Published:Updated:

ஞானப் பொக்கிஷம்! - 2

ஞானப் பொக்கிஷம்! - 2

ஞானப் பொக்கிஷம்! - 2

ஞானப் பொக்கிஷம்! - 2

Published:Updated:
ஞானப் பொக்கிஷம்! - 2
ஞானப் பொக்கிஷம்! - 2

ம்பது ஆண்டுகளுக்கு முன்னால், திருச்சியில் ஒரு பள்ளிக் கூடத்தில் நடந்த நிகழ்ச்சி இது. ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்: ''மாணவர்களே! தராசில் இந்தப் பக்கம் ஒரு கிலோ பஞ்சு இருக்கிறது. அந்தப் பக்கம் ஒரு கிலோ இரும்பு இருக்கிறது. இரண்டில் எது அதிக நிறை (Weight) உள்ளதாக இருக்கும்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவன் ஒருவன் எழுந்து, ''இரும்புதான் அதிக எடை உள்ளதாக இருக்கும்'' என்றான்.

ஆசிரியர், ''தவறு'' என்றார். அடுத்த மாணவன் எழுந்து, ''பஞ்சுதான் அதிக எடையாக இருக்கும்'' என்றான்.

ஆசிரியர் ''இதுவும் தவறு'' என்று சொல்லி மறுத்தார்.

##~##
மாணவர்களுக்குக் குழப்பம். ஆசிரியரே தொடர்ந்தார். ''பஞ்சும் ஒரு கிலோ, இரும்பும் ஒரு கிலோ எனும்போது, ஒன்றைவிட ஒன்று எப்படி அதிக நிறை கொண்டதாக இருக்கும்?! இரண்டும் சமமாகத்தானே இருக்கும்! என்ன சொல்கிறார்கள் என்பதை நிதானமாகக் கேட்டு, அவசரப்படாமல் அறிவால் ஆலோசிக்க வேண்டும்'' என்றார்.

மாணவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அந்த மாணவர்களில் அடியேனும் ஒருவன். அந்த நினைவிலேயே சமீபத்தில் ஒரு பள்ளிக்கூடத்துக்குக் கதை சொல்லப் போனபோது, ''ஒரு கிலோ பஞ்சு, ஒரு கிலோ இரும்பு. இவற்றில் எது அதிக எடை கொண்டதாக இருக்கும்?'' என்று கேட்டேன்.

''இரும்புதான்'' என்றான் மாணவன் ஒருவன்.

''எப்படியப்பா? இரண்டும் சம எடைதானே!'' என்றேன்.

நிதானமாக எழுந்த அந்த மாணவன், ''கோவிச்சுக்காதீங்க தாத்தா! ஒரு கிலோ பஞ்சு, ஒரு கிலோ இரும்பு - இந்த இரண்டினாலும் உங்களை அடிக்கிறேன். எது அதிகமாக வலிக்கும்?'' என்று கேட்டான். ஆடிப்போய் விட்டேன். இன்றைய இளைய தலைமுறை மட்டுமல்ல; குழந்தைகளும் கூர்மையான அறிவு படைத்தவர்களாக இருக்கிறார்கள். அந்தக் கூர்மையை மழுங்கவிடாமலும், அடுத்தவர்களைக் குத்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.

Childrens are like wet cement. Whatever falls on them makes an impression’ என்பது ஆங்கிலப் பழமொழி.

புதிதாகப் பூசப்பட்ட சிமெண்ட் தரை காயாத நிலையில் இருக்கும்போது, அதில் நம் காலைப் பதித்தால் நமது காலடித் தடம் அதில் பதிந்துவிடும். தரை காய்ந்தபிறகும் காலடித் தடம் அப்படியே இருக்கும். அதுபோல... சிறியவர்களின் உள்ளங்களில் நல்லதைப் பதிப்போம். இதோ! அந்த நல்லதும் சிறிய பாடலாகவே வருகிறது. இந்தப் பாடல் இடம் பெற்ற நூலின் பெயர்- சிறுபஞ்ச மூலம். காரியாசான் என்பவர் இந்நூலை இயற்றினார். பாயிரம் உட்பட 100 பாடல்கள் கொண்ட இந்த நூல், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும்.

அபூர்வமான தகவல்கள் அடங்கிய இந்த நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து (பஞ்ச) விதமான தகவல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பாடல் சிறியதுதான்; ஆனால் மனித வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகளைச் சொல்வதால் 'சிறுபஞ்ச மூலம்’ எனப் பெயர் பெற்றது. இந்நூலில் இருந்து ஒரு பாடல்...

குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
உளம் தொட்டு உழு வயலாக்கி - வளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம்பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது.

குளம் வெட்டுதல், மரம் வளர்த்தல், வழி நடைப்பாதை உண்டாக்குதல், தரிசு நிலத்தைப் பண்படுத்தி நெல் விளையும் பூமியாக மாற்றுதல், கிணறு தோண்டுதல் எனும் ஐந்து விதமான செயல்களை இப்பாடல் சொல்கிறது.

அந்த ஐந்தையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

குளம்: நீர்ப் பராமரிப்பு என்பது இல்லாவிட்டால் எந்த ஜீவராசியும் உயிர் வாழ முடியாது. அதனால்தான், முதலில் குளம் வெட்டுதல் என்கிறார் நூலாசிரியர். இதை மேலும் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே, குளம் வெட்டுவதில் தொடங்கிய இப்பாடல் கிணறு தோண்டுவதைச் சொல்லி முடிகிறது. குளம் என்பது ஊருக்கு வெளியே அமைந்திருப்பது; மனிதர்களுக்கும், ஆடு-மாடு முதலான மிருகங்களுக்கும் பயன்படக்கூடியது. அப்படிப்பட்ட குளத்தை வெட்டிப் பராமரிக்க வேண்டும்.

ஞானப் பொக்கிஷம்! - 2

மரம் வளர்த்தல்: மரங்கள் இல்லையென்றால் மழை இல்லை. மழை இல்லை என்றால் எதுவுமே இல்லை. மரங்களை வெட்டிப் போட்டு மறியல் செய்யாமல், மரங்களை வளர்க்க வேண்டும்.

வழி நடைப்பாதை: வழி நடைப்பாதைகளை நன்றாகச் சீர்திருத்தி, செப்பனிட்டு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் போக்குவரத்து சரியாக இருக்கும். தேவையான பொருட்கள் ஊருக்குள் வரும்; இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் வெளியே போய் விலையாகும். ஊர் வளம் பெருகும்.

விளை நிலமாக்குதல்: மேற்கூறிய மூன்றும் இருந்தாலும் சோம்பேறித்தனம் இருந்தால், நன்றாக விளையும் பூமி கூடப் பாழ்பட்டுத் தரிசாகப் போய்விடும். உழைப்பின் மேன்மையை விளக்குவதுடன், 'நிலத்தைத் தரிசாகப் போடாதே! தரிசு நிலத்தையும் விளை நிலமாக்கு!’ என்று எச்சரிக்கிறது இப்பாடல்.

கிணறு தோண்டுவது: குளம் ஊருக்கு வெளியே; கிணறு ஊருக்கு உள்ளே - என நீர்ப்பராமரிப்பின் அவசியத்தைக் குறிக்கிறது. இன்றோ ஊருக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி... குளங்களும் கிணறுகளும் இருக்கும் நிலை என்ன? மன்னிக்கவும்! இருந்த நிலை என்ன? கர்நாடகாவிடமும் கேரளாவிடமும் கையேந்தி, சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

மற்றொரு விதத்திலும் இப்பாடல், கடுமையாக எச்சரிக்கிறது. அதாவது, இப்பாடலில் சொல்லப்பட்ட ஐந்தும் பொதுச் சொத்துக்கள். குளம், மரம், வழி நடைப்பாதை, தரிசு நிலம், கிணறு ஆகிய ஐந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த ஐந்தும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டால் - சொர்க்கம்; இல்லையேல் நரகம்தான் என்றும் எச்சரிக்கிறது இந்தப் பாடல்.

இப்படிப்பட்ட தகவல்களை சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம். அவர்கள் தலைமுறையாவது நலம்பெறட்டும்!

(இன்னும் அள்ளுவோம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism