நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##
'க
ர்ணன் வீடு எங்கே இருக்குன்னு கேட்டதுக்கு, 'அதோ... அங்கே இருக்கு’ன்னு சுட்டுவிரல் நீட்டிச் சொன்னவருக்கே மோட்சம் கிடைச்சுதாமே?! அதுமாதிரிதான், ஏக்கமும் துக்கமுமா இருக்கறவங்களுக்கும் கேக்கறவங்களுக்கும் நான் வழிகாட்டுற இடம், திருப்பட்டூர். அப்படிச் சொல்றதில் எனக்குக் கிடைக்கிற ஆத்மதிருப்திக்கும் மனநிறைவுக்கும் ஈடு இணையே கிடையாது!'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் பார்கவி.

அமெரிக்காவில் இருந்தவர், தற்போது சென்னை- பெரம்பூர் பகுதியில் வசித்து வருகிறார். பார்கவி மற்றும் அவரின் கணவர் ஐயப்பன் ஆகியோருக்குக் கண்கண்ட தெய்வம், இஷ்ட தெய்வம், குலதெய்வம் எல்லாமே இப்போது திருப்பட்டூர் பிரம்மாதான்!

''திருமணமாகி அஞ்சு வருஷமா குழந்தை இல்லைங்கற குறையைத் தவிர வேற எந்தக் குறையும் இல்லை. ஆனா, அத்தனைச் செல்வங்கள் இருந்தும், குழந்தை இல்லாத நிலைங்கறது மிகப் பெரிய கொடுமை, இல்லியா? கணவருக்கு அமெரிக்காவில் வேலைன்னு அங்கே போயாச்சு. ஆனா, அள்ளிக் கொஞ்சுறதுக்கு ஒரு வாரிசு இல்லையேங்கற கவலைலயும் துக்கத்துலயும், எனக்கு  அந்தப் படாடோப வாழ்க்கையும், அமெரிக்காவும் ரொம்பவே கசந்துச்சு.

அந்தச் சமயத்துலதான், சென்னைக்கு வந்து செட்டிலாக முடிவு பண்ணி, இங்கே வந்தோம். 'திருப்பட்டூர் போங்க. அங்கே பிரம்மாவுக்கு மஞ்சளால அபிஷேகம் பண்ணிப் பிரார்த்தனை பண்ணுங்க. சீக்கிரமே குழந்தை பிறக்கும்’னு சொன்னாங்க. நான், என் கணவர், அம்மா, மாமியார்னு எல்லாரும் திருப்பட்டூர் போய், பிரம்மாவுக்கு மஞ்சள் அபிஷேகம் பண்ணி, அர்ச்சனை செஞ்சு வேண்டிக்கிட்டு வந்தோம். அடுத்த ரெண்டாவது மாசமே, 'நீ கன்ஸீவ் ஆகியிருக்கே’னு டாக்டர் கைகுலுக்கிச் சொன்னப்ப... மானசீகமா ஸ்ரீபிரம்மாவுக்கு நன்றி சொன்னேன். இப்ப என் குழந்தை ராகவனுக்கு ஒண்ணரை வயசு'' என்று சொல்லிப் பூரிக்கிறார் பார்கவி.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

அவரே தொடர்கிறார்... ''திருப்பட்டூர்ல ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில்ல ஸ்ரீபிரம்மா தனிச்சந்நிதில அருள்பாலிக்கிறார். அதேபோல, பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குப் பின்னாடி சுமார் 1 கி.மீ. போனால், ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில் இருக்கு. அங்கே, பிரதோஷ உத்ஸவர் ரொம்பவே விசேஷம். வரப்பிரசாதி.

என் கணவருக்கு உத்தியோகத்துல பதவி உயர்வு எதனாலோ தள்ளிப் போயிக்கிட்டே இருந்துச்சு. 'ஒரு பிரதோஷத்தன்னிக்கி, ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போங்க. அங்கே, பிரதோஷ உத்ஸவரை அலங்காரம் பண்ணி, பல்லக்குல பிராகார வலம் வரவைக்கிற வைபவம் நடக்கும். அப்ப, நம்ம தோள்ல பல்லக்கு தூக்கிட்டு வந்தா, வாழ்க்கைல நம்மளை உசரத்துக்குத் தூக்கிக் கொண்டு போய் வைச்சிருவார் ஸ்ரீகாசி விஸ்வநாதர்’னு சொன்னாங்க.

அப்புறம்... ஒரு பிரதோஷ நாள்ல (அன்னிக்கி ஜனவரி 1), எல்லாரும் போனோம். அங்கே, உத்ஸவரைப் பல்லக்குத் தூக்கிட்டுப் பிராகார வலம் வந்தார், என் கணவர். அன்னிக்கி, கருவறைல இருந்த சின்ன ஸ்படிக லிங்கத்தையும் தரிசனம் பண்ணினோம் (பிரதோஷ நாள்லதான் ஸ்படிக லிங்கத்தை தரிசிக்கக் காட்டுகின்றனர்). எல்லாம் முடிஞ்சு, சென்னைக்கு வந்த நாலாம் நாள்... அவருக்குப் பதவி உயர்வு கிடைச்சுது'' என்று பார்கவி சொல்ல...

திருப்பட்டூர் அற்புதங்கள்!

''இப்ப, எங்களுக்கு எந்த ஒரு சின்ன பிரச்னைன்னாலும் திருப்பட்டூர் தெய்வங்களை மனசார நினைச்சு, வேண்டிக்க ஆரம்பிச்சுட்டோம். எல்லாப் பிரச்னைகளும் பனி போல சட்டுனு விலகிடுது! எங்க வாழ்க்கைல ஏற்பட்ட நல்ல பல திருப்புமுனைகளுக்குக் காரணமா இருந்த திருப்பட்டூர் திருத்தலத்தின் மகத்துவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை'' என்று நெகிழ்ச்சியும் உருக்கமுமாகச் சொல்கிறார் அவரின் கணவர் ஐயப்பன்.

இப்படித்தான்... இவர்களைப் போலத்தான்... எத்தனையோ பேரின் வாழ்விலும் குடும்பங்களிலும் ஸ்ரீபிரம்மாவின் பேரருள் வியாபித்துக் கொண்டிருக்கிறது. ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரின் பெருங்கருணையும் ஸ்ரீகாசி விஸ்வநாதரின் அருளும் நல்லதொரு திருப்புமுனையை நிகழ்த்தி வருகிறது.

''திடீர்னு ஒரு யோசனை, ஒரு தவிப்பு, ஒரு பிரார்த்தனைன்னு வந்துட்டா, சட்டுன்னு திருப்பட்டூர் போறது என் வழக்கம். முன்னெல்லாம் வியாழக்கிழமை தவறாம கோயிலுக்குப் போயிட்டிருந்தேன். பிரதோஷம், சிவராத்திரின்னு முக்கியமான வைபவங்கள்ல கண்டிப்பா தரிசனம் பண்ணிடுவேன். எங்க தாத்தா, திருப்பட்டூர் கோயில் பத்தி, அதன் பெருமைகள் பத்தி எங்ககிட்ட சொல்லிருக்கார். இங்கே பங்குனி மாசத்துல பிரம்மோத்ஸவம் அவ்வளவு பிரமாண்டமா நடைபெறுமாம். பிரம்மா கொலுவிருக்கிற கோயில்ல பிரம்மோத்ஸவ விழா நடக்கறதும், அதைத் தரிசிக்கறதும் மகா புண்ணியம்னு சொல்வார். ஆனா என்ன... சுமார் 30 வருஷத்துக்கு முன்னாடி பிரம்மோத்ஸவம் நடந்ததோட சரி!'' என்கிறார் திருச்சி அருகே உள்ள லால்குடி வாசகர் பரமசிவம்.  

''சமீபத்துல கோயிலுக்குப் போயிருந்தப்ப, மிகப் பெரிய சந்தோஷம் காத்திருந்தது. 30 வருடங்களுக்குப் பிறகு திருப்பட்டூர் பிரம்மா கோயில்ல பிரம்மோத்ஸவ விழா நடக்கப் போறது தெரிஞ்சு, பரவசமாயிட்டேன். கிட்டத்தட்ட பத்து நாள் விழாவுக்குத் தயாராகிட்டிருக்கு, திருப்பட்டூர் திருத்தலம்'' என்கிறார் அவர்.

''உண்மைதான். 30 வருஷங்களுக்குப் பிறகு இங்கே பிரம்மோத்ஸவ விழா நடக்கப் போறது. நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா, ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வர்ற கூட்டம் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு. இந்த முறை, பிரம்மா கோயில்ல நடக்கற பிரம்மோத்ஸவ விழாவுக்குப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவாங்கன்னு தோணுது. அதனால விழா ஏற்பாடுகள், உத்ஸவ கோலாகலங்கள், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்னு மிகப் பெரிய திட்டம் போட்டு, வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு'' என்கின்றனர் கோயில் ஊழியர்கள்.

கோயில் நிர்வாகிகளும் ஊழியர்களும் மட்டுமின்றி, தினந்தோறும் கோயிலுக்கு வந்துகொண்டிருக்கிற பக்தர்களும் பிரம்மோத்ஸவ விழா அழைப்பிதழைப் பார்த்து, அறிவிப்பைக் கவனித்துக் குதூகலமாகிவிட்டனர்.

''பிரம்மா கோயில்கொண்டிருக்கிற தலத்துல பிரம்மோத்ஸவம் நடக்கறது ரொம்பவே விசேஷம்! அதுலயும் குறிப்பா, நம் தலையெழுத்தையே திருத்தி மாற்றி அருளும் இந்தத் தலத்து பிரம்மோத்ஸவத்துல கலந்துக்கிட்டு தரிசனம் பண்ணினா, நம் பாவங்கள் மொத்தமும் விலகி, புண்ணியங்கள் பெருகும்னு சொல்றாங்க. அதனால பிரம்மோத்ஸவ விழாவின்போது ஸ்வாமி தரிசனம் செய்ய, நானும் என் நண்பர்கள் சிலருமா சேர்ந்து, திருச்சிலேருந்து பாதயாத்திரையா திருப்பட்டூர் போய் சாமி கும்பிடுறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம்'' என்கின்றனர் திருச்சி அன்பர்கள் சிலர்.

திருப்பதிக்கு நிகரானதாகப் புகழ் பெறப் போகும் திருத்தலம் திருப்பட்டூர் என்பார்கள். திருப்பதி வரை ரயிலில் அல்லது பேருந்தில் சென்றுவிட்டு, கீழ்த் திருப்பதியில் இருந்து நடந்து செல்லும் பக்தர்களைப் போல, திருச்சிக்கு வந்து அங்கிருந்து பாத யாத்திரையாக திருப்பட்டூர் செல்லத் தயாராகிவிட்டனர், பக்தர்கள்.

என்ன... பிரம்மோத்ஸவ வைபவத்தைத் தரிசிக்க உங்களுக்கும் ஆவல் எழுகிறதா?!

- பரவசம் தொடரும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா