



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சுவாதி நட்சத்திரத்தை 'நிஷ்ட்யா’ என்று வேதம் செல்லமாக அழைக்கும். தர்மசாஸ்திரமும் 'நிஷ்ட்யா’ என்ற சொல்லுக்கு சுவாதி நட்சத்திரம் என்று பொருள் சொல்லும் (நிஷ்ட்ய ஈசப்த: ஸ்வாதௌ). இந்த நட்சத்திரத்தின் தேவதை வாயு பகவான்; உயிரினங்களின் இயக்குனர்.
நட்சத்திரத்தின் ஒரு புறம் கொடி அசைந்து கொண்டிருக்கும். மறுபுறம் கொடி அசைந்து அசைந்து அசதியுற்றுப் படுத்திருக்கும். வாயு ஆக்கவும் செய்வான்; அழிக்கவும் செய்வான். நல்லவர்களை உலக இயக்கத்துக்காக காக்க வேண்டும். தீயவர்களை, இயக்கம் தடைபடாமல் இருக்க அகற்றவும் வேண்டும். அந்தப் பணியைச் செவ்வனே செய்பவன் என்பதை சொல்லாமல் சொல்கிறது, இருபுறமும் இருக்கும் கொடிகள். அரசர்களின் தேரில் பறக்கும் கொடி, அம்பலத்தில் கொடிமரத்தில் பறக்கும் கொடி, ஊரில் மாளிகையின் உச்சியில் பறக்கும் கொடி, கோட்டை-கொத்தளத்தில் ஏற்றிய கொடி அத்தனையும் மக்களின் நிக்ரஹானுக்ரஹங்களை... அதாவது அரவணைப்பு - பாதுகாப்பு ஆகிய இரண்டையும் உறுதிப்படுத்தும் அடையாளமாகத் திகழும். இதையே சுவாதியின் இரண்டு கொடிகளும் வலியுறுத்தும் (வாயோர் நிஷ்ட்யா வ்ரததி:. பரஸ்தாதஸித்திரவஸ்தாத்).
போரையும் சமாதானத்தையும் வரவேற்க கொடி பயன்படுத்தப்படும். மகிழ்ச்சி ஆரவாரத்தில் கொடியசைத்து பெருமைப்படுத்துவோம். இன்றும் சமாதானத்துக்கு வெண்மைக்கொடி பயன்படுத்தப்படுகிறது. காற்றில் அசையும் கொடிக்குத்தான் பெருமை. மூச்சுக் காற்றில் இயங்கும் உயிரினங்களுக்குப் பெருமை.
##~## |
பாணிக்ரஹணத்தில் ஒலிக்கும் மந்திரம் வாயு பகவானின் பெருமையை விளக்கும் (ஹிரண்ஹஸ்த ஐரம்ம: ஸத்வாமன் மனஸம் கிருணோது). மழைநீர்த் துளிகள் முத்துச் சிப்பியில் விழும் வேளையில், சுவாதி நட்சத்திரத்தின் இணைப்பு இருந்தால், அந்த நீர் முத்தாக மாறும் என்கிறார் பர்த்ருஹரி (ஸ்வாதௌ ஸாகரசுத்தி ஸம்புடகதம் தன்மௌத்திகம் ஜாயதெ). படிப்படியாக உயர்ந்த நிலையை எட்டிப் பிடிக்க சுவாதியின் இணைப்பு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.
'உனது சேர்க்கை, ஜீவராசிகளை தத்தமது காரியங்களில் ஈடுபட வைத்து முன்னேற உதவுகிறது. எதிரிகளை என் நினைவில் இருந்து விரட்டி அமைதியை அளிப்பவன் நீ. சுவாதி நட் சத்திரத்துடன் இணைந்த நீ எனது கடமைகளை நிறைவேற்ற செல்வத்தை அள்ளித்தர வேண்டும். தகாத செயல்களிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும். எனது வேண்டுகோளை ஏற்று தக்க தருணத்தில் உதவி, எனது மன உளைச்சலுக்கு இடமளிக்காமல் பாதுகாக்க வேண்டும்’ என்ற வேண்டுகோள் வேதத்தில் ஒலிக்கும் (வாயுர் நக்ஷத்ரமப்யேதி நிஷ்ட்யாம்...).

துலா ராசியில் முழுமையாக இடம்பிடித்த நட்சத்திரம். அதிபதி சுக்கிரனாக இருந்தாலும், நான்கு பாதங்களில் சம பங்கில் குரு மற்றும் சனியுடன் தொடர்பு இருப்பதால், அதில் பிறந்தவனது பெருமை சமுதாயத்தில் அங்கீகாரம் பெற்றுவிடும். முதல், கடைசி பாதங்களில் குருவுக்குத் தொடர்பும்; இடைப்பட்ட இரண்டு பாதங்களில் சனியின் இணைப்பும்... உழைப்பிலும் சிந்தனையிலும் நிறைவை எட்டவைக்கும் என்கிறது ஜோதிடம்.
இன்றைய சூழலிலும் குரு, சனி இருவரது சாரத்தை வைத்து மொத்தம் நட்சத்திரத்துக்கும் பலன் சொல்லி முடிக்கும் திறமையைப் பார்க்கிறோம். எளிய முறையில் ஜோதிடப் பலனை விளக்க, இந்த இருவரும் பயன்படுகிறார்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவன், முதலில் ராகு தசையைச் சந்திப்பான். அது 18 வருஷங்கள் நீளும். இந்தத் தசை சதயத்துக்கும் திருவாதிரைக்கும் பொருந்தும். அதற்குப் பிறகு வரும் குரு, சனி ஆகியோரின் தசைகள் இளமையின் எல்லை வரை பரவியிருப்பது சிறப்பு. உழைப்பும் சிந்தனையும் சரியான தருணத்தில் நிகழும்போது, அதை ஊக்குவிக்கும் இரண்டு தசைகளும், அவர்களது வாழ்நாளை செழிப்பாக்கும். பலம் பொருந்தியிருந்தால் பெருமை பெறுவான்; மாறாக இருந்தால் இகழ்வைச் சந்திப்பான். அவனது கர்மவினையின் தரம் நிர்ணயம் செய்யும்.
காலபுருஷனின் வயிற்றுக்குக் கீழ்ப்பகுதியைக் குறிக்கும் (வஸ்தி) துலாம். அதன் திறமை - திறமையின்மையை வரையறுக்கும். தராசு வழி எடைபோடும் அடையாளம், மற்றவர்களை இனம் கண்டு எடைபோடும் நாகரீகத்தை ஊட்டும். அதற்கு ஆதாரமாக சனியும் குருவும் விளங்குகிறார்கள். செயலில் இறங்கும் முன்பு விஷயத்தை ஆராயும் திறன் அவனில் இருக்கும். அது, அவன் முன்னேற்றத்தை உறுதி செய்யும். புலனடக்கம் பெற்றிருப்பான். வாணிபத்தில் திறமை இருக்கும். ஈவு-இரக்கம் இருக்கும். சொல்லிலும் செயலிலும் இனிமை இருக்கும். அறத்துக்குப் புறம்பாகச் செயல்பட மாட்டான்... இவை அத்தனையும் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் காணலாம் என்கிறார் வராஹமிஹிரர்.
'அறம்’ என்றால் வேதகாலக் கருத்துகள் அல்லது பழைய நடைமுறைகள் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. நமது கடமை களும், நமது உரிமைகளைப்பெற பிறருக்கு குந்தகம் வராமல் செயல்படும் நீதிநெறிகளும் அறத்தில் அடங்கும். அறம் என்பது மனித பண்பில் அடங்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்குத் தலைவனாகத் திகழ்வான். நாவன்மையில் மக்களை ஈர்ப்பான். அறம், பொருள், இன்பம் - ஆகிய மூன்றையும் குறைவின்றி சுவைத்து மகிழ்வான். செயலில் சுறுசுறுப்புடன் இயங்குவான். காரியத்தை எட்ட... சில தருணங்களில் குறுக்கு வழியைக் கையாளுவான். எவரையும் தனக்கு எதிரிகளாக மாற விடமாட்டான். குலம் காப்பதில் அக்கறை இருக்கும்... இவை அத்தனையும் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவனில் தென்படலாம் என்கிறார் பராசரர்.
ஒரு தாரையை உள்ளடக்கியது சுவாதி நட்சத்திரம். மென்மை என்றே கடினம் என்றோ சொல்ல இயலாமல், நடுநிலையில் தென்படும் நட்சத்திரம். இது சர நட்சத்திரமும் ஆகும். நகரும் செயல்பாடுகளில் இதன் இணைப்பு சிறப்பு பெறும். இடம் பெயர்தல், வாகனம், பணம், பொருள் ஆகியவற்றின் பரிமாற்றம், போக்குவரத்து, பல்பொருள் அங்காடி, தேச சஞ்சாரம், சமுதாய சேவை, நாளேடுகள், கடிதப் போக்குவரத்து போன்ற விஷயங்களில் இந்த நட்சத்திரத்தின் சேர்க்கை வெற்றியைத் தர உதவும் என்கிறார் பராசரர்.
தேவர்கள், அறம் ஓதும் பெரியோர்கள் ஆகியோரிடம் பிரியமாக இருப்பான். உலக சுகத்தை சுவைப்பான். செல்வச்சீமானாகவும் இருப்பான். ஆனால் ஆராயாமல் காரியத்தில் இறங்கி ஆதங்கப்படுவான் என்று எடைபோடுகிறது ஜாதக பாரிஜாதம்.
முதல் பாதத்தில் பிறந்தவன் திருடனாக மாறுவான். 2-வதில் ஆல்பாயுஸ்ஸாக இருப்பான். 3-வதில் அறத்தை விட்டு அணு அளவும் அசைய மாட்டான். 4-ல் அரசனாக அல்லது மக்கள் தலைவனாகத் திகழ்வான் என்கிறது பிரஹத் சம்ஹிதை.

முதல் பாதத்தில் தோன்றியவன் அரசாங்க வேலையில் அமர்வான் அத்துடன் தைரியம், அறிவு, செல்வச்செழிப்பு ஆகியவையும் இருக்கும். அறத்துக்கு விளக்கவுரை அளிப்பவனாக வும் தென்படுவான். 2-வதில் பிறந்தவன், ரகஸ்யமான அதாவது உளவு வகைகளில் ஈடுபடுவான். அளவுக்கு அதிகமான பெண்ணாசை இருக்கும். கெட்ட சகவாசம், ஆசையை அடக்க இயலாமை ஆகிய அத்தனையும் தென்படும். 3-வது பாதத்தில் பிறந்தவன் கோணல் புத்தி, தவறான எண்ணம், வன்முறையில் ஈடுபாடு, பிறரைப் பகைத்துக் கொள்தல், பிறர் துன்பத்தில் இன்பம் காணுதல், மறைமுகமாக எதிர்ப்பவனாக இருத்தல் அத்தனையும் தென்படலாம். 4-வதில் சிற்பக் கலை, வாஸ்து, அணிகலனில் ஆர்வம், தன்னை தனது தகுதிக்கும் அதிகமாக உயர்த்திக்கொள்பவன், அலட்சியப்போக்கு, வேலையில் ஈடுபாடின்மை அத்தனையும் இருக்கும் என்கிறது பலசார ஸமுச்சயம். கர்ம வினையில் பாகுபாடுக்கு இணங்க விபரீதமான விளைவுகளும் அவனில் தென்படுவது இயல்பு என்று ஜோதிடம் சொல்லும்.
'வாம் வாயவெ நம:’ என்று சொல்லி 16 உபசாரங்களைச் செய்யலாம். அல்லது 'யம் வாயவெ நம:’ என்கிற தர்மசாஸ்திர மூலமந்திரத்தையும் பூஜைக்கு கையாளலாம். 'ஆவாதி வாஹிபேஷஜம்’ என்ற மந்திரத்தைச் சொல்லி, விஸ்தாரமாக பூஜை செய்யலாம். விருப்பப்படி செயல்பட்டாலே விரும்பியதை அளிப்பவன் அவன்.
வாயவெ ஸ்வாஹா, நிஷ்ட்யாயை ஸ்வாஹா காமசாராய ஸ்வாஹா- என்ற மந்திரத்தாலும் வழிபடலாம். மந்திரம் தெரியாதவர்கள் 'வாயவே நம:’ என்று சொல்லி தண்டனிட்டு வணங்கி வழிபடலாம். மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு உடலை தூய்மையாக்கி, வாயுவை வணங்கலாம். 'ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோ ஜஹி. ஸர்வ காமான் ச மே தேஹி வாயுதேவ நமோஸ்துதே’ என்கிற செய்யுளை 16 தடவை சொல்லி அடிபணியலாம்.
'பிராணன் என்ற வாயு உணவையும் ஊக்கத் தையும் அளித்து வளர்க்கிறது. உடலில் தங்கிய கழிவுப் பொருள்களை அப்புறப்
படுத்தி, தூய்மைப்படுத்தி உணவை ஏற்கும் தகுதியை வரவழைக்கிறது அபானம் என்ற வாயு’ என்று விளக்கம் அளிக்கும் வேதம் (ப்ராணாபா நௌ மிருத்யோர்மா பாதம்...). வாயு உடலின் இயக்குநராக மட்டுமில்லாமல் பராமரிப்பை யும் பேணிக் காப்பதால், அவனது பணிவிடை நிரந்தர அமைதிக்குக் காரணமாகும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் அத்தனையும் பல கோணங்களில் உலக நன்மைக்காக செயல்பட்டு, அத்துடன் தனி மனிதனின் பூர்வஜன்ம வினையை வெளிக்கொணர்ந்து, அதன் பலனை ஏற்க வைப்பதால்... அவை, மனித வாழ்வின் முழுமைக்குக் காரணமாக மாறுகின்றன.
- வழிபடுவோம்