

பூத்த ஞானம் பொலிந்திட மும்மலம்
தேர்த்த இன்பப் பிரளய மேலிட
வாய்த்த புன்னை வனத்தில் பிரளயம்
காத்த யானை கழலினைப் போற்றுவாம்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- திருப்புறம்பியம் தலபுராணம்

கும்பகோணத்துக்கு வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில், மண்ணியாற்றங் கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர், இன்னம்பர் வழியாக இந்தத் தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் விசேஷம் வாய்ந்தவர். இவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும்முன் பிரளயம் குறித்தும், அதிலிருந்து உயிர்களைக் காக்கும் ஊழி முதல்வனாம் ஈசனின் அனுக்கிரகம் குறித்தும் அறிந்துகொள்வோம்.
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் கடல் பொங்கி எழுந்து உலகை அழிக்கும் காலமே 'ஊழி’ எனப்படும். இதை, 'யுகப்ரளய’ காலம் என்றும் அழைப்பார்கள். அப்போது தோன்றும் பெரும் ஊழிக் காற்றாலும், தீயாலும் உலகம் அழிக்கப்படும். எனினும், சிறிது காலத்துக்குள் மீண்டும் படைக்கப்படும்.
பெருங்காற்றுடன் கடல் பொங்குவதை, 'கடல்கோள்’ என்பர். கடலில் ஆழிப்பேரலைகள் பொங்கி எழுவதால் கடல்கோள்கள் உண்டாகின்றன (தற்காலத்தில் சுனாமி என்போம்). எரிமலை சீற்றங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன. இப்படி, இடையிடையே நடக்கும் நிகழ்வுகளை 'சிற்றூழிகள்’ என்பார்கள்.
ஊழிக் காலத்தின்போது அஞ்சி நடுங்கும் உயிர்களுக்கு அபயம் அளித்து அருளும் சிவபெருமானை 'ஊழி முதல்வன்’ என இலக்கியங்களும் புராணங் களும் போற்றுகின்றன. திருவெம் பாவையில், 'ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனையே ஏழைப் பங்காளனைப் பாடேலோர் எம்பாவாய்’ என்று சிவனாரைப் போற்றுகிறார் மாணிக்க வாசகர்.
உயிர்கள் தமது வினைகளுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும்... இப்படியே முடிவில்லாத இந்தச் சுழற்சியில் உழன்றுகொண்டிருக்கும். எனவே, இந்த ஊழிக் காலத்தில் எல்லா உயிர்களுக்கும் சிவபிரான் ஓய்வு என்ற இளைப்பாறுதலைத் தருகிறான் என்பது நமது தத்துவக் கோட்பாடாகும்.
##~## |
விருத்தாசலத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருத்தூங்கானை மாடம் (பெண்ணாடகம்). இங்கே அருளும் இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்றும் பெயர் உண்டு. இங்குள்ள நந்திதேவர்- பிரளய கால நந்தி என அழைக்கப்படுகிறார். பிரளயம் வந்தபோது அதைக் சோபிக்கத் திரும்பியவர், அதே நிலையிலேயே -இறைவன் நோக்கும் அதே திசையையே இவரும் பார்க்கிறார். இதைப் போன்று ஒரு காலத்தில் கடல்பொங்கி பிரளயம் நிகழ்ந்தபோது, சிவபெருமான் அந்தப் பிரளய வெள்ளத்தைச் சுழித்து பூமிக்குள் ஒடுங்கும்படி செய்து உலகத்தைக் காத்தார். அப்படி ஊழிப் பெருவெள்ளம் பூமிக்குள் சென்ற இடமாதலின், அந்தத் தலத்துக்கு திருச்சுழியல் என்று பெயர். மதுரையில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். இங்குள்ள இறைவனுக்கு ஸ்ரீபிரளயவிடங்கர் என்ற பெயரும் உண்டு (பகவான் ஸ்ரீரமணர் அவதரித்த தலமும் இதுதான்).
சிவபிரானைப் போலவே அவரது திருக்குமாரரான மூத்த பிள்ளையாரும் பிரளயத்திலிருந்து அனை வரையும் காத்தருள்கிறார். இவரை பிரளயம் காத்த விநாயகர் என்பர். இதே திருநாமத்துடன் இவர் அருளும் திருவிடம்தான் திருப்புறம்பியம். புறம்- வெளி; பயம்- நீர்; பிரளய வெள்ளம் ஊரில் புகாமல் நின்றமையால் புறம்பயம் (புறம்பியம் என்று மருவிவிட்டது). அதாவது பிரளயத்துக்கு புறம்பாய் இருந்ததால் இப்பெயர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருப்புறம்பியப் போரில் முதலாம் ஆதித்த சோழன் வெற்றி பெற்று சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான். இந்தத் தலத்தில் அவன் திருப்பணி செய்த திருக்கோயிலுக்கு ஆதித்தேச்வரம் என்று பெயர்.
செட்டிப் பெண் ஒருத்திக்காக இந்தத் தலத்தில் உள்ள லிங்கம், வன்னி மரம், கிணறு, மடைப் பள்ளி அனைத்தும் மதுரையில் சாட்சி சொன்னதாக திருவிளையாடற்புராணம் கூறுகிறது. எனவே, இறைவன் பெயர் ஸ்ரீசாட்சி நாதர் எனும் சாட்சீச்வரர். அம்பிகை திருநாமம் கரும்படு சொல்லி. மதுரை திரு ஞான சம்பந்தர் ஆதீன நிர்வாகத்தில் இந்தக் கோயில் உள்ளது. மூவர் தேவாரமும், மாணிக்கவாசகரது கீர்த்தி திருவக வலிலும் இந்தத் தலம் போற்றப்படுகிறது.
ஒரு பிரளயத்தின்போது, சிவபெருமானின் ஆணைப்படி ஸ்ரீவிநாயகப் பெருமான் அந்தப் பிரளயத்தை அடக்கிக் காத்தாராம். அப்போது வருணன், கடலில் உள்ள பொருட்களான சிப்பி, சங்கு முதலானவற்றைக் கொண்டு விநாயகரை வழிபட்டானாம். பிரளயத்திலிருந்து ஊரைக் காத்ததால் இங்குள்ள கணபதிக்கு ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் என்று பெயர்.
கோயிலின் மகா மண்டபத்துக்கு வெளியே தென்கிழக்கில் பிரளயங்காத்த விநாயகர் கோயில் உள்ளது. வெண்மையுடன் சந்தன நிறம் கொண்ட திருவுருவம். இவரது திருமேனியில் சங்கும் சிப்பியும் காணப்படுகின்றன.
விநாயக சதுர்த்தியன்று இவருக்குக் குடம் குடமாகத் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யும் தேன் முழுவதையும் பிள்ளையார் உறிஞ்சிக்கொண்டு விடுகிறார் என்பதால், இவரை தேன் உறிஞ்சும் விநாயகர் என்பார்கள். மற்றைய நாட்களில் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தேன் கெட்டியான திரவம். எதன் மேல் வைத்தாலும் தேன் உறிஞ்சப்பட மாட்டாது. ஆனால், இங்கு மட்டும் தேனை முழுதும் விநாயகர் ஈர்த்துக் கொள்ளும் அற்புதம்... யாவரும் தரிசித்து இன்புறத்தக்கது!
- பிள்ளையார் வருவார்...
படங்கள்: ந.வசந்தகுமார், இ.ராஜவிபீஷிகா