Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

Published:Updated:
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

சந்த நான் மறைகள் போற்றத்
  தமிழ் இசை மிகவும் போற்ற
இந்திரன் அயனும் மாலும்
  இருடியர் பலரும் போற்ற
நந்தியும் போற்ற நங்கை
  பங்கனும் நயந்து போற்றும்
கந்தவேள் அடியார் வாழ்த்தாம்
  கவிசொலக் களிற்றின் காப்பாம்.

- தணிகைமணி வ.சு.செங்கல்வராயப்பிள்ளை

##~##
நா
ம் வாழும் உலகம் மிகப்பெரியது. இதைப் படைத்த நான்முகன் இதைவிடப் பெரியவனாக இருக்க வேண்டும். ஆனால் அந்த பிரம்மனோ திருமாலின் உந்தியில் (நாபியில்) தோன்றியவர். பிரம்மனைப் படைத்த திருமாலோ பாற்கடலில் துயில் கொள்கிறார். எனவே, பாற்கடல் பெரியது.

அந்தக் கடலை தன் கையால் எடுத்து ஆசமனீயம் (அருந்துதல்) செய்தார் அகத்தியர். எனவே, அகத்தியர் பெரியவர். ஆனால், அந்தக் கடல் நீரை எடுத்த குடம் பெரியதல்லவா? அந்தக் குடமோ மண்ணால் ஆனது. அந்த மண்ணோ ஆதிசேஷனுக்கு ஒரு தலைச் சுமையாக இருக்கிறது. எனவே, ஆதிசேஷன் பெரியவன். அப்படி, மண்ணைச் சுமக்கும் ஆதிசேஷனை, தன் சிறு விரல் மோதிரமாக அணிந்திருக்கிறாள் பராசக்தி உமாதேவி. ஆக உமாதேவி மிகப் பெரியவள். ஆனால், அவளையும் தன் ஒரு பக்கத்தில் அடக்கிக் கொண்டிருக்கும் பரமேஸ்வரன் எல்லோரையும்விட பெரியவர் அல்லவா? அவ்வளவு பெரியவரைத் தொண்டர்கள் தம் உள்ளக் கமலத்துக்குள் அடக்கி வைத்திருக்கிறார்கள். ஆகையால், இவர்கள் எல்லாரையும்விட தொண்டர்களுடைய பெருமை மிக மிகப் பெரியது. அது சொல்வதற்கு அரியது!

இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா?

தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் ஒளவை மூதாட்டிதான்!

பொதுவாக மனிதன் மதிப்பது பொருட் செல்வம் ஒன்றைதான். ஆனால், இறைவன் திருவருளுக்கு ஏங்கி நிற்பவர்கள் மதிப்பது, அருட்செல்வம் மட்டுமே. பணம் சேர்த்து வைத்தால்தான் நன்றாக வாழ முடியும். இது யதார்த்தம். எனினும் செல்வம் சேரச் சேரக் கவலைகளும் சேர்ந்துவிடுகின்றன. பொருட் செல்வம் அமைதியைத் தராது என்று உணரத் தொடங்கியவுடன் இறைவனது திருவருட் செல்வமே நிலையானது என்று அறிந்து இறையருளை தேடிச் செல்கிறான் மனிதன்.

அமைதியில்லாத மனிதன் அமைதியைப் பெற வேண்டுமானால், தாமாகப் பெற முடியாது. அமைதியைப் பெற்ற - உணர்ந்த தொண்டர் கூட்டத்தில் சேர்ந்தால் முடியும். அருட்செல்வம் பெற்ற அடியார்களைச் சார்ந் தால் நல்ல கதி உண்டு. அடியார்களிடம் அருட்செல்வம் நிரம்பியிருக்கிறது.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

பொருட் செல்வம் உடையவர் அதை தான் செலவழித்தாலும் சரி, பிறருக்குக் கொடுத்தா லும் சரி, பொருட்செல்வம் குறைந்துவிடும். ஆனால் தொண்டர்களான அடியார்களது அருட்செல்வத்துக்கு கேடு இல்லை; லாப - நஷ்டம் இல்லாத செல்வர்கள் அவர்கள்.

'அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டால்
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே!’

- என்பது தாயுமானவர் வாக்கு. பாரதப் புண்ணிய பூமியில் எத்தனையோ இறையருள் தொண்டர்கள் - அடியார்கள் வாழ்ந்தனர்;

வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களது அனுபவங்களை - வரலாறுகளை நம் முன்னோர் பதிவு செய்து வைத்துள்ளனர். அவ்வாறு தமிழகத்தில் தொண்டர்களது பெருமைகளைப் பேசும் முதல் நூல் - ஒப்பற்ற நூல் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் ஆகும்.

தில்லைச் சிற்றம்பலவன் 'உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க, அநபாய குலோத்துங்கன் எனும் சேக்கிழார் பாடிய அற்புதமான நூல் இது. பண்டைத் தமிழ் மக்களின் ஆன்மிக, சமூக, பொருளாதார, அரசியல், கலாசார வாழ்க்கையின் பதிவாகும். அந்த நூல் எழுதப்பெறாவிடில், சைவ சமயத்தின் அடியார்களது வாழ்வையும், வரலாறையும் நமது ஆன்மிகப் பெருமைகளையும் விவரமாக அறியும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். சைவத்திருமுறைகளில் 12-ஆம் திருமுறையாகப் போற்றப்படும் பெரிய புராணத்தை ஒவ்வொரு தமிழனும் படித்து மனம் பண்பட்டு, தொண்டு மனப்பான்மையை வளர்க்க வேண்டும். ஆழ்ந்த அறிவோடு பக்தியும் பெருகும்போது தொண்டு மனப்பான்மை வளரும். சிவனருட் செல்வர்களில் சீரிய வரலாறு தமிழ் மக்களின் பண்பாட்டுத் திறவுகோல்.

சிவபெருமானின் திருக்கண்ணில் உதித்த திருமகன் ஆறுமுகப் பரமன். தேவர்கள் துயர்

தீர்க்கும் பொருட்டு, வடிவும் முடிவும் இல்லாத பரம்பொருள்... மூவிரு முகங்களும், ஆறிரு புயங்களும், மூவாறு நயனங்களும் அமைந்த திருமேனி கொண்டவன். தெய்வத் தன்மை, இளமை, இனிமை, மணம், மகிழ்ச்சி, அழகு என்னும் ஆறு தன்மைகளையுடைய ஆறுமுகவேள்.

தமிழர் நாகரீகம் தொடங்கியது குறிஞ்சி யாகிய மலையிடத்தில். மலைகள் சூழ்ந்தது முருகன் காதலித்த இடம். ஓயாது ஓடும் மேகங்கள்; நிறை மழை பொழியும் கரு முகில்கள்; காலையில் எழும் கதிரவனின் பலவண்ணக் காட்சிகள்; மாலையில் நிலாக் காட்சி; இரவில் மிளிரும் விண்மீன் தரும் வனப்புறு காட்சி என்று இத்தனைக் காட்சிகளையும் மலையிடத்தே கண்டு, மக்கள் உள்ளம் மகிழ்ச்சியினால் தெவிட்டாத இன்பத் தென்றலாக களிப்புறும்.

இந்த இயற்கை இன்பங்களை நுகர்ந்த குறிஞ்சி நில மக்கள், அதனை இயக்கும் பொருளை - அழிதல் இல்லாச் சிறப்புத் தன்மை கொண்ட பரம்பொருளைக் கண்டனர். அந்த இறையே 'சேயன்’ எனும் சேயோன். அவன் செந்நிறம் உடையவன். மங்காத மணமும், இழியாத இளமையும், அழியாத அழகும் கொண்டு எல்லா உயிர்களிடத்தும் கலந்து நின்று வளரும் இச்சேயோனை, பெரும் பெயர் முருகனாக

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

வழிபட்டனர். அவனை 'மலைக்கு நாயகன்’ 'மலை கிழவோன்’ என்று போற்றுவர் அருணகிரியார். அந்த மலை கிழவோன்... முருகன், குமரன், குகன், கந்தன் என்ற பலப் பெயர்கள் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், ஆகிய எல்லா இடங்களிலும் கோயில் கொண்டு தமிழர்களின் தனிப்பெரும் கடவுளாகப் போற்றப்படுகிறான்.

அந்த ஆறுமுகனின் அடியார் பெருமையும் அளவிடற்கரியது. சிவனடியாரைப் போற்றும் பெரிய புராணம் போன்று, கந்தனடி சீர்த் தொண்டர்களின் புகழை பேசும் நூல்- 'சேய்த் தொண்டர் புராணம்’. அற்புதமான இந்த நூல், தேனூர் வீரகவி சொக்கலிங்கம் பிள்ளையவர்களால் இயற்றப்பட்டது. இதன் வழி நின்று, மாசிலா முருகனின் அடியார்தம் வரலாற்றுப் பெருமைகளையும், அவர்கள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அருளாடல்களை யும் நாமும் அறிந்து மகிழப் போகிறோம்.

அகத்தியர்

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

'மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது’ என்றொரு பழமொழி உண்டு. மாமுனிவர் ஒருவர். குட்டையான உருவம் உடையவர். ஆனால் மிக உயர்ந்தவர். பிரம்ம தேவனின் வேள்வியில் கும்பத்தில் இருந்து ஓர் அம்சம், ஒளி வடிவாக இறங்கியது.

யாகத்தின் முடிவில் அது ஒரு முனிவராக உருப்பெற்றது. அட்சமாலை, கமண்டலம், யோக தண்டம், ஞான முத்திரை ஆகியவற்றைத் தாங்கியவராய் வெளிப்பட்ட அவரை 'கும்ப முநி’ என்று தேவர்கள் போற்றித் துதித்தனர்.

இந்த முனிவருக்கு கலச முநி, குடமுநி, கும்பசம்பவன் ஆகிய பெயர்களும் உண்டு. அகத்தில் (உள்ளத்தில்) புனிதம் எய்தி மிக மகத்துவம் உடையவர் ஆதலின் அகத்தியர் என்று பெயர்!

அவரது தோற்றம் பற்றி புராணங்கள் பலவிதமாகக் கூறுகின்றன அகத்தியரின் குள்ளமான உருவம் காரணமாக, 'குறுமுனி’ என்றும் அவரை அழைப்பர். ஞான ஒளியை உடையவர் ஆதலின் ஆகாயத்தில் அகத்திய நட்சத்திரமாக ஒளிர்பவர்; பிரும்ம ரிஷிகளில் ஒருவர்!

ரு காலத்தில் பார்வதி-பரமேஸ்வரன் திருக்கல்யாணத்துக்கு தேவர்களும் முனிவர்களும் பக்தர்களும் அரசர்களும் மேரு மலையில் ஒருங்கே வந்து கூடினர். இதனால் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது. தேவர்கள் கலங்கினர். இதைச் சரிசெய்ய, குறுமுனியை தென் திசை செல்லும்படி பணித்தார் ஈசன். இதிலிருந்தே இவரது பலமும் பெருமையும் தெரிகிறதல்லவா! சிவ திருமணத்தில் கலந்து கொள்ள இயலவில்லையே என்று வருந்திய அகத்தியருக்காக, தென்னாட்டில் 21 தலங்களில், கயிலையில் நடைபெற்ற திருமணக் காட்சியைக் காட்டி இவரை மகிழ்வித்தாராம் இறைவன்.

தென்திசை நோக்கி அவர் வந்தபோது விந்தியமலையைத் தாண்டிச் செல்லும் வழியில், முனிவர்கள் சிலர் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தனர். அதற்கான காரணத்தை வினவினார் அகத்தியர். அவர்கள், ''அன்பனே, எமது வம்சத்தில் தோன்றிய  அகத்தியன், தமது இல்லறக் கடமைகளைச் செய்யாது இருக்கிறான்.

அவன்  இல்லறம் ஏற்று உரிய கடமைக ளைச் செய்தால்தான் நாங்கள் சொர்க்கம் புக முடியும்'' என்றனர். உடனே, ''அந்த அகத்தியன் நான்தான். உங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுவேன்!'' என்றார் அகத்தியர். பின்னர் விதர்ப்ப நாட்டு இளவரசி லோபாமுத்திரையை மணந்து, இல்லறக் கடமைகளை இனிது செய்யத் தொடங்கினார். முன்னோர் சுவர்க்கம் அடைந்தனர்.

சூரபதுமனால் விளைந்த துயரம் நீங்க, இந்திரன் சீகாழியில் ஒரு நந்தவனம் அமைத்து சிவனாரைத் தினமும் மலரால் அர்ச்சிக்கத் தொடங்கினான். மழையின்மையாலும், வெப்பத்தாலும் அந்த நந்தவனங்கள் கருகின. இந்திரன் நாரதரை வேண்டினான். நந்தவனம் பிழைக்க அகத்திய முனிவரிடத்து உள்ள கமண்டலத்தில் இருக்கும் காவிரி நதியை சோழநாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கும்படி தூண்டினார் நாரதர். இந்திரன் விநாயகரைத் துதித்தான். அவர் காக்கை வடிவு கொண்டு, கும்ப முனிவரின் கமண்டலத்தைக் கவிழ்த்தார் காவிரியாம் பொன்னி நதி பாய்ந்து சீகாழியில் நந்தவனம் செழிப்புற்றது.

அகத்தியரின் பராக்ரம நிறைந்த செயல்களில், வில்வலன் வாதாபி எனும் அரக்கர்களை அடக்கியது; சூரியனின் போக்கைத் தடுமாற வைத்த விந்தியமலையை அடக்கியது; ராவணனை இசையால் வென்று, இலங்கைக்கு ஓட்டியது முதலானவை குறிப்பிடத்தக்கவை.

ரு முறை காசிக்குச் சென்ற அகத்தியர், தமக்குச் செந்தமிழும் சிவஞானமும் போதிக்கும்படி சிவனாரை வேண்டினார். அவருக்கு திருத்தணியின் பெருமையை எடுத்துரைத்த ஈசன், ''தணிகை மலைக்குச் சென்று ஞான சக்தி தரனை பூசித்து வணங்கு. உன் எண்ணம் நிறைவேறும்’ என்றார். அகத்தியர் அவ்வாறே வேலனை பூசித்து அஷ்டமா ஸித்திகள் கைவரப் பெற்றார். முருகனையே குருவாகக்கொண்டு தவம் இயற்றி முத்தமிழ் தத்துவத்தையும் உபதேசமும் பெற்றார்.

'அகத்திய முநிக்கொரு தமிழ்த்ரையம் உரைத்தவன்...’

'இயலும் இசைகளும் நடனமும் வகை வகை சத்யப் படிக்கினிது அகத்தியர்க்கு உணர்த்தியருள் தம்பிரான்...’ என்றெல்லாம் போற்றுவார் அருணகிரியார்.

முத்தமிழ் இலக்கணங் களையும் உள்ளடக்கி அகத்தியர் செய்தது ''அகத்தியம்'' எனும் இலக்கண நூலாகும். சிவனாருக்கு முருகன் உபதேசித்தது போல, இவருக்கும் இனிய தமிழில் உபதேசித்தான். இதையே, 'சிவனை நிகர் பொதிய முனிவரை மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோன்’ என்று திருப்புகழில் பாடுவார் அருணகிரிநாதர் அது மட்டுமா?

பொதிகை மலையில் அகத்தியர் ஸ்தாபித்த தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்ததாகவும் வரலாறு உண்டு!

- அடியார் வருவார்...