நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஞானம் தரும் வள்ளலார் கோயில்!

கல்வி-ஞானம் கைகூட..

ஞானம் தரும் வள்ளலார் கோயில்!
##~##
'நா
ன் சிவனடியார்’ என்று சொல்லிக் கொள்வதில் அடியவர் கள் சிலருக்கு ஆனந்தமும் கர்வமும் தலைதூக்கும் அல்லவா? 'அப்பேர்ப்பட்ட சிவனாருக்கு வாகனமாக இருக்கி றேன்’ என்று ரிஷபமும் கர்வத்தில் திரிந்தது. அதன் கர்வத்தை அழித்து, அதற்குப் பாடம் புகட்டுவதற்காக, அந்த ரிஷபத்தை பூலோகத்துக்குத் தள்ளிவிட்டாராம் சிவபெருமான்.

தன் தவற்றை உணர்ந்த ரிஷபம், புண்ணிய நதியாம் காவிரியில் நீராடியது; காவிரியின் கரையில் இருந்த சிவலிங்கத் திருமேனிக்கு வில்வம் சார்த்தி வழிபட்டது; 'என்னை மன்னித்தருளுங்கள் ஸ்வாமி’ என மன்றாடிக் கெஞ்சியது. அதில் மனம் இரங்கிய சிவனார், ரிஷபத்துக்கு திருக்காட்சி தந்து, மீண்டும் தன் வாகனமாக ரிஷபத்தை ஏற்று, ஞானத்தை வழங்கினார் என்கிறது ஸ்ரீவதான்யேஸ்வரர் கோயிலின் ஸ்தல புராணம்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள அற்புதமான இந்தத் தலத்தை, வள்ளலார் கோயில் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். ஆனால், மிகப் புராதனமான சிவ ஸ்தலம் இது. இங்கே ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீவதான்யேஸ்வரர். அம்பாள் - ஸ்ரீஞானாம்பிகை. இங்கு சிவ- பார்வதியை வணங்கித் தொழுதால், கல்வியில் ஞானவான்களாகத் திகழலாம் என்பது ஐதீகம்! நினைத்த காரியங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது நம்பிக்கை.

ஞானம் தரும் வள்ளலார் கோயில்!

இங்கே, ஐப்பசி மாதம் துலா உற்ஸவம், பங்குனி முதல் வாரம் சூரிய பூஜை, சித்ரா பௌர்ணமி நாளில் ஸ்ரீசண்டிஹோம விழா,  கார்த்திகை மாதக் கடைசி வியாழக்கிழமையில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு மகா அபிஷேகம் என விழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன.

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு... ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி, இந்தத் தலத்தில் ரிஷப வாகனத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீவதான்யேஸ்வரர் என்றால், நாம் கேட்காமலேயே நமக்குத் தேவையானவற்றையெல்லாம் அள்ளித் தருபவர் என்று அர்த்தம். அம்பிகை ஸ்ரீஞானாம்பிகை, ஞானச் செல்வத்தை வாரி வழங்குபவள் என்று பொருள். இவர்கள் இருவருடன் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், கல்வியில் மிகச் சிறந்து விளங்கலாம்; மனதில் குழப்பம் நீங்கி, புத்தியில் தெளிவுடன் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.      

ஞானம் தரும் வள்ளலார் கோயில்!

வியாழக்கிழமைகளில், இங்கு மாணவர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நாளில், இங்கு வந்து ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியைத் தரிசித்தால், தேர்வில் மிக எளிதாக வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை. ஆகவே வியாழக்கிழமைகளில் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்திக்கு, முல்லைப் பூ அல்லது மஞ்சள் நிற அரளிப் பூ மற்றும் கொண்டைக் கடலை மாலை சார்த்தி, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்லோகத்தை 24 முறை சொல்லி, மனதார வழிபட்டால்... நினைவாற்றல் பெருகும்; அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்வில் வெற்றி பெறலாம்.  

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாக இங்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தி சந்நிதியில் வைத்து, குழந்தையின் நாக்கில் தேன் கொண்டு ஸ்ரீதட்சிணா மூர்த்தி ஸ்லோகத்தை எழுதுவது வழக்கம். அதேபோல், வருடந்தோறும் ஜூன் மாதத்தில், வியாழக் கிழமையில் பள்ளியைத் திறப்பது, மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளின் வழக்கம் என்கிறார் கோயிலின் சுப்ரமணிய குருக்கள்.

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீஅங்காரகன், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன் ஆகியோருக்கும் தனிச்சந்நிதிகள் உள்ளன. ஸ்ரீகங்கையம்மனையும் தரிசிக்கலாம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் உத்ஸவத் திருமேனியும் இருப்பது, கோயிலின் கூடுதல் சிறப்பு!

           - மா.நந்தினி
படங்கள்: இ.ராஜவிபீஷிகா