Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

திருமகள் கோன் அந்நாளில்
தெண்டனிடக் கண்டுடனே
தருநலம் கேட்டு உன்னடிக் கீழ்த்
தமியேனும் வந்தடைந்தேன்
கருணை மதம் ஊற்றெடுக்கும்
கடகளிற்று முகத்தானே!
மருமலியும் பொழிற் புதுவை
மணற்குள விநாயகனே!

- மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

ந்திய அரசின் யூனியன் பிரதேசமாகத் திகழ்வது, புதுச்சேரி என்று அழைக்கப்படும் புதுவை மாநிலம். இந்தப் பகுதி அந்தக் காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. இங்குள்ள கடற்கரைப் பகுதி (அதாவது, செஞ்சி சாலைக்குக் கிழக்குப் பகுதி), ஒருகாலத்தில் புன்னை மற்றும் பூவரசு மரங்கள் நிறைந்த மணற்பாங்கான பகுதியாக இருந்தது.

'ஒயிட் டவுன்’ எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு; 'மணற் குளம்’ என்பர். இதன் அருகில் கோயில் கொண்டதால், 'மணற்குள விநாயகர்’ எனப் பெயர் பெற்ற கணபதியை, தற்போது 'ஸ்ரீமணக்குள விநாயகர்’ என்கிறோம்!

புதுச்சேரி அருகில் உள்ள முரட்டாண்டி சாவடி என்ற ஊரில் சித்தர் ஒருவர் வாழ்ந்தார். இவரை, தொள்ளைக்காது சுவாமிகள் என்றும் அழைப்பர். ஒருநாள் இவர் கடலில் நீராடிவிட்டு மணற்குளக் கரையில் இருந்த வில்வ மரத்தடியில் அமர்ந்தபோது, ஓர் அசரீரி கேட்டது. அதன் மூலம் மணற்குளத்தில் விநாயகர் திருமேனி இருப்பதை அறிந்த சித்தர், விநாயகர் திருமேனியை அங்கிருந்து எடுத்து வந்து கோயில் அமைத்து, தினமும் பூஜித்து வந்ததாகக் கூறுவர். அனுதினமும் விநாயகரை வழிபட்டதால் தொள்ளைக்காது சுவாமிகளின் ஆத்மசக்தி பெருகியது என்பர். அவர் முக்திபெற்றதும், அவருடைய விருப்பப்படியே மணற்குளக் கரையின் மேற்கே அவருக்கு சமாதியை அமைத்துள்ளனர் அவருடைய பக்தர்கள்.

##~##
'கஸ்தோனே தே ஃபோஸ்’ என்ற பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் குறிப்பின்படி, 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர். அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக - ஆராதனைகளுடன் அவ்வப்போது உத்ஸவங்களையும் நடத்தி வந்தனர். பிரெஞ்சு ஆட்சியாளர்களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி உத்ஸவம் போன்ற வைபவங் களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார். இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.

ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற திட்டமிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். கோயிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே’ என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்துசெல்வது பிடிக்கவில்லை.

இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே கடலில் போடப்பட்டது விநாயகர் சிலை. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது.  மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டுபோய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார்.

மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே. மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோயிலை அபிவிருத்தியும் செய்தார். வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, 'வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

மணக்குள விநாயகர் ஆலயத்தை ஒட்டியே அரவிந்த ஆஸ்ரமம் உள்ளது. ஒருநாள் ஸ்ரீஅன்னையின் கனவில் விநாயகர் தோன்றி, தமது ஆலயத்துக்கு தென்புறம் கொஞ்சம் இடம் வேண்டும் என்று கேட்டதாகவும், ஆஸ்ரமத்துக்குச் சொந்தமான அந்த இடத்தைக் கோயிலுக்குத் தானமாக அன்னை சாசனம் செய்து கொடுத்ததாகவும் கூறுகிறார்கள்.

புதுச்சேரி கடற்கரை அருகில், அற்புதமாக அமைந்துள்ளது மணக்குள விநாயகர் கோயில். கிழக்கு நோக்கி அருளும் விநாயகரின் திருமேனியில் பின் இரு கரங்கள் பாசம் அங்குசம் ஏந்தியும், முன் இரு கரங்கள் அபயம் வரதமாகவும் அமைந்துள்ளன. மணற்குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறம் உள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது. கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் ஸ்ரீபால விநாயகரும், வடமேற்கில் ஸ்ரீபால சுப்ரமணியரும் அருள்கின்றனர். வடக்குப் புறம் ஸ்ரீசண்டீசர் சந்நிதி உள்ளது. அங்குள்ள உத்ஸவர் மண்டபத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஹரித்ரா கணபதி, ஸ்ரீசித்தி புத்தி கணபதி, ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீபாலசுப்ர மணியர், வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டீசர், அஸ்திரதேவர் முதலான உத்ஸவ மூர்த்திகளுடன் ஸ்படிக லிங்கமும் உள்ளது.

இந்தக் கோயிலில் விநாயகருக்குப் பள்ளியறை காணப்படுவது சிறப்பு. தங்கத்தேர் உலாவும் உண்டு. அனைத்து மதத்தினரும், வெளிநாட்டுப் பயணிகளும் இவரை வணங்கிச் செல்கிறார்கள். 'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக்கோயில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது. தினமும் நான்கு கால பூஜை, மாதம்தோறும் சங்கடஹர சதுர்த்தி, ஆவணி மாதம் விநாயக சதுர்த்தியையட்டி பிரம்மோத்ஸவம், மாசிமகத் திருவிழா போன்ற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பண்டித வி.மு. சுப்ரமண்ய ஐயர், கோவை நாகலிங்க சுவாமிகள் போன்ற அருளாளர்கள் மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடியுள்ளனர்.

மகாகவி பாரதிக்கும் இந்த விநாயகர் மீது தனி அன்பு உண்டு. 'விநாயகர் நான்மணிமாலை’யில் அந்தப் பெருமானின் பேரருட் பெருமைகளையும் தம் வேண்டுதல்களையும் அற்புதமாகப் பாடியுள்ளார். தம் வாழ்வுக்கு வேண்டிய வளங்களை மட்டுமல்லாமல், மனித நேயத்துக்கு மேம்பட்ட ஆன்ம நேயத்தை வேண்டுவது, இந்த நூலில் காணப்பெறும் முக்கியச் செய்தியாகும். 'ஏழையர்க்கெல்லாம் இரங்கும் பிள்ளை; வாழும் பிள்ளை; மணக்குளப்பிள்ளை’ என்று பாடும் பாரதியார்,

'மேன்மைப் படுவாய் மனமே கேள்
விண்ணின் இடிமுன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே
பயத்தால் ஏதும் பயனில்லை
யான் முன் உரைத்தேன் கோடிமுறை
   இன்னும் கோடிமுறை சொல்வேன்
ஆன்மாவான கணபதியின் அருள் உண்டு
அச்சம் இல்லையே...’

- என்று, விடுதலை வேட்கையையும் தீவிரமாக வேண்டுகிறார். நாமும் மணக்குள விநாயகரை வழிபட்டு மங்கல வாழ்வு பெறுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு