Published:Updated:

ஒன்பதாம் திருமுறை!

ஒன்பதாம் திருமுறை!

ஒன்பதாம் திருமுறை!

ஒன்பதாம் திருமுறை!

Published:Updated:
ஒன்பதாம் திருமுறை!
ஒன்பதாம் திருமுறை!
ஒன்பதாம் திருமுறை!
##~##
ன்னிகரற்ற தெய்வத் தமிழ் மொழியில் எழுந்த நூல்கள் ஏராளம். அவற்றில் முதன்மை பெற்று காலங்களைக் கடந்து தெய்வீக நிலையில் புகழுடன் ஒளிவீசித் திகழ்வன, தேவாரமும் அதைத் தொடர்ந்தெழுந்த திருமுறை நூல்களும் ஆகும்.

இறைவனே தன் கைப்பட எழுதிய திருமுகப் பாசுரமும், திருக்கோவையாரும் திருமுறைகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பாலை நிலத்தை நெய்தலாக்கியும், இறந்தவர்களை உயிர்ப்பித்தும், நோய்களை நீக்கியும், ஊமைகளைப் பேச வைத்ததுமான இந்த நூல்கள், இன்னும் அநேக அற்புதங்களை நிகழ்த்தியவை. ஆன்மிக ஆன்றோர்களால் சிவபெருமானாகவே எண்ணிப் போற்றப்படும் பன்னிருதிருமுறை பாடல்களை பாராயணம் செய்து வந்தால், வாழ்வில் எண்ணற்ற சிறப்புகளைப் பெறலாம்.

ஒப்பற்ற பன்னிரு திருமுறைகளில்... இசைப்பாடல்களான 29 பதிகங்களும், திருப்பல்லாண்டு பதிகம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டு திகழும் 9-ஆம் திருமுறையும், அவற்றை அருளிய அடியார்கள் ஒன்பது பேர் குறித்த தகவல்களும் இதோ உங்களுக்காக!

திருமாளிகைத் தேவர்:  மாபெரும் சித்தரான திருமாளிகைத் தேவர், சிதம்பரம் நடராசர் மீது பாடிய நான்கு திருவிசைப்பாக்கள் 9-ஆம் திருமுறையில் முதலில் இடம்பெற்றுள்ளன. திருவிடைமருதூரில் சோழ அரசர்களின் தீட்சா குருவாகத் திகழ்ந்த ஐந்து கொத்தாருள் ஒருவராகிய சைவராயர் மரபில் வந்தவர் திருமாளிகைத் தேவர். இந்தப் பிரிவினர் மாளிகைமடம் எனும் இடத்தில் வீற்றிருந்ததால், மாளிகைக் காரர்கள் எனப்பட்டனர். அவர்களின் வழிவந்தவர் என்பதால், திருமாளிகைத் தேவர் என்று பெயர். போகரிடம் உபதேசமும் துறவறமும் பெற்றுத் திருவாவடுதுறைக்கு வந்து, அரச மரத்தின் கீழ் யோகம் புரிந்தார் திருமாளிகைத் தேவர்.

இவர் புரிந்த அருஞ்செயல்கள் ஏராளமாகும். திருவீழிமிழலையில் தேரை தானே ஓட வைத்தது, தன்னைக் கைது செய்ய வந்த பல்லவனின் படைகள் மீது திருவாவடுதுறை ஆலய மதிலில் இருந்த நந்திகளை உயிர் பெறச் செய்து ஏவியது, கொங்கணர் கமண்டலத்தில் என்றும் வற்றாத கங்கையை வற்றச் செய்தது, சிவ நிவேதனமாகிய பயற்றஞ் சுண்டலை மடத்து வயலில் விதைத்து, முளைத்துப் பயன் தரச் செய்தது போன்றவை முக்கியமானவை. திருவாவடுதுறை ஆதீன மடாலயத்தின் உள்ளே குரு முதல்வரான நமசிவாய மூர்த்திகளின் ஆலயத்துக்கு அருகில் இவருடைய ஆலயம் உள்ளது. இவருக்கு முன்பாக போகரின் திருவடிகள் அமைந்துள்ளன. இவர் அருளிய பதிகங்கள் ஒளிவளர் விளக்கே, உயர் கொடியாடை, உறவாகிய யோகம், இணங்கிலா ஈசன் என்று தொடங்குவதால் அந்தப் பெயர் களிலேயே குறிக்கப்படுகின்றன.

முதல் பதிகம்- தொண்டனாகிய தன்னை ஏற்கும்படி வேண்டுகிறது. 2-வது பதிகம்- சிவபெருமானின் பாதம், கணைக்கால், இடை என்று தலை வரையிலும் ஒவ்வொன்றாகத் தன் மனத்துள் புகுந்ததைக் குறிக்கிறது. 3-வது பதிகத்தின் பாடல்கள்- பெருமான் மகேந்திர மலையில் வீற்றிருப்பதைக் குறிக்கிறது. 4-ஆம் பதிகம்- தில்லைப் பெருமானுக்கு அன்பு செய்யாதவர்களைப் பேய்கள் என்று இகழ்ந்து, அவர்களுடன் தொடர்பு கொள்ளமாட்டேன் என்று கூறுகிறது.

ஒன்பதாம் திருமுறை!

சேந்தனார்:  பட்டினத்தாரின் கணக்கர். பட்டினத்தார் துறவு மேற்கொண்ட பிறகு, இவர் விறகு வெட்டிப் பிழைத்தார். இவர் அளித்த களியை உண்டு, இவர் மீதான அன்பை வெளிப்படுத்தினார் சிவனார். ஒருமுறை, சிதம்பரத்தில் ஓடாது நின்றது திருத்தேர். இவர் வந்து திருப்பல்லாண்டு பாடி, அந்தத் தேரை ஓட வைத்தார்! இவரின் மகிமையை உலகறியச் செய்ய, ஈசன் நிகழ்த்திய அற்புதம் அது!

'மன்னுகதில்லை’ என்று தொடங்கிச் சிவ பெருமானுக்கு பல்லாண்டு கூறும் இந்தப் பதிகம் 13 பாடல்களைக் கொண்டது. சிவாலயங்களில் தேரோட்டத்துக்கு முன்பாக 'திருப்பல்லாண்டு’ ஓதும் வழக்கம் பல ஆலயங்களில் உள்ளது.

இவர் அருளிய இசைப்பா மூன்றாகும். முதல் பதிகம்- திருவீழிமிழலை இறைவனைப் பாடுகிறது. 2-வது திருவாவடுதுறை இறைவனைப் போற்றுவது; காதல் கொண்ட தலைவி, தலைவனை நினைத்துப் பாடுவதாக அமைந்துள்ளது. 3-ஆம் பதிகம்- திருவிடைக்கழி முருகன் மீது பாடப்பட்டது.

கருவூர்த் தேவர்:  சித்தர் மரபில் வந்த கருவூர்த் தேவர், ராஜ ராஜ சோழனுக்கு குருவாக விளங்கியவர். கொங்குநாட்டுக் கருவூரில் தோன்றியவர். சிவனருளால் ஆற்றில் பொங்கிப் பெருகும் நீரின் மீது நடந்தவர். அகத்தியரின் அருள்பெற்றவர். தஞ்சையில் பெரியகோயில் எழுப்பியபோது, ஸ்ரீபெருவுடையாரின் அஷ்டபந்தனம் பொருந்த வில்லை; அப்போது, அதைக் கட்டி நிறுத்தியவர் இவர்தான். கருவூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் ஆலயத்திலும், தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலும் இவருக்குத் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இவர் அருளிய திருவிசைப்பா பதிகங்கள் பத்து. 'கணம் விரி’ எனத் தொடங்கும் முதல் பதிகம்- சிதம்பரம் நடராஜரைப் போற்றுகிறது. இதில் சிதம்பரத்தின் வளம் சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளது. 2-வது- தஞ்சை மாவட்டத்தில், இப்போது களப்பாள் என்று அழைக்கப்படும் ஆதித்தியேச்சுரத்து இறைவன்மீது பாடப்பட்டதாகும். 3-வது பதிகம்- மன்னார்குடி- திருவாரூர் சாலையிலுள்ள, கோட் டூரின் ஒரு பகுதியான மணியம்பலத்தில்  நின்றாடும் பெருமானின் (இறைவனின்) மீது மையல் கொண்ட பெண் பாடுவதாக அமைந்துள்ளது. 4-ஆம் பதிகம்- திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில், சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள முகத்தலை எனும் தலத்தின் (தற்போது இது 'பன்னத்தெரு’ எனப்படுகிறது) இறைவனைப் பாடுகிறது. இந்தத் தலத்தின் இறைவன்- ஸ்ரீபன்னகாபரணர்; இறைவி சாந்தநாயகி.

5-ஆம் பதிகம்- கோடைத்திரைலோக்கிய சுந்தரத்தில் அருளும் இறைவன் மீது பாடப்பட்ட தாகும். ஆடுதுறை - திருப்பனந்தாள் சாலையில் துயிலிக் கோட்டூர் என்ற தலமும், அதையட்டித் திரைலோக்கி என்ற ஊரும் உள்ளன. இரண்டும் சேர்த்து, 'கோடைத் திரைலோக்கிய சுந்தரம்’ என அந்நாளில் வழங்கப்பட்டது. திரைலோக்கியில் உள்ள இறைவன், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர். 6-ஆம் பதிகம்- கங்கைகொண்ட சோழீஸ்வரர் மீது பாடப்பட்டது. 'அன்னமாய்...’ என்று தொடங்கும் இந்தப் பதிகம் 'எளிதில் வந்து பக்தனின் உள்ளத்தில் வீற்றிருந்து, எண்ணற்ற செல்வங்களை அளிக்கிறான் சிவபெருமான்’ என்று குறிக்கின்றது. 7-ஆம் பதிகம்- பாண்டி நாட்டுப் பழம்பதிகளில் ஒன்றான திருப்பூவணம் தலத்து பெருமான் மீது பாடப்பட்டது.

8-ஆம் பதிகம்- திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருச்சாட்டியக்குடி எனும் தலத்து இறைவனைப் போற்றுகிறது. இது இறை வனின் மகா அக்கினி வடிவம் பற்றி விவரிக்கிறது.

9-ஆம் பதிகம்- தஞ்சைப் பெரிய கோயில் மீது பாடப்பட்டதாகும். இதில் தஞ்சை யின் வளமும், பக்தர்களின் கசிந்த மனநிலையும் இறைவனின் அருள் திறமும் விளக்கப்பட்டுள்ளன. 10-ஆம் பதிகம் திருவிடைமருதூர் பெருமானைப் போற்றுகிறது. இதில் இறைவனின் பிட்சாடன கோலம், நள்ளிரவில் ஆடும் கோலம், இறைவன் தன்னுள் கலந்தது முதலானவற்றை விவரிக்கிறார் கருவூரார். இந்தப் பதிகத்தின் இறுதிப்பாடலில் கருவூரார் வேதம் வல்லோன் என்றும், சித்த மருந்துகள் அருந்தி அல்லல் தீர்த்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்பதாம் திருமுறை!

பூந்துருத்தி நம்பிகாடநம்பி:  தஞ்சை- திருவையாறு சாலையில் உள்ள கண்டியூருக்கு மேற்கில் அமைந்துள்ளது பூந்துருத்தி. இங்கு வசித்தவர் நம்பிகாடநம்பி. இவருடைய வரலாறு விளக்கமாகத்

தெரியவில்லை. இவருடைய பாடல்கள் மூலம் இவர் திருமுறைகளில் மிக்க பற்றுடையவர் என்பதும், தலங்கள்தோறும் சென்று வழிபட்டவர் என்பதும் தெரிகிறது. திருவாரூர் பெருமான் மீதும் தில்லைச் சிற்றம்பலத்தின் மீதுமாக திரிவிசைப்பா பாடியுள்ளார். தேவாரத்தில் இல்லாத சாரளபாணி என்ற பண்ணில் இவர் பதிகம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. கண்ணப்பர். கணம்புல்லர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரர் முதலான பல அடியவர்களைத் தன் பதிகத்தில் போற்றியுள்ளார். திருவாரூர் மீது பாடப்பட்டுள்ள கைக்குவான் எனத் தொடங்கும் பதிகத்தில், இரண்டு பாடல்களே கிடைத்துள்ளன. இரண்டும் திருவாரூர் பெருமான் திருவீதிகளில் நடம்புரிந்த அழகைப் போற்றுகின்றன. கோயிலாகிய சிதம்பரத்தின் மீது அருளப்பட்டுள்ள பதிகம், முத்து வயிரமணி என்று தொடங்குகிறது.

கண்டராதித்தர்:  சோழப் பேரரசரான கண்டராதித்தர், சிறந்த சிவபக்தர். இவரைச் சிவஞானக் கண்டராதித்தர் என்று குறிப்பிடு கிறது ஒரு கல்வெட்டு. இவரின் மனைவி செம்பியன்மாதேவியார் பல கோயில்களைக் கற்றளி ஆக்கியவர். கண்டராதித்தர் அருளிய பதிகம் ஒன்று. 'மின்னார் உருவம்’ என்ற அந்தப் பதிகம் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்கிறது.

ஒன்பதாம் திருமுறை!

வேணாட்டு அடிகள்:  திருவாங்கூருக்கு அருகிலுள்ள பகுதி வேணாடு என்று அழைக்கப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சிவத் துறவி இவர். பல திருத் தலங்களுக்குச் சென்று பாடியவர். இவரைப் பற்றிய செய்திகள் விரிவாகக் கிடைக்கவில்லை. 'துச்செனத்’ தொடங்கும் இவருடைய பாடலும் தில்லைச் சிற்றம்பலத்தையே புகழ்கிறது. ஒவ்வொரு பாடலும் 'திருத்தில்லை நடம் பயிலும் நம்பானே’ என்ற மகுடத்துடன் முடிகிறது.

திருவாலி அமுதனார்:  மயிலாடுதுறையில் வைணவ அந்தணக் குடியில் தோன்றியவர். திருவாலி என்பது சீர்காழிக்கு அருகில் உள்ள வைணவத் தலம். இங்குள்ள திருமால், அமுதன் என்று அழைக்கப்படுகின்றார். அதையட்டி இவருக்குத் திருவாலியமுதன் என்று பெயர் சூட்டப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர் மயிலாடுதுறைக்கு அரசனாக இருந்தவர், மறைகுலத்துச் செல்வர் என்பனவற்றை, இவரது பாடலால் அறிகிறோம். இவர் அருளிய நான்கு திருவிசைப்பாக்களும் தில்லைச் சிற்றம்பலம் பற்றியதேயாகும்.

'பாதாதிகேசம்’ என்னும் தலைப்பிலான முதல் பதிகத்தில் சிவபெருமானின் பாதம் தொடங்கி, ஒவ்வொரு அங்கமாகத் தன் உள்ளத்தில் புகுந்ததைக் குறித்துள்ளார். எனவே, இது பாதாதிகேசம் எனப்பட்டது. 'பவளக்குன்றம்’ எனும் 2-வது பாடல், இறைவனின் பேரழகில் வியந்து, அவன் மீது காதல் கொண்ட பெண்ணின் மன ஓட்டத்தையும் துன்பத்தையும் விளக்குகிறது; அந்தாதியாக உள்ளது. 'அல்லலாய்ப் பகலாய்’ என்று தொடங்கும் 3-ஆம் பதிகம் தில்லைப் பெருமான் ஆடும் எழிற்கூத்தை விளக்குகிறது. ஒவ்வொரு பாடலும் 'குழகன் ஆடுமே’ என்ற மகுடம் பெற்றுள்ளது. 'கோலமலர்’ என்று தொடங்கும் 4-ஆம் பதிகம் அந்தாதியாகும். இது, பெருமான் மீது காதல் கொண்ட பெண் பாடுவதாக அமைந்துள்ளது.

புருடோத்தம நம்பி: வைணவ அந்தண குலத்தில் பிறந்து சைவ நெறியில் திளைத் தவர் இவர். தம்மை 'மாசிலா மறைபல ஓது நாவன்’ என்று குறிப்பது எண்ணத்தக்கது. இவர் பாடிய பதிகங்கள் இரண்டுமே தில்லையைப் பற்றியதாகும். அந்தாதி அமைப்பிலானது. 'வாரணி’ என்று தொடங்கும் பதிகம், சிவபெருமான் மீது மையல் கொண்ட பாவை தன் வீதி வழியாக அவரை உலா வரும்படியும், தம்மை ஏற்றுக்கொள்ளும்படியும் வேண்டுவதாக அமைந்துள்ளது. 'வானவர்கள்’ எனத் தொடங் கும் 2-ஆம் பதிகமும், தலைவி சிவபெருமான் மீது காதல் கொண்டதாகவும், அவரை எண்ணி வருந்துவதாகவும் அமைகிறது.

சேதிராயர்:  இவர் சேதி நாட்டு மன்னர். திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர். இவரைப் பற்றிய விரிவான செய்திகள் தெரியவில்லை. இவர் பாடிய 'சேலுலாம்’ என்று தொடங்கும் பதிகம் சிதம்பரத்தைப் பற்றியது.

சிவபெருமான் மீது காதல் கொண்டு மயங்கி நிற்கும் பெண்ணின் தாய் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. தன் பெண்ணின் மையலை நீக்கி ஆட்கொள்ள வேண்டி இறைவனிடம் தாய் வேண்டுகிறாள். இதன் ஒவ்வொரு பாடலிலும் ஒரு புராணக் கதை இடம் பெற்றுள்ளது சிறப்பு!