம் என்று சொல்வது உண்டு. கதை வாயிலாக தத்துவத்தை விளக்கும் மரபு புராணத்தில் உள்ளது.

##~##
ஹஸ்த நட்சத்திரம் 3-ஆம் பாதத்தில் பிறந்தால் பரிகாரம் செய்யச் சொல்கிறது சாந்திரத்னாகரம்.
'ஹஸ்தத்தப்பன் அரையோனம்’
எனும் வழக்குச் சொல் உண்டு. தகப்பனின் அரை அளவுக்கு வளர்ந்ததும் தகப்பன் மடிவான் என்று விளக்கம் அளிப்பவர்களும் உண்டு. தகப்பனாரின் வயதுக்குப் பாதி வயதை எட்டியவுடன் தந்தையை இழப்பான் என்றும் சொல்வார்கள். உயர்ந்த ஜோதிடத்துக்கு ஊனம் ஏற்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

முதல் இரண்டு பாதங்கள் சங்கடமின்றி தொடரும். பாதிக்கு மேல் இளமையில் இன்புற்றிருக்கும் வேளை யில், இன்னல்கள் தோன்றி அதைக் கடக்க நேரிடும் என்கிற தகவலும் உண்டு. சூரியனுடன் நெருங்கிய பயணம் அவனது வலுவை இழக்கச் செய்வதால், பிரச்னைகள் தோன்றி அதை வெல்ல முயற்சி எடுக்க நேரிடும் என்கிற விளக்கம் ஜோதிடத்துடன் நெருங்கியிருப்பதால், அந்தச் சொல் வழக்குக்கு இதைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

நட்சத்திரத்தின் தேவதை ஸவிதா. ஸவிதா என்றால் சூரியன் என்று அர்த்தம். உண்மையில் சூரியனுடன் இணைந்த பரம்பொருளுக்கு ஸவிதா என்று பெயர். ஸவிதா என்றால் உயிரினங்களைத் தோற்றிவைப்பவன் என்று அர்த்தம் (ஷுங்ப்ராணிப்ரஸவே). கண்ணுக்குப் புலப்படும் ஸ்தூல வடிவம் சூரியன். அதன் ஒளிப்பிழம்பில் உள்ளே உறைந்திருக்கும் சூட்சும வடிவம் பரம்பொருள். அதை ஸவிதா என்று குறிப்பிடுகிறோம் (த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தி...). சூரியன் எனும் கிரகத்துடன் இணைந்த அதன் சூட்சும வடிவமான பரம்பொரு ளுடன் தொடர்பு இருந்தால், புதன் பலம் பெற்று நிபுணனாகத் திகழ்வான் என்கிறது ஜோதிடம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சந்திரனுடன் இணைந்தவன். அதேவேளை யில் பயணத்தில் சூரியனைப் பின்பற்றுபவன். ஆகவே, ஆன்மாவோடும் மனதோடும் இணைந்த புத்தியைக் கொண்டவன். ஆராய்ச்சியில் தெளிவு பெற்று பிறவிப் பயனை தடங்கலின்றிப்  பெறுவான் எனும் கணிப்பு ஏற்கத்தக்கது. புத சூரிய யோகத்தை 'நிபுண’ யோகம் எனக் குறிப்பிடுகிறது ஜோதிடம்.

மனதில் குவிந்திருக்கும் எண்ணங்களின் வரைபடத்துக்கு வடிவமைத்துச் செயல்பட வைப்பது புத்தி. பரிணாம வளர்ச்சி யில் முதிர்ச்சி அடைந்த மனிதப் பிறவியின் நிறைவைச் சுட்டிக்காட்டும் மிதுனம் மற்றும் கன்னி ராசிகள் அவன் இருப்பிடமாகத் திகழ்கின்றன. மிதுனம் என்றால் ஆண் - பெண் இருவரது இணைப்பு. லோகாயத வாழ்வின் இன்பமும் கன்னியில் ஆன்மிக வாழ்க்கையின் ஆழமும் இருக்கும். இரண்டையும் ஒருசேர இணைத்து, மனதையும் (சந்திரனை யும்) ஆன்மாவையும் (சூரியனையும்) அண்டி, வெற்றியை அடையவைக்கும் பெருமை புதனுக்கு இருப்பது அதன் சிறப்பு.

புதன் பலமிழந்த நிலையில், பகுத்தறிவு மங்கி வாழ்க்கை தடம் புரள வழிவகுக்கும். வலுவாக இருந்தால் தடைகளைத் தகர்த்து இலக்கை அடைய வழிவகுக்கும் என்ற ஜோதிடக்கணிப்பு பொருத்தமாக அமைந்திருக்கிறது.

நட்சத்திரப் பிரஜாபதியின் கை -  ஹஸ்த நட்சத்திரம், சித்திரை - சிரசு, ஸ்வாதி - இதயம். இரண்டு தொடைகள் - விசாகம், அவர் நிலைத்திருப்பது அனுஷம்... என உடல் உறுப்புகளை விளக்குகிற வேதம், அஸ்தத்தை கையாகச் சொல்கிறது. (ஹஸ்த ஏவாஸ்யஹஸ்த: சித்ரா).  செயல் புலன்களில் கைகளுக்கு சிறப்பு உண்டு. பேசத் தெரியாத நிலையில் இருந்த மனிதன், கைகளை அசைத்து தகவலைப் பரிமாறினான். அத்துடன் பண்டம் பரிமாறவும் கையைப் பயன்படுத்தினான் என்கிறது வரலாறு. கொடுப்பதற்கும் ஏற்பதற்கும் கைகள் வேண்டும் என்கிறது வேதம் (ஹஸ்த: ப்ரயச்சது...). கைக்கொடுத்தல், கைத்தாங்கல், கைப் பிடித்தல், கை நழுவல் போன்ற சொற்கள் பல தகவல்களைத் தெரிவிக்கின்றன. ஆகவே, வேதம் கையை பகவான் என்று குறிப்பிட்டது (அயம் மெஹஸ்தோ பகவான்).

கருவறையில் நீரில் மிதக்கும் குழந்தைக்கு தாயுடன் இணைப்பை ஏற்படுத்துவது நட்சத் திரம். பஞ்ச பூதங்களில் உருவமற்ற ஆகாசத்தின் தொடர்பை அதில் இருக்கும் நட்சத்திரம் ஏற்படுத்தியிருக்கிறது. ஆகாய நிகழ்வுகள் அத்தனையும் நட்சத்திரம் வாயிலாக அவனை ஆட்கொண்டுவிடும். தங்க ரதத்தில் ஏறி, தங்குதடையின்றி பவனி வரும் ஸவிதா, அஸ்த நட்சத்திரத்தோடும் இணைந்து, வேண்டியதை வாரி வழங்கி ஆசை யைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு (ஹஸ்த: ப்ரயச்சது அமிருதம்...).

கொடுப்பவனும் எடுப்பவனும் ஸவிதா. தனது கதிர்களால் நீரை உறிஞ்சி எடுப்பவன்; ஆயிரம் மடங் காகப் பெருக்கி உலகத்துக்கு நீரைக் கொடுப்பவன் என்கிறது வேதம் (ஸ்வாஹா ப்ரயச்சதே ஸ்வாஹாப்ரதி க்ருப்ணதெ). ஆயிரம் மடங்காகப் பெருக்கித் தருவதற்காக, நீரை உறிஞ்சு கிறான் ஆதவன் என்று குறிப்பிடு வான் காளிதாசன் (ஸஹஸ்ர குணமுத் ஸ்ரஷகும் ஆதத்தேஹிரஸம் ரவி:).

அஸ்த நட்சத்திரம் முதலில் சந்திர தசையை சந்திக்கும். பத்து வருடங்கள் நீடித்திருக்கும். ரிஷபத்தில், சுக்கிரன் வீட்டில் உச்சம் பெறும் சந்திரன், சகல சுக போகங்களையும் அள்ளித் தருவான். விருச்சிகத்தில் செவ்வாய் வீட்டில் பலமிழந்தால், மனம் குன்றி துயரத்தை அடையச் செய்வான். அம்சகத்தில் 4-வது பாதத்தில் இணைந்த சந்திரன், தசா நாதனாக வருவதால் சிறு வயதில் மனவளர்ச்சியுடன் திகழ உதவுவான். ரோஹிணிக்கும் திருவோணத்துக்கும் இந்த தசை பொருந்தும். ஆரம்பத்தில் இரண்டு புக்திகளும் முதல் இரண்டு பாதங்களைத் தழுவி இருப்பதால் சிறு பருவம் சிறப்பாக அமையும். புதனும் சுக்கிரனும் கடைசியில் தென்படுவதால் முதுமையும் இனிக்கும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

கன்னி ராசி, கால புருஷனின் வயிற்றைக் குறிக்கும். நன்றாகச் சாப்பிட்டு, மகிழ்ந்து, உடலை வளர்த்து, உடல் மற்றும் மனவளத்துடன் திகழும் பாக்கியம் இவர்களுக்குக் கிடைக்கும். சுறுசுறுப்பு, சிந்தனைவளம், வெட்கமின்மை, குடிப்பழக்கம், இரக்கமின்மை, களவாடல் ஆகியவை அஸ்தத்தில் பிறந்தவரிடம் தென்படலாம் என்பார் வராஹமிஹிரர்.

வளர்ந்த உடல்கட்டு, செல்வச் செழிப்பு, மக்கள் தலைவன், பொறாமை, அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுடன் இணைதல், குழந்தைச் செல்வம் ஆகிய அனைத்தும் பெற்று விளங்குவர் என்கிறார் பராசரர். பெண்ணாசை யில் திளைப்பவன், அறத்தை ஆதரிப்பவன், அறிஞன், பரோபகாரி, செல்வச்சீமான் எனத் திகழ்வார்கள் என்கிறது ஜாதக பாரிஜாதம்.

ஐந்து தாரைகளை உள்ளடக்கியது அஸ்த நட்சத்திரம். ஐந்து விரல்களுடன் செயல்படும் அஸ்தம் என்பது உண்மை. முதல் பாதத்தில் பிறந்தவன் சூரனாகத் திகழ்வான். 2-ல் பேச்சாளனாக இருப்பான். 3-ல் ஆரோக்கியம் குன்றியவனாக இருப்பான். 4-ல் ஸ்ரீமானாகத் திகழ்வான் என்று விளக்கம் அளிக்கிறது பிரஹத் சம்ஹிதை.  

முதல் பாதத்தில் பிறந்தவர்கள், எதிரிகளை வீழ்த்துவர். வாழ்நாள் குறையும். பழிக்குப்பழி  எனும் குணத்துடன் இருப்பர். இரண்டாவதில் தாயை இழப்பர். சிந்தனை வளம் குன்றும்.  கலைகளில் திளைப்பர். இன்பத்தை அனுபவிப் பதில், முன்னுரிமை காட்டுவர்.  மூன்றாவதில், ஸ்ரீசரஸ்வதிதேவி கடாட்சம் பெற்று, கவிதைகள் புனைவர். சண்டை - சச்சரவில் ஈடுபாடு, போகியாக வாழ்வர். நான்கில், நல்வழியைப் பின்பற்றுவர், எல்லோரும் அவரை விரும்புவர், பெண்களை மதிக்காதிருப்பர், நீண்டநாள் போகத்தில் திளைப்பர் என விளக்கம் தருகிறது பலசார ஸமுச்சயம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

மென்மையான நட்சத்திரம் இது. கொடுக்கல் - வாங்கல், உயர் கல்வியை ஏற்றல், அலங்காரப் பொருட்கள், சித்திரம் வரைதல், பாட்டு, தாள வாத்தியம், நாட்டியம், சிற்பம், வாகனம் ஆகியவற்றைப் பெற இந்த நட்சத்திரத்தின் இணைப்பு சிறப்பை அளிக்கும் என்கிறார் வராஹ மிஹிரர். மருந்து, உலோகங்கள், படைத் தளவாடங்கள், விவசாயம், பயணம், கல்வி, விலங்கினங்கள் ஆகியவற்றைக் கையாள இந்த நட்சத்திரம் உதவும் என்கிறார் பராசரர்.

உபய ராசியில் அமைந்த புதன், அளவு கடந்து செயலில் இறங்காமல், நடுநிலையைப் பின்பற்றும் இயல்பை ஏற்படுத்துவான். இது ஒரு வகையில், சிறப்பாக அமைந்துவிடும். ஸம் ஸவித்ரே நம: என்று சொல்லி 16 உபசாரங்களைச் செய்வது நல்லது.

'ஸவிதா புரஸ்தாத்’ எனும் மந்திரத்தை ஓதி, விரிவாகவும் வழிபடலாம். மந்திரம் தெரியா தவர்கள்.

'நம: ஸவித்ரே ஜகதேக சக்ஷுஷே
ஜகத் ப்ரஸுதி ஸ்திதி நாசஹேதவெ
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே
விரின்சி நாராயண சங்கராத்மனே’

- என்ற செய்யுளைச் சொல்லி 16 உபசாரங்களை யும் செய்து வழிபடலாம். அதுவும் இயலாதவர் கள், பானோ பாஸ்கர மார்த்தண்ட சண்டரச்மே திவாகர; ஆயுராரோக்யமைச்வர்யம் தேஹிமே கருணாநிதே’ என்ற செய்யுளைச் சொல்லி வணங்கலாம் அல்லது மித்திர - ரவி - சூர்ய - பானு - கக - பூஷ - ஹிரண்யகர்ப, மரீசி ஆதித்ய, ஸவித்ரு - அர்க்க - பாஸ்கரேப்யோ நம: என்று சொல்லி பிரார்த்திக்கலாம்.

காலையில் எழுந்து நீராடி, ஆகாயத்தில் ஒளிப்பிழம்பாகத் தோன்றும் ஆதித்யனைப் பார்த்து, கை கூப்பி வணங்கலாம். நம் இதயத்தில் உறைந்திருக்கும் சைதன்யம் அதாவது ஆன்மா விண்வெளியில் ஒளிப்பிழம்பாகப் பவனி வருகிறார். கண்ணால் பார்த்த அவரை, கண்மூடி மனதில் பார்த்து, அவன் நாமத்தை அசை போட்டு தியானிக்கலாம் என்கிறது சாஸ்திரம் (அஸாவாதித்யோ பிரம்ம, பிரம்மைவாஹம்).

வெளி இருளுடன் உள்ளில் இருக்கும் அறியாமை எனும் இருளையும் அகற்ற... ஜோதிர் வடிவில் காட்சி தருபவனை மனதில் இருத்தி வணங்கி வழிபடுவது சிறப்பானது!

- வழிபடுவோம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு