Published:Updated:

ஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்!

ஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்!

ஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்!

ஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்!

Published:Updated:
ஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்!
ஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்!
##~##
தி
ருநெல்வேலியில் இருந்து உடன்குடி செல்லும் வழியில், நாசரேத் எனும் ஊருக்கு அருகில் உள்ள அந்தக் கிராமத்துக்கு, எழுவரைமுக்கி என்று பெயர். என்ன... பெயரே கதை சொல்கிறதா?!

வாஸ்தவம்தான்! நம் தமிழ்க்குடியின் சிறப்பை, நம் தமிழ்ப் பெண்டிரின் கற்பு மாண்பை விளக்கும் மிக அற்புதமான கதை அது!

வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையை, வைகை வளப்படுத்த, தென்பாண்டி தேசமாம் நெல்லைச் சீமை, அகண்ட தாமிரபரணியால் செழிப்புற்று- சிறப்புற்று இருந்த காலகட்டம்.

அந்த நதியின் கரைப்பகுதிகள் மட்டுமல்ல, தாமிரபரணியின் இருமருங்கிலும் நூற்றுக் கணக்கான மைல்கள் தூரம் நிலத்தடி நீர் செழுமையாக இருந்தது. தரையில் சில அடிகள் தோண்டினாலே தண்ணீர் பெருக்கெடுக்கும்; இதன் காரணம் தொட்டு, 'தண்ணியூத்து’ எனும் பெயரிலேயே ஓரு பகுதி இங்கே உண்டு!

இப்படி இயற்கை வளம் கொழிக்கும் அந்த கிராமத்தில், கன்னிப் பெண்கள் ஏழுபேர் ஊருணியில் நீராடச் சென்றார்கள். விட்டு விட்டுப் பெய்த சாரலும், அதன் குளிர் கலந்து வீசிய தென்றலும், அவ்வப்போது மேகத் திரை விலக்கி எட்டிப் பார்க்கும் சூரியனின் இளம் மஞ்சள் வெயிலும் சங்கமித்திருந்த அந்தச் சூழல்... சீக்கிரம் கரையேர விடாமல் அவர்களை தடுத்துவிட்டிருந்தது. ஏழு பெண்டுகளும் நேரம் போவதே தெரியாமல் குளித்துக் கொண்டிருந்தார்கள்!

ஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்!

அப்போது ஆடு-மாடு மேய்க்கும் இளைஞன் ஒருவன் அவ்வழியே வந்தான். பாண்டியதேசத்து இளைஞர்களுக்கென்றே சற்றே உரிமையும்

நேசமும் கலந்த குறும்பு உண்டு. அந்த இளைஞனும் விளையாட்டாக ஒரு காரியம் செய்தான். குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகள் மொத்தமும் கரையில் இருக்க, அதை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டான். இதைப் பார்த்துவிட்ட பெண்கள் எழுவரும், ஆடைகளைக் கொடுத்துவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும் அவன் கேட்கவில்லை. போயேபோய் விட்டான்!

பெண்கள் கலங்கினார்கள். அப்படியே எப்படிக் கரையேறுவது? எழுவரும் ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர்... பிறகு ஒரு முடிவுக்கு வந்தவர்களாக ஊருணிக்குள் மூழ்கினார்கள். அதன் பிறகு அவர்கள் எழுந்திருக்கவே இல்லை. ஆமாம்... ஊருணிக்குள் மூழ்கி, அதில் கலக்கும் நீரோடையின் வழியே, அருகில் இருக்கும் வனப்பகுதிக்குச் சென்றவர்கள், அங்கேயே தெய்வமாக எழுந்தருளினார்களாம். இங்கே ஊருக்குள் பெண்களைக் காணாமல் பெற்றோர்கள் தேட, ஊர் பூசாரிக்கு காட்சி தந்து வனப்பகுதியில் தெய்வமாய் தாங்கள் எழுந்தருளியிருக்கும் விஷயத்தைச் சொல்லி, 'எங்களை வழிபட்டால், இந்த ஊரை இன்னும் வளமாக்குவோம்’ என்று அருள்புரிந்தார்களாம். அந்தக் கிராமமும் எழுவரைமுக்கி எனப் பெயர் கொண்டது!

எழுவரைமுக்கியின் கதை போன்று இன்னும் பல்வேறு செவிவழிக்கதைகள், சப்த கன்னியரின் வரலாற்றை வெவ்வேறு கோணத்தில் சிலாகிக்கின்றன. எல்லைதெய்வ வழிபாடு குறித்த ஆய்வுநூல்கள் சில, நதிகளை வழிபடும் வழக்கமே கன்னிமார் வழிபாடாக பரிணமித்திருக்கக்கூடும் என விளக்குகின்றன. 'ஏழு நதிகளைக் குறிப்பிட்டு சப்த சிந்து என வேத காலத்தில் சொல்வதுண்டு. இதிலிருந்து சப்தமாதர் வழிபாடு தோன்றி இருக்கலாம். அதேபோன்று ஏழு ஆண் தெய்வங்களை, பெண் தெய்வ வடிவங்களாக்கி சப்தமாதர்களாக வழிபட்டனர் என்பது போன்ற தகவல்களும் உண்டு’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். புராணங்களில் சொல்லப்படும்... பிராம்மி, மாகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்தமாதர்கள் முறையே பிரம்மன், மகேசன், குமரன், விஷ்ணு, வராஹ மூர்த்தி, இந்திரன், ருத்ரன் ஆகிய தெய்வங்களின் பெண் அம்சங்கள் எனக் கூறப்படும் தகவலையும் அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள்.

தென்னாட்டு எல்லை தெய்வங்கள் குறித்த கதைகளில் ஆர்வம்  உள்ளவரும், கல்வெட்டு ஆய்வாளருமான ராமச்சந்திரன், ''நாட்டுப்புற தெய்வங்களில் பெண் தெய்வங்களே அதிகம் என்பதால், அந்த தெய்வங்களே முதன்மை நிலையில் வைத்து விளக்கப்படுகின்றன. நம் தமிழ் மரபில் ஆதிகாலம் தொட்டு செழுமையின் அடையாளமாகவும், வலிமை யின் குறியீடாகவும் பெண் கருதப்பட்டதால், அவள் வழிபாட்டுக்கு உரியவளானாள்'' என்கிறார். அவரே தொடர்ந்து...

ஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்!

''கன்னி தெய்வ வழிபாடு பெரும்பாலும் சிறுதெய்வ வழிபாடே ஆகும். தென்னகத்தில் வீட்டுக்கு வீடு கன்னிதெய்வ வழிபாடு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாயுமானவர் தனது பாடலில், 'அன்னை பின்னையும் கன்னியென மறைபேசும் ஆனந்த ரூப மயிலே...’ என்கிறார். அகிலம் அனைத்துக்கும் தாயானவள் பராசக்தி. ஆனாலும் அவள்

கன்னியானவள் என்றே மறைகள் போற்றுவ தாகச் சொல்கிறார் அவர். ஆக, பெண்மையின் கன்னிப் பருவத்தையே உன்னதமாக-வல்லமை மிகுந்ததாகக் கருதி, கன்னிதெய்வ வழிபாட்டை போற்றியிருக்கிறார்கள் முன்னோர்.

கன்னியாகிய உக்ரம் மிகுந்த பெண்மை, தாய்மை அடைந்ததும் பாதுகாத்து அனுக்கிரஹிக்கும் அருள் சக்தியாகிவிடுகிறது என்றே சொல்லலாம்.

கன்னி தெய்வங்கள் ஏழு என்று குறிப்பிடும் வழக்கமும் பரவலாக உண்டு. ஏழு கன்னிமார், சப்த கன்னியர், சப்தமாதர்கள், ஏழு தாய்மார்கள் என்றெல்லாம் இடத்துக்கு இடம் மாறுபடும். ஏழு கன்னி தேவதைகள் வானில் இருந்து இறங்கி வந்து நீராடிக் களிப்பது, துன்புறுவோருக்கு அவர்கள் உதவி செய்வது போன்ற கதைகளும் நம் நூல்களில் உண்டு. ஏழு நதிகளைப் பெண்களாகவும், நதிகள் கலக்கும் கடலை ஆணாகவும் உருவகப்படுத்தி இப்படியரு வழிபாடு துவங்கியிருக்கலாம் என்றொரு கருத்தும் உண்டு. இதற்கேற்ப... கன்னிமார் கோயில்கள் பெரும்பாலும் நீர் நிலைகளின் அருகிலேயே அமைந் துள்ளன!

இந்த வழிபாடு தொன்றுதொட்டு இருந்து வருவதற்கு, சிலப்பதிகாரமே சான்று. அதில், கண்ணகியின் வரவை அரசனிடம் வாயிற் காவலன் தெரிவிப்பதாகக் கூறும் பாடலில் ஒரு வரி... 'அறுவர்க் கிளைய நங்கை’ என்று குறிப்பிடுகிறது. அதாவது, கண்ணகியின் ஆக்ரோஷத்தை துர்க்கையுடனும், சாமுண்டியுடனும் ஒப்பிட்டுப் பேசுகிறான் அந்தக் காவலன். அறுவர்க்கிளைய நங்கை... அதாவது சப்தமாதர்களில் இளையவளான சாமுண்டி என்று ஆன்றோர் விளக்குவர். இன்னொரு தகவல்... சாமுண்டியை செல்லியம்மன் என்றும் குறிப்பிடுவர். செல்லி என்பதற்கு கன்னடத்தில் தங்கை எனப் பொருள்! ஆக... சப்தகன்னியர் வழிபாட்டின் தொன்மைக்கு இவையெல்லாம் நல்ல சான்றுகள்!'' என்கிறார்.

ஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்!

இப்படி, நமது ஆதி வழிபாடுகளில் ஒன்றாகத் திகழும் கன்னி தெய்வ வழிபாட்டின் சிறப்பை, இன்றும் உலகுக்கு உணர்த்திய வண்ணம் உள்ளது எழுவரைமுக்கி கிராமம்.

இங்கே பெட்டைக்குளம் வனப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீசப்தகன்னியர் திருக்கோயில். அந்த இளைஞனின் நினைவாக ஊருணியில் கல்தூண் ஒன்றும் உள்ளது. காலம் காலமாக இந்த தேவியரை கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்திருக்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள். இன்றும் தொழில் நிமித்தம் பல்வேறு ஊர்களில் வசித்திருக்கும் இவ்வூர்க் காரர்கள் ஒரு கோயில் விழாவென்றால் ஒன்றுகூடிவிடுவார்களாம்!

இன்னும் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்... எழுவரைமுக்கி கிராமத்தில் சப்தகன்னியர் எழுவருடன், அய்யனார் மற்றும் முத்துபார்வதி அம்மன் ஆகியோரையும் சேர்த்து 9 தெய்வங் களைத் தரிசிக்கலாம்!  

அய்யனார் இந்த ஊரின் காவல் தெய்வமாகத் திகழ்கிறார். பொதுவில் எல்லை தெய்வமாக நாமறியும் அய்யனார் குறித்து, வித்தியாசமான ஒரு தகவலைச் சொல்கிறார்கள் இந்த ஊரைச் சேர்ந்த பக்தர்கள்.

''நதிகளை உரிய பருவத்தில் உருவாக்கி அவற்றை சரியான பாதையில் வழி நடத்தி உலகிற்கு நன்மை செய்பவன் வருணன். அதனால் வருணனை மலைகளின் தெய்வம் என்றே வேதங் கள் குறிப்பிடப்படுகின்றன. அத்ரி என்றால் மலை என்று பொருள். அத்ரிவன் என்பது வருணனின் ஒரு பெயராகும். வருணன் சட்டங்களின், தர்மத்தின் தலைவன் ஆவான். எனவேதான் தர்மசாஸ்தா என்று அவனைக் குறிப்பிடுவர். புறநானூறும் 'அறப்பெயர்ச் சாத்தன்’ எனச் சிறப்பிக்கிறது'' என்கிறார்கள். தங்கள் ஊரின் காவல் தெய்வத்தை இயற்கையோடு பொருத்தி, ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அவர்கள் கூறும் தகவல், வியப்பில் ஆழ்த்துகிறது! அதேபோன்று, இவ்வூரில் அருளும் முத்து பார்வதியம்மனும் வரம் வாரி வழங்கும் கருணை நாயகி என விளக்குகிறார்கள்.

ஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்!

இந்தக் கோயில்களின் இரண்டு கல்வெட்டுகளில் மட்டுமின்றி, பழங் காலத்து ஓலைச்சுவடி நாட்டார் வில்லுப் பாட்டான குமாரசாமி வில்லுப் பாட்டிலும் இந்த ஊர் குறித்த தகவல்கள் வருகின்றன. ராணி மங்கம்மா காலத்தில், தற்போதைய நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பகுதிகள், தளவாய் சிக்கநரசய்யன் என்பவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தனவாம். அப்போது குறுநிலப் பகுதியான எழுவை மாநகர், குமாரசாமி என்பவரின் ஆதிக்கத்தில் இருந்தது. சிக்கநரசய்யன் ஆதரவுடன் இவரை வீழ்த்திவிட்டு குப்பையாண்டா என்பவர் எழுவை மாநகரின் அதிகாரத்தைக் கைப்பற்றியதாக அந்த வில்லுப் பாட்டில் வருகிறது. மேலும் நாச்சியார் கதைப்பாடல், பெருமாள் சாமி கதைப்பாடல், அந்தரமுடையார் கதைப் பாடல் போன்ற பழைமையான வில்லுப் பாட்டு இலக்கியங்கள், இந்த ஊரை எழுகரை முகரி எனக் குறிப்பிடுவதாகவும் தகவல் உண்டு.

இப்படி, கலாசாரத் தொன்மையைத் தன்னகத்தே கொண்டு திகழும் இந்த கிராமத்தின் தெய்வங்கள், சிறந்த வரப்ரசாதியாகவும் திகழ்வது விசேஷம். ஒருமுறை, இவ்வழியே வண்டியில் வந்துகொண்டிருந்த அன்பர் ஒருவர், கன்னிமார் கோயிலைக் கண்டதும் இறங்கிச் சென்று, மனதார வழிபட்டுவிட்டுச் சென்றாராம். விரைவிலேயே தொழிலில் மிகச் சிறந்த முன்னேற்றம் நிகழ்ந்ததாம். இப்போது அடிக்கடி இங்கு வந்து சப்தகன்னியரை குடும்பத்துடன் வழிபட்டுச் செல்கிறாராம்!

படை கஞ்சி!

ஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்!

''சப்த கன்னியர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை 2-ஆம் செவ்வாய், சிறப்பு பூஜைகள் நடத்தி படை கஞ்சி ஊற்றுகிறோம். இதற்காக பச்சை அரிசியில் சர்க்கரைப் பொங்கலிட்டு அதனை நைவேத்தியமாக ஸ்ரீசப்த கன்னியருக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்குகிறோம். விழாவின்போது, கன்னிப் பெண்கள் ஏழுபேரை, அம்மன் வேடம் அணிவித்து அழைத்து வருவோம். கணியான் முரசு கொட்ட, பூசாரி முன்செல்ல, இவர்கள் ஏழுபேரும் பின்தொடர்ந்து வந்து கோயிலை மூன்று முறை வலம் சுற்றுவார்கள். அதன் பிறகு ஏழுபேரும் நைவேத்திய கஞ்சியைச் சாப்பிடுவர். பின்னர், அது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தப் பிரசாதம் தெய்வீக அருமருந்து என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை!' என்கிறார் கோயிலில் பூஜை வைக்கும் சிவசுப்ரமணியம்.

அதேபோன்று, அருகில் உள்ள ஊரில் வசிக்கும் தம்பதிக்கு வெகு நாட்களாகக் குழந்தை இல்லை.

அவர்களும் இங்கு வந்து சப்தகன்னியரை வழிபட்டுச் செல்ல, இப்போது கருவுற்றிருக்கிறாள் அந்தப் பெண்மணி. இப்படி எண்ணற்ற சம்பவங் களை, தங்கள் ஊர் சாமிகளின் திருவருள் கடாட்சத்துக்கு உதாரணமாகச் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

நாமும் ஒருமுறை எழுவரைமுக்கி கிராமத்துக்குச் சென்று, அந்த ஊரை மட்டுமல்ல... தங்களின் கதைகளால், வரலாற்றால் நமது பண்டைய பெருமைகளைச் சுமந்து நிற்கும் ஒன்பது தெய்வங் களை வழிபட்டு வரம்பெற்று வருவோம்.

  படங்கள்: பி.எஸ்.முத்து