Published:Updated:

இனிய வரங்கள் அருளும் ஈரோடு கோயில்கள்!

இனிய வரங்கள் அருளும் ஈரோடு கோயில்கள்!

இனிய வரங்கள் அருளும் ஈரோடு கோயில்கள்!

இனிய வரங்கள் அருளும் ஈரோடு கோயில்கள்!

Published:Updated:
இனிய வரங்கள் அருளும் ஈரோடு கோயில்கள்!
இனிய வரங்கள் அருளும் ஈரோடு கோயில்கள்!
##~##
ங்கலங்கள் மிகு மஞ்சள் மாவட்டமாம் ஈரோடு, வரலாற்றுச் சிறப்புகளும் புராணப் பெருமைகளும் கொண்ட ஆலயங்களால் ஆன்மிகம் செறிந்தும் திகழ்கிறது. பாவம் தீர்க்கும் பண்ணாரி துவங்கி... சகல நலன்களையும் அள்ளி வழங்கி அருள்புரியும் இந்த மாவட்டத்தின் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு கதை... ஒவ்வொரு சிறப்பு! அவற்றுள் ஒன்பது தலங்கள் இங்கே உங்களுக்காக...

குண்டம் இறங்கினால் வாழ்வில் ஏற்றம் உண்டு!

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது, பண்ணாரி ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில். ஈரோடு நகரிலிருந்து மைசூர் செல்லும் வழியில், சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம்.

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு அடர்ந்த வனமாகத் திகழ்ந்ததாம் இந்தப் பகுதி. அங்கே ஒரு வேப்ப மரத்தின் அடியில், தெய்வ சாந்நித்தியம் மிகுந்த சுயம்பு அம்மன் திருவுருவத்தைக் கண்டார்கள். அடுத்தடுத்த நாட்களில், வழிப்போக்கர்களுக்கு வழித் துணையாய், பக்தர்களுக்கு வாழ்வு முழுக்கப் பக்கத் துணையாய் இருந்து காக்கும் பண்ணாரித் தாயே அவள் என்பது அவளின் திருவருளாலேயே தெரியவந்ததாம். பிறகென்ன? மிகுந்த மகிழ்ச்சியுடன் பண்ணாரித் தாய்க்கு ஆலயம் எழுப்பி வழிபடத் துவங்கினர். அன்றுதொட்டு இன்று வரையிலும் அகிலம் காக்கும் அன்னையின் அருளாட்சி தங்குதடையின்றித் தொடர்கிறது.

பங்குனி மாதம் பண்ணாரி அம்மனுக்கு மகாப்பெருந் திருவிழா. வழக்குச் சொல்லில் குண்டம் திருவிழா என்கிறார்கள். இந்த விழாவின்போது குண்டம் இறங்கி, குவலயம் காக்கும் அந்த நாயகியை மனதாரத் தரிசித்து வேண்டிக்கொண்டால், எண்ணிய யாவும் ஈடேறுமாம். அத்துடன் பக்தர்களுக்கு என்றென்றும் வெற்றியைத் தேடித் தருவாள் பண்ணாரித் தாய் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.

இனிய வரங்கள் அருளும் ஈரோடு கோயில்கள்!

அடியவர்களை ஆட்கொள்ளும் காளிதேவி!

ஈரோடு நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலை விலும், கோபிச்செட்டிபாளையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது பிரசித்தி பெற்ற மற்றொரு அம்மன் கோயில்.

ஆமாம்... அந்த அம்மனுக்கு ஸ்ரீகொண்டத்துக் காளி என்று திருப்பெயர். தரிசிக்க வரும் முதல் முறையே பக்தர்களைத் தனது கருணையால் ஆட்கொண்டுவிடும் அம்மைக்கு மிகப் பொருத்தமான பெயர்தான் இது!

சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலிலும் குண்டம் திருவிழா விசேஷம். இங்கே மார்கழி மாதம் நடைபெறுகிறது இந்த விழா. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள். இந்தக் காளியம்மனை வழிபட்டுப் பிரார்த்தித்துக் கொண்டால், சத்ரு பயம் நீங்கும்; சகல செல்வங்களும் ஸித்திக்கும்.

மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி...

ஈரோட்டிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் பவானி. காவிரி, பவானி, அமுதநதி என ஆறுகள் மூன்று கூடும் அற்புத மான க்ஷேத்திரம் இது. இங்கே, அருள்மிகு சங்கமேஸ்வரர் ஆலயம், உலகின் அத்தனை தெய்வ கடாட்சங்களும் சங்கமிக்கும் திருவிடமாகத் திகழ்கிறது. இதே கோயிலில் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளுக்கும் தனிச்சந்நிதி உள்ளது சிறப்பு. மகா சிவராத்திரி, கார்த்திகை தீபம், விநாயகர் சதுர்த்தி முதலான விழா வைபவங்கள் இங்கே விசேஷம். ஆடி, தை மற்றும் மஹாளயபட்ச அமாவாசை தினங்களிலும் முன்னோர் திதி நாட்களிலும் பவானி கூடுதுறையில் பிதுர்க்கடன்கள் ஆற்றுவதும், சங்கமேஸ்வரரைத் தரிசித்து வழிபடுவதும் புண்ணியப் பலன்களைப் பெற்றுத் தரும். இந்தத் தலத்துக்கு வந்து, பூமாலைகள் சமர்ப்பித்து சங்கமேஸ்வரரை வழிபட, மாங்கல்ய பலம் கிட்டும்; ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

இனிய வரங்கள் அருளும் ஈரோடு கோயில்கள்!

மும்மூர்த்தியர் அருளும் திருக்கோயில்

வாழ்வில் சகல தடைகளையும் வென்று சாதனைகள் புரிய வேண்டுமா? சோதனைகளைத் தாண்டி வெற்றி மகுடம் சூட வேண்டுமா? எனில், ஒருமுறை கொடுமுடி சென்று, அருள்மிகு மகுடேஸ்வரரைத் தரிசித்தால் போதும்; யாவும் நிறைவேறும். காவிரிக்கரையில் அமைந்த இந்த சிவத்தலம், ஈரோட்டில் இருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் உள்ளது. ஸ்ரீமகுடேஸ்வரர் மட்டுமின்றி ஸ்ரீவீரநாராயணப் பெருமாள், ஸ்ரீபிரம்மன் ஆகியோரும் அருள்வதால், இந்தத் தலம் மும்மூர்த்தியர் க்ஷேத்திரமாகவும் திகழ்கிறது. ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, தைப்பூசம் முதலான வைபவங்கள் இங்கு சிறப்புற நடைபெறுகின்றன. இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்திக்க, கிரக தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, நம் மனம் குளிர வரங்களை வாரி வழங்குவார் ஸ்ரீமகுடேஸ்வரர்.

சூரியன் வழிபடும் ஆருத்ர கபாலீஸ்வரர்!

ஈரோடு மாநகரிலேயே அமைந்துள்ள ஆலயம், ஸ்ரீஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயில். ஈஸ்வரன் சந்நிதிக்கு வலப் புறத்தில் அம்பாள் சந்நிதி கொண்டிருப்பது இந்தத் தலத்தின் சிறப்பம்சம். மாத சிவராத்திரி, பிரதோஷம், சோமவாரம் உட்பட சிவனாருக்கு உரிய சிறப்பு நாட்களில் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால், புத்திர பாக்கியமும், தகுதிக்கு ஏற்ற நல்ல வேலைவாய்ப்பும் கிடைக்கப் பெறலாம் என்பர். மாசி மாதம் மூன்று நாட்கள், சூரியன் தன் கிரணங்களால் இங்குள்ள மூலவரைத் தழுவி பூஜிக்கும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்!

கொங்கு நாட்டைக் காக்கும் கொங்கலம்மன்!

கொங்கு நாட்டைக் காக்க வந்த தெய்வம், இன்றும் காத்து நிற்கும் அன்னை என்பதால், இந்த தேவிக்கு கொங்கலம்மன் எனும் திருப்பெயர் என்கிறார்கள் ஈரோடு மக்கள். இந்த அன்னையின் ஆலயம் அமைந்திருப்பதும் ஈரோடு நகருக்குள்ளேயே! நாகதோஷம் உள்ளவர்களும் பிள்ளைப் பாக்கியம் இல்லாதவர்களும் அம்மனின் ஆலயத்துக்கு வந்து, அபிஷேக - அர்ச்சனைகள் செய்து வழிபட, விரைவில் அவர்களின் வேண்டுதல்கள் பலிக் கும் என்கிறார்கள். தைப்பூசத் தேர்த் திருவிழா, ஆடி வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி மற்றும் தீபாவளி ஆகியன இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

இனிய வரங்கள் அருளும் ஈரோடு கோயில்கள்!


தீவினைகள் தீர்க்கும் திண்டல் மலை எலுமிச்சை!

ஈரோடு- பெருந்துறை செல்லும் வழியில், ஈரோட்டிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது திண்டல் மலை. இங்கு கோயில் கொண்டிருக்கும் முருகன், தன்னாசி முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவராம். அருள்மிகு வேலாயுதசுவாமி என்று திருப் பெயர்.

இந்தக் கோயிலில் இரண்டு எலுமிச்சை பழங்களை வைத்து பூஜிக்கும் பக்தர்கள், அதில் ஒன்றை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். அதை நறுக்கி வீட்டின் நான்கு பக்கங்களிலும் வீசினால், துஷ்டர் களால் ஏற்படும் ஆபத்துகள் நீங்கும் என்பது நம்பிக்கை. பங்குனி உத்திரம், கந்தசஷ்டி முதலான விழாக்கள் இங்கே விசேஷம்.

சென்னிமலை தரிசனம்!

இனிய வரங்கள் அருளும் ஈரோடு கோயில்கள்!

ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயில் கொண்டிருக்கும் தலங்களில் குறிப்பிடத்தக்கது சென்னிமலை. ஈரோட்டில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது.

மலைக்குமேல் குடியிருக்கும் முருகனைத் தரிசிக்க படிக்கட்டுப்பாதையும், சாலை வசதியும் உண்டு. மிக அற்புத சக்திகள் நிறைந்த ஸ்ரீகந்தசஷ்டி கவசம் அரங்கேறியது இங்குதான் என்பர்.

மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்க தீர்த்தமும் இந்தத் தலத்தின் சிறப்பம்சம். சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, மாசிமகம், பங்குனி உத்திரம்... என திருவிழாக்கள் காணும் சென்னிமலை ஆண்டவனை வழிபட, பொன்னும் பொருளும் செழிக்கும்!

கல்யாண வரம் அருளும் செல்வ ஆஞ்சநேயர்!

சென்னிமலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால் ஸ்ரீசெல்வ ஆஞ்சநேயர் திருக்கோயிலை அடையலாம். ஐம்பொன்னால் ஆன அனுமனின் விக்கிரகம் இந்தக் கோயிலின் சிறப்பு.

சனிக்கிழமைதோறும் இந்த அனுமனுக்கு துளசி மாலை அலங்காரம் செய்யப்பட்டு, வடைமாலை சார்த்தி, சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெறுகின்றன. தவிர, அனுமத் ஜயந்தி, ஸ்ரீராமநவமி ஆகிய தினங்களும் இங்கே விசேஷம். திருமண வரம் வேண்டியும், குழந்தை வரம் கேட்டும் இங்கு வந்து  ஸ்ரீசெல்வ ஆஞ்சநேயரை வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.