நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பாலபிஷேகம் செய்தால்... வியாபாரம் பெருகும்!

பங்குனி உத்திர தரிசனம்!

பாலபிஷேகம் செய்தால்... வியாபாரம் பெருகும்!
பாலபிஷேகம் செய்தால்... வியாபாரம் பெருகும்!

துரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து, ஸ்ரீமீனாட்சி அம்மனின் தெற்கு கோபுர வாயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது நேதாஜி ரோடு. அந்தக் காலத்தில் இந்தச் சாலை திண்டுக்கல் ரோடு என அழைக்கப்பட்டது. ஆகவே இங்கேயுள்ள முருகப்பெருமானும் திண்டுக்கல் முருகன் என்றே போற்றப்படுகிறார்!

இந்தக் கோயிலில் உள்ள மூலவரின் திருநாமம் - ஸ்ரீதண்டாயுதபாணி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஸ்ரீசொக்கேசரை வழிபட இந்த வழியே வரும் போது, முருகக் கடவுளையும் தரிசித்ததால்... இந்த ஆலயத்தை சுந்தரர் மடம் என்றும் அழைக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை, தைப்பூச நன்னாளில், இங்கேயுள்ள ஸ்ரீதண்டாயுதபாணியின் திருவிக்கிரகத்தை, பழநிக்கு எடுத்துச் சென்று திரும்பும் வழக்கம் இருந்ததாம். இதனால் இதனை ஸ்ரீபழநியாண்டவர் கோயில் என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள். மதுரையம்பதியில் உள்ள கோயில்களில், முதல் பட்டா வழங்கப்பட்டது இந்த ஆலயத்துக்குதான் எனும் பெருமையும் உள்ள தலம் இது!

மூலவர் ஸ்ரீதண்டாயுதபாணி, வடக்குப் பார்த்தபடி, கையில் தண்டாயுதமும் வேலும் சேவற்கோடியும் தாங்கியபடி காட்சி தரும் அழகே அழகு! ஸ்ரீமுருகக் கடவுளுக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தால், திருமணத் தடை அகலும்; மாங்கல்ய பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

ஆறுபடை வீடுகளில் அருள் வழங்கும் ஸ்வாமியின் திருவுருவங்களைப் போலவே இங்கு அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசிவபெருமான், ஸ்ரீஆஞ்ச நேயர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீவீரபத்திரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டு.

பாலபிஷேகம் செய்தால்... வியாபாரம் பெருகும்!

கோயிலைச் சுற்றியுள்ள வியாபாரிகள், தினமும் கோயிலுக்கு வந்து சந்நிதியில் சாவியை வைத்து, வேண்டிய பிறகே தங்கள் கடையைத் திறக்கின்றனர். ஆகவே, வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வியாபாரிகளும் இங்கு வந்து வேண்டிச் செல்கின்றனர்.  

வருடம் முழுவதும் பல விழாக்கள் சிறப்புற நடைபெற்றாலும் இந்தக் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா, வெகு விமரிசையாக நடைபெறுகிறது. சந்தனக்காப்பு அலங்காரம், சிறப்பு ஹோமங்கள், திருவீதியுலா, நான்கு மாசி வீதிகளிலும் விசேஷ அலங்காரத்துடன், பூப்பல்லக்கில் திருப்பவனி... என அந்தப் பகுதியே அமர்க்களப்படும். இந்த நாளில் ஸ்ரீதண்டாயுதபாணியை வணங்கித் தொழுதால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்!

பங்குனி உத்திர நாளில், முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிற பக்தர்கள் அதிகம். விளைச்சல் பெருக வேண்டும் என்பதற்காக, விதை நெல்லுடன் வந்து கந்தக் கடவுளைத் தரிசிக்கிற விவசாயிகள், வியாபாரிகள், பிள்ளை பாக்கியம் வேண்டுகிற பெண்கள் என அனைவருக்கும் நலம் அருளும் பங்குனி உத்திர நன்னாளில், ஸ்ரீதண்டாயுதபாணியைத் தரிசியுங்கள். பலன் பெறுங்கள்!  

    - ஆர்.கே.சஞ்சீவ்குமார்
      படங்கள்: ச.லட்சுமிகாந்த்