Published:Updated:

பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை!

பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை!

பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை!

பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை!

Published:Updated:
பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை!
பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை!
##~##
தோ
ஷங்கள் பல உண்டு. ஒவ்வொரு தோஷமும் ஒவ்வொரு வீரியம் கொண்டது. அந்தத் தோஷங்கள், குறிப்பிட்ட சில விஷயங்களை நம் வாழ்க்கையில் வராதபடி தடுத்துவிடுபவை. முக்கியமாக, எந்தத் தோஷமானாலும் சரி... தோஷத்துக்கு ஆளாகிவிட்டால், நம் வாழ்வின் மொத்த சந்தோஷமும் பறிபோய்விடும்!

மூன்றாம் குலோத்துங்க மன்னனும் அப்படியரு தோஷத்தில் சிக்கித் தவித்தான். அது... பிரம்மஹத்தி தோஷம். மிகப் பெரிய ராஜாங்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு ராஜபரிபாலனம் செய்தாலும், பிரம்மஹத்தி தோஷத்தால் மிகவும் அல்லலுற்றான்; அவதிப்பட்டான்.

சோழ தேசத்தின் தலங்களில் தனக்கு மிகவும் பிடித்த தலமான திருவிடைமருதூருக்குச் சென்று வணங்கினான். கண்ணீர் விட்டுக் கதறினான். அப்போது, 'நதியின் தண்ணீரை சற்றே திருப்பி நிறுத்தி, அருகில் ஆலயத்தைக் கட்டி வழிபடு’ என அசரீரி கேட்டது.

'கோயிலும் நதியும் குடி காக்கும்’ என்பார்கள். ஆகவே, சோழ தேசத்தில் காவிரி பாயும் இடத்தையட்டிப் பயணித்தான் மன்னன். திருச்சிராப்பள்ளிக்கு வந்தவன், அங்கே காவிரியின் தென்கரைப் பகுதியில், காவிரியில் இருந்து ஒரு வாய்க்காலை நிறுவினான். அதற்கு, உய்யக்கொண்டான் வாய்க்கால் எனப் பெயரிட்டான். வாய்க்காலுக்கு அருகில், அழகிய கோயிலை எழுப்பினான்.

பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை!

வடக்கே... மல்லிகார்ஜுன க்ஷேத்திரமாக, ஸ்ரீசைலம் இருப்பது போல், தெற்கே... திருநெல்வேலிக்கு அருகில் திருப்புடார்ச்சனத் தலம் இருப்பது போல், இவற்றுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்தத் தலத்தை மத்யார்ஜுனத் திருத்தலம் எனப் போற்றும் வகையில் பெயரிட்டு மகிழ்ந்தான் மன்னன்.

திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது பேட்டவாத்தலை. இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு ஊருக்குள் பயணித்தால், அழகிய ஆலயத்தை அடையலாம். இங்கே, ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீமத்யார் ஜுனேஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபாலாம்பிகை.

சுழித்துக்கொண்டு பாய்ந்தோடி வரும் காவிரியை இங்கே வாய்க்கால் வெட்டி, தண்ணீரைத் திருப்பிச் சேர்த்து வைத்ததால், அந்த இடம் குளிர்ந்து போயிற்று. அங்கே குடிகொண்ட இறைவனும் குளிர்ந்து, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் வழங்கி, அவர்களின் மனம் குளிரச் செய்தான்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால் அல்லது விடாது பெய்த மழையால் ஊரெங்கும் தண்ணீர் புரண்டோடினால், ஸ்வாமி சந்நிதியில் இருந்து ஊற்றென ஆங்காங்கே தண்ணீர் கிளம்பி, லிங்கத் திருமேனியைச் சுற்றி நின்று கொள்ளும். பார்ப்பதற்கு, இவர் ஸ்ரீமத்யார் ஜுனேஸ்வரரா, ஜலகண்டேஸ்வரரா என்று கேட்கும் அளவுக்கு இருக்குமாம், திருச்சந்நிதி!

வாய்க்கால் வெட்டி, கோயில் அமைத்து மனதாரக் கும்பிட்ட மன்னனின் பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அவனுக்கு வாரிசும் பிறந்தது; சோழ தேசம் செழித்தது என்கிறது ஸ்தல வரலாறு.

இன்றைக்கும் இங்கு வந்து வேண்டுவோர்க்கு வேண்டுவன வற்றையெல்லாம் தந்து அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரீமத்யார்ஜுனேஸ்வரர்.

பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை!

வைகாசி விசாகம், சித்திரைப் பிறப்பு, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், மார்கழி திருப்பள்ளியெழுச்சி என மாதந்தோறும் விழாக்கள் இங்கே அமர்க்களப்படும். குறிப்பாக, தைப்பூச நன்னாளில், குளித்தலை கடம்பர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் இருந்தும் உத்ஸவ மூர்த்திகள், காவிரிக் கரையில் கூடுவர்; தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும். அப்போது, பேட்டவாத்தலை ஸ்ரீமத்யார்ஜுனேஸ்வரரும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு அருள்பாலிப்பார்.

இங்கே... அம்பாள் ஸ்ரீபாலாம்பிகை தான் முக்கியமான தெய்வம். கருணைக் கடல் இவள். சாந்தமும் அமைதியும் கொண்டு, புன்முறுவலுடன் காட்சி தருகிற அம்பிகையைத் தரிசித்தாலே... நம் கவலைகள் அனைத்தும் காணாமல் போய்விடும்!

முன்னொரு காலத்தில், இந்தப் பகுதியில், பொற்றாளம் பூவாய் எனும் சித்தர் வாழ்ந்து வந்தார். காவிரியில் நீராடிவிட்டு, கோயிலுக்கு வந்து அமர்ந்துகொண்டு, சிவனாரையும் பார்வதியையும் நினைத்து மனமுருகித் தவத்தில் ஈடுபடுவது அவர் வழக்கம்!

வெற்றிலையும் வாழையும் செழித்து வளர்ந்த பூமி இது. நெல்லும் கரும்பும் நெடுநெடுவென வளர்ந்து வளம் சேர்த்த பகுதி. ஆனால், ஒரு வீட்டில் பெண் சுகப்படவில்லையெனில், பூமியில் குளறுபடிகள் ஏற்படும்தானே?! அந்த வீட்டின் சோகமும் துயரமும் விளைநிலங்களைக் கூட பாதிக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்களே முன்னோர்கள்?! அதன்படி, அகண்ட காவிரியாக ஓடுகிற திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பேட்டவாத்தலை மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில், பெண் குழந்தைகள் பூப்படையும் வயது தள்ளிப் போனது.  பூப்படைந்த பெண்களுக்குத் திருமணமாவதில் முட்டுக்கட்டைகள் விழுந்தன. அப்படியே திருமணமாகி குடித்தனம் நடத்தும் பெண்கள் பலருக்கு, கரு உண்டாகாமலேயே இருந்தது. கருவுற்ற பெண்கள்... சில நாட்களில் கருச்சிதைவு உண்டாகி பெரிதும் அவதிப்பட்டார்கள்.

பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை!

ஊரே திரண்டு வந்து, பொற்றாளம் பூவாய் சித்தரை நமஸ்கரித்தது. விவரங்களை எடுத்துரைத்து, கதறிக் கண்ணீர் விட்டது. இதைக் கேட்ட சித்தர்,  ஸ்ரீபாலாம்பிகையை நினைத்து மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். 'இவர்கள் உன் குழந்தைகள் அல்லவா? அவர்களை நீ காத்தருள வேண்டாமா?’ என முறையிட்டார்.

சித்தரின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்தாள் அம்பிகை. பெண்களின் அத்தனைப் பருவங்களிலும் உள்ள சிக்கல்களைத் தீர்த்தருளினாள். பூப்படைதல் எனும் உயரிய சம்பவம் பெண்களுக்கு நடந்தேறியது. மீண்டும் விளை நிலங்கள் சிறக்கத் துவங்கின; செழித்தன! வாழைகள் வளர்ந்து கனிகளையும் பூக்களையும் தந்தன. பெண்கள் பூப்படைந்து, திருமணமாகி, பிள்ளைகள் பெற்று, சந்தோஷத்துடனும் குதூகலத்துடனும் இல்லறத்தில் ஈடுபட்டார்கள். அந்த ஊர் மட்டுமின்றி மொத்த தேசமும் தழைத்தது! பிறகு, பொற்றாளம் பூவாய்ச் சித்தர், அந்தக் கோயிலின் சந்நிதியிலேயே ஜோதி வடிவில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார் என்கிறது ஸ்தல வரலாறு. இன்றைக்கும் உலகத்துப் பெண்களின் துயரங்களை, அவர்களுக்கு உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படுகிற பிரச்னைகளை... சித்தர் பெருமான் ஸ்ரீபாலாம்பிகையிடம் கோரிக்கையாக வைக்க... அவள், பெண்களின் சிக்கல்களைத் தீர்த்து வைக்கிறாள் என்பது ஐதீகம்!

பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை!

'இருபது வயதாகியும் இன்னும் பூப்படையவில்லையே’ என்று ஏங்கித் தவிப்பவர்கள், கல்யாண வயது வந்தும் இன்னும் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கவில்லையே என கண்ணீர் விடுபவர்கள், திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் வயிற்றில் கரு தங்காமல் இருக்கிறதே என்று கலங்குபவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து, மண்டபத்தின் தூணில் உள்ள சித்தர் பிரானின் திருவுருவத்துக்குத் தங்களது கோரிக்கையை எழுதி, அந்தப் பிரார்த்தனைச் சீட்டை அந்தத் திருவுருவத்தில் மாலையாகக் கட்டி, ஸ்வாமியையும் அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்துச் சென்றால்... விரைவில் நல்லது நடக்கும்; நினைத்தது நிறைவேறும் என்பது பெண்களின் நம்பிக்கை!

பிரார்த்தனைச் சீட்டில் உள்ள கோரிக்கைகளைப் படித்து, ஸ்ரீபாலாம்பிகைக்கு சித்தர் பெருமான் வாசித்துக் காட்டுவதாகவும், அவற்றைக் கேட்டு, அந்தப் பிரச்னைகளையெல்லாம் தாயுள்ளத்துடன் சீர்செய்து அருள் வதாகவும் சொல்லிப் பூரிக்கின்றனர்.  

பெண்களின் பிரச்னைகளைத் தீர்த்தருளக்கூடிய ஒப்பற்றத் திருத்தலமாம் பேட்டவாத்தலை ஸ்ரீபாலாம்பிகை சமேத ஸ்ரீமத்யார்ஜுனேஸ்வரர் கோயிலுக்கு ஒருமுறை வந்து, உங்கள் பிரார்த்தனையைச் சீட்டில் எழுதி, சித்தருக்கு மாலையாக அணிவியுங்கள். உங்களின் பிரச்னைகள் என்னவானாலும், அவை பனி போல் விலகும் என்பது உறுதி!

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்