Published:Updated:

கேரளாவில்... மதுரை மீனாட்சி!

கேரளாவில்... மதுரை மீனாட்சி!

கேரளாவில்... மதுரை மீனாட்சி!

கேரளாவில்... மதுரை மீனாட்சி!

Published:Updated:
கேரளாவில்... மதுரை மீனாட்சி!
கேரளாவில்... மதுரை மீனாட்சி!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கே
ரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது பல்லசேனா கிராமம். (கோயம்புத்தூரில் இருந்து சுமார் 78 கி.மீ. தொலைவு). இங்கேயுள்ள மீன் குளத்தி பகவதி அம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற தேவியாகத் திகழ்கிறாள். இந்தக் கோயிலை, ஸ்ரீபழைய காவில் பகவதி கோயில் என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள்.

கோயிலும், கோயிலையட்டி உள்ள பெரிய தீர்த்தக் குளமும் கொள்ளை அழகு! மீன் குளத்தி பகவதி வேறு யாருமில்லை... சாட்சாத் மதுரை மீனாட்சியேதானாம்!

முன்னொரு காலத்தில் சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் வசித்த மூன்று வீர சைவ மன்னாடியார் (தமிழ்நாட்டில் மன்றாடியார்) இனத்துக் குடும்பங்கள் கடும் பஞ்சத்தில் இருந்து தப்ப, பசுமையான இடம் தேடிக் கிளம்பின. அவர்கள் செய்து வந்த வைர வியாபாரத்துக்கும் பஞ்சப் பிரதேசத்தில் வழியில்லாமலிருந்தது. அவர்கள் கேரளாவைச் சேர்ந்த பாலக்காடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்குள்ள செழிப்பால், அவர்களது வணிகமும் செழித்தது. எனவே, அங்கேயே வசிக்கத் துவங்கினர்.

இவர்களில், மதுரை ஸ்ரீமீனாட்சியம்மையின் மீது அளவற்ற பக்தி கொண்ட பெரியவர் ஒருவர், தன் குடும்பத்தாருடன் மதுரைக்குச் சென்று, அம்பாளைத் தரிசித்து வருவது வழக்கம். வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், காடு- மலைகளைக் கடந்து, நடந்தே சென்று மீனாட்சி அம்மனைத் தரிசித்து வருவார்.

கேரளாவில்... மதுரை மீனாட்சி!

ஒருமுறை, மதுரையம்பதிக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய பிறகு, அந்தப் பெரியவர் நீராடுவதற்காகக் குளத்துக்குச் சென்றார். கரையில் குடையை விரித்து, பொருட்களை அதனடியில் வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார். பிறகு கரைக்கு வந்தவர், குடையை எடுக்க முயன்றார். ஆனால், குடை அசையக்கூட இல்லை. குடையை மட்டுமின்றி, அதன் கீழே வைத்திருந்த பொருட்களையும் எடுக்கமுடியவில்லை. அதிர்ந்து போனார் பெரியவர்.

பிறகு, அங்கே விளையாடிக்கொண்டு இருந்த இரண்டு சிறுவர்களை அழைத்து, 'இந்தப் பொருட்களையும் குடையையும் பார்த்துக் கொள்ளுங்கள். இதோ, வந்து விடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு, ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குச் சென்றார். வீட்டில் விவரம் சொல்லி, குடும்பத்தாருடன் குளக்கரைக்கு வந்தார். ஆனால், அவர் களாலும் எடுக்கமுடியவில்லை. அப்போது, அங்கே ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. அனைவரும் சிலிர்த்தார்கள். ஜோதிடர் ஒருவரிடம் விவரம் சொன்னார்கள். அவர் வந்து பார்த்துவிட்டு, 'இந்தக் குடை பதிந்திருக்கும் இடத்தில், மதுரை ஸ்ரீமீனாட்சி பிரஸ்னம் ஆகியிருக்கிறாள்’ என்று தெரிவித்தார்.  

அப்போது, 'இந்தத் தள்ளாத வயதில் நீ நெடுந்தொலைவு வந்து சிரமப்பட வேண்டாம். உனக்காக இங்கேயே வந்திருக்கிறேன். இங்கே எனக்குக் கோயில் கட்டு’ என்று அசரீரி கேட்டதாம். அதன்படி அந்தப் பெரியவரும், அவர் குடும்பத்தாரும் அங்கே ஒரு கோயிலை எழுப்பி, வழிபடத் துவங்கினார்கள். அதுவே 'குடைமன்னு’ என இன்றும் அழைக்கப்படுகிறது.    

கேரளாவில்... மதுரை மீனாட்சி!
கேரளாவில்... மதுரை மீனாட்சி!

காலங்கள் ஓடின. சுமார் 400 வருடங்களுக்குப் பிறகு, 'வீரசைவ மன்னாடியார்’ என்ற அந்தச் சமூகத்தின் தலைவர் மற்றும் கோயில் அர்ச்சகர் ஆகியோரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், ஊருக்குள் புதிதாகக் கோயில் கட்டும்படி பணித்தாள். அதன்படியே ஊரின் மையத்தில் கோயில் கட்டப்பட்டு, புனர்பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மன்னாடியார் குடும்பத்தாராக இருந்து சிறப்புறச் செயல்பட்டனர்.

ஆரம்ப காலத்தில் மூன்றாக இருந்த மன்னாடியார் குடும்பங்கள் இப்போது மொத்தம் 110 மனையைச் சேர்ந்தவர் களாக விரிவடைந்துள்ளன. வியாபாரம் மற்றும் தொழில் காரணமாக,  வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மன்னாடியார் குடும்பத்தார், முக்கிய விழாக்களின்போது இங்கு வரத் தவறுவதில்லை.

மீன்குளத்தி பகவதி கோயில், கேரள பாணியில் அமைந்த அற்புதக் கோயில். வடக்கு மற்றும் மேற்கு திசையில் நுழைவாயில்கள் உள்ளன. கோயிலின் கொடிமரம் தேக்கு; இதனை செப்புத் தகட்டால் வேய்ந்துள்ளனர். இதைக் கடந்தால் மீன்குளத்தி பகவதியின் அற்புதமான சந்நிதி. மூல விக்கிரகம் தவிர, சப்த மாதர்கள், ஸ்ரீகணபதி, ஸ்ரீவீரபத்ரர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீபரமேஸ்வரன், ஸ்ரீபைரவர், பிரம்ம ராட்சஸ், சாஸ்தா ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மற்ற நாட்களில், அதிகாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு, காலை 10.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மற்றபடி, எல்லா நாட்களிலும் மாலை 5.30 மணிக்குத் திறந்து இரவு 7.30 மணிக்கு நடைசாத்துவது வழக்கம்.

நவராத்திரி, திருக்கார்த்திகை, மண்டல விளக்குத் திருவிழா, பள்ளிசேட்டை, பைரவர் திருவிழா என்று பல விழாக்கள் இருப்பினும் 8 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் மாசித் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகிறது. ஒட்டன் துள்ளல், கதகளி (ராமாயண, மகாபாரதக் காட்சிகளை கதகளி ஆட்டத்தில் கண்டு மகிழலாம்.) போன்றவை மாசித் திருவிழாவின் சிறப்பு அம்சங்கள்.

கேரளாவில்... மதுரை மீனாட்சி!

குளக்கரையில் வைத்த குடை மற்றும் பொருட் களை எடுக்க முடியாதபடி மண்ணில் புதைந்திருந்த போது, இரண்டு சிறுவர்கள் அவற்றைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்கள், அல்லவா? அந்தச் சிறுவர் களுக்கு நன்றி தெரிவிக்கிற விதமாக, சிறுவர்களின் வழியில் வந்த குடும்பத்தாரது வீரவாள், திருவிளக்கு ஆகியவை மீன்குளத்தி பகவதிக்கு நடைபெறும் ஊர்வலத்தில் முன்னே எடுத்துச் செல்லப்படும்.  

குறிப்பிட்ட சமூகத்தவர் நிர்வகிக்கும் ஆலயம் என்றாலும், அனைத்து மக்களும் பாரபட்சமின்றி வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

மீன்குளத்தி பகவதி ஆலய வரலாற்றை ஆராய்ச்சி செய்து நூல்கள் எழுதி வெளியிட்டு வருபவரும், ஆலய டிரஸ்டி குடும்பத்துப் பெரியவருமான சி.அப்புண்ணி மன்னாடியாரைச் சந்தித்தோம். ''ஆனந்த விகடனில் 'கேரள விஜயம்’ தொடரில், பரணீதரன் இந்தக் கோயிலைப் பற்றி எழுதியிருக்கிறார். திருமண பாக்கியம், சந்தான பாக்கியம், நோய் நிவாரணம், காரிய ஸித்தி மற்றும் அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்க அருள்பாலிப்பாள்  ஸ்ரீமீன்குளத்தி பகவதி அம்மன். தீராத நோயால் அவதிப்படுவோர், இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடினால், விரைவில் குணம் அடைவார்கள் என்பது ஐதீகம்! சோழ தேசத்துக் குடும்பத்தாருக்கு அடைக்கலம் தந்து வியாபாரத்தையும் செழிக்கச் செய்தவள். எனவே இங்கு வந்து பிரார்த்தித்தால், வியாபாரம் சிறக்கும் என்பது நம்பிக்கை'' என்று நம்பிக்கை மலரச் சொல்கிறார் அப்புண்ணி மன்னாடியார்.

அழகிய மீனின் கண்களை உடையவள் மதுரை அங்கயற்கண்ணி ஸ்ரீமீனாட்சி. கேரள மண்ணில், மீன்குளத்தி பகவதி எனும் திருநாமத்துடன் அழகு மிளிரக் காட்சி தரும் தேவி, இங்கேயும் அருள் மழை பொழிந்து வருகிறாள்.

படங்கள்: வி.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism