நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'ஒரு காரியம் வெற்றியா, தோல்வியான்னு தெரிஞ்சுக்க, 'நீங்க போன காரியம் காயா, பழமா?’ன்னு கேள்வி கேக்குற வழக்கம் எப்ப தொடங்கியிருக்கும்? எப்படித் தொடங்கியிருக்கும்?' என்று கேட்டவர், ஒரு சரித்திரப் பேராசிரியர். எங்கள் மாலை நேர இலக்கிய மகாசபை களைகட்டத் தொடங்கியது.

'எனக்குத் தெரிஞ்சு ஒண்ணாங்கிளாஸ்லயே இது ஆரம்பமாகியிருக்கணும்னு நெனைக்கிறேன். ஏன்னா, எங்களுக்குப் பிடிக்காத பசங்களோடு காய் விடுவோம்; பிடிச்சவங்கன்னா பழம்தான்'' என்று பெரியவர் ஒருவர் சொல்ல, எல்லோரும் சிரித்தோம்.

##~##
'பொதுவாக ஒரு செயல் வெற்றியடைந்தால், அந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் சிலர் வலது கை கட்டை விரலை உயர்த்திக் காண்பிப்பார்கள். பேச்சுவழக்கில் 'ஜெயம் நம் பக்கம்தான்' என்பார்கள். இப்போதெல்லாம் இரண்டு கைகளையும் முன்னால் நீட்டி, முஷ்டிகளை இறுக்க மூடிக்கொண்டு, விசுக்கென்று பின்னால் இரண்டு மூன்று முறை இழுப்பது வெற்றிக்கான அறிகுறியாக இருக்கிறது! நம் முன்னோர் 'வெற்றி’ என்பதைப் 'பழம்’ என்றும், 'தோல்வி’யை 'காய்’ என்றும் குறிப்பிட்டிருக்க வேண்டும். தேர்தலில்கூட வெற்றிக்கனியை எட்டிப் பறித்தார் என்று சொல்வது வழக்கம்தானே?' என்றேன் நான்.

'சார்... இந்த பூ, கனி, காய் இதெல்லாம் மனித வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டிருக்குன்னு ஒரு புத்தகத்துல படிச்சேன்; உண்மைதானா?' என்று இயற்கை ஆர்வலர் ஒருவர் கேட்க, 'இதென்னய்யா கேள்வி? வாழைப்பூவைச் சாப்பிடுறோம்; மாங்காயை ஊறுகாய் போடுறோம்; வாழைப்பழம் முதல் பலாப்பழம் வரை எல்லாத்தையும் சாப்பிடுறோம். ஏன், வாழை இலையைக்கூட பயன் படுத்துறோமே!' என்று ஒருவர் குறுக்கே புக,

'அட, அவர் கேட்க வந்தது அது இல்லீங்க'' என்று தடுத்த நான், ''பெண்களுடைய பருவ வளர்ச்சியை இலக்கியத்துல ஏழு வகையாகப் பிரிச்சு சொல்றாங்க.  பேதை (5 முதல் 7 வயது வரை), பெதும்பை (8 - 11), மங்கை (12 - 13), மடந்தை (14 - 19), அரிவை (20 - 25), தெரிவை (26 - 31), பேரிளம்பெண் (32 - 40) என்று பிரித்துச் சொல்வார்கள். இதில் ஒரு ஆச்சர்யம்... வயதான பெண்களை முதியவள், கிழவி என்றெல்லாம் சொல்லாமல் 'பேரிளம்பெண்’ என்று சொல்லியிருப்பதைக் கவனித்தீர்களா?'' என்று கேட்டேன் நான்.

'வரவர ஐயா பேசுறது எல்லாமே புதுசு புதுசா இருக்கு' என்று ஒருவர் ஆச்சரியப்பட, 'இதெல்லாம் ரொம்பப் பழசுங்க! பெண் வயதுக்கு வந்துவிட்டால் பூப்பெய்தினாள் என்கிறோம். அடுத்து அவளின் வாழ்க்கை நறுமணமாக (வாசனை) அமைய திருமணம் செய்துவைக்கிறோம். அவள் தாய்மைப்பேறு அடைகிற போது, கருவுற்றிருக்கிறாள் என்கிறோம். பத்து மாத நிறைவில் கனி போன்ற குழந்தையைப் பெற்றெடுக் கிறாள். ஒருவேளை குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்தால்...' என்று சொல்லி நான் நிறுத்த... 'காய் விழுந்திருச்சுன்னு சொல்லுவா எங்கவூர்க் கிழவி' என்றார் ஒரு பெரியவர்.

''இப்போது இயற்கை ஆர்வலர் கேட்ட கேள்விக்கு வருவோம். பூ மலர்தல், கருவுற்றுக் காயாதல், காய் பழுத்துக் கனியாதல், பூ, காய், கனி என்ற மூன்று சொற்களும் மனித வாழ்க்கையோடு பொருந்தி வருகிற தல்லவா?' என்று முடித்தேன்.

'சரியாச் சொன்னீங்க. ஆமா... நம்ம ஆம்பளைகளை அப்படி ஏதும் பிரிக்கலீங்களா?' என்று ஒருவர் ஆதங்கமாய்க் கேட்டார்.

'ஓ... பிரிச்சிருக்காங்களே! 'பன்னிருபாட்டியல்’ என்ற இலக்கண நூலில், ஆண்களின் பருவங்களை பாலன் (1 - 7), மீளி (8 - 10), மரவோன் (11 - 14), திறலோன் (15), காளை (16), விடலை (17 - 30), முதுமகன் (30 வயதுக்கு மேல்) எனப் பிரித்திருக் கிறார்கள்' என்று நான் சொன்னதும், 'ஆல் கிளியர்' என்றார் ஒருவர். எல்லோரும் ஆமோதிக்க, சபை மறு அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்டது!