மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்
கேள்வி-பதில்

பூஜை முடிந்ததும் திருவிளக்கு தீபம் எவ்வளவு நேரம் சுடர்விட வேண்டும். எண்ணெய் தீரும் வரை சுடர்விட்டு, பிறகு தானாக அணைய விடலாமா?

- ஆர்.மீனா ரவிசங்கர், சென்னை-33

கேள்வி-பதில்

அதிகாலை ஐந்தரை மணிக்கே பளபளவென விடிந்துவிட்டால், மின் விளக்கை அணைத்துவிடுவோம். ஆறரை மணிக்குத் தாமதமாக விடியும்போது, அதுவரைக்கும் மின்விளக்கு எரியும். தேவை இருக்கும்போது சேவை தொடர்வது பொருந்தும்.

கருவறையில் அலங்கார தீபம் காட்டியதும் அதை அணைத்து விடுவார்கள். பஞ்சமுக தீபம், கும்ப தீபம் போன்றவற்றையும் வேலை முடிந்ததும் அணைத்துவிடுவார்கள். பூஜை முடிந்ததும் திருவிளக்கை அணைக்கலாம். தர்சனார்த்திகள் வந்துகொண்டிருந்தால், அவர்களுக் காக திருவிளக்கு எரிந்துகொண்டிருக்க வேண்டும்.

வீட்டு பூஜையின்போது... அந்த பூஜை முடிந்ததும் அணைத்து விடலாம். விளக்கைத் தானாக அணையவிடக்கூடாது. படுத்திரி எரிதல் அபசகுனம். அணையும் விளக்கு அதீத சுடருடன் எரிவதை சாஸ்திரம் ஏற்காது. விளக்கை இறை வடிவமாகப் பார்க்கும் நாம் உபசாரத்துடன் அணைக்க வேண்டும். அணைப்பதற்கு முன் குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை அளித்து அணைக்க வேண்டும். தானாகவே அணைய விடுவது அபசாரமாகும். வெளிச்சத்துக்காக மட்டும் நாம் தீபம் ஏற்றுவதில்லை. நாம் செய்யும் சடங்குகளுக்குச் சாட்சியாக விளக்கை எண்ணுவோம். விளக்கை வழிபடுவது பண்பின் அடையாளம்.

கேள்வி-பதில்

கோயில்களில் அர்ச்சனைக்குக் கொடுக்கும்போது, நமது கோத்திரம், நட்சத்திரம், பெயரைச் சொல்வது வழக்கம். ஆனால் சிலர் ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொல்கிறார்களே... இப்படிச் செய்யலாமா?

ஆலயத்தில் அர்ச்சனை செய்யும்போது கடவுள் பெயருக்கு செய்யக்கூடாது என்கிறார்களே, ஏன்?

- கலாவதி, விராலிமலை,
- ஆர்.சேதுராமன்,
திருவள்ளூர்

##~##
கோத்திரம், நட்சத்திரம், பெயர்... இதெல்லாம் பிறந்தவர்களுக்குத்தான் உண்டு; பிறவாத இறைவனுக்கு இல்லை. அவனை அடிபணியும் வேளையில், அவனுக்குப் பெயர் சூட்டி, நாம் நெருங்க வேண்டிய இடத்தை அடையாளம் காண்கிறோம். உருவம் இல்லாதவனில் இணைவதற்கு உருவத்தையும் பெயரையும் குறிப்பிட்டு அவனை வழிபடுவோம்.

வழிபாடு என்று வரும்போது உருவம், பெயர் தேவைப்படுகிறது. நம் மனம் அவரைப் பதிவு செய்ய உருவம் வேண்டும். அவனை நினைவில் நிறுத்தவும், மனதில் அசைபோடவும் பெயர் வேண்டும். மனம் இறைவனிடம் ஒன்றிய நிலையில், நாம் சொன்ன பெயரும் உருவமும் மறைந்துவிடும். அப்போது ஆனந்தத்தையே மனம் உணரும்.

பணிவிடை செய்யும் நம்மை இணைக்க கோத்திரமும், நட்சத்திரமும் பெயரும் வேண்டும். நாம் பிறந்த நீண்டகால வம்ச பரம்பரையை, கோத்திரம் சொல்லும். நாம் பிறந்த வம்சத்தில் எத்தனை தலைமுறை தொடர்ந்து வந்திருக்கிறது என்று நம்மால் யூகிக்க முடியாது. ஆனால், நமது வம்சத்தில் முதல்வன் யார் என்று தெரியும். அதுதான் கோத்திரம். நாம் பிறந்த வேளையை சுட்டிக்காட்டுவது நட்சத்திரம். கருவறையில் இருந்து வெளிவரும் தருணத்தில், தேசத்தோடு இணைந்த நட்சத்திரமானது, பிறந்த வேளையைச் சுட்டிக்காட்டும்.

அலுவல்களில் ஈடுபட்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய, அதாவது தன்னை அதில் இணைத்துக் கொள்ள பெயர் உதவுகிறது. தற்போதும் ஆளை அறிமுகம் செய்யும் தருணத்தில், 'பெயர் என்ன?’ என்றுதான் கேள்வி எழும். தேசம், பட்டணம், ஜில்லா, தாலுகா, ஊர், தெரு, வீட்டின் எண், பெயர் - இப்படி விரிவாக விளக்கம் அளிக்காவிட்டால் 'விலாசம்’ இல்லாதவனாகக் கருதுவார்கள்.

செயல்படுபவன், உரிமையைப் பெறுபவன் இருவரின் விலாசமும் இல்லை என்றால், இரண்டும் நழுவிவிடும். உரிமை பறிபோன நாம் இறைவனிடம் மன்றாடுகிறோம். அதன் நடைமுறைதான் அர்ச்சனை. அங்கு நமது விலாசம் நிச்சயமாக வேண்டும். இறைவன் எதிரில் இருப்பான். அவனுக்கு நம்மைப்போல் விலாசம் தேவை இல்லை. எல்லா உயிரினங்களிலும் ஊடுருவியிருப்பவனுக்குத் தனி விலாசம் இருக்காது. அவன் பெருமைக்குப் பெருமை சேர்க்க நாம் அர்ச்சனை செய்வது சிறுபிள்ளைத்தனம். நிறைவை எட்டியவனுக்கு நாம் பெருமை சேர்க்க இயலாது. அவாப்தஸமஸ்தகாமனுக்கு உரிமையைப் பெற வேண்டிய தருணம் முளைக்காது.

ஆசையில் கட்டுண்ட நமக்குத் தேவைகள் ஏராளம். எதையும் முயற்சி செய்து அடைவதில் நமக்குச் சுணக்கம். உடல் நோகாமல் - உள் ளம் வாடாமல், நுனிப்புல் மேய்ந்து, பெரும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முற்படும் நம் மனம்.

கோத்திரம், நட்சத்திரம், பெயர் ஆகியவற்றைச் சொல்லி அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். நாம் இன்னும் வியாபார நோக்கில் பக்தியை ஏற்கிறோம். பக்திக் கல்வி யில் எல்.கே.ஜி-யில் அடித்தட்டில் இருக்கிறோம். வாமனர், த்ரிவிக்ரம னாக வளர்ந்தது போன்று நமக்கு பக்தி வளராது. ஆசையும், வியாபார நோக்கும் அழிந்த பிறகே யு.கே.ஜி-க்கு வருவோம். அதுவரை, பெயரைச் சொல்லி வழிபடுங்கள். காலப்போக்கில் தங்களது பெயர் உலக அங்கீகாரத்தை அளிக்கும். செயல்பட்டுத்தான் உரிமையைப் பெற வேண்டும் என்கிற எண்ணம் வளர்ந்தால், தேவை இல்லாத சந்தேகங்கள் முளைக்காது.

கேள்வி-பதில்

எங்கள் ஊரில் ஐயனார் கோயிலில் முந்தைய கும்பாபிஷேகத் தின்போது, போதுமான இடவசதி இருந்ததால், கோயிலுக்கு முன்னே இடப்புறமாக யாகசாலை அமைத்தோம். தற்போது அந்த இடத்தில் ஐயனார் குதிரை (சிலை) வைக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகள் கழித்து அடுத்த கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யாக சாலையை கோயிலுக்கு வலப்புறம் உள்ள இடத்தில் அமைக்கலாமா? இந்தக் கோயிலில் துவாரபாலகர் கிடையாது. தற்போது திருப்பணியில் துவாரபாலகர் சிலைகள் புதிதாக அமைக்கலாமா?

- கரு.சேதுராகவன் அம்பலக்காரர், ஏ.வல்லாளப்பட்டி

யாக சாலையை கோயிலுக்கு அருகில் அமைப்பது சிறப்பு. விரும்பிய இடம் இல்லை என்றாலும், இருக்கும் இடத்தில் யாகசாலை அமைக்கலாம்.

இறை உருவத்தின் சாந்நித்தியத்தை நிலைநிறுத்தும் சடங்கு கும்பாபிஷேகம். அதை நடைமுறைப்படுத்துவதற்குப் பயன்படும் கொட்டகைகள் தற்காலிகமானவை. ஜபம், ஹோமங்கள், வழிபாடுகள் முடிந்துவிட்டால், அதை அகற்றிவிடுவோம். கட்டடம் கட்டி முடித்ததும் சாரத்தை அகற்றுவது உண்டு. ஆகையால், கும்பாபிஷேகத்தை முன்னிட்டுச் செயல்படும் யாகசாலைகளை, இருக்கும் இடத்தில் அமைக்கலாம். அங்கு வடக்கு, தெற்கு என திசைகளை ஆராய வேண்டியதில்லை.

கோயிலுக்கு வெளியே அமையும் யாகசாலைக்கு... அதுவும் நான்கு த்வாரமாக அமையும் யாகசாலைக்கு, நமது விருப்பப்படி வாசல் ஏற்கும் தகுதி இருப்பதால், சங்கடமின்றிச் செயல்படுங்கள். துவாரபாலகர்களை புதிதாக ஏற்படுத்துவதில் தவறில்லை.

'திங்கள் பயணம் திரும்பா பயணம்... ஊருக்குச் சென்றால் புறப்பட்ட நாளில் இருந்து 9-ஆம் நாள் திரும்பக்கூடாது...’ என்றெல்லாம் எங்கள் வீட்டுப் பெரியவர் கள் அறிவுறுத்துகிறார்கள். பயணம் குறித்து சாஸ்திர நியதிகள் என்ன சொல்கின்றன?

- பி.ஸ்ரீபாதராஜன், கோவை-22

துக்கம் விசாரிக்க 9-வது நாள் செல்வதில்லை. 9-ஆம் நாள் திரும்பும்போது துக்கம் விசாரிப்பதுபோல் நெருடல் ஏற்படும். 10-ஆம் நாள் துக்கத்துக்குப் போகும் நினைவும் ஒன்பதைத் தொடர்ந்து வருவதால்... அதுபோன்ற நெருடலைக் களைய, ஒன்பதைத் தவிர்த்தார்கள்.

10 நாட்களுக்குள் துக்கம் விசாரிக்காவிட்டால், துயரத்தில் ஆழ்ந்தவன் நம்மைச் சந்திக்க நேரும்போது துக்கத்தை எதிர்கொள்ள வேண்டி வரும். எதிர் துக்கம் நம்மில் நிகழுமோ என்ற நெருடல் மன அமைதியைக் குலைக்கும். அதைத் தவிர்ப்பதற்காகவும் ஒன்பதைத் தவிர்த்தார்கள்.

திங்கள், சனி - கிழக்கு சூலம்; செவ்வாய், புதன்- வடக்கு சூலம்; வியாழன்- தெற்கு சூலம்; வெள்ளி, ஞாயிறு - மேற்கு சூலம். சூலத்தில் பயணத்தைத் தவிர்ப்பது உண்டு. திங்கட்கிழமைகளில் கிழக்கில் பயணம் மேற்கொண்டால், தவற்றைச் சுட்டிக்காட்ட, 'திங்கள் பயணம் திரும்பா பயணம்’ என்பார்கள்.

சுமங்கலிகள் வெள்ளிக்கிழமைகளில் பயணம் மேற்கொள்ள மாட்டார்கள். செவ்வாயில் பயணம் முடிந்து வீடு ஏற மாட்டார்கள். சுமங்கலிகளை அலைமகளாகப் பார்ப்போம். அவள் வீட்டை விட்டு வெள்ளிக்கிழமையில் வெளியேறுவதை, அலைமகளே வீட்டைவிட்டு வெளியேறியதாக எண்ணம் மேலிட்டு நெருடல் வந்துவிடும். சனியும் செவ்வாயும் நல்ல காரியங்களுக்கு உகந்ததல்ல என்கிறது ஜோதிடம் (குஜதினமனிஷ்டமிதி...).  வீடு ஏறும்போது செவ்வாயைத் தவிர்த்தார்கள்.

ஆனால், பயணம் மேற்கொண்டு வேறு இடங்களில் ஓர் இரவு தங்கிவிட்டால், 9-என்ற எண்ணிக்கை அடிபட்டுவிடும்; ஒரே இடத்தில் 8 நாட்கள் தங்கும் விஷயத்தில் 9-ஆம் நாள் தவறாக மாறும். அவசர காலங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தால். இந்த நியமங்கள் அடிப்பட்டுவிடும். கிளம்புவதற்கு முன் 'ஆபதாம் அபஹர்த்தாரம்...’ என்கிற செய்யுளைச் சொல்லி தெய்வத்தை வணங்கிச் செல்லலாம்.

நெடுந்தூரம் பயணம் மேற்கொள்பவர், அருகில் இருக்கும் கோயிலில் தெய்வத்தை வணங்கிச் செல்லலாம். பிள்ளையாருக்குச் சிதறு தேங்காய் அளித்துச் செல்லலாம். கோயில் வாசல் சாத்தியிருந்தாலும், வெளியிலிருந்தபடியே உள்ளேயிருக்கும் இறைவனை மனதில் நினைத்து, பிறகு பயணம் மேற்கொள்ளலாம். பயணத்திலிருந்து திரும்பியவன் வழியில் ஆற்றிலோ குளத்திலோ நீராடிவிட்டு, ஈரத் துணியுடன் வீடு ஏறக் கூடாது. மயானத்திலிருந்து திரும்பியவனும் நீராடி வீடேறுவான். அந்த நினைவு மன நெருடலை உண்டுபண்ணும்.

அவசர நிலை, பயணம் மேற்கொண்டே ஆக வேண்டும் என்று இருந்தால், கடவுளை வணங்கிச் செயல்படலாம். வரும்போதும் அது பொருந்தும். 9-ஆம் நாளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நல்ல நாள் கிடைக்கவில்லை, ஆனால் பயணம் அவசியம் எனில், பரஸ்தானம் புறப்பட்டு பிறகு பயணம் தொடரலாம். அதாவது பயணத்துக்கு முதல் நாளில், வேறோர் இடத்தில் தங்கிவிட்டுச் செல்லலாம்.

எதிர்பாராத விளைவுகள் பயணத்தில் தென்பட அவகாசம் உண்டு. நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், அது நம்மை ஆட்கொண்டு விடும். அதைத் தவிர்க்க, கடவுள் வழிபாடு சிறந்தது. திருமணத்தில் காசி யாத்திரை கிளம்பிய மாப்பிள்ளை, கோயில் சென்று வணங்கிய பிறகு சிதறுகாய் அளித்து மணமகளை ஏற்க வருவான். சம்பந்திகள் திருமண மண்டபத்துக்கு விஜயம் செய்யும் வேளையில், மங்கலப் பொருள்களோடு வாத்தியத்தோடு இணைந்த வரவேற்பில் அவர்கள் மனம் மகிழ்ச்சி அடைவதால்... அதுவே நம்பிக்கையை வளர்த்துவிடும்.

பயணம் மேற்கொண்டவனை வழியனுப்புவது உண்டு. பயணத்தில் நீர்நிலைகள் தென்படும் வரை பின்தொடர்ந்து செல்வார்கள். அது அவர்களுடைய

பயணத்தில் உற்சாகம் ஊட்டும். கிராமத்தின் எல்லை நீர்நிலைகள். ஆகையால், எல்லை வரை வழியனுப்புவது உண்டு. இவை அத்தனையும் சம்பிரதாயங்களில் அடங்கும். மனம் சார்ந்த விஷயமாதலால், கடைப்பிடிப்பது அவசியம். மாற்று விளக்கங்களில் சிக்கித் தவிக்காதீர்கள்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்