Published:Updated:

ஜாம்பவான் குகை... சுயம்பு லிங்கங்கள்!

ஜாம்பவான் குகை... சுயம்பு லிங்கங்கள்!

ஜாம்பவான் குகை... சுயம்பு லிங்கங்கள்!

ஜாம்பவான் குகை... சுயம்பு லிங்கங்கள்!

Published:Updated:
ஜாம்பவான் குகை... சுயம்பு லிங்கங்கள்!
ஜாம்பவான் குகை... சுயம்பு லிங்கங்கள்!
##~##
ஜா
ம்பவான்- ஸ்ரீராம பக்தர்கள் அனைவருக்கும் பரிச்சயமான பெயர் இது. திரேதா யுகத்தில் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்த துவாபர யுகத்திலும் பகவானும் ஜாம்பவானும் சந்தித்துக்கொண்ட சம்பவம் ஒன்று உண்டு.

சத்ரஜித் என்றோர் அரசன் இருந்தான். சூரியனின் மீது அபார பக்தி கொண்டவன். அவனுக்கு 'சியமந்தக மணி’ எனும் ஒளி பொருந்திய கல்லைத் தந்திருந்தார் சூரியன். அதைப் பதக்கமாக அணிந்திருந்தான் சத்ரஜித். அந்த மணி இருக்கும் இடத்தில் வளம் பெருகும். ஒருமுறை, இந்த மன்னன் கிருஷ்ணனைப் பார்க்க துவாரகைக்கு வந்தான். அவனிடம், தன் பாட்டனாரான உக்ரசேன மகாராஜாவுக்கு அந்தக் கல்லைக் கொடுத்து, அவரின் தேசமும் மக்களும் சுபிட்சமுடன் திகழ உதவும்படி, கேட்டுக் கொண்டார் கண்ணன். ஆனால், மன்னன் சம்மதிக்கவில்லை.

ஜாம்பவான் குகை... சுயம்பு லிங்கங்கள்!

அவன் நாடு திரும்பியபின் ஒருநாள், மன்னனின் தம்பியான ப்ராசேனன், சியமந்தக மணியை அணிந்து கொண்டு காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். அதை அணிந்திருப்பவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவராக இருக்கவேண்டும். இல்லையெனில் ஆபத்து நேரும்! ஆனால் ப்ராசேனனுக்கும் ஒழுக்கத்துக்கும் வெகுதூரம்! ஆக, காட்டில் சிங்கத்தால் தாக்கப் பட்டு இறந்தான். மணியை சிங்கம் கவர்ந்து கொண்டது. அப்போது அங்கே வந்த ஜாம்பவான், சிங்கத்தைக் கொன்று சியமந்தக மணியைக் கைப்பற்றி, தன் குழந்தைக்கு விளையாடக் கொடுத்துவிட்டார்!

இந்த நிலையில், வேட்டைக்குச் சென்ற தம்பி வெகுநாட்கள் ஆகியும் திரும்பாததால், ஸ்ரீகிருஷ்ணரே அவனைக் கொன்றுவிட்டு, சியமந்தகத்தைக் கவர்ந்து கொண்டதாகக் கருதினான் மன்னன். இந்தப் பழியை களைய எண்ணினார் கண்ணன். உண்மையை அறிய காட்டுக்குச் சென்றார். அங்கே ப்ராசேனன் இறந்து கிடப்பதைக் கண்டார். அருகில் ஒரு சுரங்கப்பாதை. அதன் வழியே சென்றவர், ஜாம்பவானின் குகையை அடைந்தார். அங்கே சியமந்தக மணி இருப்பதைத் தெரிந்துகொண்டார்.

அப்போது அங்கே வந்த ஜாம்பவான், வந்திருப்பது யாரென்று தெரியாமலேயே கண்ணனைத்  தாக்க முற்பட்டார். இருவருக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. அது பல நாட்கள் நீடித்தது. 'நம்மை விட பலசாலியாகத்  திகழும் இவர் யாராக இருக்கும்’ என்று ஜாம்பவான் குழம்பிய நிலையில்... சண்டையினூடே எதேச்சையாக அவரை ஆலிங்கனம் செய்தார் பகவான். அந்தக் கணமே உண்மையை உணர்ந்தார் ஜாம்பவான். வந்திருப்பது, ஸ்ரீராமனின் மறு அவதாரமே என்பதை அறிந்தார். நடந்தது அனைத்தையும் அறிந்து, சியமந்தக மணியை கண்ணனிடம் ஒப்படைத்தார். தன் மகள் ஜாம்பவதியையும் அவருக்கு மணம் செய்துவைத்தார். பிறகென்ன... பகவான் மீதான பழி சொல் நீங்கியது. இந்தக் கதையைப் படிப்பதால், வீண் பழிகளிலிருந்து மீளலாம்; தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

ஜாம்பவான் குகை... சுயம்பு லிங்கங்கள்!

ஜாம்பவானும் கண்ணனும் சந்தித்த அந்தக் குகையைக் காண குஜராத் மாநிலம் செல்ல வேண்டும்! போர்பந்தர் நகரிலிருந்து ராஜ்கோட் செல்லும் வழியில், சுமார் 12 கி.மீ. தூரம் பயணிக்க சுங்கச்சாவடி ஒன்று வருகிறது. அங்கிருந்து மேலும் 1 கி.மீ. தூரம் பயணித்து, இடப்புறமாகப் பிரியும் சாலையில் சென்றால், ஜாம்பவந்தி எனும் இடம் வருகிறது. ஆமாம், ஜாம்பவதியின் பெயரில் திகழ்கிறது இந்தப் பகுதி.

நிலப்பரப்பில் இருந்து சுமார் 25 அடி ஆழம் வரை நீளும் இந்தக் குகை, சௌராஷ்டிரா அரசின் (குஜராத்), புதை- பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குதான் ஸ்ரீகிருஷ்ணன்- ஜாம்பவதி திருமணம் நிகழ்ந்த தாகக் கூறுவர். குகைக்குள் இறங்க, பாறைகளே இயற்கைப் படிக்கட்டுகளாகத் திகழ்கின்றன.

உள்ளே இறங்கிப் பார்த்தால் இரண்டு சுரங்கப் பாதைகள் தெரிகின்றன. ஒன்று துவாரகாவுக்கும் (இதுதான் ஸ்ரீகிருஷ்ணர் வந்த வழி என்கிறார்கள்). மற்றொன்று ஜுநாகாட் என்ற இடத்துக்கும் செல்கிறது. வற்றாத கிணறு ஒன்றும் உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக... சுமார் 100 அடி நீளம், 80 அடி அகல குகைக்குள், சுயம்புவாகத் தோன்றியிருக்கும் சிவலிங்கங்களும், சங்கு முகமும் அற்புதத்திலும் அற்புதம்!