நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

செந்தில் நாதனை பணிந்திட... செவ்வாய் தோஷம் விலகிடும்!

செந்தில் நாதனை பணிந்திட... செவ்வாய் தோஷம் விலகிடும்!

செந்தில் நாதனை பணிந்திட... செவ்வாய் தோஷம் விலகிடும்!

புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது தேனிமலை கிராமம். புதுக்கோட்டை தொண்டமான் அரச குடும்பத்தாரால் கட்டப்பட்ட அழகிய முருகன் கோயில் இங்குதான் உள்ளது.

சிறிய கிராமத்தில், சிறியதொரு மலையில் இருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளும் பொருளும் தந்துகொண்டிருக்கிறார் முருகப் பெருமான். இந்தத் தலத்தில் இவரின் திருநாமம் - ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி.

##~##
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும் பெண்களும்  தொடர்ந்து ஏழு செவ்வாய்க் கிழமைகளில், ஓரை காலத்தில் இங்கு வந்து, ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமியை வழிபட்டு, மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும் என்கின்றனர் பக்தர்கள்.

பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல் முதலான பல ஊர்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள், காவடி எடுத்தும் பால் குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.  

மலையடிவாரத்தில், சுனை ஒன்றும் உள்ளது. இதனை சரவணப் பொய்கை தீர்த்தம் என்பார்கள். இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்; சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்!

மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர நாளில், முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்!  

தவிர, குழந்தைகள் ஆரோக்கியமாகவும் ஞானத்துடனும் திகழ, ஸ்ரீசுப்ரமணியருக்கு குழந்தையைத் தத்துக் கொடுக்கும் வழக்கமும் இங்கு உண்டு.

- பெ.தேவராஜ்
படங்கள்: செ.சிவபாலன்