Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

சோழ தேசத்தின் தலைநகரமாக, பன்னெடுங்காலமாக தஞ்சாவூர் இருந்து வந்தது. தஞ்சாவூருக்கு அந்தப் பக்கம் திருச்சிராப்பள்ளியும் இந்தப் பக்கம் கும்பகோணமும் மயிலாடுதுறையும் முக்கிய நகரங்களாக இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேபோல், தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் கடற்கரைக்குச் செல்வதற்கு திருவாரூர் எனும் முக்கிய நகரத்தைக் கடக்க வேண்டும்.

##~##
சோழ தேசத்தின் மிகச் செழிப்பான ஊர்களில் திருவாரூர் முக்கியமானது. ஊரின் மையப்பகுதியில் இருக்கும் அந்த பிரமாண்ட கமலாலயத் திருக்குளமும், குளக்கரையில் மிகப் பிரமாண்டமான மதிலுடன் கூடிய மிகப் பெரிய ஆலயமும் ஊருக்கே அழகு சேர்ப்பவை!

இங்கே குடிகொண்டிருக்கும் ஸ்ரீதியாகேசரும் ஸ்ரீகமலாம்பாளும் அழகு ததும்பியபடி காட்சி தருபவர்கள்; அருளும் பொருளும் அள்ளித் தருபவர்கள்; ஞானமும் முக்தியும் தந்து ஆட்கொள்பவர்கள். பிறந்தாலே முக்தி தரும் திருத்தலம் அல்லவா திருவாரூர்?!

அப்பேர்ப்பட்ட புண்ணியம் நிறைந்த ஆருரில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது திருத்தேரோட்டம். ஆழித்தேர் என்று சொல்லப்படும் மிகப்பிரமாண்டமான திருத்தேர், தேரடி வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே ஆடி, அசைந்து பவனி வரும் அழகே அழகு!

ஆலயம் தேடுவோம்!

தேரின் பிரமாண்டத்தையும் அசைவையும் கண்டு சிலிர்த்துப் போகிற பக்தர்கள், 'ஆரூரா... தியாகேசா...’ என்று உற்சாகக் குரல் கொடுப்பார்கள்; தலைக்கு மேல் கைகளைக் குவித்து, மனமுருக வேண்டுவார்கள்.

ஆழித்தேரோட்டத்தைத் தரிசிக்க, சோழ தேசத்தின் பல ஊர்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக, வண்டி கட்டிக் கொண்டு வருவார்கள் பக்தர்கள். திருச்சியில் இருந்தும் தில்லையம்பதியில் இருந்தும், திருவையாறில் இருந்தும், சீர்காழியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், மாட்டு வண்டிகளைப் பூட்டிக் கொண்டு, கட்டுச்சாதக் கூடையை எடுத்துக் கொண்டு தேரோட்ட வைபவத்துக்கு வருவார்கள்.

ஆலயம் தேடுவோம்!

நான்கு அல்லது ஐந்து நாள் பயணத்துக்குப் பிறகு திருவாரூர் வந்துவிட்டால், ஸ்ரீதியாகேசர் கோயிலைச் சுற்றி தங்கிக் கொள்வதற்கு பல இடங்கள் தயார் செய்யப்பட்டிருக்கும். ஒருகட்டத்தில் மன்னர் பெருமக்கள், தியாகேசர் கோயிலைச் சுற்றிலும் ஊரின் எல்லைப் பகுதிகளிலும் கோயில்கள் கட்டினார்கள்; குளங்கள் வெட்டினார்கள்.

குளத்தில் நீராடிவிட்டு, கோயில் மண்டபங்களில் இளைப்பாறுவார்கள். இளைப்பாறி முடிந்ததும், கோயில் மடப்பள்ளியில் இருந்தும், வேறு இடங்களில் இருந்தும் மிகப்பெரிய பாத்திரங்களில் உணவெடுத்து வருவார்கள். அகன்ற தாமரை இலையில், சர்க்கரைப் பொங்கலும் தயிர்சாதமும் வழங்கப்படும். உணவருந்திவிட்டு, அங்கேயே ஒரு தூக்கம் போட்டுவிட்டு, மாலையில் திருக்குளத்தில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு, தங்கியிருக்கிற கோயிலின் ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு, திருவீதியுலா வரும் தியாகேசரையும் கமலாம்பாளையும் கண்ணாரத் தரிசிப்பார்கள்.

பிறகு, தியாகேசர் கோயிலுக்குச் சென்று சந்நிதி சந்நிதியாகச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, கமலாலயத் திருக்குளத்தின் படிக்கட்டுகளில் காற்றாட உட்கார்ந்து கதை பேசிவிட்டு, விழா முடிந்ததும் தங்களது ஊர்களுக்கு வண்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பிச் செல்வார்கள். அப்படிக் கிளம்பி ஊரை அடைந்தால், அடுத்த திருவிழா வரைக்கும் பேசுவதற்கும் பூரிப்பதற்கும் வியப்பதற்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கும்!

ஆரூர் என்று போற்றப்படும் திருவாரூரில், ஸ்ரீதியாகேசர் கோலோச்சுகிற புண்ணிய தலத்தில், அழகு கொஞ்சும் ஸ்ரீகமலாம்பாள் கொலுவிருக்கும் அற்புதமான திருத்தலத்தில், பிறந்தாலே முக்தி தரும் புண்ணிய பூமியில், அந்த ஆலயத்தைச் சுற்றி, ஊரைச் சுற்றி ஏராளமான ஆலயங்கள் உள்ளன. அதில், ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகருணாகரேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று.  

திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள புதுத்தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகருணாகரேஸ்வரர் கோயில். ஸ்ரீதியாகேசர் கோயிலில் இருந்து சுமார் அரை பர்லாங் தூரத்தில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில் அத்தனை சாந்நித்தியமானது என்று பூரிக்கின்றனர் திருவாரூர் மக்கள்.

''ஒருகாலத்தில் ஐந்து கால பூஜைகளும் அமர்க்களமாக நடந்த கோயில் இது. இன்றைக்கு ஒருகால பூஜையாகச் சுருங்கிவிட்டது வேதனையாக இருக்கிறது. திருவாரூரில் தேரோட்டம் என்றால், ஊரே களைகட்டிவிடும். அப்போது எங்கள் ஸ்ரீகருணாகரேஸ்வரர் கோயிலைப் பார்க்கவேண்டுமே..! அடடா... தேர் பார்க்க வந்திருக்கும் மொத்தக் கூட்டமும் இங்கே வந்து செல்வது, இன்றைக்கும் கண்களில் அப்படியே இருக்கிறது'' என்று பெருமையுடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

ஆலயம் தேடுவோம்!

''கருணாகரேஸ்வரர் எனும் திருநாமத்துக்குத் தகுந்தபடி, வருகின்ற பக்தர்களை அவ்வளவு கருணையுடன் அருள்பாலிப்பவர் சிவபெருமான். லிங்க மூர்த்தம் கொள்ளை அழகு! அதேபோல், மூக்குத்திச் சுடர் விட, கண்களில் ஞானம் தகதகக்க, நமக்கெல்லாம் ஞானச் சுடரேற்றுகிறவள் ஞானாம்பிகை. அற்புதமான இந்தத் தலம், சிதிலம் அடைந்து, நீண்டகாலமாக வழிபாடுகளே இல்லாமல் போய்விட்டது'' என்கிறார் பசுபதி குருக்கள்.

பிறகு, சிவனடியார்கள் பலரின் உதவியுடன் உழவாரப் பணிகள் செய்யப்பட்டு, பிராகாரப் பாதைகள் சற்றே திருத்தப்பட்டு, ஒரு கால பூஜை மட்டும் நடந்தேறி வருகிறது. தேரோட்டத்தின்போது ஏராளமான பக்தர்களுக்கு விநியோகிக்க, கமகமக்கும் உணவுகளைத் தயார் செய்த கோயிலின் மடப்பள்ளியில், எப்போதேனும் நைவேத்தியத்துக்கான பிரசாதம் தயார் செய்வதே அபூர்வமான காரியமாகிவிட்டதுதான் வேதனை!

கிட்டத்தட்ட, ஸ்ரீகருணாகரேஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நடந்து 40, 50 வருடங்களாகிவிட்டன. கோயிலின் சாந்நித்தியத்தை அறிந்த அன்பர்கள், அத்திப்பூத்தாற்போல எப்போதேனும் இங்கு வந்து, ஸ்வாமிக்கு புது வஸ்திரமும் அம்பாளுக்குப் புதுப்புடவையும் அணிவித்துவிட்டு, சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் நைவேத்தியம் செய்துவிட்டுப் போவார்கள். மற்ற நாளில், 'என்னைத் தரிசிக்க என் அடியார் யாரும் இன்றைக்கு வரவில்லையா?’ என்பது போல் வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்தக் கருணாமூர்த்தி.

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசண்முகர், ஸ்ரீமகாலக்ஷ்மி ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன.  ஸ்ரீஅப்பர் சுவாமிகளின் விக்கிரகமும் இங்கே உள்ளது.

ஒருகாலத்தில் ஓஹோ என்றிருந்த ஆலயம், இன்றைக்கு வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இல்லாமல் இருக்கலாமா? ஒரு விளக்கை ஏற்றினால், இருளையே விரட்டியடிக்கலாம் என்பார்களே?! ஞானச் சுடரென ஒளிவீசும் ஸ்ரீஞானாம்பிகை சந்நிதிக்கு தினமும் விளக்கேற்றவும் எண்ணெய்யும் திரியும் வழங்கி உதவினால், நாமோ நம் குழந்தைகளோ ஞானவான்களாகத் திகழ்வது உறுதியாயிற்றே!

ஐந்து கால பூஜைகள் நடந்த ஆலயத்தில், தற்போது ஒரு கால பூஜைதான் நடைபெறுகிறதாம்! இரண்டு கால பூஜை, மூன்று கால பூஜை என்று படிப்படியாக பூஜைகள் அதிகரிக்க நாம் பக்திக் கரம் நீட்டினால், ஸ்ரீகருணாகரேஸ்வரர் நம்மைத் தம் கருணைக் கரங்களால் அணைத்துக்கொள்வார் என்பது உறுதி!

திருவாரூர் புதுத்தெருவில் உள்ள ஸ்ரீகருணாகரேஸ்வரர் கோயில் புதுப்பொலிவு பெறுவதற்கு நம்மால் ஆனதைச் செய்வோம்; இறையருள் நமக்கு என்றென்றும் துணைநிற்கும்!

  படங்கள்: ஜெ.வேங்கடராஜ்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism