Published:Updated:

ராமன் எத்தனை ராமனடி...

ராமன் எத்தனை ராமனடி...

பிரீமியம் ஸ்டோரி
ராமன் எத்தனை ராமனடி...
ராமன் எத்தனை ராமனடி...

ருமமிகு சென்னையில் இருந்து கோயில் நகரமாம் காஞ்சிக்குச் செல்லும் வழியில், தாம்பரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில், பாலாற்றின் கிழக்கே அமைந்துள்ளது செங்கல்பட்டு. ஸ்ரீராமர் கோதண்டபாணியாய் கோயில் கொண்டிருக்கும் திருவிடம் இது. இந்த ஊரின் அருகிலேயே பொன்விளைந்த களத்தூர், பொன்பதர்கூடம் ஆகிய தலங்களும் அமைந்திருப்பது, நாம் செய்த புண்ணியமே!

ஆமாம்... செங்கல்பட்டு கோதண்டபாணியைத் தரிசிப்பதுடன், அருகிலேயே அமைந்த இந்தத் தலங்களுக்கும் சென்று... நின்ற, அமர்ந்த, சயனக் கோலங்களிலும், சதுர்புஜனாகவும், பட்டாபிஷேக மூர்த்தியாகவும் அருளும் ஐந்து ஸ்ரீராம மூர்த்தியரை ஒரே நாளில் தரிசித்துவிடலாம். வரும் ராம நவமி திருநாளில், இந்த ஐந்து ராம ஸ்வாமிகளையும் தரிசிப்பது அவ்வளவு விசேஷம்! வாருங்கள்... இந்த ஐவர் குடிகொண்டிருக்கும் ஆலயங்களையும், அவர்களின் அனுக்கிரஹ சிறப்பையும் அறிந்து மகிழ்வோம்.

ராமன் எத்தனை ராமனடி...


செங்கல்பட்டு ஸ்ரீகோதண்டராமர்

##~##
செ
ங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலேயே உள்ளது ஸ்ரீகோதண்டராமர் ஆலயம். ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம்.

இந்த ஆலயம், கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. இங்கே பட்டாபிஷேக கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீராமர். அவருக்கு இடப்புறம் சீதாதேவி; வலப்புறம் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னன்; பக்த அனுமனும் அருகில் உள்ளார். அன்று அயோத்தியில் நிகழ்ந்த ஸ்ரீராமரின் பட்டாபிஷேகத்தைக் காண இயலாத நமக்கு, இந்தத் தரிசனம் பெரும் கொடுப்பினை!

கருவறைக்கு வெளியே, இடப்புறம் ஸ்ரீவரதராஜ பெருமாள் சந்நிதி. இவரது சந்நிதியிலேயே உற்ஸவரான ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவரதராஜ மூர்த்தியும் அருள்கோலம் காட்டுகிறார். கோயில் பிராகாரத்தில் இடப்புறம் பெருந்தேவி தாயாருக்குத் தனிச் சந்நிதியும் உண்டு. இங்கே நாம் தரிசிக்க வேண்டிய இன்னொருவரும் உண்டு. அவர் ஸ்ரீகால வீர ஆஞ்சநேயர். சனி பகவானைத் தனது திருப்பாதத்தால் அழுத்திய கோலத்தில் காட்சி தருகிறார். ஏனாம்?!

கடல் கடந்து இலங்கைத் தீவுக்குச் செல்ல, வானர சேனை சேது பாலம் அமைத்த தருணம்! அதுவே, அனுமனை சனி பிடிப்பதற்கான காலமாகவும் அமைந்தது. நேரே அனுமனிடம் சென்ற சனைச்சரன், தான் வந்த விஷயத்தை சொன்னார். அனுமனோ, 'தெய்வப்பணி நடந்துகொண்டிருக்கிறது. இது நிறைவேறியதும் தாராளமாக வந்து என்னைப் பிடித்துக் கொள்’ என்றார். ஆனால், சனி பகவான் கேட்கவில்லை. அனுமனின் சிரசில் ஏறி அமர்ந்துகொண்டார். அவருக்கு ஸ்ரீராம நாம மகிமையையும் ராம பக்தர்களின் பெருமையையும் உணர்த்த எண்ணினார் அனுமன். எனவே, 'தலையில் பிடிப்பதைவிட, என் கால்களில் பிடித்துக் கொள்ளுங்கள்; எனது பணிக்கும் சிரமம் இருக்காது’ என சனி பகவானிடம் கேட்டுக்கொண்டார்.

அனுமனின் திட்டம் தெரியாத சனி பகவானும், 'நமக்கு வேலை நடந்தால் சரி’ என்று கருதி, அனுமனின் சிரசில் இருந்து இறங்கி காலில் பிடித்துக் கொண்டார். அவ்வளவுதான்... அவரை பூமியோடு சேர்த்து அழுத்திய அனுமன், ராம நாமத்தை உச்சரித்தபடி தனது பணிகளை கவனிக்க ஆரம்பித்தார். நேரம் செல்லச் செல்ல பாரம் தாங்க இயலாத சனி பகவான், 'பக்தனான அனுமனுக்கே இவ்வளவு சக்தியென்றால், ஸ்ரீராமரின் பெருமை எத்தகையதாக இருக்கும்!’ என வியந்தார். சற்றும் தாமதிக்காமல்

ஸ்ரீராமரைத் தியானித்து, 'ஸ்ரீராம நாமம் உச்சரிப்பவரை இனி தொந்தரவு செய்யமாட்டேன்’ என உறுதி கொடுத்தாராம். அதனால் மனம் மகிழ்ந்த ஸ்ரீராமர், அனுமனிடம் சொல்லி, சனி பகவானை விடுவித்ததாகத் தலபுராணம் சொல்கிறது. இந்த அனுமனை வழிபட, சனி கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்கின்றனர்.

இங்கே ஸ்ரீகோதண்டபாணிக்கு ஸ்ரீராம நவமி உத்ஸவம் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 22.3.12 அன்று துவங்கி 4.4.12 வரை ஸ்ரீராம நவமி உத்ஸவம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து  5.3.12 அன்று பங்குனி உத்திர விழா துவங்குகிறது. இந்த விழா வைபவங்களில் கலந்துகொண்டு ஸ்ரீகோதண்டபாணியைத் தரிசித்துச் செல்ல சகல சௌபாக்கியங்களும் ஸித்திக்கும்!

ராமன் எத்தனை ராமனடி...


பொன் விளைந்த களத்தூரில்...
இரண்டு கோயில்கள் மூன்று ராமர்கள்!

செங்கல்பட்டு நகரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்விளைந்த களத்தூர். இந்த ஊரிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவு பயணித்தால், பொன்பதர்கூடம் தலத்தை அடையலாம்.

சுமார் 700 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவம். வைணவ ஆசார்யரான தூப்புல் நிகமாந்த மகாதேசிகன் ஸ்ரீரங்கத்துக்குச் செல்லும் வழியில், களத்தூரில் வந்து தங்கினார். அனுதினமும் மாலை வேளையில், ஸ்ரீஹயக்ரீவருக்கு பூஜை செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுவது அவர் வழக்கம். எங்கு சென்றாலும் ஸ்ரீஹயக்ரீவ விக்கிரகத்தையும் உடன் எடுத்துச் செல்வார். களத்தூருக்கு வந்த அன்று, நைவேத்தியம் படைக்க எதுவும் கிடைக்காததால், துளசி தீர்த்தத்தையே நைவேத்தியம் செய்து, அதையே தானும் பருகிவிட்டு உறங்கினார்.

அன்று இரவு... இங்கு வசித்த ஏழை விவசாயி ஒருவன் தனது நிலத்தைக் காவல் காக்கப் புறப்பட்டான். அங்கே வெள்ளைக் குதிரை ஒன்று மேய்வதைக் கண்டவன், அதைத் துரத்தினான். அந்தக் குதிரை, மகாதேசிகன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்தது. சப்தம் கேட்டு எழுந்த தேசிகனிடம், விவசாயி விஷயத்தைக் கூற, மகாதேசிகனுக்கு மெய் சிலிர்த்தது. களத்தை மேய்ந்தது சாதாரணக் குதிரை அல்ல... சாட்சாத் ஹயக்ரீவரே என்று உணர்ந்த மகாதேசிகன், உடனடியாக அந்த விவசாயியின் நிலத்துக்குச் சென்றார்.

அங்கே... வெள்ளைக் குதிரை மேய்ந்த இடங்களில் எல்லாம் நெல்மணிகளுக்குப் பதிலாக பொன்மணிகள் விளைந்திருந்தனவாம். களத்தில் (வயலில்) பொன் விளைந்ததால், அந்த ஊருக்குப் பெயர் - பொன்விளைந்த களத்தூர் என்றானது. அந்தப் பொன்னின் பதர்கள் காற்றில் பறந்து வந்து விழுந்த இடம், பொன்பதர்க் கூடம் எனப் பெயர் பெற்றது. பெருமைமிகுந்த பொன்விளைந்த களத்தூரில், அருகருகே இரண்டு வைணவ ஆலயங்கள் அமைந்துள்ளன.

ராமன் எத்தனை ராமனடி...

ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம்: இந்த சாந்த சொரூபியாய்... ஸ்ரீஅஹோபிலவல்லித் தாயார் சமேதராக அருள்கிறார் ஸ்ரீலட்சுமி நரசிம்மர். இவர், 108 திவ்விய தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் இருந்தவராம். பல நூற்றாண்டுகளுக்கு முன் அந்நியர்களால் மாமல்ல புரத்துக்கு ஆபத்து வந்தபோது, ஸ்ரீநரசிம்மரே அசரீரியாக தன்னை மேற்கு நோக்கிக் கொண்டு செல்லும்படியும், கூடவே பறந்து வரும் கருடன் எங்கே தரை இறங்குகிறதோ, அங்கே கோயில் கட்டித் தன்னை பிரதிஷ்டை செய்யும்படியும் அருளினாராம். அவ்வாறு ஸ்ரீநரசிம்மரே விரும்பி வந்து குடிகொண்ட தலம் இது என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். பொன் விளைவித்த ஹயக்ரீவரும் இங்கே சந்நிதி கொண்டுள்ளார்.

கருவறைக்கு அருகில் இடப்புறம் உள்ள சந்நிதியில், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீலட்சுமணர் சமேதராகத் தரிசனம் தருகிறார் ஸ்ரீகோதண்ட ராமர். அருகிலேயே இவர்களின் உற்ஸவ மூர்த்தங்களும் உள்ளன. உற்ஸவ ராமரின் குறுநகை அழகே அழகு! ஒவ்வொரு மாதமும் புனர்வசு நட்சத்திரத்தில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீராம நவமி யும் இங்கே விசேஷம்!

ஸ்ரீபட்டாபிராமர் ஆலயம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகில் உள்ளது இந்த ஆலயம். இந்தக் கோயிலில் நின்ற கோலம், அமர்ந்த கோலம் மற்றும் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீராமரைத் தரிசிக்கலாம்.

மூலவர் ஸ்ரீபட்டாபிராமர் சீதாதேவியை இடது மடியில் தாங்கி அமர்ந்தபடி, பட்டா பிஷேகக் கோலத்தில் அருள்கிறார். பொதுவாக ஸ்ரீராமருக்கு வலப்புறம் சீதாதேவியும், இடப்புறம் ஸ்ரீலட்சுமணனும் இருப்பார்கள். ஆனால் இங்கே, பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருவதால்... ஸ்ரீராமருக்கு இடப்புறம் சீதையும், வலப்புறம் லட்சுமணரும் அருள்கின்றனர். அருகில், ஆஞ்சநேயரும் உள்ளார். வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம் இது என்கிறார்கள். உத்ஸவரான ஸ்ரீகோதண்டராமர் நின்ற கோலத்தில் அருள்கிறார்.

ஸ்ரீதர்ப்பசயன சேதுராமர்: இதே கோயிலில் தனிச்சந்நிதியில் அருள்கிறார் இவர். சேது பாலம் கட்டுவதற்கு முன்னர், சமுத்திர ராஜனின் அனுமதியைப் பெற விரும்பினார் ஸ்ரீராமர். ஆனால் சமுத்திரராஜனின் வருகைக் காகச் சிறிது நேரம் காத்திருக்க நேர்ந்தது. அந்தத் தருணத்தில் தனது களைப்பைப் போக்கிக் கொள்ள சிறிது சயனிக்க விரும்பினார் ஸ்ரீராமர்.

அண்ணன் தரையில் சயனித்தால் மேனி நோகுமே என்று, தர்ப்பையால் படுக்கை செய்து அதில் அண்ணனைப் படுக்கச் செய்து, தானும் அருகில் காவலுக்கு நின்றாராம் லட்சுமணன்.

தாமதமாக வந்த சமுத்திரராஜன், ஸ்ரீராமரது துயிலைக் கலைக்க விரும்பாமல், அவரது திருவடி அருகில் காத்திருந்தானாம். இந்த நிகழ்வையட்டியே, சயனக் கோலத்தில் காட்சி தருகிறாராம் இந்த ராமர். அவரது சிரசுக்கு அருகில் லட்சுமணனும், திருவடிக்கு அருகில் சமுத்திரராஜனும் நிற்கிறார்கள். ராம பக்தர்கள் யாவரும் தரிசிக்க வேண்டிய அற்புதக் கோலம்! இந்தச் சந்நிதியிலும் சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமனுடன் ஸ்ரீராமரின் உத்ஸவ மூர்த்தியைத் தரிசிக்கலாம். இந்தக் கோயிலிலும் ராம நவமி விசேஷம் (இந்த ஆண்டு உத்ஸவம் 1.4.12 அன்று நிகழ்கிறது).

ராமன் எத்தனை ராமனடி...


ஸ்ரீசதுர்புஷ ராமர்!

அன்னை கௌசல்யா, இலங்கையில் சீதையைப் பரிவுடன் கவனித்துக்கொண்ட திரிசடை போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே, தான் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சம் என்பதை உணர்த்தினாராம் ஸ்ரீராமர்! தேவராஜ மகரிஷியும் ஸ்ரீராமரை மகாவிஷ்ணுவாகத் தரிசிக்க ஆசைப்பட்டு, கடும் தவமிருந்தார்.

இதனால் மகிழ்ந்த ஸ்ரீராமர் அவருக்கு ஸ்ரீமகாவிஷ்ணுவாகத் தரிசனம் தந்தார். மேலும், அந்த மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, அதே கோலத்தில் அவர் கோயில் கொண்ட திருவிடமே பொன்பதர்க்கூடம். மகாவிஷ்ணு ரூபத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருவதால், இங்குள்ள ஸ்வாமிக்கு ஸ்ரீசதுர்புஜ கோதண்ட ராமர் என்றே திருநாமம்.

மேலிரு கரங்களில் சங்கு- சக்கரமும்; கீழிரு கரங்களால் அபய- வரதமும் காட்டி அருள்கிறார் மூலவர். ஸ்வாமியின் வலப்புறம் சீதா தேவி. திருமணக் கோலத்தில் அருள்கின்றனர். ஸ்வாமிக்கு இடப்புறம் லட்சுமணன். சீதாதேவிக்கு வலப்புறம்... திருவடியை சற்றே முன்வைத்து, வாய் பொத்தி பவ்யமாகக் காட்சி தருகிறார் அனுமன். ஸ்ரீராமர், மஹாவிஷ்ணுவாகக் காட்சி தந்த தலமாதலால் ஸ்வாமியின் மார்பில் ஸ்ரீமகாலட்சுமி உறைந்திருப்பதைக் காணலாம்.உத்ஸவர் கோதண்டராமரும் சதுர்புஜங்களுடன், இடது திருவடியை சற்றே முன்புறமாக மடித்த நிலையில் அருள்வது விசேஷம்.

சீதாதேவியை மணம் செய்வதற்குமுன், தன் இடக் கால் பெருவிரலால் வில்லை அழுந்தப் பிடித்த படி, அம்பு எய்ததன் நினைவாகவே, உத்ஸவர் ரூபம் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாம். ஆஹா... மணக்கோலத்தில் மூலவர்; வீரத்தைப் பறைசாற்றும் கோலத்தில் உத்ஸவர்... காணக் கிடைக்காத தரிசனம்தான்!

இங்கு வந்து வழிபட, திருமணத் தடை நீங்குமாம். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேரவும், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கவும் ஸ்ரீராமருக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர். தர்மிஷ்டர் என்னும் மகான், இந்தத் தலத்தில் உள்ள தேவராஜ புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீசதுர்புஜ கோதண்ட ராமரை வழிபட்டு, தனது சரும நோய் நீங்கப் பெற்றார். எனவே, சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து ஸ்ரீராமருக்கு துளசி, கல்கண்டு நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ள, விரைவில் நலம் பெறலாம் என்கின்றனர்.

தைப்பொங்கல் தினத்தன்று ஸ்வாமிக்கு மிக விமரிசையாகத் திருமஞ்சனம் நடை பெறும். அன்று, சூரிய குலத்தில் பிறந்தவரான ஸ்ரீராமன் பாரிவேட்டைக்குச் செல்வாராம். அதேபோல், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா சுதர்ஸன ஹோமமும் விசேஷம். ஸ்ரீராமநவமி உத்ஸவமும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அனைவரும் வந்து ஸ்ரீராமரின் திருவருள் பெற்றுச் செல்லலாம்.

படங்கள்: பா.ஜெயவேல்

ராமன் எத்தனை ராமனடி...


ஏரி காத்த ராமர்!

செங்கல்பட்டிலிருந்து சுமார் 23 கி.மீ. தூரத்திலுள்ள, மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமர் கோயிலும் தரிசிக்க வேண்டிய தலம். பல்லாண்டுகளுக்குமுன், இங்கிருந்த ஏரியின் கரை அடிக்கடி உடைப்பெடுக்குமாம். அப்போதைய ஆங்கிலேயே கலெக்டர் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும், இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியவில்லை. இந்த நிலையில், கோயிலில் தாயார்

சந்நிதி திருப்பணியை செய்து தரும்படி அவரிடம் கேட்டார்கள் அன்பர்கள் சிலர். 'உங்கள் தெய்வத்துக்கு சக்தியிருந்தால் ஏரி உடைப்பெடுக்காமல் தடுக்கட்டும். அதன் பிறகு, திருப்பணி செய்து தருகிறேன்'' என்றாராம் கலெக்டர். மீண்டும் கனமழை பெய்தது. ஏரிக் கரையைப் பார்வையிடச்

சென்றார் கலெக்டர். அங்கே இளைஞர்கள் இருவர் கரங்களில் வில்-அம்புடன் நின்றிருந்தனர். அம்பில் இருந்து தோன்றிய பேரொளியைக் கண்டு கலெக்டர் வியந்தார். அந்த இளைஞர்கள் ஸ்ரீராம-லட்சுமணரே என்பதை அன்பர்கள் மூலம் அறிந்து சிலிர்த்தார். அதன் பிறகு ஏரி உடையவே இல்லை! கலெக்டரும் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். ஏரி உடையாமல் காத்தருளியதால், இங்குள்ள ஸ்வாமிக்கு ஸ்ரீஏரிகாத்த ராமர் என்று நாமகரணம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு