

##~## |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிள்ளை இல்லாததில் வருந்திய சூரிய பகவான், சிவனாரைத் தொழுது 'எனக்கு நல்ல வழி காட்டுங்கள்’ என வேண்டினார். 'குழந்தைச் செல்வத் தைத் தந்தருளுங்கள், இறைவா!’ என்று சூரியனின் மனைவியர் உஷாவும் சாயாதேவியும் சிவ- பார்வதியை வணங்கி மன்றாடினர்.
''தினமும் வில்வம் சார்த்தி என்னையும் உமையவளையும் வழிபட்டு வாருங்கள்'' என அருளினார் சிவபெருமான்.
அதன்படி அழகிய வனப்பகுதியில், தன்னுடைய தேவியரான உஷா தேவியுடனும் சாயா தேவியுடனும் தங்கி, கடும் தவம் புரிந்தார். அருகில் உள்ள இடத்தில் ஒரு குளத்தை உண்டு பண்ணினார். அதில் தினமும் நீராடிவிட்டு, சிவனாரையும் அம்பாளையும் வணங்கிவந்தார்.
இதில் மகிழ்ந்த சிவனார், உமையவளுடன் அவர்களுக்குத் திருக்காட்சி தந்தருளினார். சிவப்பரம்பொருளின் பேரருளால், சூரிய பகவானுக்கும் உஷாதேவிக்கும் குழந்தை பிறந்தது. அதுவே எமதருமன். அதேபோல் சூரியனாருக்கும் சாயாதேவிக்கும் பிறந்த குழந்தையே சனீஸ்வர பகவான்!
அடர்ந்த வனப்பகுதியில் தீர்த்தக் குளம் அமைத்து சூரிய பகவான் சிவ வழிபாடு செய்த திருத்தலம், திருமீயச்சூர். இந்தத் தலத்தின் சாந்நித்தியத்தை அறிந்த எத்தனையோ முனிவர்களும் ஞானிகளும் இங்கு வந்து வழிபட்டு அருள்பெற்றனர்.

தற்போது, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்லும் இந்தத் திருத்தலத்தில்தான் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவானது. தலத்தின் நாயகன்- ஸ்ரீமேகநாத ஸ்வாமி. அம்பாள் ஸ்ரீலலிதாம்பாள். கருணையே வடிவான, மிகச் சக்தி வாய்ந்த தேவி இவள்.

புராண- புராதனப் பெருமைகள் கொண்ட திருமீயச்சூர் திருத்தலத்துக்கு அருகில், சூரியனார் தன் மனைவியருடன் கூடி வழிபடுவதற்காகக் தங்கியிருந்த இடம்... பின்னாளில் கூடியலூர் எனப்பட்டது. பிறகு, அதுவே கொடியலூர் என்றாகிவிட்டது.
அகத்திய முனிவர், 'சிவனருளுடன் அம்பிகையின் பேரருளையும் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்?’ என்று ஸ்ரீஹயக்ரீவரிடம் கேட்டார். உடனே அவர்... 'ஸ்ரீலலிதாம்பிகையை வணங்கித் தொழுது வா! ஸ்ரீலலிதா நவரத்தின மாலையை அனுதினமும் பாடி, அம்பாளையும் சிவபெருமானையும் வணங்கி வா!’ என அருளினார்.
அதன்படி, அகத்திய முனிவர் அந்த வனப்பகுதிக்கு வந்தார். அங்கே வந்து தவத்தில் ஈடுபடத் துவங்கியதும், சங்கடங்கள் அனைத்தையும் போக்கி அருளும் ஸ்ரீசனீஸ்வரரும், ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தந்தருளும் எமதருமனும் பிறந்த புண்ணிய பூமி அதுவே என்பதை அறிந்து சிலிர்த்தார்.
அங்கே... அந்த இடத்தில், சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்தார். அம்பிகையை மனதுள் நிறுத்தி, அவளுக்கு ஸ்ரீஆனந்தவல்லி எனும் திருநாமத்தைச் சூட்டி, தினமும் ஸ்ரீலலிதா நவரத்தின மாலையைப் பாடி வழிபட்டு வந்தார்.

இதில் மகிழ்ந்த சிவனார், ரிஷபாரூடராக தேவியுடன் திருக்காட்சி தந்தருளினார். 'உமக்கு என்ன வரம் வேண்டும், கேள்’ என்று சிவனார் சொல்ல... 'இதோ, இந்தப் புண்ணியம் நிறைந்த பூமிக்கு உங்களையும் தேவியையும் தரிசிக்க வருவோர் எம பயம் நீங்கி, சனி தோஷம் விலகி, குறைவற வாழவேண்டும்’ எனக் கேட்டார் அகத்திய மாமுனி. 'அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லி ஆசீர்வதித்தனர் சிவ-பார்வதி.
ஸ்ரீஎமதருமனும் ஸ்ரீசனீஸ்வரரும் பிறந்த திருத்தலமாம் கொடியலூர் திருத்தலத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனியைச் சுற்றிலும் மிகப் பிரமாண்ட மாக ஆலயம் எழுப்பப்பட்டது. ஸ்வாமிக்கு ஸ்ரீஅகத்தீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு ஸ்ரீஆனந்தவல்லி என்றும் திருநாமங்கள் சூட்டப்பட்டன.
திருமீயச்சூர் திருத்தலத்துக்கு வருபவர்கள், அப்படியே அருகில் உள்ள கொடியலூர் தலத்துக்கும் வந்து வணங்கிச் சென்றார்கள். இந்த இரண்டு ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டால், ஸ்ரீலலிதாம்பிகையும் ஸ்ரீமேகநாத ஸ்வாமியும் ஸ்ரீஆனந்தவல்லியும் ஸ்ரீஅகத்தீஸ்வரரும் சேர்ந்து இந்த வாழ்வின் அனைத்து சந்தோஷங்களையும் தந்தருள்வார்கள்; சனி பகவானின் கருணை கிடைத்து, எம பயம் விலகி, குழந்தைச் செல்வம் முதலான சகல சந்தானங்களையும் பெற்று சகல ஐஸ்வரியங்களுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்!

கொடியலூர் ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீஅகத்தீஸ் வரர் கோயில், ஒருகாலத்தில் மிகப் பிரசித்தி பெற்ற ஆலயமாகத் திகழ்ந்தது. பிள்ளைச் செல்வம் கேட்டுப் பெண்கள் திருமீயச்சூருக்கு வந்து ஸ்ரீலலிதா நவரத்தினமாலை பாடுவர். அப்படியே ஸ்ரீஆனந்த வல்லியையும் வழிபட்டுச் செல்வார்கள். விவசாயம் செழிக்க வேண்டுமே என்று வேளாளர்கள் இங்கு வந்து விதை நெல்லை வைத்து வேண்டிச் செல்வார்கள். கல்வியும் ஞானமும் கிடைக்க வேண்டும் என்று அந்தணர்கள் இங்கு வந்து, பல நாட்கள் தங்கி, சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் செய்து வணங்கி வழிபடுவார்கள்.
ஆனால், இவையெல்லாம் ஒருகாலம்! இப்போது ஒருகால பூஜையாகச் சுருங்கிவிட்டது. சுமார் 30 வருடங் களுக்கு முன்பு வரை, நுழையவே முடியாத அளவுக்கு இடிபாடுகளும் முட்புதர்களுமாக இருந்த கோயில் இது. பக்தர்கள் நடமாடவேண்டிய இடத்தில், பாம்புகளின் நடமாட்டமே அதிகமாக இருந்ததாம். மன இருளைப் அகற்றும் சிவபெருமானும் உமையவளும் குடிகொண்டிருக்கும் இந்தக் கோயில் மின் வசதி கூட இல்லாமல் இருண்டு கிடந்ததாம்! அட... மின் விளக்கு கிடக்கட்டும்... மூலவரின் திருச் சந்நிதியில் விளக்கு ஏற்றுவதற்கு எண்ணெயோ திரியோ இல்லாமலும், அப்படி எண்ணெய் ஊற்றித் திரியேற்றுவதற்கு பக்தர்கள் வர இயலாத நிலையிலுமாகக் களையிழந்து கிடந்தது, ஆலயம்.
பிறகு, அறநிலையத் துறையின் முயற்சியாலும், ஊர்மக்களின் ஒத்துழைப்பாலும் கோயில் மெள்ள மெள்ளச் சீரமைக்கப்பட்டது. இடிபாடுகள் அகற்றப்பட்டன; முட்புதர்கள் அனைத்தும் களையப்பட்டன. எங்கிருந்தெல்லாமோ இங்கு வருகிற அன்பர்கள் கை கொடுத்து உதவினார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பணிகள் நடந்து, சுமார் 10, 12 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், நித்தியப்படி வழிபாடுகள் இன்றி, ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிற நிலையில் உள்ள இந்தக் கோயிலை நினைத்துப் புலம்பித் தவிக்கிறார்கள் ஊர்மக்கள்.

இந்தக் கோயிலில் ஸ்ரீவிநாயகப் பெருமான், ஸ்ரீமுருகக் கடவுள், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபொங்கு சனீஸ்வரர், ஸ்ரீபைரவர் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் குடியிருக்கும் ஆலயத்தில், கொண்டாட்டங்களும் வழிபாடு களும் ஆனந்தமாக நடைபெற வேண்டாமா? முக்காலமும் அறிந்த அகத்திய முனிவர் தவம் இருந்து வரம் பெற்ற இந்தக் கோயிலில், ஏதோ பேருக்கு ஒரு கால பூஜை மட்டுமே நடப்பது முறையா? சோழ தேசத்தின் பூமியைப் பசுமையாக்கி, விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்த இறைவன் ஆட்சி செய்யும் இந்தக் கோயில், புதுப்பொலிவுடன் திகழ்வதற்கு நம்மால் ஆனதைச் செய்வது நம் கடமை அல்லவா!
கூடியலூர் எனப்பட்டு, பிறகு கொடியலூர் என்றாகிப் போன தலத்தில் உள்ள ஸ்ரீஅகத்தீஸ் வரர் கோயில் பொலிவுறுவதற்கு, அனைவரும் கூடி அறப்பணிகள் செய்வோம்; ஸ்ரீஅகத்தீஸ் வரரின் பேரருளைப் பெறுவோம்!
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்