Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Published:Updated:
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
##~##
'த
க்ஷிண கங்கா காவேரி’ என்று காவிரியின் சிறப்பை, முதலாம் ஆதித்ய சோழனின் திருச்செந்துறைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. வளம் தரும் காவிரி நாடு, பொன்னி நாடு என்றும் அழைக்கப் பட்டது. காவிரி முக்கோண வடிவில் கடலோடு கலக்கும் பகுதியை, 'டெல்டா’ என்று குறிப்பிடுவர். வடமொழியில் இதனைக் 'கோண மண்டலம் என்பார்கள். சோழ தேசம் முக்கோண வடிவில் ஒரு குடம் போன்று அமைந்து, அந்தக் குடத்தின் மூக்கு (நுனியில்) பகுதியில் உள்ள நகரம் குடமூக்கு என்று பெயர் பெற்றது.  அப்படி குடமூக்கு, குடந்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், 13-ம் நூற்றாண்டில்- விஜயநகர அரசர்கள் காலத்தில் கும்பகோணம் என அழைக்கப்படலாயிற்று.

இந்தத் திருநகர் கோயில்கள் நிறைந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகப் பெருவிழா உலகப் புகழ் பெற்றது. தேவார மூவராலும் ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற பல கோயில்கள் இங்கு உண்டு. அவற்றுள், 'குடந்தை கீழ்க் கோட்டத்து எம் கூத்தனாரே’ என திருநாவுக்கரசர் போற்றிப் பரவிய திருக்கோயில், அருள்மிகு நாகேஸ்வரர் ஆலயம். இப்படி அவர் இந்தக் கோயிலைத் தரிசித்து பாடிய  643-ம் ஆண்டில் ஒரு மகாமகம் நடைபெற்றுள்ளது!

தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை
சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க்
கோவியடு குமரி வரும் தீர்த்தம் சூழ்ந்த
குடந்தை கீழ்க் கோட்டத்து எம்கூத்தனாரே

- என்று இதனைப் போற்றுகிறார்!

காஷ்மீரில் (ஜம்முவில்) உள்ள தாவி நதி முதல் யமுனை, கங்கை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, குமரி என்று அனைத்து நதிகளும் வந்து கூடுகின்ற பெருமை பெற்றது மகாமக தீர்த்தம்.

குரு சிம்ம ராசியில் இருக்கும் தருணத்தில், மாசி மாதம் மக நட்சத்திரத்தில் பௌர்ணமி அன்று இந்த நதிகள் அனைத்தும் மகாமக தீர்த்தத்தில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்வதற்கு, சிவபெருமான் அருள்கிறார் என்று கும்பகோண மஹாத்மியம் கூறுகிறது.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

இத்தகு புகழ்பெற்ற கும்பகோணத்தில் 7-ம் நூற்றாண்டில், செங்கல் கட்டுமானத்துடன் திகழ்ந்தது ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம். 9-ம் நூற்றாண்டில் இதை கற்றளியாக (கற்கோயிலாக) ஆதித்த சோழன் மாற்றினான். இந்தக் கோயிலின் கருவறை, விமானம், அர்த்த மண்டபம் ஆகிய அங்கங்கள் அனைத்தும் ஆதித்த சோழன் காலத்து கட்டடக் கலையை வெளிப்படுத்துகின்றன. இவ்வளவு சிறப்புகளுடன் திகழும் ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயத்தில் அருளும் கணபதியும் வரலாற்று சிறப்பு மிக்கவரே! இவரை கங்கை கணபதி என்பார்கள்!

சோழப் பேரரசர்களில் புகழ்பெற்றவன் மாமன்னன் ராஜ ராஜ சோழன் (985-1014).  தமிழனின் மறமும் பண்பாடும் கடல் கடந்து சென்று மக்கள் கருத்தைக் கவர வழிசெய்த சோழ வேந்தன். தஞ்சையில் அவன் எடுப்பித்த மாபெரும் கற்றளியான பெருவுடையார் கோயில், காலத்தால் அழியாத அவனது கலைப் படைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ராஜராஜனின் வீரமும், சமயப் பற்றும், நிர்வாகத் திறனும் குறிப்பிடத்தக்கவை.

அவனது மகன் முதலாம் ராஜேந்திரன் (1012-1046) தந்தையைப் போலவே போர்க்கலையிலும், ஆட்சிக் கலையிலும், சமயப் பணியிலும் முதன்மை பெற்றுத் திகழ்ந்தவன். தனது மாபெரும் கடற் படையால் சிங்களம், சுமத்ரா போன்ற பகுதிகளை வென்றவன். வடநாட்டின் மீதான படையெடுப்புகளிலும் வாகை சூடியவன். இன்றைய பீகார், வங்காளம் முதலிய பகுதிகளை அப்போது ஆண்ட பாலர் வம்சத்து (றிகிலிகி ஞிசீழிகிஷிஜிசீ) முதலாம் மகிபாலன் என்ற அரசனையும் வென்றான். அப்படி, கங்கைக்குத் தென்புறம் உள்ள அந்த நாட்டை வென்று வரும்போது, குடம் குடமாகக் கங்கை நீரைக் கொண்டு வந்தான். 'சோழ கங்கை’ என்ற ஏரியை வெட்டி அதில் கங்கை நீரைச் சொரிந்து, 'கங்காஜல மயம் ஜய ஸ்தம்பம்’ என்று அதைப் பாராட்டி, தனது வெற்றிக்கு விழா கொண்டாடினான். இந்த வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரை நிர்மாணித்து, அங்கே தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் போன்று மாபெரும் கோயிலையும் எடுப்பித் தான்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

இவ்வாறு ராஜேந்திரன் தனது வெற்றியின் நினைவாக தமிழகத்துக்கு கொண்டுவந்த பல்வேறு செல்வங்களில்- சிற்பங்களில்... கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயத்தில் அருளும் கங்கை கணபதியும் குறிப்பிடத் தக்கவர். இந்த கணபதியின் திருவடிவம் வங்காளப் பகுதியை ஆண்ட முதலாம் மகிபாலனது (பாலர் காலத்து) கலைப் படைப்பு. ஏறக்குறைய 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

மலர்ந்த தாமரையைப் பீடமாகக் (பத்ம பீடமாக) கொண்டு 4 கரங்களுடன், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் இந்த கணபதி. முன் வலது கையில் தந்தத்தையும்;  இடக்கை- இனிப்பு உருண்டைகள் (லட்டு) நிறைந்த தட்டையும் தாங்கி நிற்கிறது. இடம்புரியாக (இடது பக்கமாக) வளைந்த துதிக்கை, இனிப்பு உருண்டையைப் பற்றி உள்ளது. பின் வலது கை அட்சமாலையும்; இடது கை கதாயுதத்தையும் ஏந்தியுள்ளது. உதரபந்தத்தில் நாகம். விநாயகரின் காலடியில் இருபுறமும் இருவர் பலாப்பழத்தைத் தாங்கியுள்ளனர். கணபதியின் வலக் காலின் முன்புறம் மூஷிக வாகனம்; தலையை மேலே தூக்கிய நிலையில் காட்சியளிக்கிறது!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

இந்த விநாயகர் திருவடிவத்துக்கு பின்னே வேலைப்பாடு மிக்க கல் திருவாசி இணைக்கப்பட்டுள்ளது. அதன் பக்கங்களில் இரண்டு யானைத் தலைகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றின் துதிக்கைகள் அமுத கலசத்தைத் தாங்கி நிற்கின்றன. திருவாசியின் பக்கங்களையட்டி, கந்தர்வர்கள் இருவர் பூக்குடலை ஏந்தி பூச்சொரிகின்றனர். மேலே இரண்டு புறமும்... மேகக்கூட்டத்தின் நடுவே மாலை ஏந்தியபடி கந்தர்வர்கள் இருவர் விண்ணில் மிதந்து வருவது போன்று காட்சி தருகின்றனர். கந்தர்வ கன்னிகளும் அவர்கள் மீது அமர்ந்து பவனி வருவது அழகு!

திருவாசியின் மேல் முனையில் சிம்ம முகம் காட்டப்பட்டுள்ளது. வழுவழுப்பான கறுப்பு கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த கணபதி, மிக அற்புதமான கலைப்படைப்பாகத் திகழ்கிறார்.

கங்கை பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதால், 'ஸ்ரீகங்கை கணபதி’ என்று பெயர் பெற்ற இந்த பிள்ளையாரை, ஸ்ரீநாகேஸ் வரர் கோயில் மூலஸ்தானத்துக்கு முன்பு உள்ள முகமண்டபத்தில், தெற்கு மூலையில் உள்ள சிறு சந்நிதியில் தரிசிக்கலாம்.

விநாயகப் பெருமான் கங்கையுடனும் காவிரியுடனும் மிகுந்த தொடர்பு உடையவர். வட இந்தியாவில் இவரை கங்கையின் மைந்தன் எனக் கொண்டாடுவார்கள். தென்னாட்டில்... கரவேரனின் புதல்வியாகிய காவிரியைக் கொண்டு வந்த அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து நதியாக ஓடவிட்டவர் விநாயகர். அதனால் அவரை காவிரி தந்த விநாயகர் என்று போற்றுகிறோம்.

ஸ்ரீபால விநாயகராக லட்டுவை எடுத்து உண்ணும் கோலத்தில், வடநாட்டுப் பாணியில் அமைந்த கலைச் செல்வமான இந்த விநாயகரின் திருக்கோலத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்; அவ்வளவு அழகு! இவரை வழிபட, கங்கையிலும் காவிரியிலும் நீராடிய புண்ணியமும் செல்வச் செழிப்பும் உண்டாகும் என்பது நம்பிக்கை!

- பிள்ளையார் வருவார்...
  படங்கள்: இ.ராஜவிபீஷிகா

பிள்ளை வரம் தரும் பிரசாதம்!

தென்னாடுடைய சிவபெருமானுக்கு பிள்ளைக் கறி சமைத்துக் கொடுத்தவர் சிறுத்தொண்டர். சிவனடியாராக வந்த சிவபெருமானின் அருளால் அவரின் மகன் சீராளன் உயிர் பெற்றான்; அடியாரின் பெருமையை அகிலம் அறிந்தது.

இந்த நிகழ்ச்சியே பிள்ளைக்கறி அமுது படைத்த விழாவாக, திருவாரூர் மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உருத்திர பசுபதீஸ்வரர் கோயிலில், சித்திரை பரணி நட்சத்திரத்தில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தேங்காய்த் துருவலை வறுத்து அதனுடன் 63 மூலிகைகளைச் சேர்த்து கறி தயாரிக்கின்றனர். இதை சுவாமிக்குப் படைத்து பிரசாதமாகத் தருகின்றனர். குழந்தை இல்லாதவர்கள், இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட விரைவில் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது   நம்பிக்கை.

- அபர்ணா சுப்ரமணியம், சென்னை-4