நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

சரணடைந்தால்... சங்கடங்கள் இல்லை

பங்குனி உத்திர தரிசனம்!

சரணடைந்தால்... சங்கடங்கள் இல்லை

காவிஷ்ணு யாழ் வடிவாகி ஈசனை வழிபட்ட திருத்தலம், தேவேந்திரனுக்கு சிவநடனம் கிடைக்கப்பெற்ற க்ஷேத்திரம், அம்பாள்- ஸ்வாமி சந்நிதிகளுக்கு நடுவே ஸ்ரீசனி பகவான் சந்நிதி கொண்டிருக்கும் விசேஷ திருவிடம்... எல்லாவற்றுக்கும் மேலாக தன்னைச் சார்ந்தோரைக் காக்கும் சாமியாக பரமேஸ்வரன் அருளும் திருவூர்- தில்லையாடி!

நாகை மாவட்டம், திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும், தரங்கம்பாடியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது தில்லையாடி. இங்கே, ஸ்ரீபெரியநாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசரணாகரட்சகர்!

சரணடைந்தால்... சங்கடங்கள் இல்லை

விக்ரம சோழனின் ஆட்சிக் காலம். அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரர், திருக்கடவூர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே நேரம், தில்லையாடி திருக்கோயிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்துகொண்டிருந்தார் அந்த மந்திரி. சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே மந்திரியை அழைத்து, தில்லையாடி கோயிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான். மந்திரி மறுத்தார்.

சரணடைந்தால்... சங்கடங்கள் இல்லை

அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன், தன்னுடைய வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சித்தான். அப்போது பேரொளியுடன் அமைச்சருக்குக் காட்சி தந்தார் ஈஸ்வரன். ஆனால், அந்த திவ்விய தரிசனத்தைக் காண இயலாதவாறு மன்னனின் பார்வை பறிபோனது. தனது தவற்றை உணர்ந்த அரசன் கதறினான். இந்தத் தலத்துக்கு ஓடோடி வந்து, ஈஸ்வரனைச் சரணடைந்து, அவரை பூஜித்து வழிபட்டு, மீண்டும் பார்வை கிடைக்கப்பெற்றான். இதனால், இந்தத் தலத்தின் சிவனார், ஸ்ரீசரணாகரட்சகர் (சார்ந்தாரைக் காத்த ஸ்வாமி) என்று திருப்பெயர் பெற்றாராம். அற்புதமான இந்தக் கதையை விவரிக்கும் தலபுராணம், இந்த ஆலயத்தின் பழைமை சுமார் 5000 வருடங்களுக்கும் மேல் என்கிறது.

சரணடைந்தால்... சங்கடங்கள் இல்லை

சித்திரை வருடப்பிறப்பு துவங்கி மாதந்திர விசேஷங்கள் அனைத்தும் இங்கே சிறப்புற நடைபெறுகின்றன. ஆடிப்பூரத்தன்று சந்தானபரமேஸ்வரி ஹோமத்தில் கலந்துகொண்டு அம்பாளுக்கு வளையல் சார்த்தியும், அவளின் சந்நிதியில் தொட்டில் கட்டியும் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதேபோன்று புரட்டாசி நவராத்திரியின்போது, அம்பாளுக்கு ராஜேஸ்வரி அலங்காரம் செய்து வழிபட, திருமணத் தடைகள் நீங்குமாம். சோமவார (திங்கட்கிழமைகளில்) நாளில் 108 சங்காபிஷேகம், கார்த்திகையில் முருகன் வீதியுலா, மார்கழி பஞ்சமூர்த்தி வீதியுலா, மாசி உற்ஸவம் ஆகிய வைபவங்களும் இங்கே விசேஷம். அதே போன்று பங்குனி உத்திரத் திருநாளில்... 21 தட்டுகளில் பூ, பழம், சேலை- வேட்டி என வரிசை வைத்து, ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் நடைபெறும் திருக்கல்யாணத்தைக் காணக் கண்ணிரண்டு போதாது. மணப்பேறு வாய்க்கவும், மாங்கல்ய பலம் ஸித்திக்கவும் அவசியம் தரிசிக்க வேண்டிய வைபவம் இது!

- மா.நந்தினி
படங்கள்: ந.வசந்தகுமார்

தில்லையாடியில் தெய்வப் பிரார்த்தனைகள்...

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், திருமணம் ஆகாத பெண்களும் இங்கு வந்து ஸ்வாமி- அம்பாளுக்குத் தாமரை மலர் சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றி வழிபட, வேண்டியது நிறைவேறும்.

அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் நடுவே சந்நிதி கொண்டிருக்கும் சனி பகவானுக்கு ருத்ரஹோமம்- அபிஷேகம் செய்வது விசேஷம். மேலும், நீல நிற சங்குபுஷ்ப மாலை சார்த்தி, 18 எள் தீபங்கள் ஏற்றி வைத்து, தொடர்ந்து 9 வாரங்கள் இவரை வழிபட்டால், சகல பிரச்னைகளும் கண் தொடர்பான நோய்களும் நீங்கும்.

ஸ்ரீசங்கர நாராயணர், கங்கா விசர்ஜன மூர்த்தி, தேவியர் சமேதராக மூன்று சந்நிதிகள் கொண்டிருக்கும் முருகப் பெருமான் மற்றும் அஷ்ட விநாயகர்களைத் தரிசிக்க, இன்னல்கள் யாவும் நீங்கும்.