Published:Updated:

தென்குமரி திருத்தலங்கள்!

தென்குமரி திருத்தலங்கள்!

தென்குமரி திருத்தலங்கள்!

தென்குமரி திருத்தலங்கள்!

Published:Updated:
தென்குமரி திருத்தலங்கள்!
தென்குமரி திருத்தலங்கள்!
தென்குமரி திருத்தலங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லகின் எட்டுத் திக்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளும் யாத்ரீகர்களும் தேடி வரும் திருத்தலம் கன்னியாகுமரி. முப்புறமும் கடல் சூழ, கன்னிப் பெண்ணாய் நித்தமும் அருள்மழை பொழியும் பகவதி அம்மன் தரிசனம், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், தேசத் தந்தை மகாத்மாகாந்தி, பெருந்தலைவர் காமராஜரின் மணிமண்டபங்கள், கடலுக்குள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை... என, கன்னியாகுமரியில் ரசிக்க, தரிசிக்க நிறைய இடங்கள் உண்டு.

கன்னியாகுமரியில் மட்டுமல்ல, அவ்வூரைச் சுற்றியும் தெய்வீகச்சாரல் பொழியும் திருத்தலங்கள் நிறைய உண்டு. கோடையைக் குளுமையாக்க சுற்றுலா செல்வோர், இந்த மாவட்டக் கோயில்களுக்கும் சென்று வந்தால் உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் இதமாக இருக்கும்.

நாகர்கோவில்:  மாவட்டத்தின் தலைநகர். நகரின் மத்தியில் அமைந்த நாகராஜா ஸ்வாமியே, இந்நகரின் பெயருக்கும் காரணமானவர். இக் கோயிலின் நுழைவாயிலில் நேபாள நாட்டு புத்த விகாரக் கட்டடக்கலையின் தாக்கத்தைக் காண முடிகிறது. மூலவர் நாகராஜா இருக்கும் இடத்தின் மேல் பகுதி (விமானம்) எந்தக் கோவிலிலும் காணப்படாத வகையில் கூரையால் வேயப்பட்டுள்ளது. இங்குள்ள மூலவரை சுற்றியுள்ள மண் பகுதி எப்போதும் ஈரமாகவே இருக்கிறது. அந்த திருமண்ணே இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. அள்ள அள்ளக் குறையாமல் அட்சயம்போல் அது தானாக சுரந்து வருவது குறிப்பிடத்தக்கது. குணப்படுத்த முடியாத சரும நோய்களை குணமாக்கும் இந்த திருத்தலத்திற்கு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவிலான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் நாகர்கோவில் அமைந்துள்ளது.

##~##
சாமிதோப்பு: 
 கலியை அழிக்க வந்த மகாவிஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படும் சுவாமி அய்யா வைகுண்டர் அவதரித்து, அற்புதங்கள் பல நிகழ்த்திய திருத்தலம் இது. நாகர்கோவிலில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந் துள்ளது. 'நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கிறான்’ என்பது, இங்கு உதயமான அய்யா வழி மார்க்கம் வலியுறுத்தும் உண்மை. அய்யா வழி கோயில்களில் (பதிகள்) உருவமற்ற வழிபாடே நிகழ்த்தப்படுகிறது. ஒரு நிலைக் கண்ணாடியை நிறுத்தினவாக்கில் வைத்து, அதன் முன்பு தீபத்தை வைத்து, கூடவே ஒரு நாற்காலியையும் வைத்து, அதில் அய்யா வைகுண்டர் எழுந்தருளியிருப்பதாக பாவித்து வழிபடு கிறார்கள், அய்யா வழி பக்தர்கள்.

சுசீந்திரம்:  சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தெய்வங்களும் தாணுமாலய ஸ்வாமியாக அருள்பாலிக்கும் திருத்தலம் இது. நாகர்கோவில்-கன்னியாகுமரி சாலையில், நாகர்கோவிலில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒருமுறை அகலிகையை அவளது கணவர் கௌதம மகரிஷியின் உருவில் தீண்டப்போய், அவளது கணவரால் சாபத்திற்கு ஆளான தேவேந்திரன், இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபட்ட பிறகுதான் சாபம் நீங்கப்பெற்றான். அதன்படி, தேவேந்திரன் இங்கு வந்து வழிபட்டு உடல் சுத்தி, அதாவது தூய்மை பெற்றதால் இந்த திருத்தலம் 'சுசீந்திரம்’ என்று பெயர்பெற்றது. இந்த திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் பிரமாண்டமானவர். ஆம்... 18 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் அவர். இக்கோயிலின் உயர்ந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று பார்த்தால், நாஞ்சில் நாட்டின் பெரும் பகுதியையும், கன்னியாகுமரி கடலையும் பார்க்கலாம் என்கிறார்கள்.

தென்குமரி திருத்தலங்கள்!

தோவாளை:  ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த ஊருக்குள் நுழைந்தாலே வண்ண வண்ணப் பூக்களின் நறுமணம் நம்மை வசீகரித்து வரவேற் கிறது. காரணம், இந்த ஊர்ப் பகுதியில் பூக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதுதான். இங்குள்ள மலைக்குன்றின் மீது முருகப்பெருமான் பாலசுப்பிரமணியனாகக் கோயில் கொண்டுள்ளார். அதே மலையின் அடிவாரத்தில் மகாவிஷ்ணு, பாலகிருஷ்ணனாக தனிக்கோயில் கொண்டிருப்பது சிறப்பம்சம். இந்த ஊரில்  உற்பத்தி செய்யப்படும் மலர்களில் மல்லிகைப்பூவே அதிகம் என்பதால், அந்தப்பூவைக் கொண்டு பாலமுருக ஸ்வாமிக்கு செய்யப்படும் மலர் முழுக்கு விழா, விசேஷம்!

தென்குமரி திருத்தலங்கள்!

வேளிமலை குமாரகோவில்:  நாகர்கோவில்- திருவனந்தபுரம் சாலையில், மார்த்தாண்டத்துக்கு முன்னதாக உள்ள தக்கலையில் இருந்து 4 கி.மீ. தொலைவு பயணித்தால் இக்கோயிலை அடைய லாம். இங்கு மலைக்குன்றின் மீது வள்ளியுடன் அருள்கிறார் முருகன். திருவண்ணாமலை போன்று இங்கும் கிரிவலம் உண்டு. தேங்காயை வேகமாக உருட்டியபடி கிரிவலம் வருகிறார்கள் பக்தர்கள்!

மருந்துவாழ் மலை:  நாகர்கோவிலில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மலை இது. அரிய மருத்துவக் குணங்கள் நிறைந்த மூலிகை கள் விளைவதால் 'மருந்து வாழும் மலை’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருந்துவாழ் மலை ஆகிவிட்டது. இலங்கைப் போர்க்களத்தில் மயக்கமுற்ற ஸ்ரீராமர், லட்சுமணரை காப்பாற்ற சஞ்சீவிமலையை ஹனுமான் ஆகாய மார்க்கமாக பறந்தபடி எடுத்து வந்தபோது, அதிலிருந்து விழுந்த சிறு பகுதியே இந்த மலை என்கிறார்கள். தற்போது, இந்த மலையைச் சுற்றி ஆயுர்வேத வைத்திய சாலைகள் செயல்படுகின்றன. இந்த மலையில் சித்தர்கள் வாழ்ந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

பத்மநாபபுரம்:  தக்கலைக்கு அருகில் அமைந்துள்ள இங்கு நீலகண்ட ஸ்வாமி (சிவன்) கோயில் கொண்டிருக்கிறார். இப்பகுதியை வெற்றி கொண்ட திருமலைநாயக்கர், அந்த வெற்றியின் நினைவாக இக்கோயிலில் மதுரை மீனாட்சி அம்மன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தாராம்.

இந்த காலகட்டத்துக்கு பிறகே, மகாதேவர் ஆலயம் என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்த இந்த ஆலயம், நீலகண்டஸ்வாமி திருக் கோயில் என்று பெயர் பெற்றது. ஸ்ரீமீனாட்சி  அம்மையும் ஸ்ரீஆனந்தவல்லி எனப் பெயர் பெற்றாளாம். இந்தப் பெயரைச் சூட்டியவர், திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்டவர்மா.

கேரளபுரம்:  பத்மநாபபுரத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இங்கு அதிசய விநாயகர் அருள்கிறார். இந்த விநாயகர் 6 மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மீதமுள்ள 6 மாதங்கள் கறுப்பு நிறமாகவும் தோற்றம் அளிப்பது பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

திற்பரப்பு: 'குமரிக் குற்றாலம்’ என்று போற்றப்படும் அருவி இது. இதையட்டி, கேரளக் கட்டட முறையில் அமைந்துள்ள கண்ணன் (பெருமாள்) கோயில் புகழ்பெற்றது. இங்கு 12 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் கண்ணபிரான்.

தென்குமரி திருத்தலங்கள்!

பரவசப்படுத்தும் பண்பொழி: கோடையை உற்சாகமாக கொண்டாட தென் மாவட்டங்களுக்கு வரும் அன்பர்கள், தவறாமல் சென்று வரும் இடம் குற்றாலம். திரிகூடராசப்ப கவிராயர் இயற்றிய 'திருக்குற்றாலக் குறவஞ்சி’, இத்தலத்து இறைவன்  ஸ்ரீகுற்றாலநாதரின் மகிமைகளைப் போற்றும்.

குற்றாலத்தின் அருகிலேயே உள்ள மற்றொரு தலம்... பண்பொழி. சுமார் 500 அடி உயரம் கொண்ட திருமலையின் மீது முருகப்பெருமான் முத்துக்குமார ஸ்வாமியாக கோயில் கொண்டிருக்கும் தலம். முன்னொரு காலத்தில் இங்கே வாழ்ந்த பெண் துறவியான சிவகாமி அம்மையார் முருகப்பெருமானின் அருள் பெற்றவராகத் திகழ்ந்தார். அவரது காலத்தில் இக்கோயில் திருப்பணி நடை பெற்றபோது, மலை உச்சிக்கு கல் தூண்களையும், உத்தரங்களையும் இழுத்துச் செல்ல யானைகள் பயன்படுத்தப்பட்டன.

அவ்வாறு அவற்றை மலை உச்சிக்கு கொண்டு செல்லும்போது, சில நேரங்களில் அவை கட்டு அவிழ்ந்து அல்லது கட்டு அறுந்து கீழே விழுவது உண்டு. அந்தநேரங்களில், மலையில் இருந்து கீழே வரும் கல் தூண்களையும் உத்தரங்களையும் முருக அடியாரான சிவகாமி அம்மையார், 'முருகா...’ என்று உரக்க அழைத்து, தனது தலையைக் கொடுத்துத் தாங்கித் தடுத்து நிறுத்துவாராம். அதன்பிறகு, அவை மலை உச்சிக்கு மறுபடியும் கொண்டு செல்லப்படுமாம்.

ஒரு பெண் துறவி இவ்வளவு அற்புதங்கள் நிகழ்த்துவதற்கான சக்தியை வழங்கியது இத்தலத்து முருகப்பெருமானேதான்! செங்கோட்டையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் பண்பொழி அமைந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism