Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##
திகாசத்திலும் புராணங்களிலும் வாழ்ந்தவர்கள் வழிபட்ட தலங்கள் பல உண்டு என்பார்கள் பெரியோர்கள். அவர்கள் வழிபட்ட தலங்களையும், அங்கே ஸ்தாபித்த இறைத் திருமேனிகளையும் இன்றைக்கும் தரிசித்து வருகிறோம்.

ஸ்ரீராமர், சீதையைத் தேடி வரும்போது வழிபட்ட தலங்கள் பல உண்டு. சீதையை மீட்ட பிறகு, அவளுடன் சேர்ந்து வணங்கி வழிபட்ட ஆலயங்கள் என்று பல ஸ்தலங்களின் புராணங்கள் விவரிக்கின்றன. அதேபோல் ஸ்ரீஅனுமன் வழிபட்ட தலங்களும், அவர் திருக்கரத்தில் இருந்து விழுந்த மலைகளும் ஏராளம்.

மகாபாரதத்தில்... பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, வனங்களில் ஆங்காங்கே தங்கியபடி, கடும் தவம் மேற்கொண்டனர் என்றும், அங்கே அந்தத் தலங்களில் அவர்கள் வழிபட்ட இறைத் திருமேனிகளைப் பின்னர் விக்கிரகங்களாக வடித்துப் பிரதிஷ்டை செய்து, மன்னர்கள் வழிபட்டு வந்தார்கள் என்றும் அறிகிறோம். அந்த ஆலயங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. இன்றளவும், அந்தத் தலங்களுக்குச் சென்று நாமும் வழிபட்டுப் பலன் பெற்று வருகிறோம்.

இப்படித்தான்... வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனும், சிறந்த சிவபக்தனுமாகிய ராவணனைத் தன் வாலால் கட்டிப்போட்ட வல்லமை கொண்டவன், வாலி. இந்தச் செயலால்தான், அவனுக்கு வாலி எனும் பெயர் அமைந்ததாகவும் சொல்வார்கள்.

ஆலயம் தேடுவோம்!

வாலியும் சிவ பக்தன்தான்! சதாசர்வ காலமும் சிவநாமத்தையே உச்சரித்து வந்தான் வாலி. பல தலங்களுக்குச் சென்று, 'இதுவரை நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைப் பெருக்கித் தருவாயாக!’ என்று மனமுருக வேண்டினான். 'எதிரிகள் என்று எவரும் எனக்குத் தேவையில்லை; எதிரிகளுடன் சண்டை போடுகிற மனநிலையும் எனக்கில்லை. ஒருவேளை, எனக்கு எதிரிகள் இருப்பதுதான் இந்தப் பிறவியின் நோக்கம் என்றால், என்னுடன் நேருக்கு நேர் மோதும் எனது எதிரிகளின் பலத்தில் பாதி எனக்கு வந்துவிடும்படி அருள்புரியுங்கள் ஸ்வாமி!’ என தலங்கள் தலங்களாகச் சென்று, தவம் புரிந்து வேண்டிக்கொண்டான்.

தீவிர சிவபக்தனான வாலி, தினமும் லிங்கத் திருமேனியை நீராட்டுவதற்காக, அந்த வனத்தில் அழகிய திருக்குளம் ஒன்றை அமைத்தான். தினமும் அந்த நீரை எடுத்து வந்து, சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேக- ஆராதனைகள் செய்தான். வில்வம் பறித்து அர்ச்சித்து வழிபட்டான். பிறகு, ஸ்வாமிக்கு எதிரே அமர்ந்து கொண்டு, கண்கள் மூடி, கடும் தவத்தில் மூழ்கினான்.

பக்தனின் தவத்துக்கு மகிழாமலா இருப்பார், சிவனார்?! வாலியின் பக்தியில் குளிர்ந்துபோன சிவபெருமான், திருக்காட்சி தந்தருளினார். அவன் கேட்ட வரத்தையும் தந்து வாழ்த்தினார்.

ஆலயம் தேடுவோம்!

வாலி வழிபட்ட தலங்கள், அவனுக்கு சிவபெருமான் தரிசனம் தந்த தலங்கள் எனப் பல உண்டு. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகிலும் வாலி வழிபட்ட தலம் உண்டு என்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அந்தத் தலத்து இறைவனின் திருநாமம் - ஸ்ரீவாலிபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீவாலாம்பிகை.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பண்டிதக்குடி. இங்கிருந்து திருராமேஸ்வரம் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வா.கோட்டை. ஒரு காலத்தில் வாலிக்கோட்டை என்று அழைக்கப்பட்டு, பிறகு வா.கோட்டை என மருவியதாகச் சொல்வர்.

இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீவாலிபுரீஸ்வரரை வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும்; அவர்களை எதிர்ப்பதற்கான பலத்தைப் பெறலாம் என்பது ஐதீகம்.

தலத்தை அறிந்து வியந்த சோழ மன்னன் ஒருவன் கட்டிய கோயில் இது. காலப் போக்கில், வழிபாடுகளோ விசேஷங்களோ இன்றி, களையிழந்து கிடந்த கோயிலை, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாச ஐயர் மற்றும் அவரின் சகோதரர்கள் சேர்ந்து கோயில் திருப்பணியில் ஈடுபட்டு, நித்தியப்படி பூஜைகளையும் செய்து வந்தனராம். இவர்களின் வம்சாவளியினரான மன்னார்குடி குப்பா பட்டர் மற்றும் அவரின் மைந்தர்கள், இந்த ஆலய கைங்கர்யப் பணியில் ஈடுபட்டு, ஏராளமான திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

''தற்போது, இந்தக் கோயில் மீண்டும் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. காரைப் பூச்சுகள் பெயர்ந்து, கற்கள் பலவும் விழுந்து, மண்டபம் மொத்தமும் காணாமலே போய்விட்டது. சந்நிதிகள் மிகப் பரிதாபமான முறையில் உள்ளன. வாலி வழிபட்டு பூஜை செய்த ஸ்ரீவாலீஸ்வரர் தன் சாந்நித்தியம் குறையாமல், வழிபாட்டுக்காகவும் அபிஷேகத்துக்காகவும், புதிய வஸ்திரத்துக்காகவும் நைவேத்தியத் துக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீவாலாம்பிகை மட்டும் என்ன... அவளும் கருணையே உருவானவள். இங்கு வந்து வேண்டிச் சென்றால், திருமண தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்!

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோரும் இங்கு தரிசனம் தருகின்றனர். குறிப்பாக, ஸ்ரீவாலிக்கும் இங்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது. ஸ்ரீவாலி மற்றும் ஸ்ரீவாலாம்பிகை சமேத ஸ்ரீவாலிபுரீஸ்வரருக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால்... சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

வரங்களை வாரி வழங்கும் ஸ்ரீவாலிபுரீஸ்வரரின் கோயில், பழையபடி வழிபாடுகளும் திருவிழாக்களுமாகக் களை கட்ட வேண்டாமா? நெடுங்காலமாக இங்கே நடைபெறாத கும்பாபிஷேகம், விமரிசையாக நடந்தேற வேண்டாமா? தன் மொத்தக் களையையும் இழந்து நிற்கிற ஸ்ரீவாலிபுரீஸ்வரர் திருக்கோயில் மீண்டும் பொலிவுற வேண்டாமா?

வா.கோட்டை வாலிபுரீஸ்வரர் கோயிலில், அந்தணர்கள் பலர் திருப்பணிகள் செய்து, வேத கோஷங்களைப் பாராயணம் செய்து, ஹோம- யாகங்களைச் செய்து, ஜப- தபங்களைச் செய்து வந்திருக்கிறார்கள். மீண்டும் இந்தப் புனிதத் தலத்தில், வேத கோஷங்கள் கேட்கட்டும்; ஹோமங்களும் யாகங்களும் இனிதே நடக்கட்டும்; ஜப- தபங்கள் செய்து, நல்லதொரு எண்ண அலைகளுடன் இந்தத் தலம் சீரும் சிறப்புமாகச் செழித்து வளரட்டும்!

அது... சிவனடியார்களின் கைகளிலும், சக்தி விகடன் வாசகர்களின் கைகளிலும்தான் இருக்கிறது. ஸ்ரீவாலாம்பிகை சமேத ஸ்ரீவாலிபுரீஸ்வரருக்குத் தங்களால் இயன்றதைத் தந்து, கோயில் வழிபாட்டுக்கு உதவுங்கள். அந்தக் கைங்கர்யத்தில் சிவனார் மகிழ்ந்து, உங்களையும் உங்கள் வம்சாவளியினரையும் வாழ்வாங்கு வாழ வைப்பார்.

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

எங்கே இருக்கிறது?

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பண்டிதக்குடி பஸ் ஸ்டாப். இங்கிருந்து திருராமேஸ்வரம் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது வா.கோட்டை எனும் கிராமம். இங்குதான் வாலி வழிபட்டு வரம் பெற்ற ஸ்ரீவாலாம்பிகை சமேத ஸ்ரீவாலிபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

பண்டிதக்குடி வரை அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. அங்கிருந்து வா.கோட்டைக்குச் செல்ல, ஆட்டோ வசதி உண்டு.