ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

விசாகா நட்சத்திரத்தின் தேவதை இந்திராக்னீ. இந்திரனும் அக்னியும் இணைந்து செயல்படுபவர்கள். இந்திரன், உடல் வளத்தைப் பேணிக் காப்பவன். அக்னி, பரிணாம வளர்ச்சியைக் கண்காணிப்பவன். இவர்கள் இருவரும் இணைந்து வாழ்வை முழுமை பெற வைப்பவர்கள்.

வைகாசி மாதத்தை உருவாக் குவதில் விசாகத்துக்கு பங்கு உண்டு. பௌர்ணமியில் விசாகம் இணைந்து, அந்த மாதத்தை சிறப்பிக்கும். இருவரும் ஒற்றுமை யுடன் செயல்பட்டு சிறப்பிப்பவர்கள்.சகுந்தலையின் தோழிகளான அனஸுயா, பிரயம்வதா ஆகியோரது செயல்பாட்டை, சந்திரனுடன் இணைந்த விசாகா நட்சத்திரத்துடன் ஒப்பிட்டு மகிழ்ந்தான் காளிதாசன் (யதிவிசாகே சசாங்க லேகாமனுவர்தேதே). ஒரு பக்கம் காளை பூட்டிய நுகத் தடியும், மறுபக்கம் உழவர்களுமாக... விசாகா நட்சத்திரத்தின் இரு பக்கங்களிலும் இருந்து உணவு உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பர் (யுகானி பரஸ்தாத் ச்ருஷமாணா அவஸ்தாத்). உயிரினங்களுக்கெல்லாம் உயிருக்கு உயிரான உணவைப் பெருக்குவதில் ஈடுபட்ட நுகத்தடியுடன் கூடிய காளையும் உழவர்களும் இணைந்த காட்சி அதன் சிறப்பு.

துலாம் ராசியில் மூன்று பாதங்களும் விருச்சிக ராசியில் 4-வது பாதமுமாக பரவியிருக்கும் நட்சத்திரம் அது. விகிதாசாரப்படி இரண்டு ராசிகளின் பலன்களும் அடங்கியிருக்கும். துலாத்துக்கு சுக்கிரன் அதிபதி. விருச்சிகத்துக்கு செவ்வாய் அதிபதி. இரண்டு கிரகங்களின் இயல்புகளும் அதில் ஒட்டிக்கொண்டிருக்கும். செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய நால்வரும் அம்சகத்தில் நான்கு பாதங்களில் தொடர்புடையவர்கள். பாதங்களுடன் நெருக்கம் இருந்தாலும், மற்ற கிரகங்களும்... ராசி வழி நட்சத்திரத்தின் தொடர்பு  இருக்கும். 1, 2, 3, 4, 7, 9, 10, 12, 30, 60 - இப்படி ராசிகளின் உட்பிரிவுகளில் ஒன்பது கிரகங்களும் தங்களின் பங்கை செலுத்திவிடும் (ராசி, ஹோரா, த்ரேக்காண...). கூட்டு பலனை சுட்டிக்காட்டும், 'ராசி’ என்ற சொல். தானியக் குவியலில் ஒவ்வொரு நெல்மணிக்கும் பங்கு உண்டு. சைன்யத்தில் ஒவ்வொரு சோல்ஜருக்கும் பங்கு உண்டு. காடு என்ற சொல்லில் ஒவ்வொரு மரத்துக்கும் பங்கு இருக்கும். 9 கிரகங்களின் சேர்க்கையில் பலன் உருவாகும். அதன் அதிபதியை மட்டும் கவனித்தால் போதாது. அதற்கான தனிச்சிறப்பும் சிலநேரம் நழுவி விடும் என்கிறது ஜோதிடம்.

##~##
மேஷம் என்று குறிப்பிடாமல், 'ராசி’ என்று சொல்லி விளக்கம் அளிப்பதில் கருத்தாழம் இருப்பதை உணர வேண்டும். எந்த நட்சத்திரத்தில் தோன்றினாலும், அத்தனை கிரகங்களின் தாக்கமும் விகிதாசாரப்படி இருக்கும். ஒரு தனி கிரகம் மற்ற கிரகங்களின் தாக்கத்தை முறியடித்து, தன்னிச்சையாக பலன் அளிக்காது. அதற்கு சுதந்திரம் இருந்தாலும் மற்ற கிரகங்களின் இணைப்பை கவனித்து, பலன் அளிப்பதில் மாறுதலை ஏற்கும். ஆகாசம், பிரபஞ்சத்தின் எல்லாப் பொருளுடனும் ஒட்டிக் கொண்டிருக்கும். அதில் இருக்கும் கிரகங்களும் ஆகாசம் வாயிலாக காலத்துடன் இணைந்திருக்கும். காலம் நம்மோடு என்றும் இணைந்திருப்பதால், அதன் தாக்கம் நம்மையும் பாதிக்கும். அந்த பாதிப்பில் 9 கிரகங்களுக்கும் பங்கு இருக்கும். இதை வலியுறுத்தும் விதமாக ராசியின் உட்பிரிவுகளுக்கு முன்னுரிமை கிடைத்து விடுகிறது.

செவ்வாயும் சுக்கிரனும் ராசிக்கும் அம்சகத் தில் இரண்டு பாதங்களுக்கும் அதிபதியாக தென்படுவதால், அவர்களது பலனளிக்கும் திறன் மேலோங்கியிருக்கும். உற்சாகம், பொருளாதாரம், விவேகம், மனோதிடம் ஆகிய நான்கும் சிறப்பாக அமைவதில் கவனம் இருக்கும்; அவர்களின் தராதரத்தை ஒட்டி நிர்ணயம் செய்ய வேண்டும்.

விசாகா நட்சத்திரத்தில் பிறந்தவன் முதலில் குரு தசையை சந்திப்பான். 16 வருடங்கள் நீண்டு இருக்கும் தசை. புனர்பூசத்துக்கும், பூரட்டாதிக்கும் இந்த தசை பொருந்தும். இவற்றின் அடுத்தடுத்த நட்சத்திரத்தின் தசைகளான சனியும் புதனும் வருவது சிறப்பு. 19 வருடங்கள் சனியும், 17 வருடங்கள் புதனும் நீடித்திருப்பதால்; முதுமை வரையிலும் பரவியிருப்பதால், அவர்களது இளமை செழிப்பாக அமைய வாய்ப்பு உண்டு. சனியின் உழைப்பும் புதனின் விவேகமும் இளமையை வளமாக்கும். பலம் குன்றிய இருவரும் மாறுபட்ட பலனை அளிப்பார்கள்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

தசைக்கு அதிபதி ஒருவன் ஆனாலும் புத்தியிலும் அந்தரத்திலும் 9 கிரகங்களின் பங்கு விகிதாசாரப்படி அமைவதால், தசா பலன்களும் கூட்டுப் பலனாகவே இருக்கும். பாவத்தில் இருக்கும் கிரகம், அதனுடன் இணைந்த கிரகம், அதைப் பார்க்கும் எதிரிடையான கிரகங்கள், பாவாதிபதி இருக்கும் ராசிநாதன், பாவாதிபதியின் அம்சக நாதன், காரக கிரகம், பாவாதிபதி, லக்னாதிபதி- இவர்களின் தொடர்பு... இவை அத்தனையையும் சேர்த்து பாவ பலன் சொல்லும்போது, பாவ பலனும் கூட்டுப் பலனாக மாறுவதை உணரலாம்.

காலத்துடன் இணைந்த சூடும், அதனுடன் இணைந்த குளிர்ச்சியும் உடலில் ஊடுறுவி மனதைத் தாக்கி சிந்தனையை மாற்றும். உடலின் அமைப்பை - உள்ளத்தின் தரத்தை ஒட்டி மாறுதலில் பாகுபாடு இருக்கும். கர்மவினையின் தரத்தை ஒட்டி 9 கிரகங்களின் தராதரத்தில்- மாறுதலில் பாகுபாடு தென்படும். ஒரே நேரத்தில் பிறந்த இருவரின் கிரக அமைப்பு ஒன்றானாலும், இருவரது கர்மவினையின் மாறுபாட்டில் பலன் மாறுபட்டு இருக்கும். பாலைப் பொங்க வைக்க தேவைப்படும் சூடும், தங்கத்தை உருக வைக்க தேவைப்படும் சூடும் அளவில் மாறுபடும்.

'எதிரிகள் என்னிடம் பயந்து வெகு தூரம் செல்ல வேண்டும். எனது பயத்தைப் போக்கி நிம்மதியாக வாழவைக்க வேண்டும். உலகைக் காப்பதில் நீங்கள் திறமைசாலிகள். உங்களது அரவணைப்பு பயத்தை முற்றிலும் அகற்றிவிடும். பயம் அகன்றால் செயலில் ஈடுபாடு சுரக்கும். அபயம் அளிப்பது உங்களது இயல்பு. பயம்தான் செயல்பாட்டில் அடிக்கடி சுணக்கத்தை ஏற்படுத்துகிறது. விசாகா நட்சத்திரத்துடன் இணைந்த தாங்கள் பயத்தை அகற்றி மகிழ்ச்சியை முழுமையாக்குங்கள்’ என்ற வேண்டுகோள் வேதத்தில் உண்டு (தூரமஸ்மத் சத்ரவோ).

நட்சத்திர வேள்வியைப் பரிந்துரைக்கும் வேதம். அது மறைமுகமாக தனிமனிதனின் நட்சத்திரத் தொடர்பை உறுதி செய்கிறது. பிறந்தநாள் வேள்வியில் நட்சத்திரத்துக்கு உணவளிப்பது உண்டு (இந்திராக்னிப்யாம் ஸ்வாஹா விசாகாப்யாம் ஸ்வாஹா). நட்சத்திரங்களை விண்மீனாகப் பார்க்காமல், தேவர்கள் குடியிருக்கும் வீடாகப் பார்க்கும் வேதம் (தேவகிரஹாவை நக்ஷத்திராணி). தேவர்கள் என்றால் உலகையும் உயிரினங்களையும் காப்பாற்றும் திறமை படைத்தவர்கள் என்று பொருள் உண்டு. பொருள் களில் தென்படும் சிறப்பம்சத்தை தேவதை என்று குறிப்பிடுவது வேதத் தின் மரபு; நமக்குத் தேவையானதை அளிக்கவல்லது.

கால புருஷனின் வயற்றுக்கு கீழே இருக்கும் வஸ்தியும், அதன் கீழ் தென்படும் குஹ்யமும் அதாவது மறைக்க வேண்டிய இடமாகவும் துலாம் - விருச்சிகம் ஆகிய இரண்டும் இருக்கும். அந்த உருப்படிகளின் தராதரத்தை இந்திராக்னீ தேவதைகள் வரையறுக்கும். நான்கு தாரைகளை உள்ளடக்கியது இந்த நட்சத்திரம். பிறரின் உயர்வைக் கண்டு பொறாமை கொள்பவர்கள், களையுடன் மிளிர்பவர்கள், பேச்சுத்திறன், சண்டை சச்சரவில் ஈடுபாடு ஆகியன விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் தென்படலாம்.

செல்வச் சீமான், வேள்வியில் ஆர்வம், அறிஞன், சுயமரியாதையை விடாதவன், பெயரும் புகழும் பெற்றவன் ஆகியவை அவனில் தென்படும் என்கிறார் வராஹ மிஹிரர். அஹங்காரம் மேலோங்கியிருக்கும், மனைவிக்கு அடங்கியிருப்பவன், எதிரியை முறியடிப்பான், அளவு கடந்த கோபம் அவனை ஆட்கொண்டு அலைக்கழிக்கும்... இத்தனையும் அவனில் தென்படும் என்கிறது ஜாதக பாரிஜாதம்.

முதல் பாதத்தில் பிறந்தவனுக்கு அறநெறிகளில் நாட்டம் இருக்கும். 2-வதில் சாஸ்திர-சம்பிரதாயங்களை மதிப்பான். 3-வதில் சொல்வளம் மிக்கவன். 4-வதில் நீண்ட ஆயுளைப் பெற்றவன் என்கிறது பிரஹத்ஸம்ஹிதை.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

முதல் பாதத்தில் பிறந்தால் முக்காலத்தையும் அறியும் திறனும் வேதசாஸ்திரங்களில் தேர்ச்சியும் பெற்றிருப்பான், கோபத்தால் எதிரிகளை பெருக்கிக்கொள்வான், வாணிபத்தில் ஈடுபாடு, பரபொருளை தனதாக்குவான். 2-வதில் செல்வம், சிறப்பு, சொல்வளம் மற்றும் புகழ்தல்- இகழ்தல் இரண்டிலும் திறமை இருக்கும். 3-வதில் அமைச்சராகவும் தலைவனாகவும் இருப்பான், நீதிநெறிகளில் வல்லவன், பெண் ஆசையில் ஈடுபாடு உண்டு. 4-வதில் அறத்தை பின்பற்றுபவன், அழகன், தெளிந்த மனம், ஈவுஇரக்கமுள்ளவன், மஹாத்மா, சிறந்த அறிவாளியாகத் திகழ்வான் என்று பலசாரசமுச்சயம் மாறுபட்ட பலனை விளக்குகிறது.  

மென்மையும் கடினமும் கலந்த நட்சத்திரம். கடினமான வேலைகள், போர் தளவாடங்கள், துஷ்ட மிருகங்களை அடக்குதல். உயர்ந்த உலோகங்களைக் கையாளுதல் போன்றவற்றில் இந்த நட்சத்திரத்தின் இணைப்பு சிறப்பளிக்கும். இரண்டு தேவதைகளின் இணைப்பானது மென்மை- கடினம்  இரண்டிலும் பயன்படும் என்கிறது ஜோதிடம்.

எல்லா ராசிகளுடனும், நவக்கிரகங்களுடனும், எல்லா தசைகளுடனும் நட்சத்திரங்களுக்கு இணைப்பை வலியுறுத்துகிறது ஜோதிடம். கிரக மண்டலங்களுக்கு மேல் நட்சத்திர மண்டலம் தென்படுகிறது. கிரக நாயகனின் கிரணம்பட்டு ஜோதிவடிவில் மிளர்பவை. அந்த நட்சத்திரங்களில் உறைந்திருக்கும் தேவதைகளை வழிபடுவது சிறப்பு. தேவதைகள் நட்சத்திரத்தின் உயர்வுக்கு காரணமாகிறது.

'இம் இந்திராக்னிப்யாம் நம:’ எனச்சொல்லில் 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்தலாம்.

'முஞ்சாமித்வா’ என்ற மந்திரம் சொல்லி விரிவான வழிபாட்டில் ஈடுபடலாம். அல்லது 'தூரமஸ்மத்’ என்ற மந்திரத்தைச் சொல்லி வலம் வந்து நமஸ்கரித்து மகிழலாம். இந்திராக்னியின் உருவத்தில் புஷ்பத்தைப் பொழிந்து வழிபட லாம். உருவத்தை நினைவில் இருந்தி தியானம் செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் அவர்களை நினைவு கூறலாம். நேரம் இருக்கும் போது, 'இந்திராக்னிப்யாம் நம:’

என்று பலதடவை மனதில் அசைபோட்டு வழிபடலாம். ஸ்ரீமுருகனுடன் தொடர்பு உண்டு இந்த நட்சத்திரத்துக்கு. ஆக, முருகன் வழிபாடும் அதன் வழிபாடாக மாறிவிடும். 'இந்திராக்னீ சர்ம யச்சதம்’ என்று சொல்லி 16 முறை இரண்டு கைகளிலும் புஷ்பங்களை அள்ளி அளித்து வணங்கலாம்.

நாம் பிறக்கும்போது நம்மோடு ஒட்டிக் கொண்டு வாழ்நாள் முழுதும் இணைந்திருக்கும் நட்சத்திரம். பிறப்போடு இணைந்த இந்திராக்னீயை (நட்சத்திர தேவதையை) வணங்குவது வாழ்வை மலர வைக்கும். கோயில்களில் அர்ச்சனைகளில் நட்சத்திரத்தின் இணைப்பை சொல்லி வழிபடுவது உண்டு. செயலில் ஈடுபடுபவனின் நட்சத்திரத்தை வைத்து நல்ல வேளையை வரையறுப்போம். மனைவியின் தேர்வில் நட்சத்திர இணைப்பு முதலிடம் பெறும். கடவுள் அவதார வேளையை நட்சத்திரத்தை வைத்து நிர்ணயிக்கிறோம். முஹுர்த்தங்களில் நட்சத்திரத்துக்கு முன்னுரிமை உண்டு. நட்சத்திரத்தின் பெயரை உச்சரித்தால் பாவம் விலகும் என்கிறது பஞ்சாங்க விளக்கம் (நக்ஷத்ராத்ஹதெ பாபம்) நாமும் நமது குறையை அகற்றி நிறையை சேர்க்க வழி பாட்டில் இறங்கிப் பயன் பெறுவோம்.

- வழிபடுவோம்