

அட்சய (அக்ஷய) என்றால் எடுக்க எடுக்கக் குறையாதது என்று பொருள். சித்திரை மாதம் அமாவாசை கழிந்து 3-ஆம் நாள் வருவது அட்சய திருதியை. இந்தத் திருநாளில் துவங்கப்படும் சுப காரியங்களும், முதலீடுகளும் நல்லதொரு விளை வைக் காணும் என்பது நம்பிக்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நாலு யுகங்களில் முதல் யுகமான சத்ய யுகத்தின் முதல் நாள் அட்சய திருதியை என்கின்றன ஞான நூல்கள். புராண முனிவராம் வேத வியாசர், விநாயகரின் துணையுடன் மகாபாரதம் எழுதத் துவங்கியதும் இந்தத் திருநாளில்தான்.
பகீரதன் பிரயத்தனத்தால் கங்கை பூமிக்கு வந்ததும் அக்ஷய திருதியை அன்றுதான். அரக்கர்களாகிய சும்ப- நிசும்பனை அம்பாள் வதம் செய்ததும் அட்சய திருதியை தினத்தில்தான். ஸ்ரீபரசுராம அவதாரம் நிகழ்ந்தது அட்சய திருதியை அன்றே.
##~## |
ஜைன மதத்தைச் சேர்ந்த முதல் தீர்த்தங்கர் ரிஷபதேவ சுவாமி, தன் ஆறு மாத உபவாசம் முடிந்து, உணவு தேடி அலைந்து, ஏழு மாதமும் ஒன்பது நாளும் ஆனபிறகுதான் அவருக்கு உணவு கிடைத்தது. அவர் முதன்முதலாகக் கரும்புச்சாறு குடித்து விரதத்தை பூர்த்திசெய்தது இந்தத் திருநாளில்தான்.
அக்ஷய திருதியை அன்று, பிருந்தாவனத்தில் தாமோதர் கோயில் மற்றும் ராதாகிருஷ்ண கோயிலில் சந்தனக்காப்பு சாத்துவார்கள்.
ராஜஸ்தானில் அட்சய திருதியை தினத்தை 'அகாதீஜ்’ என்று கொண்டாடுகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் 'சுகல் திருதியா’ என்று பெயர். கர்நாடகாவில் 'அக்ஷய தடிகே’ என்பார்கள்.
அட்சய திருதியைத் திருநாளில் செய்யப்படும் தானங்களும் பன்மடங்கு பலனைப் பெற்றுத்தரும். அட்சய திருதியையில் அரிசி, புளி, வெல்லம், தானிய வகைகள், துணி, குடை, விசிறி, நெய், சர்க்கரை, சந்தனம் என்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களையே தானமாகத் தந்து, புண்ணியம் பெறலாம்.
- கிரிஜா நாராயணன், புனே