நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##
சை
வமும் வைணவமும் தழைத்தோங்கிய காலம் அது! மன்னர் பெருமக்கள், தங்களது தேசத்தில் உள்ள ஊர்கள் பலவற்றிலும் ஆலயங்களை எழுப்பினார்கள். சைவத்தில் திளைத்த ராஜாக்கள்கூட பெருமாளுக்குக் கோயில் எழுப்பி, வழிபட்டார்கள்.

ராஜராஜ சோழ மாமன்னன், ஆழ்ந்த சிவபக்தி கொண்டவன். இதனால் அவனுக்குச் சிவபாதசேகரன் எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் சோழ தேசத்து மக்கள். அவனது வலதுகரமாகவும், சோழதேசம் செழித்து வளரக் காரணமாகவும் இருந்தவர் பிரம்மராயர். இவர் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டவர். எனவே, வைஷ்ணவர் வணங்கும் வகையில், திருமாலின் திருத்தலங்களுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளான் ராஜராஜ சோழன். இதேபோல், பிரம்மராயரும் சைவக் கோயில்களுக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளார்.

இதன் அடுத்தடுத்த காலகட்டங்களில், வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. கூடவே, சைவ- வைஷ்ணவ நியதிகளுக்கு அப்பாற்பட்ட தெய்வங்களையும் வணங்கத் துவங்கினர், மக்கள். அப்படி, சோழ தேசத்து மக்கள் வணங்கிய தெய்வம்தான் மாசாத்தனார்.

சங்ககாலத்தில் சாத்தனார் வழிபாடு அதிக அளவில் இருந்தது. சாத்தனாரை வணங்கிவிட்டுத்தான், மன்னர் சபையைக் கூட்டி ஆலோசிப்பார்; போர் தொடுக்கப் பயணிப்பதற்கு முன், சாத்தனாருக்குப் படையல் போட்டுவிட்டுத்தான், படையோடு கிளம்பிச் செல்வார் அரசர்.

ஆலயம் தேடுவோம்!

வணிகப் பெருமக்கள், மாசாத்தனாரை வணங்கிவிட்டுத்தான், தினமும் தங்கள் கடையைத் திறப்பார்கள். விவசாயிகள், இவரை வணங்கிவிட்டுத்தான், தங்களது நிலத்தில் கால் வைப்பார்கள். வீட்டுக்கு மருமகளாக வருபவளைத் தேர்ந்தெடுப் பதற்கு முன், சாத்தனாரை வணங்கிவிட்டுத்தான் பெண் வீட்டாரையே சந்திக்கச் செல்வார்கள் பிள்ளை வீட்டார். 'ஐயா... எங்க வீட்டுப் பொண்ணை இன்னாரது பையனுக்கு மனைவியா ஒப்படைக்கப் போறோம். புகுந்த இடத்துல, என் பொண்ணுக்கு ஒரு குறையும் இல்லாம, நோய்நொடி ஏதும் வராம, அவளையும் அவளோட வம்சத்தையும் நீதான் காக்கோணும்’ என்று வேண்டிய பிறகுதான், தங்கள் மகளுக்குத் திருமணம் பேசி முடிப்பார்கள் பெண்ணின் குடும்பத்தார்.

மாசாத்தனாரின் பேரருளை வியந்த மன்னர்கள் கருவூர்ச் சேரமான் சாத்தான், பாண்டியன் கீரஞ்சாத்தான், சோழநாட்டுப் பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தான், ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தான் என, தங்களது பெயரில் சாத்தனாரின் திருநாமத்தையும் சேர்த்துக்கொண்டனர் என்று தெரிவிக்கிற கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் நிறையவே உண்டு. நாம் எல்லோரும் அறிந்த சீத்தலைச் சாத்தனார், உறையூர் முதுகன்னன் சாத்தனார், பெருந்தலைச் சாத்தனார் போன்ற பெருமக்கள் பலரும், மாசாத்தனாரை வணங்கி, வரம் பெற்றுப் பலம் பெற்றவர்கள்தாம்.

பிறகு, அடுத்தடுத்த காலகட்டங் களில், சாத்தனார் எனும் திருநாமம் மெள்ள மெள்ள மறைந்தது; சோழர்  காலத்தில், திருமண்டபமுடைய நாயனார் என அவரைப் போற்றி வணங்கியதாகத் தெரிவிக்கின்றன கல்வெட்டுக்கள். அதேபோல் சாத்தன், சாத்தனார் எனும் தமிழ்ச் சொல்லால் அழைத்தது மாறி, சாஸ்தா என வடமொழியால் அவரை அழைத்தனர், மக்கள்! ஒருசாரார், இதையே தமிழ்ப்படுத்தி, அய்யனார் எனும் திருநாமம் சூட்டி, வணங்கி வழிபட்டு வந்தனர்.

மாசாத்தனார், சாத்தனார், சாஸ்தா, அய்யனார் என எப்படி அழைத்தால், என்ன? தன்னை நாடி வரும் அனைவருக்கும், கருணைத் தெய்வமாகவும் காவல்தெய்வமாகவும் திகழ்கிறார் அய்யனார்.

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

பொதுவாக, அய்யனார் கோயில் என்றால், ஊருக்கு எல்லை யில் அமைந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஒரு சின்ன மேடையில், மிகப் பெரிய பரந்தவெளியில், மேற்கூரை ஏதுமின்றிக் காட்சி தரும் கோயில்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், மிகப் பிரமாண்டமாக, கற்றளிக் கோயிலாகத் திகழும் ஸ்ரீஅய்யனார் கோயிலைப் பார்த்திருக்கிறீர்களா?

தமிழகத்தில், காஞ்சியம்பதி எனப்போற்றப்படும் காஞ்சிபுரத்தில், அழகான, பிரமாண்டமான அய்யனார் ஆலயம் ஒன்று இருந்தது. காலப்போக்கில் அது முற்றாக அழிந்துவிட்டது. அதேபோல், பிரமாண்டமானதொரு ஆலயம், அதுவும் காஞ்சிபுரத்தில் இருந்த அய்யனார் ஆலயத்துக்குப் பல காலம் முன்பிருந்தே உள்ள கோயில், இன்றைக்கும் இருக்கிறது. ஆனால் என்ன... சிதிலம் அடைந்து, முட்களும் புதர்களும் முளைத்திருக்கப் பரிதாபமாகக் காட்சி தருகிறது அந்தக் கோயில்!

திருச்சி, சமயபுரத்தை அடுத்து, திருச்சி- சென்னை சாலையில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. பயணித்தால், திருப்பட்டூர் திருத்தலத்தை அடையலாம்.

பிரம்மனின் படைப்புத் தொழிலை, சிவனார் திருப்பித் தந்தருளியது; 'இங்கே வரும் என் பக்தர்களுக்கு, விதி இருப்பின் விதி கூட்டியருளுக!’ என ஈசனே, பிரம்மனிடம் அடியவர்களாகிய நமக்காக உத்தரவிட்டது; பதஞ்சலி முனிவரும் வியாக்ர பாதரும் தவமிருந்து, சிவனருளைப் பெற்றது; இங்கே ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் ஒரு கோயிலிலும், ஸ்ரீகாசிவிஸ்வநாதர் எனும் திருநாமத்துடன் இன்னொரு கோயிலிலுமாக, சிவபெருமான் அருளும் பொருளும் அள்ளித் தருவது; பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில், தனிச் சந்நிதியில், பிரமாண்டத் திருமேனியில் ஸ்ரீபிரம்மா அமர்ந்த கோலத்தில் காட்சி தந்தருள்வது; அருகிலேயே, ஸ்ரீபதஞ்சலி முனிவரும், ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயிலில், ஸ்ரீவியாக்ரபாத முனிவரும் திருச்சமாதியாக இருந்து, ஞானத்தையும் மோட்சத்தையும் அடியவர்களுக்கு அருள்பாலிப்பது... எனப் பிரசித்திபெற்ற அதே திருப்பட்டூர் திருத்தலம்தான்! இங்குதான், மிகப் பிரமாண்டமான கற்கோயிலாக ஸ்ரீஅய்யனாரின் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஆலயம் தேடுவோம்!

மண்ணால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தை, கற்றளியாக மாற்றியது, ராஜேந்திரசோழ மன்னன்! மூன்று நிலை ராஜகோபுரம், அழகிய யானையின் திருமேனி, பலிபீடம், நட்சத்திர வடிவிலான யாகசாலை மண்டபம், திருச்சுற்று மாளிகை, அர்த்த மண்டபம் என சைவ- வைணவ ஆலயங்களுக்குச் சற்றும் சளைக்காத அளவுக்கு பிரமாண் டமாகத் திகழ்கிறது, அய்யனார் கோயில்!

'திருக்கயிலாய உலா’ எனும் அரிய படைப்பினைக் கயிலாயத்தில் இருந்து பூவுலகுக்குக் கொண்டு வந்து, அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர், மாசாத்தனார். அப்படி அரங்கேற்றிய தலம், திருப்பிடவூர் எனப்படும் திருப்பட்டூர் திருத்தலம் என்கின்றன, கல்வெட்டுகள்! இதற்குச் சாட்சியாக, திருக்கயிலாய ஞான உலா அரங்கேறிய, 18 கால் மண்டபம் இன்றைக்கும் உள்ளது.

கருவறையில் கழுத்து, மார்பு, விரல்கள், கணுக்கைகள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் ருத்திராட்சங்கள் துலங்க, வலது கையில் செண்டும், இடது கையில் சின்னதொரு சுவடியும் கொண்டு அழகுறக் காட்சி தருகிறார் மாசாத்தனார். அருகில், ஸ்ரீபூரணா- புஷ்கலா தேவியர்!

மாசாத்தனார் என்கிற, சாஸ்தா எனப்படும் அய்யனாரை வணங்கி வழிபட்டால், அந்த முறை விவசாயம் செழிக்கும்; ஊருக்குள் எந்தக் குற்றங்களும் நடைபெறாது; குழந்தைகள், கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. ஆனால், மடப்பள்ளி இருந்தாலும், நைவேத்தியம் இல்லை; சந்நிதிகள் இருந்தாலும் பூஜைகள் கிடையாது; இன்னும் பல சந்நிதிகளில், ஸ்வாமி விக்கிரகங்களே சிதிலம் அடைந்து, பின்னமடைந்து காணப்படுகின்றன.

ராஜேந்திர சோழன், குலோத்துங்கச் சோழன், விக்கிரமச் சோழன், வீரராமநாததேவன், சடையவர்ம சுந்தர பாண்டியன், சடாவர்ம வீர பாண்டியன், கெம்பைய மாயன நாயக்கர் போன்ற மன்னர்கள், திருப்பட்டூர் பிரம்மா கோயிலுக்கும், ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயத்துக்கும், மாசாத்தனார் திருக்கோயிலுக்கும் ஏராளமான நிவந்தங்களை அளித்து திருப்பணி மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கும் கல்வெட்டுகளைக் காண முடிகிறது.

இத்தனைப் பெருமைகள் கொண்ட திருப்பட்டூர் அய்யனார் கோயில், இப்படிச் சிதிலம் அடைந்து இருக்கலாமா? ஊரையும் உலகையும் காவல் காத்து, மக்களுக்கு அருள்கிற அய்யனார் சாமி குடிகொண்டு இருக்கும் ஆலயத்தைக் காப்பதும், புதுப்பித்துப் புனரமைப்புச் செய்வதும் பக்தர் களாகிய நம்முடைய கடமை அல்லவா?!

அய்யனார் சந்நிதியில் விளக்கெரிய எண்ணெய், அவரது வாகனமான யானையின் விக்கிரகத்துக்கு உள்ளங்கை அளவில் பூமாலை, ஸ்ரீபூரணா- புஷ்கலா தேவியருக்கு உடுத்திக்கொள்ள வஸ்திரம், நீண்ட நெடுங்காலமாகத் திருப்பணி இல்லாமல், கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கும் ஆலயத்துக்கு நம்மால் முடிந்த கைங்கர்யம்... என ஏதேனும் செய்தால்தான், அய்யனாரின் ஆலயமும் பொலிவுறும்; அவரும் தனது யானை வாகனத்தில் வலம் வந்து, அகிலத்தைக் காப்பார்.

திருப்பட்டூர் திருத்தலத்துக்கு வந்து ஸ்ரீபிரம்மா, ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், அருகில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் மற்றும் பதஞ்சலி முனிவர், வியாக்ர பாதரின் திருச் சமாதிகள் ஆகியவற்றைத் தரிசித்துச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அப்படியே... சைவ- வைணவத் தலத்துக்கு நிகரான பிரமாண்டத்துடன் திகழும் திருப்பட்டூர் அய்யனார் கோயிலையும் வந்து தரிசியுங்கள்.பின்னர் நீங்களே அள்ளிக் கொடுப்பீர்கள்!

உங்களுக்கும் உங்கள் வம்சாவளியினருக்கும் பேரருளை அள்ளித் தருவார் அய்யனார் சாமி!

படங்கள்: ப்ரீத்தி கார்த்திக்