Published:Updated:

கடவுள் எனும் விவசாயி!

கடவுள் எனும் விவசாயி!

கடவுள் எனும் விவசாயி!

கடவுள் எனும் விவசாயி!

Published:Updated:
கடவுள் எனும் விவசாயி!
##~##
ன்பர் ஒருவர், என்னுடைய மார்கழி மாத உபன்யாசத்துக்கு, வருடந்தோறும் வந்து கொண்டிருந்தார். தினமும் சிரத்தையாக உபன்யாசத்தைக் கேட்டு அனுபவிப்பார். ஒரு நாள், அவர் உபன்யாச மண்டபத்தில் உட்கார்ந்திருந்தாலும், அவருடைய கவனம் வேறெங்கோ இருந்தது; மிகவும் கவலையுடன் இருந்தார்.

உபன்யாசம் முடிந்தும் அங்கேயே உட்கார்ந்திருந்தார். விசாரித்தபோது, ''விரலில் அணிந்திருந்த மோதிரம் தொலைந்துவிட்டது; எங்கே விழுந்தது என்று தெரியவில்லை. நாற்பது வருடங்களுக்கு முன் திருமணத்தின்போது மாமனார் போட்ட வைர மோதிரம்! எப்போது கிடைக்குமோ என்று வருத்தமாக இருக்கிறது'' என்றார்.

அவரது கவலை நியாயமே! மோதிரத்துடன் அவருக்கு இருந்த தொடர்பு 40 வருடங்கள். அந்த மோதிரத்துக்கும் இவருடன் 40 வருடத் தொடர்பு. ஆனால், இவர் மட்டும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, தொலைந்துபோன அந்த மோதிரமோ, 'இவ்வளவு வருடங்களாக அவருடைய விரலை அலங்கரித்தேனே! இனி எப்போது மறுபடியும் அவருடைய விரலைச் சென்றடைவேனோ..?’ என்று யோசனை செய்கிறதா என்ன?!

இதே கதைதான் நம் கதையும். நாம் மோதிரம் போன்றவர்கள். நம்மை இந்த நிலவுலகில் தொலைத்துவிட்டுக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவன் பரமாத்மா. ஆனால் நாமோ அவனை லட்சியமே பண்ணாமல் உட்கார்ந்திருக்கிறோம். உடலாகிய இல்லத்தைக் கட்டிக்கொடுத்து அதிலே ஜீவாத்மாவைக் குடியேற்றி, தானும் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறான் பகவான். ஆனால் நாமோ கட்டிக் கொடுத்தவனையே மறந்து விடுகிறோம். நம்மைப் பற்றியும் சிந்திக்காமல், பரமாத்மாவைப் பற்றியும் நினைக்காமல் வாழும் நம்மை நல்வழிப்படுத்த பகவான் படாதபாடு படுகிறான். எப்படியெல்லாம் சிரமப்படுகிறான் தெரியுமா?!

கடவுள் எனும் விவசாயி!

எல்லா சாஸ்திரங்களிலும் பரம ஆசார்யனாகச் சொல்லப்பட்ட ஸ்ரீமந் நாராயணன், பிரம்மாவுக்கு வேதங்களைக் கொடுத்து, பிரம்மன் வேதத்தை தொலைத்தபோது அதை மீட்டுக் கொடுத்து, அவரின் புத்திரர்களான ஸனக, ஸனந்தன, ஸனத்குமார, சனத் சுஜாதர்கள் மூலமாக சத் சாஸ்திரங்களை உலகில் நிலைநாட்டச் செய்தான். அதுவும் போதாதபோது தானே அவதரித்து தத்வஹித புருஷார்த்தங்களை வெளியிட்டு அருளியிருக்கிறான். அதுவும் போதாதபோது, மகரிஷிகள் மூலம் நம் சம்பிரதாயத்தை குலையாதபடி நடத்தியும்,

பீஷ்மர் முதலான ஞானாதிகர்கள் மூலம் சாஸ்திரங்களை உலகில் நிலைநாட்டச் செய்தும் அருளினான். அதுவும் போதாதபோது, வியாசர் மூலமாக 18 புராணங்கள், மகாபாரதம், பிரம்ம சூத்ரங்கள் ஆகியவற்றை வெளியிட்டும், ஆகம சாஸ்திரங்களைத் தந்தும் அருளினான். அதுவும் போதாத நிலையில்... மேகங்கள், சமுத்திரத்தின் உப்பு ஜலத்தை உட்கொண்டு மழைத் தண்ணீராகப் பொழிவது போன்று,  வேதமாகிய சமுத்திரத்திலிருந்து கடினமான விஷயங்களை எல்லாம் நுகர்ந்து, ஆசார்யர்கள் மற்றும் ஆழ்வார்கள் மூலம், உலகில் திவ்ய ஸ்ரீஸ¨க்திகளாகிய மழையைப் பொழியவைத்தான்.

இப்படி, மோதிரமாகிய நம்மை தன்னுடன் சேர்த்துக்கொள்ள பரமாத்மா முயற்சிக்கும் போது, அல்ப மதி படைத்த மனிதன் பல இன்னல்களைக் கொடுக்கிறான். அந்த இன்னல்களை எல்லாம் தான் நினைத்த மாத்திரத்திலேயே தவிடு பொடியாக்கிவிடும் சக்தியைப் பெற்றிருந்தாலும், பரமாத்மா ஒரு தாயைப்போல அளவு கடந்த பொறுமையுடன் நம்முடைய அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுகிறான்.

பரமாத்மாவை விவசாயி என்கிறது உபநிஷத். விவசாயி ஒருவன் நெல் விதைக்கிறான். சுற்றிலும் வேலி போடுகிறான். அது விளைந்து அறுவடைக்குத் தயாராகி நிற்கிறது. இன்னும் 10 நாளில் அறுவடை என்றால், அவன் வீட்டுக்குப் போகாமல் நிலத்துக்குப் பக்கத்தில் குடில் கட்டிக்கொண்டு, அங்கேயே வசிப்பான். அதேபோன்று பகவானும், இந்த நிலவுலகம் என்ற நிலப்பரப்பில் உயர்ந்த புண்ணியம், பாபம் என்ற வித்தை நடுகிறான்.

புண்ணியப் பயிர் வளர்கிறது; பாபப் பயிரும் வளர்கிறது. பாபமாகிய பயிர் புண்ணியத்தை அழிக்க முற்பட்டால், களையாகிய பாபத்தை அறுக்கிறான். சுற்றிலும் வேலி போட்டு ரட்சிக்கிறான். இந்த நிலத்துக்கான எருவாக (உரமாக) போடப்படுவது என்னென்ன தெரியுமா? ஆசார்யர்கள், ஆழ்வார்களின் ஸ்ரீஸ¨க்தி என்ற எருவைப் போட்டு நன்கு வளர்க்கிறான். அறுவடைக்குத் தயாராகும் போது, தானே அங்கிருந்து இறங்கி வந்து மொத்தமும் தன்னுடையது என்று அறுத்து எடுத்துக்கொண்டு போகிறான். அதற்காகவே இறங்கி வருகிறான் பரமாத்மா. இப்படி, தான் செய்யும் காரியத்தையே தினமும் தனது வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருக்கும் விவசாயியை வைத்தே, பல நாஸ்திக வாதங்களைத் தவிடுபொடியாக்குகிறான் பரமாத்மா. அதில் ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

நிகழ்காலத்தில் தோன்றக்கூடிய ஒருவர், தன்னுடைய அல்ப அறிவினால் அது எப்படி, இது எப்படி என்று நாஸ்திகக் கேள்விகள் கேட்டு விட்டு... அந்தக் கேள்வியைத் தான்தான் புதிதாகக் கேட்கிறோம் என்று நினைக்கிறார். ஆனால் அதுமாதிரியான கேள்விகள்  பல ஏற்கெனவே கேட்கப்பட்டு, பதிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். எவராலும் புதிதாகக் கேள்வி கேட்க முடியாது. வேதத்துக்கு கேட்கத் தெரிவதுபோல், வேறு எவருக்கும் கேட்கத் தெரியாது. வேதத்தில் 3330 இடங்களில் நாஸ்திக வாதம் வருகிறது. இதிலிருந்து கற்றுக்கொண்டுதான் நாஸ்திக வாதம் பண்ணியாக வேண்டும். 3330-ல் இப்போது உலகில் இருப்பது 329 வாதங்களே; மீதி நமக்குத் தெரியாது. தர்மத்துக்கு எதிராக அதர்மமாகக் கேள்வி கேட்கும் நிலையை வேதமே சொல்லிக் கொடுக்கிறது! ஆமாம்... வேதமே நாஸ்திக வாதம் பண்ணிக்கொண்டு, ஆஸ்திகத்தை நிலைநாட்டுகிறது.

கடவுள் எனும் விவசாயி!

ஒருவர் ஹோம குண்டம் கட்டி, அக்னி வளர்க் கிறார். ஒரு கரண்டி நெய் எடுத்து 'விஷ்ணவே ஸ்வாஹா’ என்று ஹோமம் செய்கிறார். இதைப் பார்த்து வேதமே பரிகாசம் பண்ணுகிறது; 'அது விஷ்ணுவிடம் சென்று சேர்ந்ததா?’ என்று கேட்கிறது. 'அது போனதோ போகவில்லையோ... எனக்குத் தெரியாது. நான் பண்ணுகிறேன் அவ்வளவுதான்’ என்றார் யாகம் வளர்ப்பவர்.

'அது தெரியாதபோது ஏன் இந்தக் காரியம்?’ என்று கேள்வி கேட்கிறது வேதம்.

''ஒரு கரண்டி நெய் எடுத்து அக்னியில் சேர்த்துக் கொண்டிருக்கிறாய். அது பரமாத்மாவை அடையுமா அடையாதா என்று தெரியாது. அத்துடன், 'இந்த ஹவிஸ் விஷ்ணுவாகிற பரமாத்மாவுக்கே; எனக்கில்லை’ என்றுவேறு சொல்கிறாய். நன்றாக ஆராய்ந்து பார்! ஒரு நாளைக்கு, ஒரு வாரத்துக்கு, ஒரு மாதத்துக்கு... நீ ஜீவித்திருக்கும் நாள் வரை உனக்கு எவ்வளவு நெய் வேண்டியதாக இருக்கிறது. உனக்கே இவ்வளவு நெய் வேண்டியதாக இருக்கிறதே! ஒரு கரண்டி நெய் எடுத்து விஷ்ணுவுக்குச் சமர்ப்பித்துவிட்டு, இது அவனுக்கே, எனக்கில்லை என்று வேறு சொல்கிறாயே! இது அவனுக்குப் போதுமா!’ என்று கேட்கிறது.

மேலும் தொடர்ந்து, 'பாருண்டான் பாருமிழ்ந் தான் பாரிடந்தான் பாரளந்தான் என்பதற்கிணங்க, இந்த உலகில் அவன் எதுதான் செய்யவில்லை? அவ்வளவு உயர்ந்தவனுக்கு ஒரு கரண்டி நெய் சமர்ப்பித்துவிட்டு, 'அது உனக்குத்தான், எனக்கில்லை’ என்றால்... அது அவனுக்குப் போதுமா? அந்த ஒரு கரண்டி நெய்யும் அவனுக்குச் சென்றதா என்றும் தெரியாது; அது போதுமா என்றும் தெரியாது இப்படி எதுவும் தெரியாமல், எதற்காக ஹோமம் பண்ணுகிறாய்? உன்னை யார் பண்ணச் சொன்னது? இந்த யக்ஞம் எதற்கு? இதை நிறுத்து’ என்றது வேதம்.

உடனே வேதமே சொல்லிவிட்டது என்று யக்ஞத்தை நிறுத்தப் போனார். அப்போது, 'நீ அப்படி நினைக்காதே’ என்றது வேதம். அதாவது நிறுத்தப் போனவரைத் தடுத்து, என்ன அறிவுறுத்துகிறது பாருங்கள்...

'அப்படி நீ நினைத்தாயானால் உனக்கும் வேதத்துக்கும் சம்பந்தம்  இல்லாமல் போய்விடும். வேண்டாத காரியத்தைக் கஷ்டப்பட்டு பண்ணச் சொல்லி அதற்குப் பலனும் இல்லை என்று சொல்லவா வேதம்? நம்மை உயர்த்துவதற்கல்லவா வேதம்! நீ நினைப்பதுபோல் யாகம் என்பது சாமான்யமல்ல’ என்றது வேதம். அதுவே தொடர்ந்து... 'அந்தத் தேவதைக்கு நீ ஊற்றும் நெய், எவ்வளவு இருந்தால் போதுமோ, அவ்வளவாக மாறிப் போய்ச் சேருகிறது. நாம் கொடுக்கிற அளவுக்குத்தான் போய்ச் சேருகிறது என்று அர்த்தம் இல்லை. அந்தத் தேவதைக்கு பூரண திருப்தி ஏற்படுகிற அளவுக்கு பன்மடங்காக பெருகிப் போகிறது'' என்கிறது வேதம்.

இங்கே யுக்தி வாதம் எழுகிறது. ''அக்னியில் சேர்ந்தால் அது பன்மடங்கு பெருகும் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? வேதம் சொல்லி விட்டால் நம்ப முடியுமா?'' என்கிறார் அவர். உடனே, ''நான் சொல்வதை நம்பமாட்டாய். நம் உரிய முன்னோர் சொன்னதையும் நம்பமாட்டாய். அப்படியே ஆகட்டும். உன் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுக்கு காரணகர்த்தாவாகிய விவசாயியைப் பார்த்தாவது தெரிந்து கொள்ளேன்'' என்றது வேதம்.

கடவுள் எனும் விவசாயி!

'ஒரு விவசாயி ஏகரா நிலத்தில் ஆறு மரக்கால் விதை நெல்லை நடவு செய்கிறான். மூன்று மாதங்கள் கழித்து அறுவடை செய்கிறான். நெல்மணிகள் குவிகின்றன. அம்பாரமாகக் குவித்து அளக்கிறான். 32 கலம் நெல் வருகிறது. இவன் பூமியில் தியாகம் பண்ணியது ஆறு மரக்கால். இவனுக்குக் கிடைத்ததோ 32 கலம். ஆறு மரக்கால் பூமியில் போட் டால் அதே ஆறு மரக்கால் நெல்தான் இவனுக்குத் திரும்பி கிடைக்கும் என்றால், விவசாயம் என்ற காரியம் எதற்கு? பன்மடங்கு வருவதால் அல்லவோ விவசாயம் நடக்கிறது?’

இப்படிச் சொன்னவுடன் இவர் எதிர் வாதம் பண்ணுகிறார்.

''நான் அக்னியைக் கேட்டால், நீ பூமியைப் பற்றி சொல்கிறாயே என்று கேட்கிறார். அவர் கேட்ட கேள்வியும் சரியே. அக்னி யார்? பூமி யார்? தெரிந்துகொள்ள வேண்டாமா? பூமியின் தன்மையைச் சொன்னால், அதிலிருந்து அக்னியின் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம். பூமியில் ஆறு மரக்கால் தியாகம் செய்து காப்பாற்ற வேண்டிய முறையில் காப்பாற்றினால், மூன்று மாதம் கழித்து பெரும் பயனை அடை கிறோம். பூமிக்கு மூலம் எது? பூமி நீரிலிருந்து வந்தது. நீருக்கு மூலம் அக்னி. அக்னியிலிருந்து நீர் வந்தது. நீரிலிருந்து பூமி தோன்றியது. பூமிக்கே இந்தச் சக்தி இருக்கும்போது பூமிக்கு மூலமான நீருக்கும், அதற்கு மூலமாக அக்னிக்கும் இந்த சக்தி இருக்காதா? காரணத்தில் என்ன குணம் இருக்கிறதோ, அதுவே காரியத்திலும் இருக்கும்.

மண் என்பது காரணம்; பானை காரியம்! பானை என்கிற காரியமானது அதன் காரணமாகிய மண்ணின் குணத்தை உடையதாக இருக்கும். அதேபோன்று, அக்னியே பூமிக்கு காரணம். இங்கே காரியமாகிய பூமிக்கு விருத்தி செய்யும் சக்தி இருக்கும் என்றால், அதைவிடப் பன்மடங்கு அக்னிக்கு இருக்க வேண்டாமா? அதனால் நாம் அக்னியில் வஸ்துவை தியாகம் செய்தால், அது பன்மடங்கு விருத்தியாகி, தேவதைகளுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவாக மாறிச் செல்கிறது. ஆகவே, மறுபடியும் யாகத்தின் மீது உனக்குச் சந்தேகம் வந்தால், விவசாயியைப் பார்த்து தெளிந்துகொள்'' என்றது வேதம்.

விவசாயிகள் மேலும் ஒரு உயரிய விஷயத்தைக் காட்டிக் கொடுக்கிறார்கள். நெல் விளைகிறது; அதை அறுத்து அம்பாரமாக குவிக்கிறார்கள். அதற்குப் பின் முறத்தால் தூற்றுவார்கள். பின்பு நெல்மணியை அளப்பார்கள்.

தூற்றல் என்ற காரியம் எதற்கு? பதர், தூசி போவதற்காக. அவற்றை விசிறித் தள்ளிவிட்டு, உத்தமமான நெல் மணிகளை அளந்து எடுக்கிறார்கள். அதுபோன்று, நாம் வாழ்ந்த நாள் முக்கியமில்லை; எத்தனை நாள் பரமாத்மாவை நினைத்து, அவன் இட்ட வழக்காக வாழ்ந் தோம் என்பதே கணக்கில் வரும்.

இப்படிப்பட்ட உயர்ந்த விஷயத்தை மிக சர்வ சாதாரண மாக நமக்குக் காட்டிக் கொடுக்கும் விவசாயிகளும், வேத கோஷங்களும் நிறைந்திருக்கும் இந்த பாரத தேசத்தில் பிறக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நம் பாரம்பர்யத்தை நாம் படித்து உணர்ந்து நீங்காத செல்வம் பெற்று நிறைந்து வாழ்வோமாக!

தொகுப்பு: மாலா ஸ்ரீநிவாஸன்