Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

Published:Updated:
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

ராமாயண காவியத்தில் சத்தியத்துக்கும் தர்மத்துக்கும், நேர்மைக்கும் நியாயத்துக்கும் பிரதிநிதியாக ஸ்ரீராமன் விளங்கினான் என்றால், மகாபாரதத்தில் ஸ்ரீராமனுக்குச் சமமாக நின்றவன் யுதிஷ்டிரன் எனும் தருமபுத்திரன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாண்டவர்களில் மூத்தவனான தருமன் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் ஹரிச்சந்திரனுக்கு வாரிசாக இருந்தான். மாற்றானும் போற்றும்படி தர்மத்தினின்று பிறழாது, அப்பழுக்கில்லாமல் ஒழுக்கத்துடன் வாழ்ந்த அந்தத் தருமனும் ஒருமுறை பொய் பேசினான் என்றால், அது தர்மமாகுமா?

குருக்ஷேத்திரப் போரில் இக்கட்டான ஒரு சூழலில் ஸ்ரீகிருஷ்ணனின் ஆணைப்படி, தருமன் பொய் ஒன்று கூறியதாக மகாபாரத நிகழ்ச்சி ஒன்று சித்திரிக்கிறது. 'கண்ணனே காட்டிய வழி ஆனாலும், தருமன் தர்மம் தவறலாமா?’ என்பதே வினா. இதற்கு விடை காணும் முன்பு அந்தச் சம்பவத்தைச் சற்று நினைவுகூர்வோம்.

கௌரவர்களுக்கு மட்டுமின்றி, பாண்டவர்களுக்கும் குருவாக விளங்கியவர் ஆச்சாரியர் துரோணர். அந்தணராகப் பிறந்தாலும், போர்ப் பயிற்சியில் வல்லவராக, க்ஷத்திரியனாகவே வாழ்ந்தவர் அவர். செஞ்சோற்றுக் கடன் கழிக்க துரியோதனன் பக்கம் நின்று, தர்மத்தையே எதிர்த்துப் போர் புரிந்தவர். குருக்ஷேத்திரப் போரில் கௌரவர்களுக்கு எப்படியாவது வெற்றியைத் தேடித் தர வேண்டுமென்று, தன் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான அருமைச் சீடன் அர்ஜுனனையே எதிர்த்துப் போர் புரிந்துகொண்டிருந்தார் துரோணர். ஊழிக்காலத் தீயைப் போலவும், ருத்ரனின் தாண்டவத்தைப் போலவும், அவர் வில்லிலிருந்து அம்புகள் பறந்துகொண்டிருந்தன. இருந்தாலும், தன் சீடனான அர்ஜுனனை வெல்லமுடியாமல் திணறிக் கொண்டிருந்தார் துரோணர்.

##~##
அர்ஜுனனை அழித்துவிட்டால், பாரதப் போரே ஒரு முடிவுக்கு வந்துவிடும். அதன் பின்பு துரியோதனனுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், அந்த முயற்சியில் துரோணர் நம்பிக்கை இழந்தார். அடுத்ததாக, கௌரவர்களுக்குத் தோன்றிய யுத்த தந்திரம், தருமனை உயிருடன் சிறைப்பிடிப்பது என்பதுதான். அந்தப் பொறுப்பும் துரோணரிடம் தரப்பட்டது. தருமனை எதிர்த்துத் துரோணர் தன் போரைத் தொடங்கினார். அர்ஜுனனை அவனது வீரமும், கண்ணனின் கருணையும் காத்துக்கொண்டிருந்ததால், துரோணரால் அவனை வெல்ல முடியவில்லை. தருமனைச் சுற்றி, அவனுடைய சத்தியமே அரணாக நின்றபடியால், அவனிடமும் துரோணரின் முயற்சிகள் பலிக்க வில்லை. யுத்தம் தொடர்ந்தது.  அதேநேரம்... காலதேவன், தன் பாசக் கயிற்றுடன் போர்க்களத்தில் காத்திருந்தான் துரோணருக்காக.

தன்னை மரணம்கூட நெருங்க முடியாதபடி நாராயண அஸ்திரங் களால் பாதுகாத்துக் கொண்டு, எதிரியை அழிக்க முழுமூச்சுடன் போராடிக்கொண்டிருந்தார் துரோணர். குறிப்பிட்ட தருணத்தில் துரோணரின் மரணம் சம்பவித்தே ஆக வேண்டும். அது இறைவன் விதித்த நியதிப்படி நடக்க வேண்டிய நிகழ்ச்சி. அதனை நடத்தவேண்டிய நாராயணனே அங்கு நின்றுகொண்டிருந்த படியால், காலதேவன் தன் பணி நடக்க அந்த நாராயணனையே நம்பியிருந்தான். கணப்பொழுதில் கண்ணன் சங்கல்பத்தால் நிகழ்ச்சிகள் கோவையாக நடக்க ஆரம்பித்தன.

கௌரவரவர்களின் மிக முக்கியமான பட்டத்து யானை ஒன்று, பீமனைத் தாக்கிக் கொண்டிருந்த கௌரவ சேனையின் முன் வரிசையில் நின்றிருந்தது. அதன் பெயர் அஸ்வத்தாமன். கண்ணன் செய்த சமிக்ஞையைப் புரிந்து கொண்டு, தன் கதாயுதத்தால் அந்த யானையின் மத்தகத்தை ஓங்கி அடித்தான் பீமன். உடனே அது பிளிறிக் கொண்டு, மரண தேவனின் முதல் களப்பலியாக வீழ்ந்து மடிந்தது. உடனே சேனையிலுள்ள வீரர்கள், 'பீமன் அஸ்வத்தாமனை வீழ்த்திவிட்டான்’ என்று கோஷமிட்டனர்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

யுத்த பேரிகைகளுக்கும் சங்கநாதங்களுக்கும் நடுவில் இந்த கோஷமும் துரோணர் காதில் விழுந்தது. ஒரு கணம் அவர் கதி கலங்கினார். அதற்குக் காரணம், அவரின் அருமை மகன் பெயரும் அஸ்வத்தாமன் என்பதுதான். வீழ்ந்தது தன் மகனாக இருக்குமோ என்ற எண்ணம் அவரைக் கலக்கியது. போர்க்களங்களிலே பொய் வதந்திகளைக் கிளப்பிவிட்டு, சேனைகளைச் சிதறச் செய்வதும் ஒரு யுத்த தந்திரம்தான். எனவே, இது பொய்யாகவும் இருக்கலாம் என்று அவருக்குள்ளேயே ஒரு சமாதானக் குரலும் எழுந்தது.

குழம்பிய நிலையில் அவர் போர் புரியும் வேகம் சற்றுத் தடைப்பட்டது. போர்க்களத்திலும் சத்தியம் தவறாதவன் தருமன் ஒருவனே! எனவே, உண்மையை தருமனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என விரும்பினார் துரோணர்.

கண்ணன் கீதையில், 'எண்ணங்களும் நானே, எண்ணச் செய்கின்றவனும் நானே!’ என்கிறான். துரோணரின் சிந்தனை கண்ணன் சித்தத்தில் பிரதிபலித்தது. உடனே தருமனிடம் சென்று, ''தர்மபுத்திரா! இப்போது துரோணர் வருவார். பீமன் அஸ்வத்தாமனைக் கொன்று விட்டானா என்று கேட்பார். நீ 'ஆம்’ என்று சொல்ல வேண்டும்'' என்றான்.

''அதெப்படி முடியும் கண்ணா? இறந்தது அஸ்வத் தாமன் என்கிற யானைதானே? கொலையிலும் கொடியது பொய். அந்தப் பாவத்தை எப்படிச் செய்வேன்? 'தருமனே தர்மம் தவறிவிட்டான்’ என்று உலகம் என்னை இகழாதா?'' என்று வாதிட்டான் தருமன்.

''தருமபுத்திரா! அப்படியானால் என்ன சொல்லப் போகிறாய்?'' என்று கேட்டான் கண்ணன்.

''இல்லை என்றுதான் சொல்வேன்'' என்றான் தர்மன்.

''அதுவும் பொய்தானே..? அஸ்வத்தாமன் என்ற யானை பீமனால் வீழ்த்தப்பட்டிருக்கிறது. அதை நீயே பார்த்திருக்கிறாய். அந்த யானையையே மனதில் கொண்டு துரோணர் அந்தக் கேள்வியைக் கேட்டு, நீ இல்லை என்று பதில் கூறினால், உண்மையை ஒளித்துப் பொய் கூறிய பிழை அப்போது வராதா?'' என்று கேட்டான் கண்ணன். தருமன் குழம்பினான்.

தருமத்தைக் காப்பதற்காகப் பேசப்படும் சொல்லே சத்தியம்; வாய்மை என்பது தீமை இலாத சொல்; தெய்வத்தின் குரலுக்குச் செவி சாய்ப்பதே அறநெறி; அதுவே சத்தியம் என்பதைக் கண்ணன் தருமனுக்குக் கணத்தில் தெளிவாக்கினான். ''துரோணர் கேட்டால், 'பீமன் அழித்தது அஸ்வத்தாமன் என்ற யானையை’ என்று மட்டும் கூறு. நடந்ததை நடந்ததாகக் கூறுவதால், பொய் பேசியதான பழிக்கு வாய்ப்பே இல்லை'' என்றான் கண்ணன். பழி வராமல் தருமத்தைக் காத்துக் கொண்டிருந்தான் தருமபுத்திரன். பழியை ஏற்றுக்கொண்டு தருமனையே காத்துக் கொண்டிருந்தான் ஸ்ரீகிருஷ்ணன்.

துரோணர் உரக்கக் குரல் எழுப்பிக் கேட்டார்... ''யுதிஷ்டிரா... பீமன் அஸ்வத் தாமனை அழித்துவிட்டது உண்மையா?'' ஒரு கணம் திகைத்தான் தருமன். பொய்யோ மெய்யோ, கண்ணன் காட்டிய வழியே மேலெனப்பட்டது. ''பீமன் அழித்தது அஸ்வத்தாமன், என்ற யானையைத்தான்!'' என பதிலளித்தான். அப்படி அவன் பதில் கூறும்போது, 'அஸ்வத்தாமன்’ என்ற வார்த்தை ஒலித்த பின்பு, கண்ணன் தன் பாஞ்சஜன்யம் எனும் சங்கை உரக்க ஊதினான். தருமன் பேசியதில் கடைசி இரண்டு வார்த்தைகள் கண்ணனின் சங்கநாதத்தில் கலந்து, துரோணரின் காதில் விழாமலே காற்றில் மறைந்துவிட்டன. ''பீமன் அழித்தது அஸ்வத்தாமன்'' என்பது மட்டுமே துரோணர் காதில் விழுந்த வாசகங்கள். மகனை இழந்த துயரில் ஒரு கணம் அவர் உடல் தடுமாறியது. வில் கையிலிருந்து நழுவியது. கண்ணனின் சங்கிலிருந்து ஒலியாக ஒலித்த காலதேவன், காத்திருந்த தருணம் வந்தது. எங்கிருந்தோ, ஒரு போர் வீரன் பளபளக்கும் வாளுடன் துரோணர் மீது பாய்ந்தான். அவன் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் மகன் திருஷ்டத்யும்னன். துரோணரைக் கொல்வதற்கு என்றே துருபதன் தவமியற்றிய போது, அக்னியில் பிறந்தவன்!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

துரோணரும் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனும் சிறு வயதில் ஒரே குருகுலத்தில் பயின்ற மாணவர்கள், உற்ற நண்பர்கள்.

துரோணர் வறுமையில் வாடிய அந்தணன். துருபதன் பாஞ்சால நாட்டு இளவரசன். தான் பெரியவனாகி பாஞ்சால நாட்டு மன்னனான பின்பு, பொன்னும் பொருளும் தந்து, தன் நண்பனை உயர்த்துவதாக அவன் கூறியதுண்டு. காலப்போக்கில் இருவரும் பிரிந்தனர். துருபதன் பாஞ்சால மன்னன் ஆனான். துரோணர் வில் வித்தை கற்று போர்த் தொழிலில் வல்லவரானார். ஆனால், வறுமை அவரை விடவில்லை. ஒரு முறை தன் நண்பன் துருபதனிடம் உதவி கேட்டு வந்தார் துரோணர். உயர்ந்த நிலை வரும்போது, தாழ்ந்தவர்களை தெரிந்தவர்களாகக் கூட காட்டிக் கொள்ள சிலர் விரும்ப மாட்டார்கள். அந்த வரிசையில், பதவிச் செருக்கால் துரோணரின் நட்பை மதியாது, அவரது வறுமையை இகழ்ந்து பேசி, அவமானப்படுத்தினான் துருபதன்.

அந்தணனாகப் பிறந்து க்ஷத்திரியனாக வாழ்ந்த துரோணரின் உள்ளம் கொதித்தது. பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் விஸ்வ ரூபம் எடுத்தது. அதன்பின்பு துரோணர் கௌரவ- பாண்டவர்களின் ஆசானாகி, அவர்களுக்கு வில்வித்தை கற்பித்து முடித்த பின்பு, குருதட்சணையாகப் பாஞ்சால நாட்டின் மீது படையெடுத்து துருபதனைக் கைது செய்து வரும்படி தன் சீடர்களுக்கு ஆணையிட்டார். அர்ஜுனன் அந்தக் கட்டளையை நிறைவேற்றினான். துருபதன் நாடிழந்து முடியிழந்து துரோணர் முன் நின்றான். ஜெயித்த நாட்டை பிச்சையாக மீண்டும் துருபதனுக்கே தந்து, தன்னை அவமதித்ததற்குப் பழிதீர்த்துக் கொண்டார் துரோணர்.

பகைமை என்பது தீர்த்துக்கொள்வதால் முடிவதில்லை. பாதிக்கப்பட்டவன் மேலும் பழிதீர்க்கும் படலத்தைத் தொடருவான். துருபதனும் துரோணரை அழிக்கக் கடும் தவம்புரிந்து, யாக அக்னி மூலம் ஒரு மகனையும், மகளையும் பெற்றான் துருபதன்.

அந்த மகனே திருஷ்டத்யும்னன்; மகள்தான் திரௌபதி. தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கவும். சகோதரி திரௌபதியை அவையிலே அவமானப் படுத்திய கௌரவர்களைப் பழிவாங்கவும் துடித்துக் கொண்டிருந்தான் திருஷ்டத்யும்னன். அவன் எதிர்பார்த்த தருணம் வாய்த்தது.

திருஷ்டத்யும்னனின் கூரிய வாளில் காலதேவன் புகுந்து கொண்டான். அந்த வாள் துரோணரின் சிரத்தை அறுத்தது. க்ஷத்திரியனாக வாழ்ந்த துரோணரின் உடல் மண்ணில் வீழ்ந்தது. அதனுள்ளே இருந்த அந்தணர் துரோணரின் ஆன்மா, அவரின் தந்தை பாரத்வாஜ மகரிஷியோடு ஒன்றாகக் கலந்தது. துரோணரை வெற்றி பெற வேண்டுமென்றுதான் பாண்டவர்கள் போர் புரிந்தார்களே தவிர, அவரைக் கொல்ல வேண்டுமென்று அல்ல.

அதனால், அவரின் மரணம் அவர்களைப் பெரிதும் பாதித்தது. தன் வினைகளால் தன் மரணத்தை நிர்ணயித்துக் கொண்டவர் துரோணர். ஆசானை அழித்தவர்கள் என்ற பாவத்துக்கு ஆளாகாமல் பாண்டவர்களைக் காத்து, காலதேவன் தன் கடமையைச் செய்ய கருணை புரிந்தான் கண்ணன்.

சாதாரண மனிதர்களால் மரணம் அடையாமல், அக்னியில் தோன்றிய அற்புத சக்தியால் துரோணருக்கு மரணம் கிடைக்கச் செய்தான் ஸ்ரீகிருஷ்ணன். தருமனை தர்மம் தவறாமல் காத்தவனும் கண்ணன்தான். மேலும், அவர் உடலுக்குப் புகழும், ஆன்மாவுக்கு அதற்குரிய புகலிடமும் தேடித் தந்தான் ஸ்ரீகிருஷ்ணன்.

ஸ்ரீகிருஷ்ணனின் செயல்களை விமர்சிக்கும் முன், அவன் நோக்கங்களைப் புரிந்துகொண்டால்தான், அவன் கருணையும் அவன் செயல்களின் காரண காரியங்களும் நமக்குப் புலப்படும்.

- இன்னும் சொல்வேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism