நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

தேவாரத் திருவுலா! - குடவாசல்

தேவாரத் திருவுலா! - குடவாசல்

தேவாரத் திருவுலா! - குடவாசல்
தேவாரத் திருவுலா! - குடவாசல்

பொன்னொப்பவனும் புயலொப்பவனும்
தன்னொ ப்பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவாயில் தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே

##~##
- திருஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் பாடிய குடவாயில் ஆலயம் நம்மை அழைக்கிறது.

திருவாரூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவி லும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது குடவாயில். தற்போது, குடவாசல் என்றே அழைக்கின்றனர். சங்க காலத்தில், இங்குதான் சோழர்களின் கருவூலம் இருந்தது. சிறைக்கோட்டம் ஒன்றும் இங்கே இருந்ததாம்! இதில்தான், சேரமான் கணைக்கால் இரும்பொறை எனும் மன்னனை வென்று, அவனைச் சிறை வைத்தான் சோழ மன்னன் செங்கணான்.

குடவாயில் நல்லாதனார் (திரிகடுகம் பாடியவர்), குடவாயில் கீரத்தனார் ஆகிய புலவர் பெருமக்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்தான்.

குடவாயில்- அழகான இந்தப் பெயருக்குத்தான் எத்தனை அர்த்தங்கள்?!

தேவாரத் திருவுலா! - குடவாசல்

பிரளய காலத்தில், உயிர்கள் அனைத்தையும் ஓர் அமுதக் குடத்தில் இட்டு, அதன் வாய்ப்பகுதியில் சிவலிங்கமாக இருந்து இறைவனார் காத்தார்; குடத்தின் வாயிலைக் காத்தவர், குடவாயில் உடையார் ஆனார். மீண்டும் படைப்புக் காலத்தில், உயிர்களை வெளிப்படுத்தத் துவங்கியபோது, குடம் மூன்றாக உடைந்தது; குடத்தின் கும்ப பாகம் விழுந்த இடம், கும்பகோணம் (குடமூக்கு); நடுப்பாகம் விழுந்த இடம், கலையநல்லூர்; குடத்தின் வாயில் விழுந்த இடம், குடவாயில் என்றானதாம்!

செங்கணான் கட்டிய இந்தக் கோயில், மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால், குடவாயில் என்ற பெயர் (குடதிசை - மேற்கு) ஏற்பட்டதாகவும் சொல்வர். திருணபிந்து எனும் முனிவரின் நோயைத் தீர்ப்பதற்காக, இறைவனார் குடத்திலிருந்து வெளிப்பட்ட தலம் என்பதாலும், இது குடவாயில் ஆயிற்று.

உயிர்களை அமுதக் குடத்தில் இட்டு, அதன் வாயிலில் சிவலிங்கமாக எழுந்தருளி, உயிர்களைக் காத்தாரே சிவனார், அதனால் அவருக்குக் கோநேசர் (கோ - உயிர்; நேசர்- அன்பு உடையவர்) எனும் திருநாமம்! காலப்போக்கில், குடத்தின் கோணம் என்பதாகத் தொடர்புபடுத்தப்பட்டு, கோணேசர் ஆகிவிட்டார். குடத்தின் வாயிலில் இருந்த லிங்கத்தைப் புற்று மூடியது. மண்மேடு என நினைத்து, கருடன் தனது மூக்கால் கொத்தப் போக, லிங்கனார் வெளிப்பட்டார்; அதனால், வன்மீகேசர் (வன்மீகம்- புற்று) என்றும் கருடேசர் என்றும் பெயர்!

சீர்கொண்ட வெளிமுகடு கடந்துஅண்டத்து அப்பாலாய்ச் சித்தாந்தத்தின்
வேர்கொண்ட பேரொளியாய்ச் சின்மயமாய் அகண்டமாய் விமலமாகிப்
பேர்கொண்ட நாதமாய் விந்துவாய் ஐந்தொழிலும் பிறங்கச் செய்து
பார்கொண்ட குடவாயில் அமர்ந்த கோணேசர் பதம் பணிந்து வாழ்வாம்

என்று தலபுராணம் வாழ்த்தும் ஸ்ரீகோணேசர் பதம் பணிய, குடவாயில் கோட்டத்துப் பெருங்கோயில் முன்னே நிற்கிறோம். பிரதான சாலையை ஒட்டியே அமைந்துள்ளது கோயில். அழகிய கோயில்; முன்பாக, திருக்குளம்- அமுத தீர்த்தம். உயிர்கள் காக்கப்பட்ட அமுதக் குடம் உடைந்தபோது, அமுதத் துளிகள் தெளித்த இடம் அமுதத் தலமாக, தேங்கிய அமுதமே அமுத தீர்த்தமானது. தீர்த்தக் கரையில் ஸ்ரீஆதிவிநாயகர் கோயில்.

கோணேசர் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பைக் கடந்து சென்றால், அனுமதி விநாயகர் சந்நிதி. வெளிப் பிராகாரத்தில் நிற்கிறோம். முகப்புக்கு எதிரில், செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி. கொடிமரத்திலிருந்து உள்வாயிலை நோக்கிச் செல்லும் வழியில், இடது பக்கத்தில் அம்பாள் சந்நிதி. எதிரில் (அதாவது, நமக்கு வலது பக்கத்தில்), மண்டபம் ஒன்றில் வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தேவாரத் திருவுலா! - குடவாசல்

உள்வாயிலில், மூன்று நிலை கோபுரம். கடந்தால், உள் பிராகாரம். இதன் மேற்குச் சுற்றிலல்லவா நிற்கிறோம்! வலம் வரத் தொடங்கினால், முதலில் இடும்பன், அடுத்து தண்டபாணித் தெய்வம், தொடர்ந்து கலைமகள் சந்நிதிகள். வடமேற்கு மூலையில், மிகவும் பிரபலமான குடவாயில் குமரன் சந்நிதி. மயில் மண்டபம், மகா மண்டபத்துடன் கூடிய சந்நிதியில், வள்ளி- தெய்வானையுடன் அருள்கிறார் முருகன்.

குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய
குடவாயில் பதி உறைவோனே
குற மாதைப் புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவத்தவர் பெருமாளே

தேவாரத் திருவுலா! - குடவாசல்

- என அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகர் இவர்தாம்! வெள்ளிக் கவசத்தில் இந்தக் குமரனை தரிசிப்பது வெகு சிறப்பு!

வடக்குச் சுற்றில் நுழைந்ததும், உற்ஸவ மூர்த்தங்கள். இந்தச் சுற்றிலேயே, பலா மரங்கள் காணப்படுகின்றன. அருகிலேயே தல விருட்சம்- வாழை. வடகிழக்குப் பகுதியில், நவக்கிரகங்கள். தொடர்ந்து, கிழக்குச் சுற்றில் ஸ்ரீசிவனார், ஸ்ரீமுருகன், ஸ்ரீமகாலட்சுமி, திருணபிந்து முனிவர், சிவலிங்கங்கள், சப்தமாதர்கள், நாகர் களைத் தரிசிக்கலாம். இந்தச் சுற்றின் பாதியில், கோயில் உக்கிராணம். தென் கிழக்கு மூலையில், கிணறு. மேற்குச் சுற்றில் திரும்பியதும் நால்வர்; அடுத்து, ஆலால சுந்தரர்- பரவை நாச்சியார்.

திருக்கயிலாயத்தில் ஆலாலசுந்தரராக இருந்தவர்தாம், பூலோகத்துக்கு நம்பிஆரூரராக வந்தார். பூமியில் அவருடைய மனைவியார் பரவையார் என அழைக்கப்பட்டார். இங்கே அவரின் கயிலாயப் பெயரையும், மனைவியின் பூலோகப் பெயரையும் எழுதி வைத்துள்ளனர்.

ஆலால சுந்தரருக்கு நேர் எதிராக உள்ள படிகளில் ஏறித்தான், மூலவர் சந்நிதியை அடைய வேண்டும். முன்னதாக இடது பக்கம் திரும்பினால், ஸ்ரீநடராஜ சபை.

ஆடல்வல்லானின் அழகே அழகு! நடராஜ பீடத்தில், பழங்காலத் தமிழ் எழுத்துக்கள். 10-11ஆம் நூற்றாண்டு எழுத்துக்களாம்! 'களக்காடுடையார் மாலை தாழ் மார்பன்’ என்பதுதான் எழுதப்பட்டிருக்கும் வாசகம். இதன் நடுவிலேயே, கைகளை கூப்பியவராக அடியார் ஒருவர். குடவாயிலிலிருந்து சுமார் ஐந்தாறு மைல் தொலைவில் களக்காடு எனும் பகுதி இருக்கிறது. இங்கு வாழ்ந்த பக்தரான மாலைதாழ் மார்பன் என்பவர், இந்தத் திருமேனியை வடித்துக் கொடுத்தாராம்.

தேவாரத் திருவுலா! - குடவாசல்

மூலவரை நோக்கித் திரும்புகிறோம். மகாமண்டபப் பகுதியிலேயே, இரண்டு பக்கமும் மேடைகள்; உற்ஸவ மூர்த்தங்களுக்கான மேடைகள் போல் தெரிகின்றன. அடுத்து, தூண்களுடன் கூடிய நந்தி மண்டபம். அர்த்த மண்டபம் கடந்தால்... ஸ்ரீகோணேசர்.

கரையான் புற்றை மூக்கால் பிளந்து, சிவலிங்கத்தை வெளிப்படுத்திய கருடன், தாமே கோயில் கட்டி வழிபட் டாராம் (கோயில் மதில்மீது கருட உருவங்கள் உள்ளன). சதுரபீட ஆவுடையாரும், உயரமான லிங்க பாணமும் கொண்டு விளங்குகிற மிகப் பெரிய சிவலிங்கம்.

பாடலார் வாய்மொழியீர் பைங்கண் வெள்ளேறு ஊர்தியீர்
ஆடலார் மாநடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர்
கோடலார் தும்பி முரன்றிசை மிழற்றும் குடவாயில்
நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே  

- என்று புகழப்பட்ட கோணேசர். சூரியன் வழிபட்டதால் சூரியேஸ்வரர்; தாலப்ய முனிவர் பூஜித்ததால் தாலப்யேஸ்வரர்; பிருகு முனிவர் வணங்கியதால், பிருகுநாதர் என்றெல்லாம் இவருக்குத் திருநாமங்கள் உண்டு. சிவலிங்கத் திருமேனியில், கருடன் தீண்டிய வடுக்கள் காணப்படுகின்றன.

மூலவர் சந்நிதி உயரத்தில் அமைந்திருப்பதால், இந்தக் கோயில் மாடக் கோயில் அமைப்புடன் திகழ்கிறது. கோச்செங்கட் சோழன் கட்டிய பெரும்பான்மையான கோயில்கள், மாடக் கோயில்களாகவே உள்ளன. அப்படி இருப்பதால், சுவாமி கருவறையை வலம் வரும்போது, கோஷ்ட தட்சிணா

மூர்த்தியின் விமானமும், ஸ்ரீநடராஜர் விமானமும் தெளி வாகத் தெரிகின்றன. ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் சந்நிதிக்கு முன்னே பெரிய மண்டபம்; உள்பிராகாரத்தையே அடைத்துப் போட்டாற்போல் அமைந்திருக்கிறது! ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி, தனிக் கோயிலாகவே விளங்குகிறது.  

தேவாரத் திருவுலா! - குடவாசல்

தன்னுடைய குஷ்ட நோய் நீங்குவதற்காக, திருணபிந்து முனிவர் இங்கே வழிபட்டார். தாலப்ய முனிவர், இந்தத் தலத்தின் பெருமையை அறிந்து இங்கே வந்து, மந்தார மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்தார்.

கதலிவனம் (வாழை, தலமரமாவதால்), வன்மீகாசலம் என்கிற வேறு பெயர்கள் கொண்ட குடவாயில் கோயிலில், அம்பாள் சந்நிதி வெளிப் பிராகாரத்தில் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய சந்நிதியில், அம்பாள் ஸ்ரீபெரியநாயகியார் எழுந்தருளியிருக்கிறார். நின்ற திருக்கோலம்; அபய வரத ஹஸ்தங்களோடு அருள்பாலிக்கிறார்.

மாசி மாதத்தில் பெருவிழா காணுகிற இந்தக் கோயிலில்,  விஷ்ணுவும், சிவனும், பிரம்மாவும் ஒற்றைப் பாதம் தாங்கி நிற்கும் ஏகபாத மூர்த்தியின் நேர்த்தி, சொல்லில் அடங்காது. பெரியநாயகி அம்பாளே இங்கு பிருகந் துர்க்கையாக வழிபடப்படுவதால், ஸ்ரீதுர்கைக்குத் தனிச்சந்நிதி இல்லை.  

'நிலைகொள் தடவாயில் வெண்மணிகள் சங்கங்கள் ஈனும் குடவாயில் அன்பர் குறிப்பே’ - என வணங்கியபடி, வெளியே வருகிறோம். நெஞ்சமெல்லாம், ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீகோணேசரின் அருள் பரவுகிறது.

(இன்னும் வரும்)
  படங்கள்: ந.வசந்தகுமார்