
அதிகார வரம்புகளை மீறியதில் நவக்கிரகங்களுக்கும் இடம் உண்டு. இஷ்டத்துக்கு வரங்களைக் கொடுத்ததால், அதுவே சாபமாகிப் போக... இறுதியில், நவக்கிரகங்களும் சிவ வழிபாட்டில் ஈடுபட்டு, நாடி வருவோருக்கு நன்மைகள் செய்யும் வரத்தைப் பெற்றன என்பது சூரியனார் கோயிலின் ஸ்தல புராணத் தகவல்!
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. பயணித்தால் சூரியனார்கோவிலை அடையலாம். ஸ்ரீஉஷாதேவி ஸ்ரீசாயாதேவியுடன் சிவசூரியபெருமான் காட்சி தந்தருளும் ஒப்பற்ற திருத்தலம் இது!
சூரியன் முதலான நவக்கிரகங்கள், தங்களின் வாகனங்களுடன் ஆயுதம் ஏதுமின்றி, சாந்தமான திருமுகத்துடன் அனுக்கிரக மூர்த்திகளாக இங்கே அருள்பாலிக்கின்றனர்.
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். இங்கே சூரியனை நோக்கியபடி, குரு பகவான் தனிச்சந்நிதியில் காட்சி தருகிறார். எனவே இவரை வணங்கினால், குரு பலம் கூடும் என்பது ஐதீகம்!

இங்கே, சனிப்பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய வைபவங்கள் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் என அமர்க்களப் படுகின்றன. தவிர, எல்லா நாட்களிலும் இங்கு சிறப்பு பரிகார பூஜைகளும் நடைபெறுகின்றன. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டு, தோஷ நிவர்த்தி மற்றும் பரிகார பூஜைகள் செய்து பலன் பெற்றுச் செல்கின்றனர்!
நவக்கிரகங்களும் ஒன்று சேர்ந்து, ஸ்ரீவிநாயகப் பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பலன் பெற்றார்கள். அந்த விநாயகரையும் நாம் இங்கே தரிசிக்கலாம். நம் தோஷங்கள் யாவும் விலகுவதற்கு அருள்பாலிப்பவர் இந்த கணபதி எனச் சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்!
நீலோத்பல மலர் தாங்கியபடி ஸ்ரீஉஷாதேவி இடது புறத்திலும் தாமரை மலர் ஏந்தியபடி வலதுபுறத்தில் ஸ்ரீசாயாதேவியும் அருள, தன் இரண்டு கரங்களிலும் செந்தாமரை மலர்கள் ஏந்தி காட்சி தருகிறார் சூரிய பகவான்!
கோயிலுக்கு அருகில் உள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, தீர்த்த விநாயகர், சிவ - பார்வதி மற்றும் சூரியனாரையும் குரு பகவானையும் வணங்கித் தொழுதால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்; குரு பகவானின் கடாட்சம் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்கிறார் கோயிலின் ஸ்ரீதர குருக்கள்!
- மா.நந்தினி
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்