நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

தேவி தரிசனம்... பாப விமோசனம்!
தேவி தரிசனம்... பாப விமோசனம்!
##~##
சோ
ழ தேசத்தின் தில்லையம்பதிப் பகுதி, முக்கியமான இடமாகக் கருதப்பட்டது. ஏனெனில், அந்தப் பக்கம் வீராணம் ஏரி வழியாகவும், இந்தப் பக்கம் பூம்புகார் மற்றும் நாகப்பட்டினக் கடற்கரை வழியாகவும் எதிரிப் படையினர் வந்து எந்த நேரமும் தாக்கக்கூடும் என்பதால், தில்லையம்பதி எனப்படும் சிதம்பரத்தில், வழக்கத்தைவிட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

குதிரை வீரர்களும், யானைப்படையினரும், அம்பு விடுவதில் சூரர்கள் எனத் திகழ்ந்தவர்களும், வேவு பார்ப்பவர்களும், வாள் வீச்சில் திறன் கொண்டவர்களும் மக்களோடு மக்களாக இருந்து, எதிரி தேசத்தில் இருந்து ஒரு துரும்புகூட சோழ தேசத்துக்குள் நுழைந்துவிடாமல் பாதுகாத்தனர்.

ஆனால், எத்தனைப் பாதுகாத்து என்ன?! செய்வினை வைத்தும், பில்லி- சூனியங்களை ஏவிவிட்டும் சோழ தேசத்தின் வளத்தையும் பலத்தையும் குலைத்துப் போடுவதில் சேர தேசமும், சிங்கள தேசமும் குறியாக இருந்தன. இவற்றை ஒற்றர்கள் மூலம் அறிந்துகொண்ட சோழ அரசு, என்ன செய்யலாம் என யோசித்தது.

தலைநகரமாம் தஞ்சையில், பெருவுடையார் கோயிலிலும், சிதம்பரம் ஸ்ரீநடராஜபெருமான் ஆலயத்திலும் விசேஷ யாகங்கள் செய்யப்பட்டன. பூஜையின் நிறைவில், சிதம்பரம் என இன்றைக்கு அழைக்கப்படும் தில்லையம்பதி நகரத்தைச் சுற்றி நாலாதிசையிலும் மிகவும் சக்தி வாய்ந்த, பில்லி- சூனியங்களையும் காத்து-கருப்புகளையும் அடித்துத் துரத்துகிற சக்திகளை, சக்தி எனும் தேவியருக்குள் இறக்கி,  விக்கிரகங்கள் அமைத்துப் பிரதிஷ்டை செய்தால், தில்லையம்பதி வழியே எதிரி தேசத்தின் காற்றுகூட, சோழ தேசத்துக்குள் புகமுடியாது எனச் சொல்லப்பட்டது.

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

அதன்படி, தில்லையம்பதியின் நான்கு எல்லை களிலும் நான்கு தேவியரின் விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தேவியரின் திருமேனிகளைப் பூக்களால் அலங்கரித்து, ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடிப் பொங்கல் படையலிட்டனர்.

'இந்த ஊருக்குள் இருந்தபடி காவல் காக்கிற வீரர்களுக்கு எந்த நோயும் வராம நீதாம்மா பாத்துக்கணும். அவங்களோட கண்கள்ல பார்வைக் கூர்மையைக் கொடுத்து, கைகளுக்கும் கால்களுக்கும் தெம்பைக் கொடுத்து, தோள்களுக்கு வலுவைத் தந்து, அவங்களுக்கு உடல் சோர்வு எதுவும் வராம, சாப்பிடுற உணவெல்லாம் சத்தானதா மாற, நீதாம்மா அருள்புரியணும்!’ என வேண்டிக் கொண்டனர்.

அன்று துவங்கி, தில்லையம்பதியின் நான்கு எல்லைகளிலும் குடியிருந்து, இன்றளவும் சோழ தேசத்தை மட்டுமின்றி, மொத்த உலகையும் காத்தருள்கின்றனர், சக்தி தேவியர்!

கடலூர் மாவட்டத்தில் உள்ளது சிதம்பரம். இங்கே, ஊருக்கு வடக்கில் ஸ்ரீதில்லைக்காளியம்மன், தெற்கில் ஸ்ரீவெள்ளந்தாங்கியம்மன், மேற்கில் ஸ்ரீஎல்லையம்மன், கிழக்கில் ஸ்ரீமாரியம்மன் ஆகிய தேவியர் அருள்பாலிக்கிறார்கள். இவர்களில் ஸ்ரீமாரி அம்மன், சிதம்பரம் கோயிலின் தீட்சிதர்களுக்குக் குல தெய்வமாகவும் இஷ்டதெய்வமாகவும் விளங்கு கிறாள் என்கின்றனர், பக்தர்கள். இந்த தேவி, கீழத் தெருவில் கோயில் கொண்டிருப்பதால், கீழத்தெரு மாரியம்மன் எனப் போற்றுகின்றனர்! சிதம்பரம் பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஆலயம்.

இந்தக் கோயிலின் விசேஷம்... அம்மன் சந்நிதிக்கு முன்னே, சிங்க விக்கிரகம் இருக்கும்; சூலம் இருக்கும்.

ஆனால், இங்கே ஸ்ரீமாரியம்மனுக்கு முன்னே, நந்தி அமைந்துள்ளது. ஆக, சிவ-சக்தி தலம் எனப் போற்று கின்றனர், தில்லை வாழ் மக்கள்!  

சமயபுரத்தைப் போலவே... கண், இதயம் மற்றும் உடலில் ஏதேனும் பிரச்னைகளோ நோயோ உள்ள வர்கள், இங்கு வந்து அதேபோல் உருவம் காணிக்கை தந்து, அம்மனிடம் பிரார்த்திக்க, அந்த நோயை உடனே குணப்படுத்திவைக்கிறாள் அம்மன்.

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் எனச் சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம் திரளாகக் கோயிலுக்கு வருகின்றனர் பக்தர்கள்.

அம்மனுக்குப் புடவை சார்த்தி, அர்ச்சனை செய்து, மாவிளக்கேற்றி வழிபட்டால், தீராத நோயும் தீரும்; திருமணத் தடை விலகும்; தொட்டில் கட்டிப் பிரார்த்தித்தால், பிள்ளை வரமும் தந்தருள்வாள் என்று பக்தர்கள் சிலாகிக்கின்றனர்.

பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், காத்தவராயன், ஆர்யமாலா, சின்னான், உகந்தழகி ஆகியோர் இருந்தாலும், இங்கே, சைவப் படையல்தான்.

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையன்று காப்புக்கட்டுதலுடன் துவங்கி, 11 நாள் விமரிசையாக நடைபெறுமாம் திருவிழா! 11-ஆம் நாளில், மாலை 4 மணிக்குத் துவங்குகிற தீமிதித் திருவிழா, நள்ளிரவு 2 மணி வரை நடைபெறும். சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் வரை தீ மிதித்து அம்மனை வழிபட்டுச் செல்வார்களாம்!

தேவி தரிசனம்... பாப விமோசனம்!

இதேபோல், அம்மனுக்கு அலகு குத்திக் கொண்டும், பால் குடம் எடுத்தும் வேண்டிக் கொள்வார்கள். நோய் நொடியின்றி வாழவேண்டும் என்றும், வாதம் முதலான நோய்களில் இருந்து விடுபடவேண்டும் எனப் பிரார்த்தனை செய்பவர்கள், மண்பொம்மை செய்து வைத்து, வழிபட்டுச் செல்கின்றனர்.

அதேபோல், பாடை கட்டி வழிபடுவதும், இங்கேயுள்ள பிரார்த்தனைகளில் ஒன்று. அன்றைய தினம், பாடை போல் வண்டியை அலங்கரித்து, அதில் பக்தர்கள் படுத்துக் கொண்டு, கோயிலை வலம் வந்து, அம்மனைத் தரிசிப்பார்கள். எந்த நோயால் தவித்து மருகினாலும், அந்த நோயை குணமாக்கி அருள்வதால், இந்தப் 'பாடை கட்டி’ வழிபாடு சிறப்பாக நடைபெறுவதாகச் சொல்கின்றனர், பக்தர்கள்.

கருவறையில் கிழக்குப் பார்த்தபடி அமர்ந்து, வலது கைகளில் கத்தி- உடுக்கை மற்றும் பாம்பு, இடது கைகளில் சூலம் மற்றும் மண்டை ஓடு ஆகியவற்றை ஏந்தி, திருப்பாதத்தின் கீழே அரக்கனின் தலையை மிதித்தபடி அருட்பார்வையுடன் காட்சி தருகிறாள், கீழத்தெரு மாரியம்மன்.

சிதம்பரம் தில்லையம்பலத்தானைத் தரிசிக்க வரும் போது, அப்படியே கீழத்தெரு மாரியம்மனையும் தரிசித்து, உங்களின் மனக்குறைகளை அவளிடம் தெரிவியுங்கள். சோழ தேசத்தையே காத்தருளிய கருணைத் தெய்வமாம் மாரியம்மன், உங்கள் குடும்பத்தையும் காப்பாள்!

- வி.ராம்ஜி
  படங்கள்: ந.வசந்தகுமார்