Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Published:Updated:
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முத்தமிழ் தெய்வ புலமையிற் சான்ற முதிய ஒளவை
சித்த மகிழ்ந்து விரைந்து செய் பூசைத் திறங்கருதா
மத்த மிலைந்த மகேசன் கயிலைக்கண் மா இவர்ந்தே
உத்தமச் சேரன் வருமுனர்ச் சேர்த்தருள் ஒண்களிறே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- விநாயகர் அலங்காரம்

##~##
ஒள
வை- சிறுவயது முதல் விநாயகரை இடைவிடாது தொழுது வந்தவர். இளமையிலேயே தெய்வீக ஞானம் பெற்றவர். சுகபோகங்களையும், இல்லற வாழ்வையும் கடந்து, முதுமையையும் துறவையும் விநாயகரிடம் வேண்டிப் பெற்றவர். உடம்பினைப் பக்குவம் செய்யவே முதுமையைக் கேட்டுப் பெற்றவர். 'என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து’ என்பதற்கு ஏற்ப, குருவாக வந்த விநாயகரே அவரை வழிநடத்திச் சென்றார்.

நாள்தோறும், நறுமணம் கொண்ட மலர்களால் கணபதிக்கு அர்ச்சனை புரிவார் ஒளவையார். செந்தமிழ்ப் பாடல்களால் பிள்ளையாரைத் துதி செய்வார். இவ்வாறு அவர் பூஜித்து வரும் நாளில், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அவருடைய நண்பர் சேரமான்பெருமாள் நாயனாரும் கயிலை மலைக்குச் செல்ல விரும்புவதாக ஒரு செய்தி வந்து சேர்ந்தது. தானும் அவர்களுடன் கயிலைக்குச் செல்ல வேண்டும் எனும் ஆவல் பிறந்தது ஒளவைக்கு. அன்றைய பூஜையை சீக்கிரமாக முடித்துவிட்டு, கயிலைப் பயணத் தில் அவர்களுடன் கலந்துகொள்ள எண்ணினார் அவர். அதன்படி, பூஜையை வேகமாகச் செய்யத் துவங்கினார்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

அவரின் எண்ணத்தை அறிந்த விநாயகர், ''அம்மையே! என்ன அவசரம்? நிதானமாக பூஜை செய்யுங்கள். அவர்களுக்கு முன்ன தாக உங்களைக் கயிலையில் சேர்ப்பது எனது பொறுப்பு!'' என்று அருளினார். ஒளவையும் நிதானமாக தனது பூஜையை முடித்து, தும்பிக்கையானை வணங்கினார். வழிபாடு நிறைவு பெற்றதும், ''சீதக்களபச் செந்தாமரைப்பூம் பாதச்சிலம்பு பல இசைபாட...'' என பாடத் துவங்கி, வித்தக விநாயகனின் விரைகழலைச் சரணடைந்து, துதித்துப் போற்றினார்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

இதனால் மகிழ்ந்த பிள்ளையார் பேருருவம் (விஸ்வரூபம்) எடுத்து நின்றார். வானுலகம் வரை உயர்ந்து நின்ற ஆனை முகனின் திருவடிகள், பாதாளம் வரை சென்று நின்றன. உலகெங்கும் வியாபித்தது அவரது திருமேனி. அந்த தெய்வீகக் காட்சியில் சித்தம் கலந்து இன்புற்றார் ஒளவை. அவரைத் தமது துதிக்கையால் தூக்கி, கயிலையில் சேர்த்தார் விநாயகர்.

அழகிய குதிரையில் சேரமான் பெருமாள் நாயனாரும், வெள்ளை யானையின் மீது  சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பயணித்து கயிலையை அடைந்தனர். அங்கே தங்களுக்கு முன்னால், கயிலையின் கோபுர வாயிலில் வீற்றிருந்த ஒளவையைக் கண்டு வியப்புற்றார் சேரமான். ''அம்மையே! எவ்வாறு தாங்கள் எங்கட்கு முன்பு வந்து சேர்ந்தீர்?'' என்று கேட்டார். உடனே ஒளவையார், ''மதுர மொழி நல் உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை முதிர நினையவல் லார்க்(கு) அரிதோ? முகில்போல் முழங்கி அதிர நடந்திடும் யானையும் தேரும் அதன்பின்வரும் குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே!''

என்றொரு பாடலைப் பாடினார். அதாவது, ''சேரர் குடியாகிய உயர்ந்த மரபிலே தோன்றிய மன்னனே! நன்மையைத் தருகின்ற உமையம்மையின் குமாரனது திருவடித் தாமரைகளை எப்போதும் அழுத்தமாக நினைக்கும் அன்பர்க்கு இது அரிய செயல் இல்லையே! நீங்கள் ஏறி வந்த யானையும் குதிரையும் இடி முழக்கம்போல முழங்கிக்கொண்டு நிலம் அதிரும்படியாக வேகமாக வந்தன. ஆனால், காத தூரம்கூட நடக்க இயலாத இந்தக் கிழவி (கணபதியின் கருணையால்) எளிதாகக் கடந்து வந்துவிட்டாள் அல்லவா?'' என்றார் ஒளவை.

இப்படி ஒளவையால் பூஜிக்கப்பட்டு, அவருக்கு விஸ்வரூபம் காட்டி, நாமெல்லாம் விநாயகர் அகவல் பெறக் காரணமாக இருந்த பெரியானைக் கணபதியை நாமும் உடனே தரிசிக்க வேண்டும் அல்லவா? வாருங் கள், திருக்கோவலூருக்குச் செல்லலாம்!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில், அந்தகாசுரனை அழித்த தலம் கோவில்வீரட்டம். ஆழ்வார்கள் அனுபவித்த ஸ்ரீஉலகளந்த பெருமாள் கோயிலும், ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனமும் அமைந்த தலமிது. மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் பிறந்ததும் இங்குதான்.

விழுப்புரத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்திலும் உள்ள இந்தத் தலத்தை, விழுப்புரம்- காட்பாடி ரயில் மார்க்கமாகவும் அடையலாம். தென்பெண்ணை நதியின் தென்கரையில் உள்ள இந்தத் தலத்தில், ஸ்ரீவீரட்டேச்வரர் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார்; அம்பிகை அருள்மிகு சிவானந்தவல்லி.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடிப் பரவிய இந்தத் தலத்தில் மெய்ப்பொருள் நாயனார் வாழ்ந்தார். இங்கு கோயிலின் முகப்பு வாயிலில் வலப் புறம் காட்சியளிப்பவர் புகழ்பெற்ற பெரியானைக் கணபதியார். இங்கு, ஒளவையார் கயிலை செல்லும் சிற்பக் காட்சியும் உள்ளது.

ஒளவை பாடிய விநாயகர் அகவல், மந்திர ஆற்றல் மிக்கது. அகவல் என்றாலும், அகவுதல் என்றாலும்... மனம் ஒடுங்கிய நிலையில் ஓதுதல் என்று பொருள். விநாயகர் அகவலின் தொடக்கத்திலும் முடிவிலும் விநாயகரின் பாதச் சிலம்பையும் கழலையும் துதிப்பதன் மூலம், அவரின் திருவடிகளைப் போற்றுகிறார் ஒளவைப் பிராட்டி. அற்புதமான இந்தப் பாராயண நூல் 72 வரிகளைக் கொண்டது. யோகிகள் வழிபடுகின்ற ஞான மார்க்கத்தை வகுத்துச் சொல் லும் தனிச் சிறப்புடையது.

ஒளவையார் அகவல் தோன்றியது விநாயகராகிய ஒளிவடிவை நோக்கி! அந்த அகவல் வெளிவந்துள்ள அமைப்பு, மொழி ஆகியவை ஒலி வடிவு.

இந்த ஒலி வடிவானது, ஒளி வடிவை நோக்கித் தோன்றி, அதனை ஓதுபவருக்கு ஒலியின் அதிர்வினால் ஒளி வடிவின் அனுபவத்தையும், ஒலி வடிவின் அனுபவத்தையும் ஒருங்கே தருகிறது!

தொலைக்காட்சியில் ஒளியும் ஒலி யும் இணைந்து இயங்குவது போல ஒளவையின் விநாயகர் அகவலும் ஒளிக்கும் ஒலிக்கும் நிலையமாக அமைந் துள்ளது. அதனால்தான், விநாயகர் அகவல் எல்லா நிலையிலுள்ள மக்களுக்கும் ஒருங்கே பயன்தரக்கூடிய வழிபாட்டு நூலாக விளங்குகிறது. அது பக்தி நூல்; ஞான நூல்; யோக நூல்!

- பிள்ளையார் வருவார்...
  படங்கள்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism