நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வணிகர்களின் தெய்வம்!

பங்குனி உத்திர தரிசனம்!

வணிகர்களின் தெய்வம்!
##~##
கு
ம்பகோணம் - தஞ்சை சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீஆனந்த நிதியாம்பிகை சமேத ஸ்ரீஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆலயம். அடியவர்களுக்குத் தேவையான அருட்செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் ஸ்ரீநிதியாம்பிகை வாரி வழங்க, பக்தர்களின் தொழில் பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு தரும் ஈஸ்வரனாக அருள்கிறார் ஸ்ரீவிஸ்வநாதர்.

'புராதனமானதும் புராணச் சிறப்புகள் நிறைந்ததுமான இந்தத் திருக்கோயில், தூமகேது முனிவரால் வழிபடப்பட்டது’ எனப் போற்றுகிறார்கள் உள்ளூர் பக்தர்கள். அதுமட்டுமா? கும்பகோணத்தைச் சுற்றியுள்ள வணிகப் பெருமக்கள், விசேஷ தினங்களில் இந்தக் கோயிலில் குழுமிவிடுகிறார்கள். குறிப்பாக, அமாவாசை முதலான புண்ணிய தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து, ஸ்வாமி- அம்பாளை வழிபட்டு, பிள்ளையார் சுழி போட்டுத் தங்களின் புதுக்கணக்கைத் தொடங்கினால் அந்த வருடம் அமோக லாபம்தான் என்பது அவர்களின் நம்பிக்கை! சுமங்கலிகளும் கன்னிப் பெண்களும் செவ்வாய்- வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து, ஆனந்த நிதியாம்பிகையை மனதார வழிபட்டு, தங்களின் வாழ்வு செழிக்க வரம் வாங்கிச் செல்கிறார்கள்.

வணிகர்களின் தெய்வம்!

இங்கே, பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது பங்குனி உற்ஸவம். குதிரை வாகனம், யானை வாகனம், இந்திர வாகனம், பூத வாகனம், யாளி வாகனம், பாம்பு வாகனம்... என ஒவ்வொரு நாளும் விதவிதமான வாகனங்களில் வீதியுலா வரும் ஸ்வாமியைத் தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சி! குறிப்பாக 5-ஆம் நாளன்று ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்தை வலம் வருவதும், அப்போது நடைபெறும் பூஜையும் விசேஷம்! அதாவது, ஸ்ரீஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஸ்ரீஆதிகும்பேஸ்வரரை பூஜிப்பதை... ஈஸ்வரன் தன்னைத்தானே பூஜிக்கும் சிறப்பு நிகழ்வாகப் போற்றுவர். 7-ஆம் நாளன்று ஸ்வாமிக்குத் திருக்கல்யாணம். இந்த வைபவத்தில் கலந்துகொண்டு ஸ்வாமியைத் தரிசிக்க, கல்யாண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். 8-ஆம் நாளன்று முத்துப்பல்லக்கு.

பங்குனி உத்திரத்தன்று காலையில், கோயிலில் சிறப்பு ஹோம வழிபாடுகளும், அதைத் தொடர்ந்து மகாமகக் குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறும். அன்று ஏராளமான பக்தர்கள் திருக்குளத்தில் நீராடி வழிபடுவர். இதனால் ஏழேழு ஜென்ம பாவங்களும் விலகுமாம். அன்று மாலை, ஸ்வாமி- அம்பாள் வீதியுலா நடைபெறும்.

வணிகர்களின் தெய்வம்!

இந்தக் கோயிலில் மேற்கு நோக்கிய சூரியன் (தனிச் சந்நிதி), வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, நவக்கிரகங்கள், சேக்கிழார், நால்வர் பெருமக்கள், மங்கையர்க்கரசியார் ஆகியோரையும் தரிசிக்கலாம். இங்கே சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு, ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட, திருமணத் தடை நீங்கும். வியாழக்கிழமைகளில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சார்த்தி வழிபட, கல்வி ஞானம் பெருகும்; குரு யோகம் கைகூடும். இந்தக் கோயிலில் ஸ்ரீகுரு பகவானுக்கும் ஸ்ரீசனைச்சரருக்கும் நடுவில் ஸ்ரீபைரவர் அருள்பாலிப்பது விசேஷ அம்சம். தொடர்ந்து ஐந்து வாரங்கள்... இவருக்குச் செவ்வரளி பூக்கள் சார்த்தி, வடைமாலை அணிவித்து, 21 தீபங்கள் ஏற்றி வழிபட, ஜாதகம் தொடர்பான பிரச்னைகள் தீருமாம்.

- மா.நந்தினி
படங்கள்: ந.வசந்தகுமார்