நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்படிக மனம்

ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

பாலசுவாமியைப் போலவே அவருடைய சீடர்களும் வாழ்வு குறித்துத் தெளிவுள்ளவர்களாய் இருந்தார்கள். 'என்ன நாலு பேர்’ என்று அன்னம் போடுகிற மடத்து நிர்வாகி அதட்டலாக, அகங்காரமாகக் கேட்டால், உடனே அவ்விடம்விட்டு நகர்ந்து, எந்தக் கேள்வியும் வராத வண்ணம், வீடுகளில் போய் யாசித்து உண்டார்கள். பதிலுக்குச் சண்டை போடவில்லை. 'போட்டா போடு, போடாட்டி போ’ என்று கூவவில்லை. எந்தச் சலனமும் இல்லாமல் நகர்ந்துவிடுகிறார்கள்.

இதைக் கற்றுக்கொள்ள வேண்டும். அலங்காரமாய்த் தரப்படுவதைத் தவிர்த்து, எங்கு அன்போடு தரப்படுகிறதோ அங்கு மௌனமாய் ஏற்பது ஒரு பக்குவம். நெல் முனையும் தன்னுள் கர்வமில்லாத விஷயம். ஞானியின் அண்மை, சீடனின் 'தான்’ என்ற கர்வத்தை முதலில் அழிக்கும்.

##~##
மிகப்பெரிய பண்டிதர், வாழைப்பழம் வாங்கி வந்தார். நேரே மகானிடம் தந்திருக்கலாமே! கடவுள் இன்னும் மேம்பட்டவர் என்று நினைத்து, ஒரு பழத்தை இந்தச் சாமிக்கும், மற்றதை அந்தச் சாமிக்கும் மனதால் நிவேதனம் செய்தார்.

நிவேதனத்தை மகானிடம் எடுத்துச் சென்று கொடுத்தார். சட்டென்று மகான், விநாயகருக்கு நிவேதித்த வாழைப் பழத்தைத் தான் எடுத்துக்கொள்வதாகச் சொன்னார். பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'எனக்குள் ஒரு விஷயம் இருக்கிறதே; அதைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்’ என்று மானசீகப் பிரார்த்தனை செய்தார். அதுவும் சொல்லப் பட்டது. வந்த விஷயம் நிறைவேறியது.

ஆனால், தனக்கு இந்த வித்தை தெரியும் என்று பால சுவாமி வெளியே காட்டவேயில்லை. அது பற்றிய பேச்சோ சைகையோ இல்லை. இதுதான் ஞானியின் சிறப்பு. வெள்ளை உள்ளம். ஸ்படிக மனம்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி என்று பிற்பாடு அழைக்கப் பட்ட பாலசுவாமியின் வாழ்க்கையைப் பார்க்கும்போது பெரும் பிரமிப்பு ஏற்படுகிறது. நெல் முனையும் அலட்டாத அந்த குணம் நம்மைத் தாக்கி, நமக்குள்ளும் இந்த புத்தி வரக்கூடாதா என்கிற ஏக்கம் மண்டுகிறது. வரவேண்டும் என்கிற ஆவல் கிளறுகிறது.

ஈசான்ய மடத்தில் உள்ளவர்கள், தான் உண்டதைத் திரட்டி, 'பாலசுவாமியின் பிரசாதம்’ என்று உண்பதைப் பார்த்து, இலையில் உண்பதைத் தவிர்த்துக் கைநீட்டி உணவு வாங்குகிறார் பாலசுவாமி.

இலை உணவு, விருந்து. அறுசுவை நிறைந்தது. கையில் போடப்பட்ட உணவோ சிவ நிவேதனம். உப்பில்லாதது. இதுபோதும் என்று தன்னை எளிமையிலும் எளிமையாக்கியதை யோசிக்க, உள்ளே நெட்டுயிர்ப்பு ஏற்படுகிறது; பாலசுவாமியிடம் மிகப் பெரிய மரியாதை ஏற்படுகிறது. எல்லாம் வல்ல ஞானி எளிமையாய் இருக்கிறார். எப்படி? 'எல்லாம் வல்லவரானதால்’ என்று எண்ணத் தோன்றுகிறது. எதுவும் தெரியாதபோதுதான் ஆடம்பரம் அவசியமாகிறது. எந்த விளம்பரமும் இல்லாத அந்த எளிமை, நினைக்க நினைக்கப் பரவசம் தருகிறது.

ஸ்ரீரமண மகரிஷி

பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் வாழ்வை ஊன்றிக் கவனித்தால், கற்றுக் கொள்ளப் பலதும் உண்டு.

திருவண்ணாமலை நகரத்தை 1906-ஆம் ஆண்டு கொடிய ப்ளேக் நோய் தாக்கிற்று. அப்போது, அவ்வூரில் உள்ள சுகாதார அதிகாரிகள், பாலசுவாமியை நகருக்கு வெளியே போய்த் தங்கியிருக்கும்படி வேண்டிக் கொண்டார்கள். பாலசுவாமியும் திருவண்ணாமலையில் வடகிழக்குப் பக்கம் உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு அன்பர்களுடன் சென்று, வசிக்கத் துவங்கினார்.

அந்தக் கோயிலுக்குப் பச்சையம்மன் வருவதை, தான் கண்டதாகச் சுவாமி கூறுவது உண்டு. பார்வதிதேவி தவம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்து, முதலில் கௌதம முனிவரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றார். பிறகு ஆஸ்ரமத்துக்கு அருகே இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தவம் செய்தாள். பார்வதி தவம் செய்த இடமே பச்சையம்மன் கோயில். பார்வதிதேவியின் நிறம் மரகத நிறமாக இருந்ததால், அவளுக்குப் பச்சையம்மன் என்கிற பெயர் வந்தது.

அங்கே உள்ள குளங்களில் நீராடி, தங்களுக் குத் தேவையான நீரை, சுவாமியும் அவரது அன்பர்களும் எடுத்துக்கொண்டார்கள்.

சென்னையைச் சேர்ந்த ரங்கசாமி ஐயங்கார் என்கிற அன்பர், அடிக்கடி சுவாமி யைப் பார்க்க வருவார். அப்படி ஒருமுறை வந்தபோது, உச்சி நேரத்தில் குளத்தில் இறங்கி நீராடத் துவங்கினார்.

பச்சையம்மன் கோயிலுக்குள் இருந்த பாலசுவாமி திடீரென்று வெளியே வந்தார். இயற்கை உபாதைக்காக வெளியே போகிறார் என்று அன்பர்கள் நினைத்தார்கள். ஆனால், அது அல்ல காரணம்.

ஸ்ரீரமண மகரிஷி

அந்தக் குளத்துக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் வசித்த சிறுத்தை ஒன்று, கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட தாகத்தைத் தீர்த்துக் கொள்ளக் குளக்கரைக்கு வந்து கொண்டிருந்தது.

பாலசுவாமி அந்தச் சிறுத்தையைப் பார்த்து, 'நீ சற்று நேரம் கழித்து வா! உன்னைக் கண்டால் ரங்கசாமி பதறுவான்; பயப்படுவான். இப்போது போய்விடு!’ என்று மென்மையான குரலில் சொன்னார். சிறுத்தை உடனே நகர்ந்துவிட்டது.

கரையேறிக்கொண்டிருந்த ரங்கசாமியைப் பார்த்து பாலசுவாமி, இம்மாதிரி உச்சி நேரத்தில் குளங்களில் குளிக்கக் கூடாது; காட்டு மிருகங்கள் நீர் குடிக்க வரும் நேரம் இது என்று தெளிவுபடுத்தினார்.

சிறுத்தை வந்தது பற்றி ஒன்றும் சொல்ல வில்லை. காட்டு விலங்குகள்கூட, சுவாமியிடம் அடிபணிந்தன என்று தெரிகிறது.

எளிமைக்கு உதாரணம் பாலசுவாமி. ஒரு மலையாளத் துண்டை ஓர் அன்பர் தர, அதைத்தான் உடம்பு துடைத்துக்கொள்ள உபயோகப்படுத்தி வந்தார். அந்தத் துண்டு நாளடைவில் நார் நாராகக் கிழிந்து விட்டது. ஆனால், பாலசுவாமி அதை ஒருபோதும் மற்றவர் முன் பிரிப்பதில்லை. துண்டை ஒரு பந்தாய்ச் சுருட்டி, உடம்பு துடைக்கப் பயன்படுத்துவார். பாறை இடுக்கில் உலர்த்துவார்.

பாலசுவாமியின் அன்பர் ஒருவர், இப்படி இடுக்கில் இருக்கும் துண்டைக் கண்டு வேதனைப்பட்டார். 'எங்கள் உபயோகத்துக்கென எங்களிடம் பெட்டி பெட்டியாய் துண்டுகள் இருக்க, உங்கள் துண்டு பற்றி அக்கறையில்லாமல் இருந்துவிட்டோமே’ என்று வெட்கப்பட்டார்; அழுதார்.

ஸ்ரீரமண மகரிஷி

அன்பர் வருத்தப்படுவதைக் கண்டு பாலசுவாமி ஒரே ஒரு துண்டும், ஒரே ஒரு கோவணத் துணியும் எடுத்துக் கொள்ளச் சம்மதித்தார். எளிமை, சுவாமியிடம் இயல்பாய் இருந்தது. எளிமை இங்கு போதிக்கப்படவில்லை; மாறாய், வாழ்வாக இருந்தது.

பாலசுவாமியைத் தங்கள் குழுவோடு சேர்த்துக்கொள்ள பலருக்கும் ஆசை. பகட்டற்ற ஒரு ஞானியின் பேச்சிலும் நடத்தையிலும் மயங்கி, 'இவர் எங்கள் மடத்தைச் சேர்ந்தவர், எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்’ என்று சொல்லிக் கொள்ளும் ஆவல் இருந்தது.

சிருங்கேரி மடத்தைச் சார்ந்த பண்டிதர் ஒருவர் வந்தார். பாலசுவாமியிடம் பல விஷயங்கள் பேசினார். அப்படிப் பேசும்போது, ''உங்களுக்குத் தெரியாததல்ல. நீங்கள் அந்தண குலத்தில் பிறந்தவர்கள். எனவே, தாங்கள் முறைப்படி சந்நியாசம் பெறுவது சிறப்பு அல்லவா! அப்போதுதானே அந்தணருக்குரிய எந்தக் கிரியைகளையும் செய்யாதிருக்கும் உரிமையைப் பெறுகிறீர்கள்! துறவு பூணாது கிரியைகளை நிறுத்துவது பாபமல்லவா? நீங்கள் சம்மதித்தால், என் மடத்துக்குப் போய், தாங்கள் சந்நியாசம் பெறுவதற்கு வேண்டிய வஸ்துக்களோடு வருகிறேன். காவி உடை உடுத்தாது போனாலும் பரவாயில்லை; தங்களுடைய கௌபீனமாவது காவி நிறத்தில் இருக்கட்டும்'' என்று வேண்டினார். பாலசுவாமியைத் தங்களுடைய குரு பரம்பரையில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மதிய உணவுக்கு, மலைக்குக் கீழே போகப் போவதாகவும், மறுபடி மேலே வரும்போது தக்க பதில் சொல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.

சிருங்கேரி மடத்து அன்பர் போனபிறகு, முதியவர் ஒருவர் மூட்டையோடு மலைக்கு மேலே வந்தார். அவர் முகம், பாலசுவாமிக்குப் பரிச்சய மானதாய் இருந்தது. அந்த மூட்டை புத்தக மூட்டை போல் இருந்தது. வந்தவர், மூட்டையை இறக்கி வைத்துவிட்டு, குளித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.

அவர் சென்றபிறகு பாலசுவாமி அந்த மூட்டை யைப் பிரித்துப் பார்த்தார். மேலே முதன்மையாய் ஒரு புத்தகம் இருந்தது. அது வடமொழிப் புத்தகம். 'அருணாசல மகாத்மியம்’ என்கிற தலைப்பில் இருந்த புத்தகம்.

தமிழில் அருணாசல புராணம் உண்டு. ஆனால், வடமொழியில் அருணாசல மகாத்மியமா என்கிற ஆச்சரியத்துடன், புத்தகத்தை பாலசுவாமி பிரித்தார்.

புத்தகத்தில் முதல் ஸ்லோகமாக, ஈஸ்வரனே அருணாசலம் தலத்தைப் பற்றிப் பெருமையுடன் உரைப்பதாக ஒரு ஸ்லோகம் இருந்தது.

'இந்த அருணாசல தலத்தின் மூன்று யோசனை தூரத்துக்குள் (சுமார் 20 மைல்) இருப்பவர்களை, தீ¬க்ஷ ஏதுமின்றி, எல்லா பந்தங்களிலிருந்தும் விடுவித்து, அவர்களுக்கு உயர்ந்த நிலையைக் கொடுப்பேன். இது ஈஸ்வரனான என் ஆணை’ என்றிருந்தது.

பாலசுவாமி, அந்த முதியவர் வருவதற்குள் அந்த ஸ்லோகத்தை எழுதி வைத்துக்கொண்டு, அந்தப் புத்தகத்தை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டார். மறுபடி, அந்த முதிய அந்தணர் வந்தாரா இல்லையா என்பது பாலசுவாமிக்குத் தெரியவில்லை.

ஆனால், மலை இறங்கிப் போன பண்டிதர் வந்தார். அவரிடம் இந்த ஸ்லோகத்தைக் காட்டினார் பாலசுவாமி. படித்தவரான அவர், இதைப் புரிந்துகொண்டு தன்னை மன்னித்து விடுமாறு கூறி, விடைபெற்றார். பின்னர், தம் குருவான ஸ்ரீநரசிம்ம பாரதியிடம் இதுபற்றிக் கூறியபோது, அவரை ஸ்ரீநரசிம்ம பாரதி கடிந்து கொண்டாராம்.

'வந்தவர் யார், சிவபெருமானா?’ என்று பிற்பாடு அன்பர் ஒருவர் கேட்டதற்கு, பாலசுவாமி 'ஆம்’ என்று தலை அசைத்திருக்கிறார்.

'தான்’ என்கிற அகந்தையைத் துறந்த பாலசுவாமிக்கு காவியும் தீ¬க்ஷயும் எதற்கு? சத்தியத்துக்கு எந்த வேடமும் தேவையில்லை.

- தரிசிப்போம்...
படம்: கே.ராஜசேகரன்