நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

பழைய தெய்வப் படங்களை கோயிலில் சேர்க்கலாமா?

கேள்வி-பதில்

'வேதத்தின்படி திருமணம் என்பது பாணிக்ரஹணம் மட்டுமே. அதேபோன்று, திருமண முகூர்த்தமும் பாணிக்ரஹணத்துக்கே அன்றி, தாலி கட்டுவதற்காக அல்ல! காலில் மெட்டி, கையில்  மோதிரம், கழுத்தில் தாலி அனைத்தும் வேதப்படி ஏற்பட்டது அல்ல’ என்கிறார்களே, சரியா?

- மாணிக்கவாசகம், மதுரை

##~##
வேதக் கருத்தையும், அது சொல்லும் பண்பாட்டையும் முற்றிலும் அறியாதவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். வேதம், பண்பாடு என்பதில் பிடிப்பில்லாதவன், அதன் பெருமை பேசப்படுவதைப் பொறுக்க இயலாமல், தாழ்வு மனப்பான்மையை மறைக்க எதிர்வாதத்தைக் கிளப்பி, தற்காலிகமாக நிம்மதி பெறுவான். ஆனால் அந்த நிம்மதி நிலைக்காது. திரும்பத் திரும்ப அந்தப் பணியில் இறங்குவான். தோற்றுப் போனால் அதில் தன்னை இணைத்துக்கொள்வான். பழைய பண்பாட்டைக் கேலி செய்து தாழ்த்துவது என்பது, தன்னை உயர்த்த உதவும் என்று அவனது அறியாமையே பரிந்துரைக்கும்.

பழைய பண்பாட்டைப் பின்பற்றும்  சிலரது நடைமுறைகளை மூடநம்பிக்கை என்று விளக்கியவர்கள், இன்று அதை நல்ல நம்பிக்கையாக விளக்கம் அளிக் கிறார்கள். ஒருசாரார் கடைப்பிடித்தது மூட நம்பிக்கையாக இருந்தது. மற்றொரு சாரார் கடைப்பிடிக்கும்போது அது நல்ல நம்பிக்கையாக மாறியது.  மாமியார் உடைத்தால் மண்கலம்; மருமகள் உடைத் தால் பொன்கலம்! ஆக, மனதின் சிந்தனை மாறி மாறி செயல்படும்.

முக்காலத்திலும் உள்ள நிகழ்வுகள், அதன் தரம், அதன் பெருமை, அதன் கோட்பாடு வேதத்தில் இருக்கும் (பூதம் பவ்யம், பவிஷயச்ச ஸர்வம் வேதாத் ப்ரசித்யதி). இன்றைய சூழலில் கடைப்பிடிக் கும் அத்தனை பண்புகளுக்கும் ஆதாரம் வேதம். அதைப் படித்த பிறகு கேள்வி எழுப்புவதே பண்பான முறை.

கேள்வி-பதில்

வேதம் தொடாத எந்தச் சடங்கும் நடைமுறையில் இல்லை. எட்டு விதமான திருமணங்கள் சாஸ்திரத்தில் உண்டு. அவற்றில் ஒன்றுக்கொன்று சில மாறுதலும் உண்டு. ராமர் சுயம்வரம் மூலம் சீதையை ஏற்றார். அஜனும் நளனும்  சுயம்வரத்தால் பயனடைந்தனர். துஷ்யந்தன் மோதிரத்தில் கந்தர்வ முறையில் திருமணத்தை முடித்துக்கொண்டார்.  ஸ்ரீகிருஷ்ணன் ராக்ஷஸ விவாகத்தில் ருக்மிணியைக் கவர்ந்து வந்து மணந்தார். இப்படி, விவாகத்தின் பல வடிவங்களைப் பார்க்கலாம். 'பிராம்ம’ விவாகத்தில் ரிஷிகள் சில நடைமுறைகளை வகுத்தனர். அதில் வாக்தானம், வரப்ரேஷனை, கன்யகாதானம், உத்வாஹம், திருமாங்கல்ய தாரணம், பாணிக்ரஹணம், ஸப்தபதி, பதிப்ரயாணம், ப்ரவேச ஹோமம், ஸ்தாலிபாகம், ஒளபாசனம் சேஷஹோமம் ஆகிய அத்தனையும் உண்டு.

உத்வாஹம் வரை நிகழ்வு வந்த கன்யகைக்கு பாணிக்ரஹணம் உண்டு. பாணிக்ரஹணம் வரை நிகழ்ந்த நிகழ்வு நிறைவு பெற, சப்தபதி வேண்டும்.  இப்படி, எல்லாவற்றையும் விரிவாக ஆராயும் திருமணத்தை எட்டிப் பார்க்காமல், அதன் விளக்க உரைகளை வேதத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளாமல் சகட்டுமேனிக்கு கேள்வி எழுப்புவது பொருத்தம் ஆகாது. நாம் உணவு அருந்தும் வேளையை வேதம் சொல்லும் என்று நடைமுறை விளக்கங்களை அளிக்கும்போது, பாணிக்ரஹணம் தவிர மற்றவை வேதத்தில் இல்லை என்று வீண்வாதத்தில் இறங்குபவர்களை திருப்திப்படுத்த  முற்படும் நமது முயற்சி, கேலிக்கூத்தாகவும் பயனற்றதாகவும் மாறிவிடும்.

பதிலைக் கடைப்பிடிக்கும் ஆர்வம் இருப்பவனுக்கு பதில் சொல்வது கடமை; தேவை இல்லாத இடத்தில் பதில் சொல்லுவது பேதமை. வேதம் தாலிகட்டச் சொல்லும் (தஸ்மாத் ஸுவர்ணம் ஹிரண்யம் தார்யம்) தாலி கட்டுவதற்கு முஹுர்த்தம் உண்டு. அதற்கு மந்திரம் சொல்வது உண்டு. அவளை நீராட வைத்து, புது ஆடை அணிவித்து, ஸீவர்ணாபரணத்தை அணிவித்து பிற்பாடு கைப்பிடித்தல் வேண்டும். பாணிக்ரஹணத்தை நிறைவு செய்ய சப்தபதி வேண்டும். இப்படி, வேதத்துடன் இணைந்த சடங்குகள் அத்தனையும்!

அலங்காரம் பண்ணி கன்யகையை அளிக்க வேண்டும் (ஆச்சாத்ய அலக்ருதாம்). அந்த அலங்காரங்களில் நகசிகபர்யந்தம் அலங்காரம் உண்டு. அதில் மெட்டியும் அடங்கும். யாகத்தில் மெட்டியும், சதங்கையும், உடலில் ஆபரணத்தையும் அணிந்து கொண்டு நடனமாடும் பெண்களை அறிமுகப்படுத்தும் வேதம் (தாஸ்யோ மார்ஜாலீயம் பரிநிருத்யந்தி). வேதம் சொல்லாத ஒன்றும் திருமணத்தில் இல்லை. காலப்போக்கில் கேளிக்கை களை நாம் இணைத்தாலும் ஒரிஜினல் திருமணம் வேதத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

அஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் பஞ்சாங்க நமஸ்காரம் குறித்து விளக்குங்களேன்.

- ஜி.விஜயலட்சுமி, அரக்கோணம்

இந்தக் கேள்விக்கு ஏற்கெனவே பதில் அளித்திருக்கிறேன். சக்தி விகடனின் கேள்வி- பதில் தொகுப்பு ஐந்து பாகங்களாக (ஐயம் போக்கும் ஆன்மிகம்) விகடன் பிரசுரம் மூலம் வெளி வந்துள்ளது. அவற்றை வாங்கிப் புரட்டினாலே பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும். எனினும், தங்கள் மகிழ்ச்சிக்காக மீண்டும் இங்கே பதில் அளிக்கிறேன்.

'அஷ்டாங்கம்’ என்றால், எட்டு உடல் உறுப்புகள் என்று பொருள். மார்பு, மனம், கண்கள், சிரம், வாக்கு, கைகள், கால்கள், காதுகள் - ஆகிய அத்தனையும் வணக்கத்தில் இணைய வேண்டும் என்பர். இந்த எட்டில் மார்பு, காதுகள், கால்கள் இந்த மூன்றையும் சேர்க்காத வணக்கம், பஞ்சாங்க நமஸ்காரமாக மாறும். பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வணக்கத்தில், இந்த மூன்றையும் தவிர்க்க வேண்டும்.

ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாம்; பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்தால் போதும் என்று சொல்லும். மார்பகம் பூமியில் படக் கூடாது; கன்னமும் பூமியைத் தொடாத வகையில் பெண்கள் நமஸ்காரம் செய்யும்போது, காதுகளும் கால்களும் வணக்கத்திலிருந்து விடுபட்டுவிடும். உடலுறுப்புகள் அத்தனையும் ஒன்றுபட்டு அடிபணிவது சிறப்பு.

கேள்வி-பதில்

புதன்கிழமைகளிலும் விசேஷ தினங்களிலும் விநாயகருக்கு துளசி சார்த்தி வழிபடுகிறேன். ஆனால், விநாயகருக்கு துளசி மாலை சார்த்தக்கூடாது என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ குறிப்பிட்ட விசேஷ தினங்களில் துளசி சார்த்தி வணங்கலாம் என்கிறார்கள். தங்களின் அறிவுரை தேவை.

- என்.ஜி.மகேந்திரன்,  பாட்னா

சிலர் கூறுகிறார்கள்...  வேறு சிலர் கூறு கிறார்கள் என்று விலாசம் இல்லாத விளக்கத்துக்கு சாட்சி தங்களின் மனசாட்சியே! பக்திமேலீட்டால் பழத்துக்குப் பதிலாக தோலை கடவுளுக்கு அளித்த தாக கதை உண்டு. தோலை அளிக்கலாமா எனும் சந்தேகம் பக்தனிடம் தோன்றாது. பகவானும் அந்த பழத்தோலை உண்டு மகிழ்வான் என்று புராணம் சொல்லும்.

இலை, புஷ்பம், பழம், நீர் - ஏதாவது ஒன்றை பக்தியுடன் எனக்கு அளித்து விடு என்பான் கண்ணன். இன்ன இலை, இன்ன பூ என்று அவன் வரையறுக்க வில்லை. எந்த தெய்வத்தை வணங்கினா லும் என்னை வணங்கியதாக ஆகிவிடும் என்பான். (ஸர்தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி).

கேள்வி-பதில்

அவன் படைத்த பொருளையே தனக்கு அளிக்கச் சொல்கிறான். அவனது பொருளில் அவனுக்கு பாகுபாடு இல்லை. அப்படியிருக்க, விசேஷ தினங்களில் துளசி ஆகலாம்; சாதாரண நாட்களில் ஆகாது, அவருக்கு துளசி பிடிக்காது, மற்றவருக்கு வில்வம் பிடிக்காது, அவருக்கு தாழம்பூ பிடிக்காது, இவருக்கு தாமரை பிடிக்காது என்ற விளக்கங்கள் ஏற்புடையது அல்ல. நமக்குதான் அலர்ஜி உண்டு. பகவானுக்கு அலர்ஜி இருக்காது. நம்மைப் போன்ற உடல் வளம் அவரிடம் இல்லை. உடல் அழியும் தன்மை பெற்றது என்பதால், அழிவற்றவனான இறைவன் அழியும் உடலை ஏற்கவில்லை. பூஜை செய்பவன், வழிபடுபவன் இறைவனிடம் மனதை நிலைநிறுத்தப் பழக வேண்டும். பணிவிடையில் தென்படும் உருப்படிகளில் கவனம் செலுத்தி புலன் விசாரணையில் சிந்தனை திரும்பினால், பக்தி நழுவி விடும். ஒரு நாளும் பக்தனாக மாற இயலாது. ஒரு நாள் நீராடாமல் இருந்தால்கூட, உடலானது சொந்த வாசனையை இழந்து மாறுபட்ட வாசனையை எட்டிவிடும். அதை வைத்துக் கொண்டு எப்படி பூஜை செய்வது என்று ஆராய்ச்சியில் இறங்கினால், பக்தி வழிபாடு மறந்துபோகும்.

மனம் உருவமற்றது; தூய்மையானது; மூப்பு அடையாமல் கண்ணாடி போல் பளிச்சென்று இருக்கும். அதில் பகவானை ஏற்றி வைத்து வழிபடலாம். அது நீராடாமலேயே சுத்தமாக இருக்கும். அதேபோல், நமது தேவைகளைப் பூர்த்தி செய்யவே வழிபாடு என்று நினைக்கக் கூடாது. அப்படி எண்ணினால், தேவைக்கு ஏற்ப பொருளை அளிக்கும் எண்ணம் உருவாகும். அது பக்தி இல்லை; வியாபாரம். அப்படியன்றும் சுலபமாக பக்தி வராது. வந்ததாக பாசாங்கு செய்யலாம்.

ஆசையை அடக்கினால் உண்மையான பக்தி தோன்றும். அப்போது துளசி வேண்டுமா வேண்டாமா எனப்போன்ற எண்ணங்கள் முளைக்காது. தங்களின் சிந்தனைக்கு ஒரு வார்த்தை... இந்தக் கேள்வி-பதில் சக்தி விகடனில் ஏற்கெனவே பிரசுரமாகி உள்ளது. மாறுபட்ட கேள்விகள் எழுந்தால் பல தகவல்கள் வெளி வரும். அதில் பலபேர்களது ஐயப்பாடு விலகும்.

வீட்டில் பூஜித்து வந்த தெய்வப் படங்கள் பழசானதும், அவற்றை சிலர் கோயில்களில் கொண்டு வந்து வைத்துவிடுகின்றனர். இப்படிச் செய்யலாமா? வீட்டில் வழிபாட்டில் உள்ள தெய்வப் படங்கள் உடைந்து போனாலோ, அல்லது நிறம் மங்கிப் போனாலோ, அவற்றைத் தொடர்ந்து பூஜிக்கலாமா? அல்லது அந்தப் படங்களை என்ன செய்வது?

- ஆர்.சேதுராமன், திருவூர்
- கமலா, மேலூர்

கேள்வி-பதில்

பயன்படாத படங்களை கோயிலில் சேர்ப்பது தவறு. உடைந்து போன படங்களை அகற்றிவிட வேண்டும். படங்கள், நமது படைப்புகள். அவற்றுக்கு அழிவு உண்டு. ஆகையால், பயனற்ற பொருளை அகற்றுவதில் தவறில்லை. நாளிதழ்களில் தெய்வத் திருவுருவங்கள் தென்படும். அவற்றை வீசியெறிவதில் மன நெருடல் இருப்பதில்லை. மாத இதழ்களில் ஒரு பக்கம் தெய்வ உருவம் இருக்கும்; மறுபக்கத்தில் பகட்டான பெண் பளிச்சிடுவாள். கவலைப்பட மாட்டோம்.

விளம்பரங்களில் தெய்வ உருவத்தை ஒட்டி நமது பொருளை அறிமுகம் செய்வோம். ஆக, ஒருபுறம் உருவத்தை அசட்டை செய்கிறோம்; மறுபுறம் அதை வாழ்த்துகிறோம். இப்படிப் பழகிப்போன மனம், படத்தை என்ன செய்வது என்று கேள்வி எழுப்புவது விசித்திரமே!

- பதில்கள் தொடரும்...