Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!

னுக்கிரஹம் ஒன்றையே சித்தமாகக் கொண்டு அகிலமெங்கும் அருளை வாரி வழங்க வந்தது, ஸ்ரீராமன் எனும் பரம்பொருள்!

அதுவும் எப்படியாம்?

'தேறினன் அமரர்க்கெல்லாம் தேவராம் தேவர் அன்றே
மாறிஇப் பிறப்பில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ...’
- அதாவது, தேவதேவனாகிய பரப்பிரம்மம், தமது சொரூபத்தை மாற்றி இந்தப் பிறப்பில் மானுடச் சட்டை தரித்து வந்தது என சிலாகிக்கிறார் கம்பர்.

##~##
காகுத்தனாகிய அந்த கார்மேகம் தனது கருணை மழையை பூதளத்தில் தங்குதடையின்றி பொழிவிக்க ஏதுவாக, காலமும் சூரிய வம்சத்தில் சில காரியங்களை- கணக்குகளை கனகச்சிதமாகச் செய்து முடித்தது.

வைஜயந்தம் நோக்கிப் புறப்படக் காத்திருந் தது கோசலத்தின்  பெரும் சேனை. கொடியவன் சம்பராசுரனின் தலைநகரம் அது. அமரர்பதி தேவேந்திரனின் வேண்டுகோளை ஏற்று, அந்த அசுரனை அடக்கப் புறப்பட்டிருந்தார் தசரதர். வழக்கமாக வெற்றித் திலகமிட்டு தன்னை வழியனுப்பும் கைகேயி எங்கே என்று அவர் கண்களால் தேடிய அதே நேரம்... கவச- கீரீடதாரியாய் தானும் போர்க்கோலம் கொண்டு வெளிப்பட்டாள் கைகேயி. சக்கரவர்த்தி திகைத்தார்.

''கைகேயி என்ன இது..?''

''நானும் தங்களுடன் புறப்பட்டு விட்டேன் என்று அர்த்தம்!''

''இல்லை தேவி. இந்தமுறை உனது பிடிவாதம் ஜெயிக்கப் போவதில்லை!''

''ஆனால், கோசலமும் என் நாயகனும் எந்த இடையூறும் இல்லாமல் ஜெயிக்கவேண்டுமே... அதனால்தான்...''

''போதும் நிறுத்து! பெண்களைப் போர்க்களம் அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை.''

- வழக்கத்துக்கு மாறாக கைகேயியிடம் சற்று கடிந்துதான் கொண்டார் தசரதர். இது அவள் எதிர்பாராதது; கண்களில் நீர் துளிர்க்க ஓடி வந்து மன்னவனின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

கேவலுடன் தொடர்ந்தது அவளின் பேச்சு... ''ஏதோ நெருடல் என்னை வாட்டுகிறது. இந்தப் போர் எளிதாக இருக்காது என்றே தோன்று கிறது. இத்தகு சஞ்சலத்துடன் உங்களை தனியே களம் அனுப்ப மனம் ஒப்பவில்லை. ஆகவே நானும்...''

''சரி... வா!'' - ஒற்றை வார்த்தையில் ஒப்புதல் கிடைக்க, ஒளி பெற்றது அந்தச் சூரியவம்சத்து நாயகியின் திருமுகம்.

கைகேயி சொன்னது போலவே, அந்த யுத்தம் மிகக் கடினமாக அமைந்தது!

12-ஆம் நாள்! அசுர சேனையின் வியூகம் உடைபட்டது. சம்பராசுரனை வீழ்த்தும் எண்ணத்துடன், ரதத்தை விரட்டினார் தசரதர்.

சூரியக்கொடி பறக்க புயல்வேகத்தில் சென்ற அவரது தேர் திடுமென தடுமாறியது; அதன் ஒரு பக்க சக்கரத்தின் கடையாணி கழன்று கொண்டிருந்தது. சட்டென இதைக் கவனித்த கைகேயி... கடையாணி கழன்று விழும் தருணம், அதற்கு பதிலாக தனது விரலையே உள் நுழைத்து கடையாணி ஆக்கி, தேரை மீண்டும் சரியான நிலையில் துரிதமாக ஓடச்செய்தாள். ஆமாம்... அப்போது அவளின் அந்த விரல் மட்டும் இரும்பாக மாறியிருந்தது!

காரணம்... துர்வாசர் தந்த சாபம்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

கைகேயியின் தந்தை கேகயத்தரசனுக்குச் சொந்தமான அந்த சோலையில் தவத்தில் ஆழ்ந்திருந்தார் துர்வாசர். அப்போது கைகேயி சிறுமி. முனிவருக்குப் பணிவிடை செய்யவும், அந்த இடத்தை சுத்தமாகப் பராமரிக்கவும் அவ ளைப் பணித்திருந்தார் தந்தை.

துர்வாசரின் தவமோ மாதக் கணக்கில் நீண்டது. ஆடாது அசையாது வீற்றிருக்கும் முனிவரைக் கண்டு சின்னப்பெண்ணான கைகேயி திகைத்தாள். அவர் உயிருடன்தான் இருக்கிறாரா, அல்லது சிலையாகிவிட்டாரா என்று புரியாத நிலையில்... முனிவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்று மருகினாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவள், அவர் நாசியில் மூச்சு இழையோடுகிறதா எனச் சோதித்துப் பார்க்க முடிவு செய்தாள். அருகில் குச்சி ஏதேனும் கிடக்கிறதா என்று தேடிப் பார்த்தாள். சுத்தமான அந்த இடத்தில் எதுவும் கிடைக்காததால் தனது விரலையே அவரின் நாசித்துவாரத்தில் நுழைத்துப் பார்த்தாள். அவ்வளவுதான்... நிஷ்டை கலைந்து கோபத்துடன் துள்ளி எழுந்தார் முனிவர். 'உனது விரல் இரும்பாகக் கடவது’ என்று சபித்துவிட்டார்.

சிறுமி பயந்துபோனாள். தான் விரலை நுழைத்தது ஏன் என்பதை நடுக்கத்துடன் விவரித்தாள். முனிவர் மனம் கனிந்தார். எனினும், சாபத்தை திரும்பப் பெற இயலாதே!. எனவே, அதன் தன்மையை மாற்றினார். ''நீ விரும்பும் தருணத்தில் மட்டும் உனது விரல் இரும்பாக மாறும்’ என்று அருள்புரிந்தார்!

சாபத்தையும் வரமாக்கிக் கொள்ளும் சாமர்த் தியம் பெண்களுக்கே உரியது அல்லவா? அதில் கைகேயி மட்டும் விதிவிலக்கா என்ன?

அவள் அந்தச் சாபத்தை இப்போது வரமாகப் பயன்படுத்தி, தன் பதியைக் காப்பாற்றி விட்டாள். சம்பராசுரன் அழிந்தான். பெரும் வெற்றிக்குக் காரணமான கைகேயியிக்கு பரிசு தர விரும்பினார் தசரதர். ஆனால் அவளோ, ''தங்களின் அண்மையைத் தவிர வேறெதுவும் தேவையில்லை இப்போது. வேண்டும்போது இரண்டு வரங்களை கேட்டுப் பெறுவேன்'' என்றாள். தசரதனும் அதற்கு இசைந்தார்.

காலம் பலமாகச் சிரித்தது!  இன்று பதியைக் காப்பாற்றிய கைகேயிதான் எதிர்காலத்தில் அவரை பலி கொள்ளப் போகும் வரங்களைக் கேட்கப் போகிறாள் என்பது அதற்கு மட்டும் தானே தெரியும்!

அதற்கு தோதாக... ஏற்கெனவே தசரதனுக்கு ஒரு பெரும் சாபத்தையும் அல்லவா வாங்கிக் கொடுத்திருக்கிறது, இந்த பொல்லாத காலம்!

ப்தவேதி என்று மூவுலகமும் சிறப்பிக்கும் தசரதரை. சத்தத்தைக் கொண்டே அம்பு எய்து இலக்கைத் தாக்கும் வல்லமை பெற்றவர் என்பதால், தசரதருக்கு இப்படியரு சிறப்பு!

ஒருநாள் வேட்டைக்குச் சென்றபோது, தூரத்தில் ஆற்றில் யானை நீர் குடிக்கும் சத்தம்! சட் டென்று வில்லில் பாணம் பூட்டி, காதுகளைக் இன்னும் கூர்மையாக்கி னார் தசரதர்; இலக்கை நோக்கி பாய்ந்தது அவரது அஸ்திரம்.

மறுகணம் 'அம்மா’ என்றொரு அலறல். தசரதர் திடுக்கிட்டார். 'இது மனிதக் குரல் அல்லவா? அப்படியெனில் தனது அம்புக்கு இரையானது..? மனதில் சந்தேகம் எழ, குரல் வந்த திசை நோக்கி ஓடினார். ஆற்றங்கரையில்... தசரதரின் அம்பை மார்பில் தாங்கியபடி வீழ்ந்து கிடந்தான் ச்ரவண குமாரன். பார்வையற்ற பெற்றோருக்குப் பணிவிடை செய்வதையே பாக்கியமாகக் கருதி வாழும் இளைஞன் அவன். துக்கத்துடன் மன்னிப்பு வேண்டிய தசரதரிடம், தாகத்தால் தவிக்கும் பெற்றோரிடம் தண்ணீரைத் தந்து, அவர்கள் பருகி முடித்ததும், தனது மரணத்தை அறிவிக்கும்படி சொல்லிவிட்டு உயிர்நீத்தான்.

தசரதர் தண்ணீருடன் விரைந்தார். ஆனால், வந்திருப்பது தன் மகன் அல்ல என்பதை உணர்ந்து கொண்ட ச்ரவணகுமாரனின் பெற்றோர்,  அன்பு மகனின் முடிவைக் கேட்டுப் பெரும் துயரம் கொண்டனர். ''எங்களைப் போலவே நீயும் புத்திர சோகத்தால் மரணத்தைச் சந்திப்பாய்!'' என்று தசரதரைச் சபித்தனர்.

அவர்களின் சாபம், கைகேயி கேட்கப் போகும் வரங்களுக்காக காத்திருந்தது!

- அவதாரம் தொடரும்...